டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்



ஜார் அரசர் பீட்டர் ஒரு முறை ஒரு காட்டில் ஒரு விவசாயியைச் சந்தித்தார். அந்த விவசாயி மரம் வெட்டிக் கொண்டிருந்தார்.

“கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,“ என்றார் பீட்டர்.

“கடவுளின் ஆசிதான் எனக்குத் தேவை,“ என்றார் விவசாயி.

“உங்கள் குடும்பம் பெரியதா?” என்றார் பீட்டர்.

“இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்,” என்றார் அவர்.

“நல்லது ரொம்பவும் பெரிய குடும்பம் இல்லை. சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறீர்கள்?“ என்றார் அரசர் பீட்டர்.

“ஒரு பகுதி கடனை அடைக்க. மற்றொரு பகுதி கடனாகத் தர. முன்றாவது பகுதியைத் தூக்கி எறிந்து விடுவேன்,“ என்றார் விவசாயி.

பீட்டருக்கு எதுவும் புரியவில்லை. விளக்கம் கேட்டார்.

“என் பெற்றோருக்கு உணவு அளிப்பதன் மூலம் நான் கடனைத் திரும்பச் செலுத்துகிறேன். மகன்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் கடன் தருகிறேன். மகள்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பணத்தை தூர எறிகிறேன்,“ என்றார் விவசாயி.

“நீங்கள் நல்ல அறிவாளி,“ என்றார் பீட்டர். “நான் இந்தக் காட்டில் வழி தவறிவிட்டேன். எனக்கு வழிகாட்டுங்கள்,” என்றார்.

“நீங்களே வழி கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். நேராகச் செல்லுங்கள். பின் வலதுபக்கம் திரும்புங்கள். பின்னர் இடதுபக்கம். பின்னர் மீண்டும் வலதுபக்கம்.”

“எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை. நீங்கள் உடன் வருகிறீர்களா?“

“ எனக்கு நேரம் இல்லை ஐயா. என் போன்ற விவசாயிகளுக்கு நேரம் என்பது பணத்திற்கு ஈடானது.”

”அப்படியானால், நான் உங்களுக்கு பணம் தந்துவிடுகிறேன்”.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

“ஐயா, நீங்கள் இந்த இடத்தை விட்டு வெகு தூரம் வெளியே சென்றதுண்டா?“ என்று கேட்டார் பீட்டர்.

“ஓ.. போயிருக்கிறேனே”

“அப்படியானால் ஜார் அரசனைப் பார்த்ததுண்டா?“

“இதுவரை பார்த்ததில்லை. ஆனால் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை”.

“காட்டைத் தாண்டி வயல்வெளிகள் பக்கம் போய்விட்டால், நீங்கள் ஜார் அரசனைப் பார்க்கலாம்,“ என்றார் ஜார் பீட்டர்.

“நான் பார்ப்பவர் ஜார் என்று எனக்கு எப்படித் தெரியும்?“ என்று கேட்டார் விவசாயி.

“ஜாரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் தொப்பியின்றி இருப்பார்கள். ஜார் மட்டும்தான் தொப்பி அணிந்திருப்பார். அதிலிருந்து அறியலாம்,“ என்றார் பீட்டர்.

நடந்து நடந்து இருவரும் வயல்வெளிப் பக்கம் வந்துவிட்டார்கள். ஜார் அரசனைப் பார்த்த்தும் மக்கள் அனைவரும் தம் தொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு மரியாதை செய்தார்கள்.. விவசாயி எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்தார். ஆனால், அவரால் ஜாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ஆமாம், ஜார் அரசர் எங்கே?“ என்றார்.

” இப்போது நாம் இருவர் மட்டுமே தலையில் தொப்பியோடு இருக்கிறோம் – அதனால் நம்மில் ஒருவர் தான் ஜார் அரசனாக இருக்க வேண்டும்,” என்றார் பீட்டர் சிரித்தபடியே.



 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 

Show 3 Comments

3 Comments

  1. jananesan

    சிறுவர்களுக்கு ஏற்றாற்போல் , எளிமையான சுவையான எடுத்துரைப்பு. வாழ்த்துகள் தோழரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *