செப்டம்பர் பிரச்சாரம் நோக்கி… – தமிழில்: ச.வீரமணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் மீதும், தனியார் மயம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின்மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் மோடி அரசாங்கம் ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள அறைகூவல் விட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 14 தொடங்கி 24 வரை நடைபெற்று பிரச்சனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லவும், இப்பிரச்சனைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் விளக்கிடவும் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைகளும் உயர்த்திப்பிடிக்கப்படும்.

விலைவாசி உயர்வு பிரச்சனை மக்களைப் பாதித்துள்ள மிகவும் கடுமையான ஒரு பிரச்சனையாகும். ஒட்டுமொத்த பணவீக்கம்
(wholesale inflation) தொடர்ந்து 15 விழுக்காடாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், சில்லரைப் பணவீக்கமோ (retail inflation) மீண்டும் 7 விழுக்காட்டைத் தொட்டிருப்பதாக, ஆகஸ்டில் வெளியாகியுள்ள விவரங்கள் காட்டுகின்றன. விலைவாசி உயர்வுக்கு மிகவும் பங்களிப்பினைச் செய்யக்கூடிய காரணி என்பது, பல்வேறு செஸ் வரிகள் மற்றும் சர்சார்ஜ் வரிகள் மூலமாக, பெட்ரோலியப் பொருட்கள் மீது ஒன்றிய அரசாங்கம் விதித்துள்ள உயர் அளவிலான வரிகளால் மிகவும் உயர்ந்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளாகும். தற்போது ஒன்றிய அரசாங்கம் பெட்ரோல் மீது லிட்டருக்கு 28 ரூபாயும், டீசலுக்கு 22 ரூபாயும் வசூலித்துக் கொண்டிருக்கிறது. இது, சென்ற ஏப்ரலில் பத்து ரூபாய் செஸ் வரியைக் குறைத்தபின் உள்ள நிலையாகும்.

சென்ற 2021-22 நிதியாண்டின்போது ஒன்றிய அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் மீதான செஸ் வரிகள் மூலமாக நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்தது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கமானது பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிப்பதன் மூலமாக வருவாயை உயர்த்துவதற்கு முக்கிய காரணம், அது தான் சேவகம் செய்யும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது போதுமான அளவிற்கு வரிகளை உயர்த்த மறுப்பதேயாகும். இவ்வாறு ஒன்றிய அரசாங்கம், கார்ப்பரேட்டு ஆதரவு கொள்கையைப் பின்பற்றுவதன் காரணமாக, அதிக வருவாய் வேண்டி, சாமானிய மக்களைக் கசக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறது.

இடைவிடாத விலைவாசி உயர்விலிருந்து மக்கள் நிவாரணம் பெற வேண்டுமானால், அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான செஸ் வரிகள் மற்றும் சர்சார்ஜ் வரிகளை விலக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பொட்டலம் கட்டப்பட்ட (packaged food articles) ஆட்டா, பால் பொருட்கள் மற்றும் பல உணவுப் பொருள்கள் மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விகிதம் விதித்திருப்பதையும் விலக்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த எட்டாண்டுகளில் மோடி அரசாங்கத்தின் மாபெரும் தோல்வி என்பது அது போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பினை உருவாக்கத் தவறியதாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது என்ன சொன்னது தெரியுமா? ஒவ்வோராண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி அளித்தது. கடும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி இருப்பது கடுமையாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE-Centre for Monitoring Indian Economy) அறிக்கையின்படி, 20க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 42 விழுக்காடு அளவிற்கு இருக்கிறது.

இதுதொடர்பாக உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும், ஒன்றிய அரசாங்கத்தின்கீழ் காலியாகவுள்ள சுமார் 10 லட்சம் வேலைகளை நிரப்பிட வேண்டும் என்பதுமாகும். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் வேலை கோரும் ஒவ்வொருவருக்கும் வேலை அளித்திட வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து ஜூலை வரையிலும் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் வேலை கோரிய 7 கோடியே 26 லட்சம் பேர்களில் 20 விழுக்காட்டினருக்கு, அதாவது 1 கோடியே 47 லட்சம் பேர்களுக்கு வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2021-22இல் வேலை செய்தவர்களிலும் ஏராளமானவர்களுக்கு அவர்கள் வேலை செய்ததற்கான ஊதியம் இன்னமும் வழங்கப்படாமல் இருக்கிறது. இவற்றை உடனடியாக சரி செய்திட வேண்டும். மேலும் தேவைப்படுவது என்னவெனில் இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்களையும் அதிகரித்திட வேண்டும், ஊதியத்தையும் அதிகரித்திட வேண்டும். அதே சமயத்தில் இதேபோன்று, தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும். இதனை எவ்வளவு விரைவாகச் செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்திட வேண்டும்.

மோடி அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. 2014க்குப்பின், ஒன்றிய அரசாங்கம் 3.63 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) விற்றிருக்கிறது. இதனால் ஏராளமானவர்கள் வேலைகளை இழந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் செல்வ வளம் பெற்றிருக்கிறார்கள். இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஒன்றிய அரசாங்கம் தேசிய பணமாக்கும் திட்டம் (NMP-National Monetisation Pipeline) ஒன்றையும் உருவாக்கி அதன்மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுவிட்டால், மின் விநியோகம் தனியார்மயமாகி, மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திடும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மீது இவ்வாறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு ‘லேபர் கோடுகள்’ (‘labour codes’) மூலமாக, முதலாளிகள் தொழிலாளர்களை வேலைவாங்கிவிட்டு, (hire and fire) விரட்டி அடித்திடலாம், வேலை நேரத்தை அதிகரித்திடவும் முதலாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வழிமுறைகள் மாற்றப்பட்டிருக்கின்றன, தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன, நடைமுறையில் இருந்துவந்த தொழிலாளர் நலச் சட்டங்களும், அதன் அமலாக்க எந்திரமும் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கின்றன.

