ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உயிர்காக்க – ஒரு வேண்டுகோள் | பா. சரவணன்மாண்புமிகு தமிழக முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்குச் செல்லும் என்ற எளிய நம்பிக்கையில் இந்த கோரிக்கையைப் பொதுவெளியில் வைக்கிறேன்.

சாலையால் இணைக்கப்படாத ஊர்கள் தமிழ்நாட்டில் கிடையாது. சாலைகள் இருக்கும் இடமெங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கலைஞரால் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, மருத்துவம் போன்ற வசதிகள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊருக்கும் சென்றடையக் காரணமான அமைப்பும்கூட. ஆனால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும், பணிபுரிந்த ஊழியர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியரின் ஒரு நாள் என்பது காலை மூன்று மணிக்கு ஆரம்பிக்கும். பணிமனையிலிருந்து பேருந்தைக் கிளப்பிக்கொண்டு குக்கிராமம் நோக்கிச் செல்லவேண்டும். அக்கிராமங்களில் இருந்து ஐந்து மணிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆறு, ஏழு மணிக்கு நகரத்திற்குத் திரும்பவேண்டும். கிராமத்து மனிதர்கள் அன்றைய நாள் வேலையைக் கைப்பற்ற வேண்டும் என்றால் எட்டு மணிக்குள் அங்கிருக்க வேண்டும். வேலைவிட்டு வரும் அவர்கள் இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பும் பேருந்தில் ஏறி வீடு திரும்புவார்கள். ஊழியர் பணம்கட்டி முடிக்கும்போது இரவு பன்னிரண்டு மணியாகும். அதற்குப்பிறகு உணவு. மறுநாள் காலை மூன்றுமணிக்கு வண்டியைக் கிளப்ப வேண்டும். அன்று மாலை வீடு திரும்புவார். அதுவரை உணவு என்பது கிடைக்கும் நேரத்தில்தான். அடுத்த நாள் மதியம் மீண்டும் வேலைக்குப் போகவேண்டும்.

இதுதான் போக்குவரத்து ஊழியர்களின் பணி நடைமுறை.

இதற்கிடையில் குடித்துவிட்டு வருபவர்கள், சண்டியர்கள், ஊர் நாட்டாமைகள் எல்லோருடனும் மல்லுக்கட்டி பயணச்சீட்டு கொடுக்கவேண்டும். யாரேனும் பயணச்சீட்டு வாங்காமல் பிடிபட்டால் நடத்துனர் துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியதிருக்கும். வசூல் குறைவது, டீசல் பயன்பாடு ஆகியவற்றை முன்வைத்து மேலதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தையும் தாங்கவேண்டும். எதிர்பாராமல் பேருந்து பழுதடைந்துவிட்டால் சரிசெய்ய ஆட்கள் வரும்வரை நடுக்காட்டில் காவல்காக்க வேண்டும். கையில் வைத்திருக்கும் பணத்திற்கோ, பேருந்திற்கோ ஏதேனும் ஆனால் ஊழியர் துறைநடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
இப்படியான பணிச்சூழல் பொதுவாக போக்குவரத்து ஊழியர்களை மன அழுத்தத்திற்குள் தள்ளும். அந்த மன அழுத்தத்தைப் பயணிகளிடம் காட்ட, அது மேலும் சிக்கலைக் கொண்டுவரும். பிறகு நீண்டகால மன அழுத்தம் போதையை நோக்கி அவர்களை இட்டுச்செல்லும். குடிப்பழக்கம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்று பாகுபாடே இல்லாமல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள், புற்றுநோய் உள்ளிட்ட பணிசார்ந்த வாழ்வியல் நோய்களால் தாக்குண்டு பல ஊழியர்கள் பணிக்காலத்திலேயே இறந்துபோவார்கள். எஞ்சியவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் உண்ண வேண்டியதிருக்கும். போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்பதால் மிகக்குறைவான ஓய்வூதியம் மட்டுமே பெறுகிறார்கள். அதிலும் ஒரு பகுதியைக் கடந்த அதிமுக அரசு குறைத்துவிட்டது.

பொன்முட்டையிடும் வாத்தான தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கடந்த ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட தவறான மேலாண்மையின் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துவருகிறது. இதையே காரணமாகக்காட்டி, ஊழியரின் மாத ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எதுவும் சரியான நேரத்திற்கு வழங்கப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், மகளுக்குத் திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு பணிக்கொடையை எதிர்பார்த்திருந்த ஓய்வூதியர் பணம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார். தங்களுடைய சேமிப்பைப்பெற இன்றும் வழக்கு நடத்தும் நிலைதான் போக்குவரத்துக் கழகத்தில் நீடிக்கிறது. கொரோனா காலத்தில் சரியான மருத்துவசிகிச்சை கிடைக்காமல் நானறிந்த பல ஓய்வூதியர்கள் மரணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் ஓர் அங்கமான போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்கப்படுவதில்லை என்பதுதான் பெருந்துயரம். ஆபத்தான, மன அழுத்தம் நிறைத்த சூழலில் பணியாற்றும் அவர்கள் ஓய்விற்குப் பிறகு தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தால் முழுமையாகக் கைவிடப்படுகிறார்கள் என்றுதான் கொள்ளவேண்டும்.

No photo description available.

எனது அப்பா திரு. ச. பார்த்தசாரதி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொழிற்சங்கவாதி. பல போராட்டங்களுக்களில் கலந்துகொண்டு சிறைசென்றவரும்கூட. கைதானபின், சில நாட்களையோ, வாரங்களையோ வேலூர் சிறையில் கழித்துவிட்டு வீடு திரும்புவார். அவர் வீடுவரப்போகிறார் என்றால் அவருக்கு முன் தற்காலிகப் பணிநீக்க ஆணை வீடுவந்துசேரும். அடுத்த சில வாரங்கள் வழக்கு, சட்டப்போராட்டம், மீண்டும் வேலைக்குச் செல்வது என்று கழியும்.

சக ஊழியர்களின் அகால மரணத்தால் வருத்தமுற்ற அப்பா, கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் ஊழியர்/ ஓய்வூதியர் நலன், மருத்துவக்காப்பீடு வழங்குதல் தொடர்பாக ஒரு கடிதத்தை அரசு போக்குவரத்துதுறைக்கு அனுப்பினார். அதில் அவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு குறிப்பிட்ட வகையில் பதில் அளிக்க வழியில்லை என்றும், தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, அறிக்கை தயார்செய்து, அரசுக்கு அனுப்பி, அதன்பிறகு மருத்துவக்காப்பீடு தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. (இணைப்பில் பார்க்கவும்) கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இதுகுறித்த எந்தவொரு நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்கவில்லை.

அரசு ஊழியர்/ ஓய்வூதியர் மருத்துவக்காப்பீட்டிற்கான ப்ரீமியம் தொகையின் பெரும்பகுதியை அவர்களது ஊதியம்/ ஓய்வூதியத்தில் இருந்துதான் அரசு பிடித்தம் செய்கிறது. அத்துடன் அரசின் பங்களிப்பும் சேர்க்கிறது என்று கருதுகிறேன். ஆனால், அரசே காப்பீட்டு நிறுவனங்களை அணுகுவதால் குறைந்த பிரீமியத்தில் அதிக பணத்திற்கு மருத்துவக்காப்பீடு கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அரசிற்குப் பெருமளவு பணம் செலவாகப்போவதில்லை. அரசு செய்யவேண்டியதெல்லாம் – மருத்துவக்காப்பீடு வழங்குவதற்கான முயற்சியை மேற்கொள்வதும், அது தொடர்பான ஆணையிடுவதும்தான்.

கொரோனா உள்ளிட்ட பல நோய்களால் தாக்குண்டு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மரணத்தைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் இன்றைய நிலையிலாவது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு கிடைக்கச்செய்வார்கள் என ஊழியர்களின் குடும்பத்தினர் நம்புகிறோம். நன்றி.

இப்படிக்கு,
சமூகநீதியின்பால் மாறா நம்பிக்கை கொண்டுள்ள
ஒரு தொழிற்சங்கவாதியின் மகன்,
பா. சரவணன்

https://www.facebook.com/100001706637570/posts/4190808217652691/?app=fbl