டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்ஒரு தீவில் ஒரு காக்கை ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்ததும், குஞ்சுகளை கடல் தாண்டி நாட்டிற்குள் கொண்டுவிட முடிவு செய்தது. எனவே, முதல் குஞ்சை தன் கால்களில் கவ்வியபடி கடலுக்கு மேலே பறந்தது.

கடலுக்கு நடுவே பறந்து சென்ற போது, அதற்கு மிகவும் களைப்பாகி விட்டது. சிறகுகளை வேகமாக அசைக்க முடியவில்லை.

‘இப்போது நான் வலிமையோடு இருக்கிறேன். இவனை கடலுக்கு மேலே தூக்கிச் செல்கிறேன். இவன் வலிமையாக வளர்ந்து, நான் முதுமை அடையும்போது, நான் இவனுக்காகப் பட்ட துன்பங்களை இவன் நினைத்துப் பார்ப்பானா? என்னை இப்படி சுமந்து செல்வானா? ‘ என்று நினைத்தது. உடனே தன் குஞ்சிடம், “ நான் முதுமையடையும் போது, நீ என்னை இப்படி சுமந்து செல்வாயா? உண்மையைச் சொல்” என்று கேட்டது.

குஞ்சு தான் உண்மையைச் சொன்னால் தாய் தன்னைக் கடலில் போட்டுவிடுவாள் என்று நினைத்து, ” கட்டாயம் சுமந்து செல்வேன்,“ என்றது.

குஞ்சின் குரலிலிருந்தே அது பொய் சொல்வதை அறிந்த காக்கை அதைக் கடலில் போட்டுவிட்டு தன் தீவிற்கு வந்துவிட்டது.

மறுநாள் இரண்டாவது குஞ்சை இவ்வாறு சுமந்தபடி கடலுக்கு மேலே பறந்தது. முதல் நாளைப் போலவே பாதி தூரத்தில் களைப்படைந்தது. முதல் குஞ்சிடம் கேட்டது போலவே இரண்டாவது குஞ்சிடமும் கேட்டது. அதுவும் தாய் தன்னைக் கடலில் போட்டுவிடும் என்ற பயத்தில், “கட்டாயம் சுமந்து செல்வேன்,“ என்றது.

காக்கை இவனையும் நம்பவில்லை. கடலில் போட்டுவிட்டது.

மறுநாள் கடைசிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு கடல் மீது பறந்தது. அன்றும் அது களைப்படைந்தது. மற்ற மகன்களிடம் கேட்ட கேள்வியை இந்தக் குஞ்சிடமும் கேட்டது.

குஞ்சு ” இல்லையம்மா,“ என்றது.

”ஏன்?” என்றது தாய்க் காக்கை

”நீங்கள் வயதாகி விடும் போது நானும் வளர்ந்து விடுவேன் இல்லையா. அப்போது எனக்கும் உங்களைப் போலவே குஞ்சுகள் இருக்கும். நான் அவற்றைக் காப்பாற்றுவதில் கவனமாக இருப்பேன் அல்லவா?” என்றது.

”ஆஹா… இவன் உண்மையைச் சொல்கிறான். இவனை எப்படியாவது நாட்டிற்குள் கொண்டு சேர்த்துவிடவேண்டும்” என்று நினைத்த காக்கை தனது எஞ்சிய சக்தியை எல்லாம் திரட்டி சிறகுகளைப் பலமாக அசைத்து வேகமாகப் பறந்து கரையை அடைந்தது. அங்கே குஞ்சை ஒரு புது கூடு கட்டிக் கொள்ளுமாறு அறிவுரை சொன்னது. 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்