டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்



ராஜாவும், சட்டையும்

ராஜாவிற்கு ஒருமுறை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

”என் நோயை குணப்படுத்துபவருக்கு பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன்,” என்று அறிவித்தார்.

பல வைத்தியர்களும் ராஜாவை குணப்படுத்த மருந்து தந்தார்கள். ஒன்றும் சரியாகவில்லை. அப்போது ஒரு வைத்தியர், ராஜாவின் நோயைத் தீர்க்க ஒரு வழி சொல்லுவதாகச் சொன்னார்.

“மகிழ்ச்சியாக இருக்கும் மனிதன் ஒருவனின் சட்டையை வாங்கி ராஜாவிற்கு அணிவித்தால், ராஜாவிற்கு குணமாகிவிடும்,” என்றார் அவர்.

மகிழ்ச்சியான மனிதனைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லா திசைகளிலும் ஆட்களை அனுப்பினார் ராஜா. நாடு முழுக்கத் தேடினாலும் மகிழ்ச்சியான மனிதனாக யாருமே இல்லை. முழுமையான திருப்தியடைந்த வாழ்க்கையை யாரும் வாழவில்லை. பணக்காரனாக இருந்தவன் உடல் நலம் சரியில்லையே என்ற வருந்தினான். உடல் நலம் நன்றாக இருப்பவன் பணம் இல்லை என்று ஏங்கினான். இரண்டும் இருந்தவனுக்கு மனைவி சரியாக அமையவில்லை. ஒருவனுக்கு குழந்தைகள் சொன்ன பேச்ச கேட்கவில்லை என்று வருத்தம். எல்லாருக்குமே ஏதோ ஒரு வருத்தம் இருந்தது.

கடைசியில் ஒரு நாள் இரவு இளவரசன் ஒரு கிராமத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்த போது, ஒரு சிறு குடிசையில் பேச்சுக் குரல் கேட்க, அதன் வாசலில் நின்று கேட்டான்.

“ ஆண்டவரே, உமக்கு நன்றி… இன்று என் வேலைகள் நல்லபடியாக முடிந்தன. வயிறார சாப்பிட்டுவிட்டேன். பேசாமல் படுத்து நிம்மதியாகத் தூங்க வேண்டியதுதான். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?“ என்றது ஒரு குரல்.

இளவரசனுக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே சேவகர்களை அந்த மனிதனின் சட்டையை வாங்கிக் கொண்டு, அவன் கேட்பதைக் கொடுக்குமாறு ஆணை இட்டான்

சேவகர்கள் குடிசைக்குள் சென்றார்கள். சந்தோஷமான அந்த மனிதனிடம் ஒரு சட்டை கூட இல்லை.



Show 8 Comments

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *