இன்றைய முதலாளித்துவமும் – மார்க்சிசமும் | வே.மீனாட்சி சுந்தரம்

Image Credits: marxist.com19ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் லீக்கின் அறிக்கை வெளிவந்தவுடன் கம்யூனிசம் ஒரு கற்பனை அதனை முன் மொழியும் மார்க்சிசம் மானுட இயலுக்கு பொருந்தாது என்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சர்ச்சைகள் துவங்கின..21ம் நூற்றாண்டில் அந்த சர்ச்சை எல்லா நாடுகளிலும் பரவிவிட்டதைப் பார்க்கிறோம். அதாவது இந்த எதிர்ப்பு மார்க்சிய கருத்துக்கள் உலகளவில் பரவிவிட்டதையே காட்டுகிறது. இன்றும் மார்க்சியத்தைப் பூச்சாண்டியாகக் காட்டிட ஒரு புத்திசாலி கூட்டம் புத்தியை விற்றுப் பிழைக்கிறது…

விநோதமாக ஐ.நா. சபையின் கல்வி பண்பாட்டுப் பிரிவு 2013ம் ஆண்டு மானுடம் பேண வேண்டிய வரலாற்று ஆவணங்களில் கம்யூனிஸ்ட் அறிக்கையையும் மூலதன நூலையும் இனைத்து அறிவித்தது. வரலாற்றுப் பார்வையை மாற்றி அமைத்த ஆவணங்கள் என்றது. இன்று கம்யூனிஸ்ட் அறிக்கையும், மூலதன நூலும் ஒரு சமூகத்தின் மானுட மற்றும் பொருளாதார குண நலன்களை அளக்கும் அளவு கோலாக ஆகிவிட்டன. எந்த தரமான பொருளாதார ஆய்வும் மார்க்ஸ் உருவாக்கிய வரையறைகளைத் தொடாமல் எழுத இயலாது என்ற நிலைக்கு உலக நாடுகளின் அறிவுலகம் வந்துவிட்டதைக் காண்கிறோம். ..

இன்று அந்த அறிக்கை குறிப்பிடும்; வர்க்கப் போராட்டம்,,அரசெனும் அடக்குமுறை கருவி, ஆகிய இரண்டுமற்ற சமூகமாக ஒரு நாடு மாறிவிட்டதா இல்லையா; சொத்து குவிகிறதா! பரவுகிறதா! தனி ஒருவளுக்கோ,ஒருவனுக்கோ முன்னேற்றத்திற்கு சமூகம் எந்த அளவு உதவுகிறது, விரும்புகிற வாழ்வைத் தேர்வு செய்ய முடிகிறதா சுயநலனும் பொதுநலனும் முரண்படுகிறதா இனைந்து நிற்கிறதா என்ற சர்ச்சைகளில் முதலாளித்துவ மேதைகளே ஈடுபடுவதைக் காண்கிறோம். தாமஸ் பிக்கெட் என்ற பிரான்சு நாட்டு ஆய்வாளர் 2013ம் ஆண்டு ஒரு ஆய்வு நூலை வெளியிட்டு மேலை நாடுகளை எச்சரித்தார். முதலாளித்துவம் சொத்துக்களைக் குவிக்கிறது வறுமையைப் பரவலாக்குகிறது தனிமனித உரிமை பாகுபாடாக உளது என்று மார்க்ஸ் குறிப்பிட்டது சரியே என 200 ஆண்டு புள்ளிவிவரத்தைத் தொகுத்துக் காட்டிவிட்டார்.

