நூல் அறிமுகம்: கார்த்திக் பாலசுப்ரமணியன் “டொரினா” – ச.சுப்பாராவ்கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய டொரினா என்ற சிறிய சிறுகதைத் தொகுப்பை நேற்று வாசித்தேன். எழுத்தாளரின் முதல் தொகுப்பு. மொத்தம் 12 கதைகள். பெரும்பாலும் அளவில் மிகச் சிறியவை. ஐந்து பக்கத்திற்கு எம்.கோபாலகிருஷ்ணனின் விரிவான முன்னுரை.

சமயங்களில் தொகுப்பை விடவும் சிறப்பாய் முன்னுரை அமைந்துவிடும். (அந்தக் காலத்தில் என் ஒரு தொகுப்பிற்கு தோழர் ச. தமிழ்ச்செல்வன் அப்படித் தான் ஒரு முன்னுரை எழுதினார் ) இதிலும் அப்படியே. தமிழ்ச் சிறுகதைகளில் வரும் அக்காக்களைப் பற்றி யாராவது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற வரியை மிகவும் ரசித்தேன். முதல் பக்கத்தின் முதல் வரியிலிருந்து வாசிக்கத் துவங்கும் என் நெடுநாளைய பழக்கத்தை விடுத்து, அந்த இடத்தில் முன்னுரையை அப்படியே நிறுத்திவிட்டு, அந்தக் கதையை வாசித்து விட்டு வந்தேன். அதுதான் தொகுப்பின் தலைப்புக் கதையான டொரினா.  கோகுல் சாண்டல் பவுடர், கழுத்து வியர்வை வாசனையுடன் இருக்கும் பக்கத்து வீட்டு அக்காவுடன் பெண்கள் பகுதி டிக்கெட்டில் போய் படம் பார்த்த அத்தனை அன்பர்களுக்கும் கட்டாயம் பிடித்துப் போய் விடும் கதை அது. இந்த அக்காக்கள் இத்தனை நல்லவர்களாக இருந்தும் அவர்களது வாழ்க்கை ஏன் இப்படிக் கிழிந்து போகிறது? என்பது வாழ்வில் என்றுமே, எவருக்குமே, எப்போதுமே புரியாத ஒரு புதிர்.

துறை சார்ந்த கதைகள் அதிகம் வருவதில்லை என்று பல காலமாகப் புலம்பி வருபவன் நான். இதில் மென்பொருள் நிறுவனங்கள் சார்ந்த கதைகள் உள்ளன. மென்பொருளாளர்கள் மட்டுமின்றி. அங்கு காவலாளியாக இருக்கும் வட இந்திய புலம்பெயர் தொழிலாளியின் கதையும் உள்ளது ஒரு சிறப்பம்சம். ஆனால், மிக உற்று நோக்கும் போது எனக்கு ஒரு அடிப்படையான விஷயம் பிடிபட்டது. 

சுஜாதா ஒரு முறை உலகில் மொத்தமே பதிமூன்றோ அல்லது இருபத்தி மூன்றோ – சரியாக நினைவில்லை – கதைக் கருக்கள் தான் உண்டு. அதை வைத்துதான் எல்லோரும் ஜல்லியடிப்பதாகக் கூறியிருந்தார். அது உண்மைதான். என் சிறுவயதில் செம்மலரில் வயக்காட்டிலோ அல்லது தீப்பெட்டித் தொழிற்சாலையிலோ, உடம்பு சரியில்லாத குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வந்த இளம்தாய் முதலாளியிடம் லீவ் கேட்டு அது மறுக்கப்பட்டு, அவள் வேதனைப்படுவது மாதிரியான கதைகளைப் படித்ததுண்டு. இந்த்த் தொகுப்பில் பார்வை என்ற கதையில் அதே பிரச்சனையுடன் மென்பொருள் நிறுவனத்தில் பல்லாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு இளம் தாய் வருகிறாள்.அதே போல, மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் செல்லும் கணவன், (கொத்தனார், டிரைவர் போன்ற தொழிலாளியாக அவன் இருப்பான்) விவாகரத்து கேட்க, இப்படிப் பட்ட உன்னுடன் நானும் வாழப் பிரியப்படவில்லை என்று சொல்லி, அவனை உதறித் தள்ளும் மனைவியைப் பற்றிய கதைகளை நான் சிறுவயதில் படித்ததுண்டு. இத் தொகுப்பில் இதே கதை ஒரு மென்பொருள் நிறுவனச் சூழலில் வருவதாக ஒரு கதை ஒரு காதல், மூன்று கடிதங்கள் என்று கடிதங்களின் வடிவில் இருக்கிறது. கால மாற்றத்தில் வேலை பார்க்கும் சூழலோடு விவாகரத்து கேட்கும் ஆளும் மாறுகிறது. இதில் அப்படிக் கேட்பவள் மனைவி.

யோசித்துப் பார்த்தால், மனிதர்களின் ஆதாரமான பிரச்சனைகள் அப்படியே தான் இருக்கின்றன. அவன் வாழும் சூழல்தான் ஓரளவிற்கு மாறியிருக்கிறது. இப்போது சற்று வசதி வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அந்த வசதி, வாய்ப்புகள் தரும் புதிய வெளிச்சத்தில் மனிதன் தன் பிரச்சனைகளை அணுகுகிறான். அந்த அணுகுமுறை சற்றே மாறிய கதைகளாக புதிய வடிவில், சமயங்களில் புதிய தீர்வுகளுடன் இன்று வருகின்றன.

எல்லாக் கதைகளும் சொல்லப்பட்ட வித்ததில் சிறப்புப் பெறுகின்றன என்றாலும், முழுத் தொகுப்பும் மிக மிக அற்புதம் – அவுட்ஸ்டாண்டிங் என்பதாகச் சொல்ல முடியாமல், நல்ல வாசிப்பு அனுபவம் தருவதோடு நின்று கொள்வதாக எனக்குப் படுகிறது.

எங்கள் தமுஎகச தலைவர் தோழர். ச.தமிழ்ச்செல்வன் சொல்வதை நான் பல முதல் சிறுகதைத் தொகுப்புகளுக்குச் சொல்லியிருக்கிறேன். இங்கும் அதையே சொல்கிறேன். ஒரு தொகுப்பு மிகச் சிறப்பானது என்பதற்கு அதன் ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. நான்கைந்து மிகச் சிறப்பாக இருந்தால் போதுமானது என்பார் அவர். அந்த வகையில் இந்த்த் தொகுப்பு மிகச் சிறப்பானதுதான்.

திரும்பவும் தொகுப்பின் அற்புதமான முன்னுரையிலிருந்தே ஒரு வரியை எடுத்து முடிக்கிறேன். முன்னுரையின் தலைப்பு யானை பிழைத்த வேல். இன்று சிறுகதை உலகிற்கு யானை பிழைத்த வேல் ஏந்தியவர்கள்தான் அதிகம் தேவை. இந்தத் தொகுப்பு யானை பிழைத்த வேலாக இருக்கலாம் என்று முன்னுரை சொல்கிறது.

கைவேல் களிற்றொடு போக்கியவனான அடியேன் யானை பிழைத்த வேல் ஏந்திய  புதிய படைப்பாளி கார்த்திக் பாலசுப்ரமணியனை ஆரத் தழுவி வாழ்த்துகிறேன்.

கட்டுரை – Page 12 – நவீன விருட்சம்

டொரினா

கார்த்திக் பாலசுப்ரமணியன்

யாவரும் பதிப்பகம்

பக்கம் – 110.

விலை – ரூ100