Torchlight Tamil Movie Review By Era Ramanan. திரை விமர்சனம்: டார்ச் லைட் - இரா. இரமணன்
2018ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம். 1970இல் வெளியான இந்தி திரைப்படம் ‘சேட்னா’வையும் 1990களில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறது விக்கிபீடியா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாலியல் தொழில் ஈடுப்பட்டிருக்கும் பெண்களுடன் பேசி அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் எடுத்ததாக இதன் தயாரிப்பாளரும் இயக்குனருமான மஜீத் கூறுகிறார். சென்னையில்  தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்ட பிறகு மும்பை சென்று அங்குள்ள  குழுவினருடன் போராடி ‘ஏ’ சான்றிதழ் பெற்றதாகக் கூறுகிறார். தணிக்கைக் குழுவிலுள்ள பெண்கள் கூட பாலியல் தொழில் பெண்களின் வலிகளை அனுதாபத்துடன் பார்க்கவில்லை என்கிறார். பாலியல் தொழில் பெண்களின் உறவினர்களுடன் நடத்திய உரையாடல்களை பதிவு செய்து வைத்திருந்தது தணிக்கை சான்றிதழ் பெற உதவியாக இருந்தது என்கிறார். 

சதா, ரித்விகா, திருமுருகன், வருண் உதய், ஏ.வெங்கடேசன், சி.ரங்கநாதன், சரவணா சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தான் காதலித்தவரை திருமணம் செய்துகொள்ளாமல் சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் சொல்லுக்காக இன்னொருவரை திருமணம் செய்து கொள்கிறாள் நிலா. அவனுக்கு திடீரென ஏற்படும் பல தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளித்து அவனை மீட்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய மருத்துவமனையின் உரிமையாளர் படுக்கையை பகிர வேண்டும் என்கிறார். அதற்கும் உடன்படுகிறாள். பிழைத்து வந்த அவன் அவள் பாலியல் தொழில் செய்துதான் தன்னைக் காப்பாறினாள் என்று தெரிந்ததும் அவளை அடித்து துரத்தி விடுகிறான். இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழுகிறான். தன் சாதி அரசியல்வாதியின் தூண்டுதலின் பேரில் அவளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அழிக்கவும் நினைக்கிறான். அவனையும் அந்த அரசியல் வாதியையும் நிலா கொல்வதுடன் படம் முடிகிறது.

இதை மட்டும் வைத்துப் பார்த்தால் இதைப்போல் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தக் கதையுடன் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்நிலை, அவர்களுக்குள்ளே நிலவும் நட்பு, அவர்களை வைத்து தொழில் செய்யும் தலைவி, அவளுள்ளே அவ்வப்போது சுரக்கும் மனிதாபிமானம் – பெண்களை நாடி வரும் ஆண்கள் சிலர் சிகரெட் துண்டுகளால் கால்களை சுடுவது, முதுகில் நகத்தால் பிராண்டி வைப்பது, மனைவியை நினைத்து இவர்களை அடிப்பது, பொது இடங்களிலும் இவர்களை அழைப்பது என பாலியல் தொழில் பெண்களின் அவலங்களைப் படமாக்கியுள்ளார். நிலாவின் கதையை நாடக பாணியாக்காமல் பாலியல் பெண்களின் வாழ்வை இன்னும் சற்று அழுத்தமாக சொல்லியிருக்கலாம். நிலாவுக்கு உதவும் ஒரு இளைஞனின் பாத்திரம், பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு லாரி டிரைவர்  போன்றவை பாராட்டப்பட வேண்டும். 

பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான உடை, அசிங்கமாக சிரிப்பு என்று குறிப்பிட்ட வார்ப்பில் காட்டும் படங்களிலிருந்து மாறுபட்டு அவர்களை இயல்பாகவும் வலிகளுடனும் அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை எனக் காட்டியிருக்கிறார். பாலியல் தொழிலாளி குறித்த கதை எனும்போது பாலுறவுக் காட்சிகள் தவிர்க்க இயலாதது. அதையும் விரசமில்லாமல் எடுத்திருக்கிறார். நிலாவின் கதையை மட்டும் பழைய பாணியில் கணவனைக் காப்பாற்றும் அனுசூயா,சாவித்திரி போல காட்டியிருப்பது அந்தப் பெண்ணின் ஆளுமையை சிதைக்கிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *