To Sir With Love Braithwhaite BookReview By Sa Madasami. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்
பேராசிரியர் . மாடசாமி  அவர்களின் எழுத்துகள் தமிழக வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. எளிய சிறு சிறு வாக்கியங்களில் பெரும் உண்மை களை மிருதுவாகக் கூறும் மொழி அவருடையது. தான் பெற்ற பட்டறிவையும், படிப்பறிவையும் தமிழ் மக்கள் சமூகத்தின் மேன்மைக்குப் பயன்படுத்தி வரும் எழுத்தாளர்; சிந்தனையாளர். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூட்டா தொழிற்சங்கப் போராட்டங்களில் முன் நின்றவர். தேசிய எழுத்தறிவு முனைப்பு இயக்கத்தின் தூதுவராகப் பங்களித்தவர். தமிழகத்தின் எழுத்தறிவு இயக்க வரலாற்றில், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றி வயது வந்தவர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சிகளில் மிக முன்னோடியான புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். மதுரையில் பிஜிவிஎஸ் கருத்துக்கூடம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் பல தொகுப்புப் பணிகளையும், ஏராளமான சிறு நூல்கள் உருவாக்கத்தையும் புதிய கற்போருக்காக மேற் கொண்டவர். இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரர் இவர். 

இவருடைய சமீபத்திய நூல்- நிறத்தைத் தாண்டிய நேசம். வாசல் பதிப்ப கத்தின் வெளியீடான இந்தப்புத்தகம், சற்று வித்தியாசமானது. நாமெல்லாரும் ஒரு புத்தகத்தை வாசித்தால் என்ன செய்வோம்? தூக்கிப்போட்டு விட்டு வேறு வேளைகளில் மூழ்குவோம். அந்தப்புத்தகம் ரொம்பவும் பிடித்திருந்தால், நண்பர்களிடம் அதைப்பற்றிப் பேசுவோம். எழுதும் பழக்கம் இருந்தால் அதைப் பற்றி ஓர் அறிமுகக்கட்டுரை எழுதுவோம். அதிகபட்சம் நாம் செய்யக் கூடியது, செய்வது –இவைதாம். ஆனால், பேரா. மாடசாமியின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. தான் வாசித்த புத்தகத்தின் மையப்பொருள், அதன் கதை மாந்தர்கள், அது முன்வைக்கும் கருத்துகள், தான் அதை வாசிக்கும் போது அடைந்த உணர்வுகள் எல்லாவற்றையும் உடனே ஒரு முழுநீளப் புத்தகமாகவே எழுதிவிடுகிறார். இவர் ஏற்கெனவே எழுதிய “ போயிட்டு வாங்க , சார் ! “ புத்தகம் அப்படி ஒரு புத்தகத்தை வாசித்த அனுபவம்தான். இப்போது வந்துள்ள “ நிறத்தைத் தாண்டிய நேசம் “ புத்தகமும் அதேபோல் ஒரு புத்தக வாசிப்பு அனுபவப்பதிவுதான் !

இந்த ‘Sir With Love’ புத்தகம், 1959-இல் வெளியானது. ஆசிரியர் ரிக்கி பிரைத் வைட். நாவல் வடிவில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல் இது. ரிக்கி பிரிட்டிஷ் கயானாவில் பிறந்த கறுப்பர். அவர் ஒரு வேலை தேடி இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் அங்கு நிலவிய இனவெறி பற்றிய உண்மை எதார்த்தம் புரிகிறது. பிரிட்டனின் விமானப்படையில் பொறியாளராகப் பணி செய்கிறார். இராணுவ உடையில், உயிரைப் பணயம் வைத்து அவர் வேலை செய்யும்போது, பிரைத்வைட்டின் கறுப்பு நிறம் யார் கண்களையும் உறுத்துவதில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்ததுமே அவரின் கருப்பு நிறம் முன்னுக்கு வந்து விடுகிறது. 1945-இல் அவர் பணியை விட்டு விலக்கப்படுகிறார். பல பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வானபின், நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும்போது, கறுப்பர் எனத் தெரிந்தவுடன் நிராகரிக்கப்படுகிறார். பள்ளிகளில் ஆசிரியர் வேலை பல இடங்களில் காலியாக இருக்கிறது என்ற தகவலை வழிப்போக்கர் ஒருவர் சொல்லுகிறபோது, அதைக்கேட்டதும் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணிக்குப் போகிறார். அது லண்டனின் கிழக்குக் கோடி யில், கிரீன்ஸ்லேடு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலை. அந்தப்பகுதி, வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. ஏழைகள்தாம் எனினும், வெள்ளை நிறத்திமிர் அதிகமாயிருந்தது.                    

இந்த வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்த பேராசிரியர் ச. மாடசாமி, தன் மனம் கவர்ந்த அந்த நூலைப் பற்றி 104 பக்கங்கள் கொண்ட இந்தப்புத்தக்கத்தை ‘ நிறத்தைத் தாண்டிய நேசம் ‘ எனும் தலைப்பில் எழுதியுள்ளார். படிக்கும்போதே மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் அரும்பி விடுகிறது.” ஒரு மறக்க முடியாத அனுபவம் “ என்ற துணைத்தலைப்பில், நான்கு பகுதிகளாக இதை எழுதியுள்ளார். தொடக்கம், போராட்டம், பயணம், பிரியம் –என்பவை அந்த நான்கு பிரிவுகள். தொடக்கத்தின் தொடக்கம், ஆசிரியரானது எப்படி,முதல் நாள்… முதல் நாள்,முதல் வகுப்பு … முதல் வகுப்பு, புகையும் நெருப்பும், உரையாடல் தொடங்குகிறது, பயணம் தொடங்கியது, உள்ளத்துக்காதலா? உடலின் நிறமா?, அன்புடன் .. . எங்கள் சாருக்கு ! –என்பவை அத்தியாயங்களின் தலைப்புகளுள் சில. 

நூல் தொடங்கும் விதத்தைப் பாருங்கள்: “ஆங்காரம், வெறுப்பு, உதாசீனம் இவற்றின் அடிவேர் – நிறம். உலகெங்கும் அதிகம் அடிவாங்கிய நிறம்-கறுப்பு. வெள்ளை, சிவப்பு, மஞ்சள்,பழுப்பு என எல்லா நிறங்களின் கைகளிலும் ‘கறுப்பு’ அடி வாங்கியிருக்கிறது. இனவெறிப் பாகுபாடுகளிலும், இனவெறிப் படுகொலைகளிலும் முதன்மையான இலக்காக கறுப்பு சிக்கி சீரழிந்திருப்பது போல் தெரிகிறது. உண்மைதானா? அடிவேர் இன்னும் காய்ந்து போகவில்லை. இந்தியா ஒன்றும் வெள்ளை இந்தியா இல்லை; இருப்பினும் இங்கேயும் கறுப்பு ஒரு மதிப்பான நிறமில்லை. மனசின் இடுக்குகளில் மறைந்து கிடக்கும் காயங்களில் ஒன்றாக இங்கு கறுப்பு இருக்கிறது; ஆதங்கங்களில் ஒன்றாக சிவப்பு இருக்கிறது … “     

இத்தகைய ஒரு சூழலில், இந்தக்கறுப்பு ஆசிரியர், வெள்ளை மாணவர்களின் வெறுப்பை வென்ற விதம்தான் இதன் கரு. கறுப்பைப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த வெள்ளையரை ‘சார்’ என்று அன்புடன் அழைக்க வைத்தவர் அவர். பிரைத்வைட்  தலைமைஆசிரியரைப் பார்த்து, வேலை வேண்டும் என்று கேட்டதும் புளோரியன் நிதானமாகப் பேசுகிறார் : “முதலில் இந்தப் பள்ளியைப் பார்த்துவிட்டு வாருங்கள். இது வித்தியாசமான ஒரு பள்ளி. உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் பணியில் சேர்வது குறித்துப் பேசி முடிவெடுப்போம்..” 

பள்ளியை, வகுப்பறைகளில் மாணவர்களை, ஆசிரியர் அறையில் ஆசிரியர்களை, சூழலை.. எல்லாரையும், எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டு, அங்கு பணியில் சேர்வதெனத் தீர்மானிக்கிறார். சேரந்தபின் ஒவ்வோர் அடிவைப்பிலும் அவமரியாதைகளை எதிர்கொள்கிறார். கோபம் பொங்கினாலும், பொறுமையாகவும், விவேகத்துடனும், தேவைப்படும் இடங்களில் துணிவுடனும் செயல்படுகிறார். படிப்படியாக அவர் மாணவர்களின் மனங்களை வெல்லும்விதம் மனதை உருக்குகிறது. இவர் விரும்பும் பெண் ஆசிரியை இவரைத் தானும் விரும்புகிறபோதும் வெள்ளை இனப்பெற்றவரின் நிர்ப்பந்தங்களால் விலகிப்போய் விடுகிறாள். வெள்ளை மாணவி ஒருத்தி இவரை விரும்புகிறாள். ஆனால், இவர் அதை மிக நாசூக்காகத் தவிர்த்துவிடுகிறார். ஆண்டு முடியும் போது, அனைத்து மாணவர்களும் கையொப்பமிட்ட ஒரு கடிதம், To Sir with Love ’ என்ற தொடக்கவரியுடன் வழங்கப்படுகிறது. 

“மனிதர்கள் உலகம் பூராவிலும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள்; இடம், நிறம், இனம், மதம்-எல்லாவற்றையும் தாண்டியதாகவே இந்த சார்புநிலை இருக்கிறது. ஆனால், இந்த மனித நேயமிக்க சார்பு குறித்துப் பாடப்புத்தகங்கள் பேசுவதில்லை “ என்று பிரைத்வைட் வகுப்பறையில் விடாமல் சொல்லித்தந்த கருத்தை, இறுதியில் படிப்பு முடித்துப் போகப் போகும் மாணவி ஒருத்தி சொல்லுகிறாள். உலகெங்கிலும் வீடிழந்து, நாடிழந்து வாடும் பரிதாபத்துக்குரிய மக்கள் பற்றி மற்றொரு மாணவி பேசுகிறாள். ஒரு செடி முளைவிட்டுத் துளிர்த்து, வளர்ந்து மரமாகிக் கனி  தருவது போல, பிரைத் வைட்டின் மாணவர்களும், மாணவிகளும் அவர் கற்றுத்தந்த பாடங்களாலும், அவரின் அணுகுமுறைப் பண்புகளாலும் மன வளமும் கருத்துவளமும் பெற்று ஒளிர்கிறார்கள். நிறத்தைக்கண்டு கறுப்பரை வெறுத்த அந்த வெள்ளை மனிதர்களின் மனங்களில் அன்பும், நேயமும் நிறைந்து ததும்புவதை நூல் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது. 

அட்டைப்படத்தை மூல  நூலின் திரைப்படப் போஸ்டரைக்கொண்டு வடிவமைத்துள்ளனர். உள் ஓவியங்களை ஓவியர் ஸ்ரீரசா வரைந்துள்ளார். இதை மிக அழகான அமைப்புடன் மாரீஸ் வடிவமைக்க, வாசல் பதிப்பகம் மிக நேர்த்தியாக நூலை வெளியிட்டுள்ளது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *