சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: To Live (1994) – கார்த்திகேயன்

To Live (1994)
Director : Zhang Yimou
சீன எழுத்தாளர் Yu Hua வின் புகழ் பெற்ற நாவலான To Live யைத் தழுவி 1994ல் எடுக்கப்பட்ட திரைப்படம்.இதற்கு முன்னதாகவே இவரது Raise the red lantern படத்தின் வாயிலாக சர்வதேச கவனத்தினை ஈர்த்தார்.சீன திரைப்பட வரலாற்றிலேயே ஒரு படம் வெளியாவதற்கு முன்பே ,அதன் சர்வதேச விற்பனை உரிமை முழுவதும் விற்கப்பட்டதும் இந்த படத்திற்குத்தான்.
இவரது Not One Less திரைப்படம் முன்வைத்த கல்விப் பிரச்சனைகள் பெரிதும் விவாதிக்கப்பட்டன.
கதை சுருக்கம்.
1940களின் பிற்பகுதியில் சீனாவின் ஒரு நகரத்தில்  நில உடமையாளரான மாஸ்டர் ப்யுகெய்யின் சூதாட்டத்தில் தொடங்குகிற கதை, அதன் பிறகான அரசியல் மாற்றங்களால் ,அவரது வாழ்க்கையில் குடும்பத்தோடு ஏற்படுகிற மாற்றங்களோடு பயணம் செய்து, அடுத்த கட்ட சிறப்பான வாழ்க்கைக்கு காத்திருப்பதாக நம்பிக்கையுடன் முடிவடைகிறது.
சீனாவில் சேர்மன் மாவோவின் ஆட்சி காலத்தில் சிவில் வார் , நிலச் சீர்திருத்தம் , பெரும் முன்னோக்கிய பாய்ச்சல் ,பெரும் சீனப் பஞ்சம் ,கலாச்சாரப் புரட்சி நடவடிக்கைகளில் ப்யுகெய்யின் குடும்பம் எதிர்கொண்ட நிகழ்வுகளின் தொகுப்பே இந்தப் படம்.
Film Expression: Houzhe (To Live) 1994
30 ஆண்டுகால ஒரு பரந்த நிலப்பரப்பின் அரசியல் போக்கினை , ஒரு மிகச் சாதாரணமான குடும்பத்தின் வாயிலாக எளிமையான திரைமொழியால் பார்வையாளனுக்கு கடத்திய விதத்தில் தனித்த கவனத்தினைப் பெற்று விடுகிறது.
மாஸ்டர் ப்யுகெய் மற்றும் அவரது மனைவி யாக நடித்த நடிகர்களின் நடிப்பு பாராட்டுக்குரியது.
தேர்ந்த உடல்மொழியோடும் ,தீராத நேசத்தோடும் உலா வருகின்ற உன்னதமான கதை மாந்தர்கள் பலரும் நேர்மறையான நம்பிக்கையின் குறியீடுகளாக இறுதிக்காட்சி வரை திரையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக இசை.எளிமையான கருவியோடு சில இடங்களில் மட்டுமே மீட்டப்படுகின்ற இசை , அவர்களின் உணர்வினை நமக்கும் எளிதில் கடத்திவிடும் மாயம் நிறைந்த இசைக் கோர்ப்பு.
To Live (1994)
இந்தப் படம் முன் வைக்கின்ற அரசியல் பார்வை,விமர்சனம் உள்ளிட்டவை, பார்வையாளரின் தனிப் பட்ட அரசியல் பின்புலத்தோடு தொடர்புடையதென்பதால் அதனை உங்களிடமே விட்டுவிடுகிறோம்.
To Live – உங்கள் திரைப் பயணத்தில் தனித்த ஒரு காட்சி மொழி அரசியல் கவிதையாக இருக்கும்.
திரைப்படத்தினைக் காண,
– கார்த்திகேயன் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்