டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்ஒரு வியாபாரிக்கு இரண்டு மகன்கள். வியாபாரிக்கு மூத்த மகனைத்தான் மிகவும் பிடிக்கும். தன் சொத்துகள் அனைத்தையும் அவனுக்கே தரப் போவதாக முடிவு செய்தான். அவன் மனைவி தன் இளைய மகனை நினைத்து வருந்தினாள். கணவனிடம் உங்கள் முடிவை இப்போதே மகன்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். கணவனும் அதன்படியே தன் முடிவை மகன்களிடம் சொல்லவில்லை.

ஒருநாள் மனைவி ஜன்னலோரமாக உட்கார்ந்து இந்தப் பிரச்சனையை நினைத்து அழுது கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு வழிப்போக்கன் அவளைப் பார்த்து, “ஏன் அழுகிறாய்?“ என்றான். அவள்  ”நான் அழாமல் என்ன செய்ய? என் இரு மகன்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் என் கணவரோ எல்லா சொத்துகளையும் பெரிய மகனுக்கே தரப்போகிறார். சின்னவனுக்கு எதுவும் தரமாட்டேன் என்கிறார். சின்னவனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்த பிறகு இந்த முடிவை அவர்களிடம் சொன்னால் போதும், இப்போது சொல்ல வேண்டாம் என்று அவரை தடுத்து வைத்திருக்கிறேன். ஆனால், என்னிடம் என் மகனுக்குத் தர பணம் எதுவுமில்லை. நான் என்ன செய்வேன்?” என்றாள்.

வழிப்போக்கன், “ உங்கள் மகன்களிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள். அப்போது இருவரும் சமமாகி விடுவார்கள்,“ என்றான். அவளும் மகன்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டாள்.

தனக்கு சொத்தில் எதுவும் கிடைக்காது என்பதை அறிந்த இளைய மகன் உறவினர் ஒருவரது கடையில் வேலை செய்து தொழிலைக் கற்றுக் கொண்டு சம்பாதித்தான். பெரிய மகன் எப்படியும் ஒரு நாள் நமக்கு சொத்து வந்துவிடுமே என்று எதையும் கற்காமல் சும்மா இருந்தான்.

அப்பா இறந்ததும், எதுவும் தெரியாத பெரிய மகன் சொத்து முழுவதையும் தன் அறியாமையால் அழித்துவிட்டான். சம்பாதிக்கக் கற்ற இளைய மகனோ, நன்கு சம்பாதித்து பணக்காரனாகி விட்டான். 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்