20ம் நூற்றாண்டு கம்யூனிச எதிர்ப்பு

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பரவியிருந்த முதல் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் செயலுக்குச் சித்தாந்த வெளிச்சமாக இருந்த மார்க்சிசம் அரசு அடக்குமுறைகளால் நீர் பூத்த நெருப்பாக இருந்தது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் மார்க்சிஸ்டுகள் தோன்றி புரட்சிகர குழுக்களாகச் செயல்படத் துவங்கினர் ரஷ்யாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் செயல்படத்துவங்கினர். சான்றாக ஒரு நிகழ்வைக் காட்டலாம் 1900ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கையால் ஈர்க்கப்பட்ட சில தொழிலாளர்கள் குடும்பம் கலிஃபோர்னியாவில் செவ்விந்தியர்கள் வாழ்ந்த சிக்குயா மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் குடியேறினர் அந்த பகுதியில் வாழ்ந்த செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்த அமெரிக்கத் தளபதிக்கு நினைவுச் சின்னமாக ஒரு சிக்குயா மாரத்திற்கு பெயர் சூட்டியிருப்பதைக் கண்டனர். செவ்விந்திய பூர்வ குடிமக்களைக் கொன்ற கொடூரனுக்கு நினைவுச் சின்னம் என்பதை ஏற்க மறுத்து அந்த மரத்திற்கு அந்த பெயரை நீக்கிவிட்டு மார்க்சின் பெயரை சூட்டினர். சிக்குயா மரங்களின் சிறப்பு பல ஆயிரம் ஆண்டுகள் வளரும் குணம் கொண்டது ஆகும் . அமெரிக்கத் தளபதி பெயர் சூட்டிய மரத்தின் வயது 3ஆயிரம் ஆண்டுகளாகும். அதன் உயரம் 300அடி அதன் விட்டம் 40 அடி என இருந்தது. அந்த மரம் மார்க்சிய குழுவால் மார்க்சின் பெயரை தாங்கி நிற்கத் தொடங்கியது..

அன்றைய தேதிகளில் அமெரிக்க மக்களிடையே மார்க்ஸ் எழுத்துகளால் பிரபலமாகியிருந்தார். ஐரோப்பிய அரசுகளும் அமெரிக்க அரசை பாட்டாளி வர்க்க புரட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதை அமெரிக்க அரசிற்கு எச்சரித்து வந்தன. அன்றைய ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் மார்க்சிசம் பரவாமல் தடுக்க அந்த குடியிருப்பை ராணுவத்தை ஏவி அகற்றியதோடு மார்க்ஸ் பெயரை நீக்கி பழைய தளபதி பெயரைப் பொறிக்க வைத்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் அந்த வழியாக ரயில் பாதை அமைக்க உள்ளோம். வரலாற்றுச் சின்னத்தின் பெயரை மாற்றுவது சரியல்ல என்பதுதான். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த அமெரிக்க அரசு கம்யூனிஸ்ட்டுகளின் குடி உரிமையைப் பறித்தது. வேட்டையாடியது. மேலை நாடுகள் கம்யூனிஸ்ட்டுகளை நாட்டுப் பற்றற்றவர்களாகக் குற்றம் சாட்டி வேட்டையாடின. அன்று ஆங்கில முதலாளித்துவ வாதிகள் மக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே மார்க்சை மக்களிடமிருந்து பிரித்தனர் யூதமத எதிர்ப்பும் ஜெர்மானிய மொழி எதிர்ப்பும் மார்க்சை எதிர்க்கும் சித்தாந்த ஆயுதங்களாக்கின..

அது மட்டுமல்ல அமெரிக்க முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க போராட்டம் அரசியல் வடிவெடுத்து புரட்சியாக மலர்வதை தவிர்க தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு வசதி, பள்ளிக்கூடம் கூடுதல் சம்பளம். பென்ஷன் கொடுப்பதிலும் தயக்கம் காட்டாமல் தாராள பிரபுக்களாக இருந்தனர் சேமிப்பு மூலம் யார் வேண்டுமானாலும் சொத்து குவிக்கலாம் எனப் பங்குச் சந்தையில் சில்லறையாகப் பங்குகளை விற்க முன்வந்தன..நிறுவனத்தின் நிர்வாகிகளைப் பங்குதாரர் வைத்திருக்கும் பங்குகளை வாக்குகளாக்கித் தேர்வு செய்தனர்.கம்யூனிச எதிர்ப்பிற்கு அடிப்படைகள்

 முதலாளித்துவம் நீடிக்க வேண்டுமானால் கூலி அடிமைகள் அவசியம்.  மன்னர்கள் காலத்துத் தெய்வ பக்தி உணர்வு போல் கூலி அடிமைத்தனத்தை உயர்வாக கருதும் விசுவாச மனகட்டமைப்பை கூலி அடிமைகள் பெற வேண்டும், அடுத்து யார் வேண்டுமானாலும் முதலாளியாக முடியும்  என்ற பிரமையை உருவாக்கி  நீடிக்கச் செய்ய வேண்டும்..  அன்றாட வாழ்க்கையில் நடப்பதென்ன?  முதலாளியாகும் போட்டியில் சிலரே ஆக முடிகிறது. பலர் கூலி அடிமை என்பதை உணராமலே பூர்சுவா மனப்பாங்கோடு வாழ்கிறார்கள்.. எல்லா வர்க்கங்களும் பூர்சுவா மனப் போக்கிற்கு அடிமையாக்கப்படுகின்றன.. தங்களது சேமிப்பைக் கொண்டு பணவடிவில் சொத்தை குவிக்க நடக்கும் போட்டியாலே பணம் மதிப்பிழந்து வீங்குகிறது. விலை  உயர்வு என்றால் பணத்தின் மதிப்பு வீழ்கிறது என்று யாரும் உணர்வதில்லை.  நெருக்கடிகள் தோன்றுகின்றன.இன்று மேலை நாடுகளில் இந்த நெருக்கடி குத்தாட்டம் போடுவதைக் காண்கிறோம். நெருக்கடிகள் தோன்றியவுடன் மார்க்ஸ் நினைவிற்கு வருகிறார்.

 பொருளாதார வரலாற்றை எழுதிய  ஒரு அமெரிக்கப் பேராசிரியர் (Robert L. Heilbroner (March 24, 1919 January 4, 2005) மார்க்சை  எத்தனை தடவை புதைத்தாலும் நெருக்கடிக் காலத்தில் அவர் மீண்டும் எழுந்துவந்து நம்மை மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டார்.

 50 ஆண்டுகளுக்கு முன்னால்  சோவியத் பின்னடைவிற்குப் பிறகு மேற்கத்தியத் தாராளமய பொருளாதார நிபுணர்கள் மார்க்சியத்தைப் புதைத்துவிட்டதாகக் கொண்டாடினர். கடைசியாக மார்க்சை புதைத்துவிட்டதாக மார்தட்டியவர்கள் நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் ஃபிரைட்மென்(Milton Friedman ) அவருக்கு மானசீக குருவாக இருந்த ஜெர்மனி நாட்டு பிரெடிரிக் ஆகஸ்ட் வான ஹாயெக் (Friedrich August von Hayek)   ஆவார்கள்

மில்ட்டன் ஃபிரைட்மென் மார்க்சியத்தை ஜனநாயகத்தை மறுக்கும் கோட்பாடு என்றார். அதோடு விடவில்லை கார்ப்பரேட்டுகள் போட்டிப் போட்டு லாபம் சம்பாதிப்பது சமூக கடமை என்றார். அதோடும் நிற்கவில்லை கல்வியைக் கடைச்சரக்காக ஆக்குவதைக் கல்வி போதிப்பது பெற்றோர் கடமை என்பதால் அரசு பொறுப்பேற்கக் கூடாது என்று நியாயப்படுத்தினார். 

உலக வர்த்தக கழகம் ஃபிரிட்மென் கோட்பாட்டை வேதமாக ஏற்றது. எல்லா முதலாளித்துவ நாடுகளும் எல்லாவற்றையும் தனியார் லாபம் சம்பாதிக்கும்  தொழிலாக ஆக்குவதில் இறங்கிடத் தொடங்கின. உலக வர்த்தக அமைப்பால்  துவக்கத்தில் சர்வ தேச அந்தஸ்து பெற்ற நாணயங்களைக் கொண்ட   ஏகாதிபத்திய நாடுகளின் மக்களின் சேமிப்பிற்கு வருமானம் பெருகியது.  முதலாளித்துவ பாதையில் பெரும்பாலான நாடுகள் வளர விரும்புவதால் வர்த்தக உறவு போட்டி வடிவெடுத்தது.  ஒன்றை ஒன்று வர்த்தகம் மூலம் லாபம் சம்பாதிக்கும் போட்டியால் முரண்பட்டன. முரன் முற்றியது. சுதந்திர வர்த்தகம் நெருக்கடியால் சரிந்தது..   

 2008ல் ஏகாதிபத்திய நாடுகளின் பணப் புழக்கம் ஊதிப் பெருத்து வெடித்தது மக்களின் சேமிப்பு காணாமல் போனது வங்கிகள் வராக்கடன் சுமையால் மூழ்கின. அமெரிக்க அரசின் பணக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்த பால்கிரக்மென் என்ற பொருளாதார நிபுணருக்கு நோபிள் பரிசு கொடுத்தது மில்ட்டன் ஃபிரிட் மென்னின் கோட்பாட்டிற்கு இது மரண அடி கொடுத்தது.   . 

2020ல் நெருக்கடி முற்றி சுதந்திர சந்தை மூழ்கி மில்ட்டன் ஃபிரிட்மென் போன்றோர் கூட நேசித்த ஜனநாயகம்,உலக அமைதி,அரசியல் அறம் எல்லாம் பொய்யானது.

 மேலை நாடுகளில் ஜனநாயகம் அழுகி திருட்டுத்தன ஆட்சியானது (டெமாகிரசி, நசிந்து கிளப்ட்டோகிரசியானது) என்று அங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களே சுட்டிக் காட்டுகின்றன. இந்தியா. உகாண்டா நாடுபோல் அமெரிக்காவும் தேர்தல் தில்லு முல்லுகள் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் அரசியல்வாதிகளின் நாடாகிவிட்டது.  

வளர்முக நாடுபோல் சொந்த நாட்டு தொழில்கள் நசியாமல் தடுக்க இறக்குமதிக்கு அமெரிக்கா தடைகள் போட்டன . டாலரின் மதிப்பை அரசு நிலையாக வைக்கத் தவறியது.. பணக்கார நாடுகளிடையே வர்த்தக முரன் ஆழமானது . டிரம்ப் ஆசியப்பகுதியையும் போர்க்களமாக்கி  டாலரின் ஆதிக்கத்தைக் காக்க ராணுவ ஒப்பந்தங்கள் போட்டு மீசையை முறுக்கினார்… டிரம்ப் போய்விட்டாலும் மோடி நீடிப்பதால் இங்குப் பதட்டம் நீடிக்கவே செய்யும்.

இந்த சூழலில் மானுடம் அமைதியாக வாழ மார்க்ஸ் சொன்னதெல்லாம் நினைக்கத் தள்ளப்படுகிறோம் என்று மேலை நாட்டு பேராசிரியர்கள் எழுதுகிறார்கள்..

பேராசிரியர் ஈகிள்ட்டன் (ஒய் மார்க்ஸ் இஸ் ரைட்) ஏன் மார்க்ஸ் சரியாக இருக்கிறார் என்ற புத்தகத்தின் மூலம் காரணங்களை அடுக்குகிறார். 2011ல் இந்த புத்தகம் வெளிவந்தது யார் இந்த ஈகிள்ட்டன்?.தன்னை மார்க்ஸ் சொன்னதையெல்லாம் ஏற்கும் நபரல்ல என்கிறார். அவரை விசுவாசத்தோடு பின்பற்றுவனல்ல என்கிறார் . ஒரு நேர்மையான விமர்சகன் என்ற முறையில் அவரது எழுத்துக்களின் நிறை குறைகளைத் தேடுபவன் என்கிறார்  இன்று மார்க்ஸ் சொன்னதில் எது பொருந்துகிறது என்பதைப் பட்டியலிடுகிறார். அவைகள் வருமாறு..

