டோட்டோ – சான் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : டோட்டோ – சான்
(ஜன்னலில் ஒரு சிறுமி)
ஆசிரியர் : டெட்சுகோ குரோயாநாகி
தமிழில் : சு. வள்ளிநாயகம் , சொ. பிரபாகரன்
வெளியீடு : நேசனல் புக் டிரஸ்ட்
விலை : ரூ.120
இந்த நூலை கேள்விப்படாத ஆசிரியர்கள் இருக்க முடியாது. ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்று அனைவரும் பரிந்துரை செய்யும் நூல். இந்த நூல் ஜப்பானில் வெளிவந்த ஆண்டில் சுமார் நான்கு லட்சத்திற்கு மேலான பிரதிகள் விற்றுள்ளன என்பதிலிருந்து இந்த நூலின் தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்த புத்தகம் 1996ம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தொண்டராக இருந்த போது அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இதனை வாசித்து முடித்துவிட்டேன். எனக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆஹா ஓஹோ என்று நானும் பார்க்கும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசியிருக்கிறேன். அறிமுகம் செய்திருக்கிறேன்.
அதன் பின் 1998ம் ஆண்டு நான் எங்களது கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தேன். அந்த பள்ளியை கோபயாஷி போல நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு மீண்டும் இந்த புத்தகத்தை மறு வாசிப்பு செய்தேன். அப்போது எனக்கு அவர் பயன்படுத்திய வகுப்பறை யுத்திகள் பெரிதும் கவர்ந்தன. அதன் அடிப்படையில் பள்ளியின் தரையையே கரும்பலகை போல மாணவர்களை பயன்படுத்தச் செய்தேன். தற்போதும் அது நடைமுறையில் இருக்கிறது. அதே போல இயற்கை நடை பயணம் செய்துவருகிறோம். குறிப்பாக நடவு நேரத்தில் வரப்புகளில் நடக்க செய்து அதன் அனுவபத்தை பெறச் செய்து வருகிறோம். டோட்டோ – சானில் குறிப்பிட்டுள்ள பல செயல்பாடுகளை எங்கள் பள்ளியில் கடந்து 25 ஆண்டுகளாக செய்துவருகிறோம். எங்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய அனுபவம் கிடைக்கத்தான் செய்கிறது.
அதன் பிறகு 2011ம் ஆண்டு மீண்டும் இந்த புத்தகத்தை வாசித்தேன். அப்போது அனைத்துப் பள்ளிகளிலும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அப்போதெல்லாம் பள்ளிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காக இந்த புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளேன். இருக்கும் இடத்தை எவ்வாறெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்றும். மரங்களை பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தை கொடுத்து அதனை மாணவனே பராமரிக்கச் செய்யலாம். இதனால் பள்ளியை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம். இப்படியாக பல விஷயங்களையும் மாணவர்களுக்கான விளையாட்டுகளையும் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் உரையாடியிருக்கிறேன்.
தற்செயலாக இந்த புத்தகம் சில தினங்களுக்கு முன்பு என் கண்ணில் பட்டது. எங்களிடம் படிக்கும் ஆசிரியர்களுக்கு இதனை ஒவ்வொரு ஆண்டு மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கி கொடுத்துவருகிறேன். இத்துடன் பகல் கனவும் இருக்கும். நான் வாங்கும் போது ரூ.30ஆக இருந்தது தற்போது ரூ120ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் இந்த புத்தகத்தைப் படிக்க தூண்டியது. மொத்தம் 161 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை இந்த முறை படிப்பதற்கு ஒரு வாரக்காலம் தேவை ஏற்பட்டது. பல வேலைகளுக்கு இடையே இதை படித்து முடித்தேன். முடிவில் டெட்சுகோ தன் நண்பர்களை தேடி சென்று பார்த்ததும். அவர்களுடன் உரையாடியதையும் பதிவு செய்துள்ளார். அவர்கள் அந்த சிறிய பள்ளியிலிருந்து வெளியே சென்று எவ்வாறு உயர்வான வாழ்கையை பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது என்பதுதான். பள்ளியின் என்பது கட்டிடங்களால் ஆனதல்ல அன்பினாலும், அக்கரையினாலும் ஆனது என்பதை நாம் உணரமுடியும். 50க்கும் குறைவாக படித்த அந்த சிறப்பு மிக்க பள்ளியையும் பிடிக்கவில்லை என்று வெளியேறிய பெற்றோர் இருந்திருக்கிறார்கள். தற்போதும் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த முறை வாசிப்பில் இந்த புத்தகத்தில் தலைமையாசிரியர் சோசாகு கோபயாஷி தவிற ஒரே ஒரு ஆசிரியரைப் பற்றி மட்டுமே ஆசிரியர் பேசுகிறார். ஏன் மற்ற ஆசிரியர்கள் பேசப்படவில்லை என்பது தெரியவில்லை. அவர்களை இவர் அறிமுகப்படுத்தக்கூட இல்லை என்பதும் கவனிக்கதக்கது. அப்போ இந்த பள்ளியில் மெனக்கிடுவதும், மாணவர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளுவதும் தலைமையாசிரியர் மட்டும் தான். மற்ற ஆசிரியர்களின் அனுகுமுறையை சொல்லியிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.
டோட்டோ-சானின் அம்மா, அப்பா இருவரும் அவரை புரிந்து கொண்டவர்கள். மேலும் பள்ளியை பற்றிய புரிதலும் கொண்டவர்கள் என்பதை இதனை வாசிக்கும் போது நாம் அறிய முடிகிறது. மற்றவர்களும் அந்த புரிதலுதன் இருந்திருந்தால் அந்த பள்ளியில் இடைவிலகள் இருந்திருக்கக் கூடாது. ஆனால் அந்த பள்ளியிலும் இடைவிலகள் இருந்திருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. இன்றைக்கும் அந்த பள்ளி போல செயல்படுகிற பள்ளிகளில் கோபயாஷிகள் செயல்படுகிறார்கள். ஆனால் அன்றைய சமூகம் போலவே இன்றைக்கும் சமூகம் இயல்பான கல்விக்கு அங்கிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே செயல்பட வேண்டும்.
கடைசி 40 பக்கங்கள் என்னை தற்போது மிகவும் பாதித்தது. ஒரு குழந்தையின் மன நிலையில் ஒரு போர் எவ்வாறு இருக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் ஒரு இனிப்பு பாக்கெட்டு கிடைக்காது என்று காசை போட்டுப் போட்டு பார்க்கும் நிலை, சொல்லொன்னா துயரம். ஒரு பாக்கெட் எங்கேனும் ஒரு மூலையில் மாட்டிக் கொண்டு இருந்து கீழே விழாதா என்று ஏங்குகிற ஏக்கம் என் மனசை ஏது செய்துவிட்டது. இன்றைக்கும் நடைக்கிற இந்த போர்கள் குழந்தைகளை படிக்கும் குழந்தைகளை எந்த பாடு படுத்தும் என்பதை அறிந்து கொள்ள இந்த புத்தகத்தின் கடைசி 40 பக்கத்தை போர் நடத்தும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் குழந்தைகளின் துயரத்தை அறியச் செய்ய உதவும்.
இப்போது படிக்கும் போது இந்த புத்தகத்தில் உள்ள டோட்டோ-சான் கல்வியின் வளர்ச்சிக்கு பள்ளி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு. கடலில் பாதி, மலையில் பாதி என்ற உணவை அம்மா பள்ளிக்கு கொடுத்துவிடுவது மிக முக்கியம். அந்த பள்ளியின் பெற்றோர் கொடுத்து அனுப்பினர். அவர்களின் ஒத்துழைப்பினாலேயே சாத்தியமானது. தலைமையாசிரியர் எடுக்கிற பல்வேறு முயற்சிகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என மூன்று பேரின் ஒத்துழைப்பின் காரணமாகவே மாற்று சிந்தனைப் பள்ளிகள் சாத்தியம் ஆகும். அதற்கு தொடர்ச்சியான போராட்டம் அவசியம் என்பதையும் நான் அறிந்து கொள்ள முடிந்தது.
எழுதியவர்:
மொ. பாண்டியராஜன்
மதுரை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

