தமிழில்: ச.வீரமணி
ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படியெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள விஷயங்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. இவை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்தூர் புது சட்டக் கல்லுரியில் ஆசிரியர் பணியிடங்களில் முஸ்லீம்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற விதத்தில் மதவெறியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமான நிகழ்வாகும். ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கிவரும் ஏபிவிபி என்னும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் இக்கல்லூரிப் பிரிவானது அங்கே பணிபுரிந்துவரும் முஸ்லீம் ஆசிரியர்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்தக் கல்லுரியில், முஸ்லீம் ஆசிரியர்கள், “மத அடிப்படைவாத சிந்தனைகளைப்” பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறி அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் ஆசிரியர்கள் இருப்பதாகவும் கூறி இதனை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். உண்மையில் அக்கல்லூரியில் மொத்தம் பணியாற்றும் 28 ஆசிரியர்களில், நான்கு பேர் மட்டுமே முஸ்லீம்களாகும்.
ஏபிவிபி-யின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில், முஸ்லீம் ஆசிரியர்கள், வளாகத்திற்குள் “முஸ்லீம் மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் முஸ்லீம் ஆசிரியர்கள், மாணவிகளை உணவுவிடுதிகளுக்கும் (restaurants), சிற்றுண்டி விடுதிகளுக்கும் (pub) அழைத்துச் சென்று, “ஜிகாத் காதலையும்” (“Love Jihad”) தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அபத்தமான முறையில் கூறியிருக்கிறார்.
கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் இனமூர் ரஹ்மான், (இவரும் ஒரு முஸ்லீம்தான்), இந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ள நான்கு முஸ்லீம் ஆசிரியர்கள் மீதும் மற்றும் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களை ஐந்து நாட்களுக்கு ஆசிரியப் பணிக்கு வர வேண்டாம் என்று கூறியிருப்பதுடன், புகாரின்மீது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
இந்த நடவடிக்கையுடன் இவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. இப்போது புதிய குற்றச்சாட்டுகளை ஏபிவிபி மாணவர்கள் வீசி எறிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்த முஸ்லீம் முதல்வர்மீதும் இப்போது குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இவர், டாக்டர் ஃபர்கட் கான் (Dr. Farhat Khan) என்பவர் எழுதிய “வன்முறையின் தொகுப்பு மற்றும் கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறை” (“Collective Violence and Criminal Justice System”) என்னும் புத்தகத்தை வைத்திருக்கிறார் என்று கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இந்தப் புத்தகமானது ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறியிருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். தான் கல்லூரியில் முதல்வர் பொறுப்பை 2019இல் ஏற்பதற்கு முன்பே, 2014இலேயே இந்தப் புத்தகமானது கல்லூரியின் நூலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது என்று அவர் விளக்கம் அளித்தபோதிலும்கூட, கிளர்ச்சியாளர்கள் அதனையெல்லாம் கண்டுகொள்ள விரும்பவில்லை. அவர் தன் பதவியை ராஜினாமா செய்வது வரையிலும் கிளர்ச்சிகளைத் தொடர இருக்கிறார்கள்.