 1. 19ம் நூற்றாண்டில் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு ஈடான  இன்னொரு  எழுச்சியூட்டவல்ல புத்தகம் அந்த நூற்றாண்டில் உலகம் காணவில்லை!!.
 2. மார்க்சை விமர்சிப்பவர்கள் எவராக இருந்தாலும் மார்க்ஸ்தான் வரலாற்றை எப்படி பார்க்க வேண்டும் என்று காட்டியவர் என்பதை மறுக்க மாட்டார்கள் 
 3. முதலாளித்துவ உற்பத்திமுறையை அன்றாட நிகழ்வைக் காட்டி அதன் சொரூபத்தைப் பார்க்க வைத்தவர்
 4. சரக்காக்குதல் அந்நியமாக்குதல் என்பதின் மூலம் சமூக வாழ்க்கையைப் பாழாக்கு வதை தெளிவாகப் பார்க்க வைத்தார் அந்த வாழ்க்கை. சொத்து குவிக்கும் பேராசை, பொறாமை. கண்மூடித்தனமாக நுகர்வு கலாச்சாரம் விரக்தி மனப்போக்கு. உருவாகி மனிதனைக் குப்பையாக்குவதைக் காட்டினார்
 5. மார்க்ஸ் எந்த இயலையும் சூத்திரமாக்குவதை  விரும்பாதவர் 
 6. வரலாற்றை உருவாக்குபவர்களாக மானுடர்களைப் பார்த்தாரே தவிர வரலாறு ஆட்டிப்படைக்கும் பொம்மைகள் அல்ல என்றார் 
 7. அவரது எழுத்துக்களே காலணி ஆதிக்கத்தைப் பாசிசத்தை எதிர்க்கச் சமாதான சக வாழ்வை மானுடர்களுக்கு கற்றுக் கொடுத்தது 
 8.  பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர், சோசலிசமே ஜனநாயகத்தை மேன்மைப்படுத்தும் அதன் எதிரி அல்ல என்றே கருதினார்
 9. மார்க்ஸ் என்ற சிந்தனையாளனுக்கு நேர்ந்த அவமானம்  வேறு எந்த ஞானிக்கும் இதுவரை நிகழாத ஒன்று
 10.  மார்க்ஸ்  புத்தரல்ல,  ஏழைகளுக்காக இறங்கும் கோடீஸ்வரனுமல்ல. இவர் ஒரு  மருத்துவர்  நோய்வந்தால் மருத்துவரை நாடுவது போல் நெருக்கடி வரும் பொழுது இவரைத் தேடுகிறோம் ஆரோக்கியமான பிறகு மறந்துவிடுகிறோம் 
 11. பிறந்தது இறக்குமென்றால் முதலாளித்துவமும் மரணிக்க வேண்டுமல்லவா அது மரணித்தால் மார்க்சியத்தை யாரும்  நாடமாட்டார்கள்மார்க்சியத்தை வெறுப்பவர்கள்

 மார்க்சிசம் பொருத்தமற்றது என்று கூறுபவர்களை  இரண்டு ரகமாகப் பிரித்துப் பார்ப்பது நல்லது.

முதல் ரகம் சித்தாந்த மற்றும் கோட்பாடு ரீதியாக மார்க்சியத்தை எதிர்க்கும் ரகம். இரண்டாவது ரகம் மார்க்சியத்தைப் பூச்சாண்டியாகக் காட்டி மக்களை முட்டாளாக்க முயலும் கொழுத்த சம்பளம் பெறும் மக்கட்பதடிகள் ஆவர். புல்லடிமை தொழில் பேணிகளாவர். எதையும் மலினப்படுத்தும்  மட்ட ரக மேதாவிகளாவர்..

முதல் ரக விமர்சனத்தைச் சித்தாந்த போர் மூலமே மார்க்சிசம் மக்களை ஈர்க்க முடியும்.  இரண்டாம் ரக “புத்திசாலிகள்”  ”கம்யூனிசம் என்பது  ஆகாசத்தில் மிதக்கும் ஆப்பம்” எட்டி பறித்து திங்க முடியாது என்று ஏளனம் செய்வதையோ.  மார்க்சை இழிவு படுத்திடக் கண்டதை எழுதிக்குவிப்பதையோ மார்க்சிசம் என்பது வளரும் சமூக இயக்க இயலைத் தேடும் அறிவியல் என்பதை மறுப்பதையோ ..இத்தகையோர் உளறல்களுக்குப் பதில் தேவையில்லை. ஏன் எனில் முதலாளித்துவம்  நெருக்கடிகளை உலக மயமாக்கிவிட்டதால் நாடுகளில் நடக்கும் வர்க்க போராட்டங்களே பதிலாகிவிடுகின்றன.