செப்டம்பர் பிரச்சாரம் தனியார்மயத்தால் ஏற்படும் கேடுகளைக் கூறி மக்களைக் கற்பித்திடும். ஆட்சியாளர்களின் கொள்கைகள் எப்படியெல்லாம் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திருக்கிறது என்பதைக்கூறி தனியார்மயத்திற்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டும்.

மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதற்கு இட்டுச்சென்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்திற்குப் பின்னர், பல்வேறு வகையான விவசாயப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டரீதியாக நிர்ணயிப்பதற்கான பிரச்சனையும், விவசாயிகளின் அதிகரித்துக்கொண்டிருக்கும் கடன் பிரச்சனையும் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஊதியங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பது நீடிக்கிறது, அதேபோன்று அவர்களுக்கு வேலை அளிப்பது என்பதும் கணிசமான அளவிற்குக் குறைந்துகொண்டே செல்கிறது.

பிரச்சாரம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீதும் கவனம் செலுத்தும். விவசாயத்திற்கும் கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் அரசின் ஆதரவு அவசியம் என்பது பிரச்சாரத்தின்போது கூறப்படும்.

இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளேயாகும். மேலும் இது ஜனநாயகத்தின்மீதும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் முழு அளவில் தாக்குதலையும் தொடுத்து வருகிறது, முழுமையாக எதேச்சாதிகாரமான முறையில் தன்னுடைய வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளையும், இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலையும் உந்தித்தள்ளுகிறது.

எவ்விதமான குற்ற உணர்வுமின்றி குடிமக்களின் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் முதலானவர்கள் மிகக் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (‘உபா’ சட்டம்), மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவுகளைப் பயன்படுத்தி சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். அமலாக்கத் துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறைகளின் மூலமாக எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் கீழ் ஆளப்பட்டுவரும் மாநில அரசாங்கங்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களின் உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற நடைமுறையே இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனைகளை எழுப்பி பேச முடியாத நிலை. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அமைப்புகள் அனைத்தையுமே தங்கள் கட்டளைப்படி செயல்படவைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டும் வண்ணமும் இவற்றுக்கெதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்கிற முறையில் பிரச்சாரம் கவனம் செலுத்தும்.

உழைக்கும் மக்களின் கோரிக்கைகளையும், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான அறைகூவலையும் முன்வைக்கும் அதே சமயத்தில், கட்சி ஆட்சியாளர்களின் நவீன தாராளமய இந்துத்துவா கொள்கைக்கு மாறாக, மாற்றுக் கொள்கைகளின் கீழான திட்டங்களை முன் வைத்திடும். கேரளாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் எப்படி இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பொதுக் கல்விமுறை மற்றும் சுகாதார அமைப்புமுறைகளை வலுப்படுத்தி இருக்கிறது, எப்படி கேரளாவில் நாட்டிலுள்ள இதர மாநிலங்களைக் காட்டிலும் பணவீக்க விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது, இதற்கு எப்படி அங்கே செயல்படுத்தப்பட்டுவரும் வலுவான பொது விநியோக முறையும், மாவெலி ஸ்டோர்ஸ் வலைப்பின்னலும் உதவுகின்றன, எப்படி இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைப் புதுப்பித்து, புத்துயிரூட்டி வெற்றிகரமாகச் செயல்பட வைத்திருக்கிறது, எப்படி கேரளம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உயர்ந்த அளவில் குறைந்தபட்ச ஊதியம் அளித்துவருகிறது என்பன போன்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டு கால சாதனைகள் மக்கள் மத்தியில் உயர்த்திப்பிடிக்கப்படும்.

செப்டம்பர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானதாகும். பாஜக-விற்கு எதிராகவும் மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பு வேண்டிய கட்டாயம் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்கிட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். சமீபகாலங்களில் நடைபெற்ற ஒன்றுபட்ட போராட்டங்கள் காரணமாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வும் அவசியமாகி இருக்கிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சாவினால் தலைமை தாங்கப்பட்ட ஒன்றுபட்ட விவசாயிகள் போராட்டமும், மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ஒன்றுபட்ட போராட்டங்களும் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையின் அவசியத்திற்குப் பங்களிப்பினைச் செய்திருக்கின்றன.

பாஜகவிற்கு எதிரான விரிவான ஒன்றுபட்ட மேடை வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்குத் தங்களைப் பாதித்துள்ள பிரச்சனைகளின் மீது பல்வேறு மக்கள் பிரிவினரின் போராட்டங்களில் விரிவான ஒற்றுமை ஏற்பட வேண்டியது அவசியம். பிரச்சனைகள் என்று சொல்கிறபோது அவை மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமல்ல. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக விரிவடைந்த ஒன்றுபட்ட மேடைகளை வளர்த்தெடுக்க வேண்டியதும் அவசியம். கட்சியால் சுயேச்சையான முறையில் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள செப்டம்பர் பிரச்சாரம், பல்வேறு மேடைகளின் மூலம் மக்களின் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்குப் பங்களிப்பினைச் செய்திடும்.

(செப்டம்பர் 14, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.