தகவல்களால் நிரம்பிய உலகத்தில் ஒருவரின் வெற்றி ரகசியங்கள் நமக்கு படிக்கட்டுகளாக அமைந்தால் நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய லட்சியமும் எவ்வளவு உயரத்தை சென்றடையும் என்பதற்கான ஒரு இலக்கண நூல் இந்த புத்தகம்.
வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்ற வெற்றியாளர்களின் காலடிச்சுவட்டை பின்பற்றி நாமும் வெற்றியாளராக மாற வேண்டும் என்றால் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள இந்த 100 அறிவியல் அறிஞர்கள், மேதைகளின் குறிப்புகளை வாசித்தால் போதும். மகத்தான பல்வேறு ஆளுமைகள் செதுக்கிய உலகில் வாழும் நாம் நம்முடைய சிந்தனைகள் செயல்கள் உழைப்பு ஆகியவற்றில் இத்தகு அறிவியல் மேதைகளின் பயணங்களை பின்பற்றினால் நம் ஒவ்வொருவரின் குறிக்கோளும் லட்சியமும் நிச்சயம் வெற்றியடையும் என்பதை இந்த நூல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது
ஒவ்வொருவரின் வாழ்விலும் எண்ணற்ற தடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தோல்வி முகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாலும் அவற்றிலிருந்து மீண்டு தனது லட்சியத்தை ஒரே குறிக்கோளாக கொண்டு அதை அடையும் வரை தொடர்ந்த போராட்டத்தின் கீழ் அவர்கள் முழுமூச்சாக உழைத்த உழைப்பே என்று அவர்கள் பெயரை உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள் ஆனால் அதே தவறை மறுபடியும் செய்யாதீர்கள் என்ற கூற்றுக்கு சொந்தக்காரரான அகியோ மோரிடோ. இணையற்ற தொழில்நுட்ப உலகத்தை புரட்டிய பிதாமகர் சோனி என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். முடியாது என்று சொல்லத் தெரியாத ஜப்பான் என்ற நூலின் ஆசிரியரும் இவரே ஒரே ஒரு வார்த்தை உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது சோனி என்றால் மிகையாகாது.
இன்று இணையத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் அதற்கு அடித்தளமிட்டவர் அமேசான் டாட் காம் நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜெப் பெசோஸ் இன்று விண்வெளி பயணத் திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்து விட்டவர் தனியார் விண்வெளி நிறுவனங்கள் அமைய அடித்தளம் இட்ட வரும் இவரே.
பெரிதாக கனவுகள் எனக்கு என் கனவுகளை துரத்திக் கொண்டே இருந்தேன் இருப்பேன் மற்றவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது என்பது பெசாசின் லட்சிய வார்த்தைகள்.
பள்ளி சென்று கல்வி கற்காமல் பள்ளிப் பாடப் புத்தகங்களில் பெயர் வாங்கிய அறிஞர் ஆம்பியர் மின்சாரத்தை கண்டறிந்து மின்னியக்க விசையியல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி அறிவியலில் அடுத்த படிநிலைக்கு அழைத்துச் சென்றவர்.
எளிமையான 17 பிள்ளைகள் கொண்ட சோப்பு தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்து அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து அண்ணனின் எழுத்துக்காக விமர்சனம் செய்யப்பட்டு சிறை சென்று வந்து அதனால் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்டு வீட்டைவிட்டு துரத்தப்பட்ட பெஞ்சமின் பிராங்கிளின் பல ஆண்டுகள் அலைச்சலுக்கு பிறகு தானே பத்திரிக்கையை தொடங்கி முதன்முதலில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியவர் காப்பீட்டு நிறுவனத்தை அறிமுகப்படுத்தியவர் சந்தா கட்டி நூலகத்தில் சேரும் முறையை அறிமுகப்படுத்தியவர் என பல செயல்களுக்கு காரணமாக இருந்தவர் பெஞ்சமின் பிராங்கிளின் இடிதாங்கியை கண்டறிந்தவர் அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை எழுதியவர் என எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெற்றது இல்லை அனைத்தும் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று பெருந்தன்மையாக சொன்னவர் பெஞ்சமின் பிராங்கிளின்.
மனிதர்களின் அறிவுத் தேடலுக்கான கதவுகளை விசாலமாக திறந்து விட்ட விக்கிப்பீடியாவை உருவாக்கியவர் ஜிம்மி வேல்ஸ் ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாய் போய்ச் சேர வேண்டும் என்பதே என் கனவு என்ற தாரக மந்திரத்தை சொந்தக்காரர் தான் ஜிம்மி வேல்ஸ்..
இந்த உலகத்தில் இருக்கப் போவது ஒரே முறை எனக்கு செய்யக் கிடைத்த நல்ல செயலை நான் அலட்சியப்படுத்தும் தள்ளிப் போடவோ கூடாது என்ற கூற்றுக்கு சொந்தக்காரர் இன்று தமிழகம் கடவுளாக வைத்து வணங்கும் ஜான் பென்னிகுயிக் 2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை காத்து நிற்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பொறியாளர் தனது சொத்துக்களை விற்று அந்த அணையை கட்டி வரலாற்றில் இடம் பிடித்தவர்.
நோபல் பரிசு பெற்ற அறிஞர் நீல்ஸ்போர் ஒரு உரை நிகழ்த்தும்போது தடுமாறினார் கண்மூடியபடி சத்யேந்திரநாத் போஸ் அமர்ந்திருந்தார் ஒரு இடத்தில் நீல்ஸ் போருக்கு தடுமாற்றம் வரவே இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டார் மனிதர் அப்படியான புகழுக்கு சொந்தக்காரர் சத்யேந்திரநாத் போஸ் குவாண்டம் இயற்பியல் என்ற துறைக்கு அடித்தளமிட்டவர் இவர்.
தனது மூளை மட்டும் செயலில் இருக்க உடல் உறுப்புகள் சுத்தமாக செயலிழந்து போனாலும் இந்த உலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் பிரிவுகளில் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு காலம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
17 ஆயிரம் விலங்கு பறவைகள் பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகள் ஒரு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளை பெற்றிருந்தாலும் பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்து தான் தொகுத்த பரிணாமக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின்.
கணித உலகில் மறைக்கப்பட்ட நிலவு என்று அழைக்கப்பட்டவர் சோபி ஜெர்மைன் இவர் கணிதத்திற்கென உருவாக்கப்பட்டிருந்த ஆண்கள் மட்டுமே படிக்ககூடிய கல்லூரியில் படித்த ஆண் மாணவர்களிடமிருந்து குறிப்புகளை பெற்று பாடம் படித்து வந்தார் இவரின் குறிப்புகளைக் கொண்டு ஈபில் டவர் உருவாக்கப்பட்டது இவர் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை பாரிஸ் அறிவியல் அகாடமி முதல் பரிசு வழங்கியது ஆனால் அவர் பெண் என்று தெரிந்ததும் அந்த பரிசு திரும்பப் பெறப்பட்டது அவர் மார்பக புற்றுநோயால் இறந்த போது வீட்டில் வேலை இல்லாமல் இருந்த சாதாரண பெண் என்றே அரசாங்க குறிப்புகள் பதிவு செய்தனர் இவருக்கு அனுமதி மறுத்த கல்லூரியில் வைக்கப்பட்ட முதல் சிலை இவருடையது என்பது காலங்களை கடந்து மேதைகள் நினைவு வரப்படுவார்கள் என்பதற்கு வலிமிகுந்த சாட்சி.
மார்கோனி வானொலியை கண்டறிவதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெகதீஸ் சந்திரபோஸ் பயன்படுத்திய கொஹரர் என்ற வானொலி.இந்த அடிப்படையில் வானொலியை கண்டுபிடித்தவர் என்பது ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களுக்கு பொருந்தும் ஆனால் அதை மார்கோனி தான் கண்டுபிடித்ததாக பதிவு செய்து கொண்டார்.
மூன்று நோபல் பரிசுகள் பெற்ற ஒரு குடும்பம் என்ற பெருமைக்குரிய குடும்பம் கியூரி குடும்பம் இதில் மேடம் கியூரி இரண்டு நோபல் பரிசுகளை பெற்றார் தனது புதிய தனிமத்திற்கு தனது நாட்டின் பெயரை பொலனியம் என்று வைத்தார்.
தான் கண்டுபிடித்த ஆய்வு உலக மக்களின் நோயை குணப்படுத்தும் என்றால் தான் அந்த நோய்க்கு பலியாவது தவறில்லை என்று கூறி லேசர் எனப்படுகிற நுண்ணாய்வு கதிர்வீச்சுகள் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து கண்டறிந்து ரேடியம் சிகிச்சைக்கு இன்று உலகமெல்லாம் பல உயிர்களை காப்பாற்றிய பெருமை மேடம் கியூரி சாரும்.
நாம் இன்று பறவை மனிதன் என்று வாசித்துக் கொண்டிருக்கும் சலீம் அலி இளவயதில் ஒரு பறவை வேட்டைக்காரர் என்றால் நம்ப முடிகிறதா அம்மா அப்பாவை இழந்து மாமா வீட்டில் வளர்ந்த சலீம் அலியின் பொழுதுபோக்கு பறவைகள் வேட்டையாடுதல் அப்படி ஒருநாள் ஒரு பறவையை வேட்டையாடியபின் அதன் பெயரை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் தேடிய தேடலே அவரை பறவைகள் மீதான காதலாக மலர்ந்தது. இன்று நாம் அவரை பறவைகள் மனிதனாக கொண்டாடுவதற்கும் அந்த தருணமே அவருக்கு உதவியது இன்றைக்கு வாழும் வாழ்க்கை மட்டுமே நிஜம் பனிமூட்டம் போன்ற கேள்விகளில் மனதை குழப்பிக் கொள்ளாமல் வாழ்வை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி நிலைநிறுத்த வேண்டும் என்ற அவரின் சுயசரிதை நூல் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி.
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சியில்தான் அந்த நாயகனின் எழுச்சித் தேடல் தொடங்கியது என்பது எவ்வளவு அற்புதமான முரண்.
இப்படியாக இன்னும் நிறைய அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுடன் கூடிய சுருக்க தொகுப்பே இந்த நூல் வாசிக்கும் ஒவ்வொருவரும் இவர்களின் வரலாற்றை நமக்குள்ளும் வைத்துக்கொண்டு நம் இலட்சியத்தை அடைவதற்கு இந்த நூல் பெரிதும் உதவி செய்யும் என்பதில் ஐயமில்லை
நூலின் தகவல்கள்
நூல் : டாப் 100 அறிவியல் மேதைகள்
ஆசிரியர் : பூ. கோ. சரவணன்
வெளியீடு : விகடன் பிரசுரம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2014
பக்கம் : 296
விலை : ரூ.140
எழுதியவர்

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள் (1999) தூரிகையில் விரியும் காடு (நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு) (2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