ஏபிவிபி-யின் முறையீடுகளும், கிளர்ச்சியும் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர், நரோத்தம் மிஷ்ரா, அவர்களால் ஆதரிக்கப்பட்டுவருகிறது என்பதும், அவர்தான் காவல்துறையினரை அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இதனை அடுத்து உள்ளூர் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் மீதும், மற்றொரு ஆசிரியரான மிர்சா மொஜி மற்றும் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (இரு மதத்தினருக்கு எதிராக பகைமையை வளர்த்தல்), 295-ஏ (மத நம்பிக்கைகளை துவேஷத்துடன் நிந்தித்தல்) உட்பட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும், மேற்படி புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் ஃபர்ஹட் கான் மற்றும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உட்பட மூவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுத்ததால் அவர்களைக் கைது செய்திடக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இவ்வாறு, ஒருசில நாட்களிலேயே, முதல்வர் உட்பட அனைத்து முஸ்லீம் ஆசிரியர்களும், தாங்கள் வகித்தப் பொறுப்புகளிலிருந்து வலுவான முறையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கத்தின் மறைமுக ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏபிவிபி-யினர் அளித்திடும் புகார்களின் அடிப்படையில் மதத் தீவிரவாதம் மற்றும் அதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக என்றே உயர் கல்வி இயக்குநரகத்தில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதச்சிறுபான்மை ஆசிரியர்கள் குறி வைத்து நீக்கப்படும் வேறு சில நிகழ்வுகளும் உண்டு. பஜ்ரங் தள உறுப்பினர்கள் அளித்த எண்ணற்ற புகார்களை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடிசா (Vidisha) என்னுமிடத்தில் உள்ள ஒரு பள்ளியில் முஸ்லீம் முதல்வராக இருந்த திருமதி ஷைனா ஃபிர்டுவாஸ் (Shaina Firdous) என்பவர் நீக்கப்பட்டார். குணா மாவட்டத்தில் கிறித்தவ மிஷனரி பள்ளிக்கூடம் ஒன்றில் ஜஸ்டின் மற்றும் ஜாஸ்மினா காட்டூன் (Justin and Jasmina Khatoon) என்கிற இரு ஆசிரியர்கள், ஒரு மாணவர் அளித்திட்ட புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லீம் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எதிரோக மதவெறி நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முஸ்லீம் மாணவர் ஒருவரின் பெயர் “கசாப் போன்று இருப்பதாகக்” கூறி அவருடைய ஆசிரியரால் அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு, கேலி செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் பார்னர் என்னும் ஊரில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் ஓர் ஆசிரியர், வகுப்பில் பயின்ற ஒரேயொரு முஸ்லீம் மாணவியைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நச்சு முஸ்லீம் எதிர்ப்பு கருத்துக்களை வீசியிருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கு புராதன பாரம்பர்யப் பெருமைகளைப் பறைசாற்றுகிறோம் என்ற பெயரில் கல்வியை காவிமயப்படுத்துவது என்பதும் மோடி அரசாங்கத்தின் இலக்குகளில் ஒன்றாகும். இவ்வாறு காவிமயப்படுத்துவதன் நடவடிக்கைகளில் உடனடியாக இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது சிறுபான்மை முஸ்லீம் ஆசிரியர்களும் மாணவர்களுமாவார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரபூர்வமாகவே இவை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பனவற்றை, கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லீம் மாணவிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்லூரிகளுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டதிலிருந்தும், மத்தியப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தும், அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதிலிருந்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு நாட்டின் பொதுக் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகத் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியா, 2023இல் ஜி.20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம்’ என்னும் முழக்கத்துடன் அதிகாரபூர்வமாக ஏற்க இருக்கிறது. “மனிதகுலம் முழுமையும் ஒரே குடும்பமாக நல்லிணக்கத்துடன் மேம்பாடு அடைந்திடும் விதத்தில் இந்தியா இருந்திடும்” (“India stands for promoting harmony within the human family”) என்று மோடி படாடோபமாகப் பறைசாற்றியிருக்கிறார். ஆனால், இந்தியாவிற்குள் உள்ள பல்வேறு மதத்தினருக்கிடையேயும் மதவெறி அடிப்படையில் பிரித்தாளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசாங்கம் ஜி.20ஐ ஒட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் எண்ணற்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. இதில் ஒரு நிகழ்வு இந்தூரிலும் நடைபெறவிருக்கிறது. இதே இந்தூரில்தான் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் முனவர் ஃபரூக்கி, அவருடைய நிகழ்ச்சிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக ஓர் இந்துத்துவா சங்கி கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். இதே இந்தூரில்தான் சென்ற ஆண்டு வளையல் வியாபாரி ஒருவரான தஸ்லீம் அலி என்பவர் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வளையல் விற்றார் என்று கூறி மிகவும் மோசமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 107 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த இந்தூர் நகரில்தான் இப்போது கண்ணியம் மிக்க சட்ட வல்லுநர்களும், ஆசிரியர்களும் அவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தாலேயே வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஜி.20 நிகழ்வு இந்தூரில் நடைபெறும் சமயத்தில், இந்துத்துவா ஆட்சியாளர்களின் உண்மை சொரூபமும், ‘அனைவரும் ஒரே குடும்பம்’ (‘வாசுதைவ குடும்பகம்’) என்னும் பாசாங்குத்தனமான பிரகடனமும் தோலுரித்துக் காட்டப்படும்.
(டிசம்பர் 7, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.