இடதுசாரியாக இருப்பது (இதில் பல வண்ணங்கள் உண்டு) மதம், சாதி, அரசியல், பாலினம், பொருளாதார விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து அவர்களுக்காகப் போராடுவதை உள்ளடக்கியதாகும்.

இடதுசாரி என்பது இந்தப் பாகுபாடான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் அனைத்து சமூக-பொருளாதார வழிமுறைகளையும் எதிர்த்துக் கேள்வி கேட்பது என்பதாகும்.

”மக்கள் கற்பனை செய்வதை விட நான் மிகவும் இடதுசாரி, ஆனால் பைத்தியக்கார இடதுசாரி அல்ல” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுத (நீங்கள் நினைப்பதை விட நான் அதிகமாக இடதுசாரி, சத்குரு, இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 15)  ஜக்கி வாசுதேவைத் தள்ளியது எது என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் அவர் இடதுசாரி, கம்யூனிசம், ஜனநாயகம், சமூகப் பாகுபாடுகள், குடியுரிமை, சுதந்திரம், துன்பங்கள், விதலை, அதிகார அமைப்புக்கள், ஒடுக்குமுறை ஆகியவற்றில் அவரது புரிதலின்மையை வெளிப்படுத்தி விட்டார்.

ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா ...

ஈஷா யோகா மையம் என்பது “முழுமையான இடதுசாரி”, ஒரு கம்யூன் என்று அவர் கூறிக் கொள்கிறார்.  கம்யூன் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் ஒன்று வாசகரைக் குழப்புகிறார் அல்லது கம்யூனிசம் ஒரு கம்யூனில் பல்கிப் பரவுகிறது என்று நம்புகிறார்.  பல வகையான கம்யூன்கள் உண்டு.  அதில் அவர் ஒரு தனிமனிதனின் – தன்னுடைய – சிந்தனைகளுக்குள் ஆழ்ந்துள்ளார்.  அவரது கம்யூனானது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் காரல் மார்க்சின் வாக்கியமான “மதம் என்பது மக்களின் போதை மருந்து” என்பதன் சிறந்த உதாரணமாகும்.  ஒவ்வொருவரும் காவி அல்லது வெண்ணிற உடை அணிவது, சமைப்பது, உண்பது, தட்டுக்களைக் கழுவுவது, ஒன்று சேர்ந்து நடைமுறைகளில் பங்கேற்பது ஆகியவையால் மட்டுமே அந்த இடம் சமத்துவமானதாக ஆகி விடாது.  சிந்திக்காத சீடர்களை, தம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரக் கட்டமைப்புக்குச் சவால் விடுக்காத சீடர்களைக் கொண்ட நிறுவனங்கள் சமத்துவம் உள்ளதாகக் கூறிக் கொள்ள முடியாது.

வாசுதேவ் தமது கட்டுரையில் இவ்வாறு விளக்குகிறார்: “ஈஷா யோகா மையம் ஒரு கம்யூன் – ஒரு வகையில் இது ஒரு கம்யூனிச ஏற்பாடு.  யாரும் உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்றோ, எந்த மதம், சாதி என்றோ, எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் தந்தை யார் என்றோ கேட்பதில்லை.  வேறு யாரையும் நடத்துவது போலவே நாங்கள் உங்களையும் நடத்துவோம்.  நீங்கள் முன்னேறி சில சிறப்புத் திறன்களைக் காட்டினால், உங்களுக்கு மரியாதையும் செய்வோம்.”

இடதுசாரியாக இருப்பது (இதில் பல வண்ணங்கள் உண்டு) மதம், சாதி, அரசியல், பாலினம், பொருளாதார விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து அவர்களுக்காகப் போராடுவதை உள்ளடக்கியதாகும்.  அதன் பொருள் இந்தப் பாகுபாடான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் அனைத்து சமூக-பொருளாதார வழிமுறைகளை எதிர்த்துக் கேள்வி கேட்பதாகும்.  எனவே, யாரும் அவர்களது சாதியையோ, மதத்தையோ, பிற விவரங்களையோ கேட்பதில்லை என்று கூறுவதன் மூலம் வாசுதேவ் அவரது மையம் ஒரு உயர்சாதி முன்னுரிமை பெற்ற இடத்தின் ஒரு சிறந்த உதாரணம் என்றே உறுதிப்படுத்துகிறார்.  அங்கு ஒவ்வொருவரும் சமூகத்தில் சக்தி மிக்கவர்கள் தூய்மைப்படுத்திய “சிறந்த நிலைக்கு” மாற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாகுபாட்டை வகுத்தவர்கள் கம்பளத்துக்குக் கீழ் மறைக்கப்படுகிறார்கள்.  அவர் உயர்சாதியினர் எப்போதும் கூறும் வாக்கியத்தையே திரும்பக் கூறுகிறார்: “நாங்கள் ஒருபோதும் எங்கள் வீட்டில் சாதி, மதம் பற்றிப் பேசுவதேயில்லை.”

