[இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 6-10 தேதிகளில் கேரளா மாநிலம், கண்ணூரில் நடைபெறுகிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சி அடுத்த மூன்றாண்டு காலத்திற்கு மேற்கொள்ளவேண்டிய அரசியல் திசைவழியை வகுத்திடும்.
மத்தியக் குழுவால், இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் இறுதிப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கேயுரிய நிகரற்ற வழிமுறைக்கிணங்க, கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு, கட்சி உறுப்பினர்களால் அரசியல் நடைமுறை உத்திகள் கோட்பாடு தீர்மானிக்கப்படுகிறது.
கட்சியின் அகில இந்திய மாநாடு சென்ற முறை 2018இல் நடந்ததற்குப் பின், 2019 மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையுடன் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குப் திரும்பியபின்னர், நாட்டில் வலதுசாரிகளின் நிலை ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தோம். அதன் விளைவாக, ஆட்சியாளர்கள் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாக அமல்படுத்தத் தொடங்கியதையும் பார்த்தோம். இத்துடன் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியதையும் பார்த்தோம். இவற்றின் விளைவாக ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசும் விரல் விட்டு எண்ணுகிற ஒரு சில பெரும் கார்ப்பரேட்டுகள் லாபமும், சொத்துக்களும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அதே சமயத்தில் வேலையின்மை, வருமானங்கள் இழப்பு, விலைவாசி உயர்வு மற்றும் விவசாய நெருக்கடியின் விளைவுகள் முதலியவற்றால் மக்களின் வாழ்நிலைமைகள் குறிப்பாக கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், மிகவும் மோசமாக மாறின.
இந்தக் காலகட்டத்தில் மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், அவற்றால் மக்கள் மீது ஏற்றப்பட்ட சுமைகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் பெரிய அளவில் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, அரசாங்கம் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய இயக்கம் ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி, அவற்றை ரத்து செய்ய வைத்திட்ட வரலாறு படைத்திட்ட போராட்டமாகும். தொழிலாளர் வர்க்கமும் தொழிலாளர் விரோத ‘லேபர் கோடுகளுக்கு’ (Labour Codes) எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும், போதுமான அளவு குறைந்தபட்ச ஊதியம் கோரியும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. 2018க்கும் 2022க்கும் இடையே நான்கு பொது வேலை நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் மார்ச் 28-29 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தங்களில் அனைத்துத்துறைகளில் பணிபுரியும் கோடானுகோடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்திடவும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இயக்கமாகும். இப்போராட்த்தில் நாடு முழுதும் மிக விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்தன.
இப்போராட்டங்களையும், இயக்கங்களையும் வளர்த்தெடுப்பதிலும், தீவிரப்படுத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் முக்கிய பங்களித்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டத்துடன் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான அரசியல்-சித்தாந்தப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சொல்லி வந்திருக்கிறது. தேசியவாதம் தொடர்பாக இந்துத்துவா வெறியர்கள் மேற்கொண்டுவரும் முஸ்லீம்கள் எதிர்ப்புப் பிரச்சாரம் மக்கள் மத்தியில், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அங்கீகரித்தாக வேண்டும். இவ்வாறு இந்துத்துவாவாதிகள் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு வலுவான அரசியல்-சித்தாந்தப் போராட்டத்தை நடத்தாவிட்டால், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியை வலுவாக எதிர்த்திட முடியாது. இந்துத்துவாவிற்கு எதிராக இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியும் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை களும் தவறியுள்ளபோது, இதனை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதர இடதுசாரிக் கட்சிகளுக்கும் மாறியிருக்கிறது. எனவே அதற்காக அவை, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் தங்களைச்சுற்றி அணிதிரட்டி ஒரு மேடையை அமைத்திட வேண்டியிருக்கிறது.
கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சியை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் சுயேச்சையான முறையில் வளர்த்தெடுப்பது எப்படி என்பது குறித்து கூர்மையாகக் கவனம் செலுத்திடும். கட்சி, வலுவாக இருந்த இரண்டு தலங்களில் பின்னடைவினையும், வீழ்ச்சியையும் அடைந்திருக்கிறது என்கிற உண்மையிலிருந்து இவ்வாறு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் திரிபுராவில் பாஜக ஆகிய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகளால் கடுமையாகத் தாக்குதலுக்கும், வீழ்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணற்ற கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறுவிதமான வடிவங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனினும், இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் கட்சியின் ஊழியர்கள் துணிவுடன் எதிர்கொண்டும், மீளவும் அணிதிரண்டும், உழைக்கும் மக்களைத் திரட்டி, போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு, கடந்த மாநாட்டிற்குப்பின் நடைபெற்றுள்ள ஸ்தாபனப் பணிகள் மற்றும் அளிக்கப்பட்ட கடமைகள் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்திடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிட் பெருந்தொற்றும், சமூக முடக்கங்களும் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கின்றன. ஏழை மக்கள் மீது அவை சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகு சிரமமிகு காலகட்டத்தில் கட்சி மக்கள் மத்தியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கும் உதவும் விதத்தில் கணிசமான அளவிற்கு நிவாரணம் அளித்தது. இத்தகு வேலைகள், கோவிட் தனிமை மையங்கள் அமைத்தல், ரேஷன் உணவுப் பொருட்கள் வழங்குதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளித்தல், முகக் கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்குதல் போன்ற விதத்தில் அமைந்திருந்தன. கட்சி ஸ்தாபனம் தொடர்பான அம்சத்தைப் பொறுத்தவரையில், கட்சிக்குள் இளம் தோழர்கள் மற்றும் பெண்களைக் கொண்டுவருவதற்கும், கட்சிக்குப் புத்துயிர் அளிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய பின்னணியில் கேரளாவில் நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு சிறப்புக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கண்ணூர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கோட்டையாகும். கட்சி இங்கே மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இம்மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 600க்கும் அதிகமாகும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு மத்தியில் அதிகபட்ச அளவு கட்சி உறுப்பினர் எண்ணிக்கை உள்ள மாவட்டம் இதுவேயாகும்.
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், 2021 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, இரண்டாவது முறையாக பெரிய அளவு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளும், செயல்பாடுகளும் மக்களின் அபரிமித ஆதரவையும் ஏற்பளிப்பையும் பெற்றன. இடது ஜனநாயக முன்னணி பின்பற்றி வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கைகள், ஒன்றிய பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானவைகளாகும், மாற்றானவைகளாகும்.
எனவே, கேரளாவில் நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு, தேசிய அளவில் இடது ஜனநாயக சக்திகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடும் அதே சமயத்தில் அது கேரள இடது இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்ப்பது இயற்கையேயாகும்.
கண்ணூர் அகில இந்திய மாநாடு, வலதுசாரி, நவீன தாராளமய இந்துத்வா சக்திகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி சக்திகளும் உறுதியாகப் போராடி வருபவர்கள் என்பதை உறுதிப்படுத்திடும். அகில இந்திய மாநாடு, நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் இடது ஜனநாயக மாற்றுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திசைவழியைக் காட்டிடும்.
(மார்ச் 30,2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.