Total Giving, Total Living | Isha Sadhguru

சம வாய்ப்பு என்பது அசமத்துவம் இருப்பதை ஏற்பது என்பதன் மூலமே அடையப்பட முடியும் என்பதை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.  இதன் பொருள் அசமத்துவத்தை அனுபவிப்பவர்களின் குரல்களைக் கேட்டு அவற்றைச் சரி செய்வது என்பதாகும்.  வாசுதேவ் தனது சொந்த வார்த்தையையே சங்கடமாகக் கருத வேண்டும்.  அவர் கூறுகிறார், “அவர்கள் (தாராளவாதிகள்) அவர்களுக்கு மட்டுமே ‘பேசும் சுதந்திரம் இருக்க வேண்டும், வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது இதில் ஒரு அம்சம்.” ஏராளமான அதிகாரம் வைத்திருக்கும் இந்த நபர் அலட்சியமாக மிக முக்கியமான விஷயங்களை சிறுமைப் படுத்துகிறார். எப்போதும் அவற்றை நகைத்து ஒதுக்கி விடுபவர் அவர். அவரிடமிருந்து இந்த வார்த்தை வருவது மிகவும் முரணானது.  இடது அணியில் இருப்பவர்கள் “தமது சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு, இடதுசாரித் தத்துவங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறுவதற்கு மாறாக, நமது சமூகத் தளத்தில் இடதுசாரிகளாக இருப்பவர்கள் பலரும் குரலற்ற சமூகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.  அவர்களில் பலரும் தினக்கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், “சாதாரண மக்கள்”.

ஜனநாயகமும், உரிமைகளும் அவரது அறிவின் பிடிக்குள் கிடையாது.  பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசையும் ஆதரிப்பது ஒரு குடிமகனின் கடமை என்று நம்பும் ஒரு மனிதர் அவர்.

குடியுரிமை என்பது அரசின் செயல்பாட்டை தீவீரமாகக் கண்காணிப்பதுமாகும்.  இது ஒரு பங்களிப்பு ஜனநாயகம்.  இங்கு ஒரு குடிமகனின் பங்கு வாக்களிப்பது மட்டுமல்ல, ஒரு சமூகத்தைக் கட்டமைக்கும் நடைமுறையில் ஒரு பங்கேற்பாளனாகவும் இருப்பதாகும்.  முடிவுகள் பாராளுமன்ற வளாகத்துக்குள் மட்டும் எடுக்கப்படுபவையல்ல, பொதுமக்களைக் கலந்தாலோசித்தும் எடுக்கப்படுபவை; இதுதான் நமது ஜனநாயகத்தின் மேன்மை.

Carnatic vocalist TM Krishna recites 'Postcard from Kashmir' poem ...

இந்த முறையில், தெருக்களில் எதிர்த்துப் போராடுவது என்பது மையமானது.  மக்கள் தெருக்களில் இறங்கியதால்தான் நமக்கு விடுதலை கிடைத்தது என்பதையே வாசுதேவ் மறந்து விடுகிறார்.  மக்கள் பொது இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் நிர்பயா சட்டமும், தகவல் பெறும் உரிமைச் சட்டமும் வந்தன என்பதை அவர் மறந்து விடுகிறார்.  எனவே நாம் பொது இடங்களை நிரப்புவோம், ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டுமல்ல.  பொதுச் சொத்து அழிக்கப்படக் கூடாது என்பது சரியே.  ஆனால் இடையூறு செய்வதும், தேவை, அது நேர்மறையான யோசனை.  இதோ இங்கே தம்மை ஒரு “ஆத்ம பலம் கொண்டவர்” என்று அழைக்க அனுமதிக்கக் கூடிய, ஒரு தத்துவார்த்த விசாரணையின் சாரத்தைத் தவற விடும் ஒரு மனிதர் இருக்கிறார்.

ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்துக்குச் செல்வது எளிது என்று வாசுதேவ் நினைப்பது போல் உள்ளது.  ‘நீங்கள் சட்டத்தை ஏற்கா விட்டால், நீங்கள் செல்வதற்கு நீதிமன்றம் உள்ளது. அது எதோ ஒரு வகையில் சட்டவிரோதமாக இருந்தால், அது நொறுக்கப் படும்.” கிராம மக்கள் பெருவழிகளில் உட்காருகிறார்கள், சிஏஏ-என்.ஆர்.சி.-என்.பி.ஆர்.ஐ எதிர்க்கும் மக்கள் தமது குரல்கள் கேட்கப்படாமல் ஒடுக்கப்படும்போது ஷாகின்பாக்கில் உட்காருகிறார்கள்.  மக்கள் மீது கவலையை பிரச்சாரம் செய்யும் ஒருவர், உள்சீரமைப்புக்காக நடைமுறைகளை வகுத்த ஒரு நபரான அவர் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களைப் பற்றிய புரிதலோ, அவர்கள் மீது கருணையோ இல்லாதவராக இருக்கிறார்.

இறுதியாக, அரசாங்கத்தை எதிர்த்து நிற்பவர்கள், குடிமக்கள் ஆகியோரைத்  ‘தோற்றுப் போனவர்கள்’ என்று இந்த ஆன்மீக குரு அழைக்கிறார்.  வாசுதேவ், மெல்லிய திரைக்குப் பின்னால் அதிகாரமிக்கவர்கள் கட்டுப்படுத்த வேண்டியதாக ஜனநாயகத்தைக் கருதும் ஒரு தெளிவான சர்வாதிகாரியே ஆவார்.

‘சமத்துவமற்ற இடங்கள், மறைந்திருக்கும் அதிகாரம்’ (Unequal Spaces, Hidden Power) என்ற தலைப்பில் மே 20, 2020 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியானது.

நன்றி: Indian Express

எழுதியவர்: டி.எம்.கிருஷ்ணா, இசைக்கலைஞர், “செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்” புத்தகத்தை எழுதியவர்.

தமிழில்.கி.ரா.சு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *