மரபுவழி பாசிசமும், இன்றைய வடிவமும் (வழிமுறையிலும் உத்தியிலும் தான் மாறுபடுகின்றன) – அமிஷ் குப்தா; மூத்த பத்திரிகையாளர் (தமிழில்: கி.ரா.சு.)

மரபுவழி பாசிசமும், இன்றைய வடிவமும் (வழிமுறையிலும் உத்தியிலும் தான் மாறுபடுகின்றன) – அமிஷ் குப்தா; மூத்த பத்திரிகையாளர் (தமிழில்: கி.ரா.சு.)

 

சமீப காலத்தில் ‘பாசிசம்’ என்ற சொல்,  அதனை சுருக்கமாக விளக்குவது மிகக் கடினம் என்ற அளவுக்கு மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  எந்த அரசியலின் ஆவேசமான விமர்சகரும் அதை ஒரு உருவகமாக அடிக்கடி பயன்படுத்துகிறார்.  எனினும், வரலாற்றுப் பூர்வமாக, பாசிசம் என்பது இரண்டு உலகப் போர்களுக்கும் இடையில் ஐரோப்பா முழுதும் விரைவாகப் பரவிய தீவீர வலதுசாரிப் பிரிவு, ஜனநாயக விரோதம், தீவீர தேசியவாதம் ஆகியவற்றைக் குறிக்கிறது.  அது பொதுவக அடால்ஃப் ஹிட்லருடன் தொடர்பு படுத்தப்பட்டாலும், அது 1919இல் பெனிட்டோ முசோலினியின் கீழ் ஒரு துணை இராணுவ, அரசியல் இயக்கமாக வடிவம் பெற்றது.  முசோலினியின் கட்சியின் பெயர் லத்தீன் சொல்லான ‘ஃபாசிஸ்’ என்பதிலிருந்து வருகிறது.  ‘ஃபாசிஸ்’ என்ற சொல்லுக்கு முனையில் வெளியில் தெரியும் கோடரியுடன் இறுக்கமாகக் கட்டப்பட்ட  கட்டைகளின் கட்டு என்பது பொருள்.  அது பண்டைய ரோமின் அதிகாரத்தைக் குறிக்கிறது.  பண்டைய ரோமின் குறியீட்டைக் கொண்டு வந்ததன் மூலம் முசோலினி இத்தாலியர்கள் அரசின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாளர் பென் கியாட், சர்வாதிகாரம் குறித்து நன்கறியப்பட்ட வரலாற்றாசிரியர்.  அவர் ஒரு பாசிச அரசை, “ஒரே ஒரு கட்சியைக் கொண்டதும், வன்முறை மூலம் நீதித்துறை, பத்திரிகைத்துறை மற்றும் அரசுக்கு எதிரானவர்களென்று சொல்லப்படும் அனைத்து எதிரிகளையும்  ஒடுக்கியவருமான ஒரு தலைவரால் தலைமை தாங்கப்படும் அரசு” என்று விளக்குகிறார்.  நாம் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இந்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் அரசை பாசிச அரசு என்று கூற முடியாது.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு.  இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, தேர்தல் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொரு முறையும் நடைபெறுகிறது.  ஆறு தேசியக் கட்சிகளும், பதினான்கு பிராந்தியக் கட்சிகளும் தேர்தல்களில் தொடர்ந்து பங்கேற்கின்றன.  தேர்தல் நடைமுறையில் ஊழல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் குறைகள் போன்றவை இந்தக் கட்டுரையின் பொருளல்ல.  நமது தலைப்பு, பாசிசம் என்பதன் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசின் செயல்பாடுகளை ஆராய்வதாகும்.  மத்தியிலிருக்கும் தேஜகூ அரசை சிலர் அது ஒரு பாசிச அரசு என்றும் சிலர் அது ஒரு சர்வாதிகார அரசு என்றும் விமர்சிக்கின்றனர்.  இந்த இரண்டு வாக்கியங்களை எடுத்துக் கொண்டு பார்க்கும்போது, பாசிசத்தையும், சர்வாதிகாரத்தையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது.  யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், “பாசிசம் எப்படி செயல்படுகிறது” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஜேசன் ஸ்டான்லியின் கருத்தின்படி, பாசிசத்துக்குக் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உள்ளன. 

Jason Stanley.- " Facha" ( Blackie Books) (entrevista) - SEÑALES PARA CRUZAR UN LABERINTO por José Luis Rico

பாசிசம் தாராளவாத, பன்முகத்தன்மை கொண்ட, உலகமய சக்திகளால் அழிக்கப்பட்ட ஒரு போற்றுதலுக்குரிய கற்பனையான கடந்த காலத்தை அழைக்கிறது.  சீரான கடந்தகாலத்தின் கற்பனை பல்வேறு வடிவங்களை எடுக்கலாம் – நிறம், கலாச்சாரம், மதம்” போன்றவை.  அதாவது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அரசு, அது எப்போதுமே ஆணாதிக்கம் கொண்டது.  மரபுவழி மற்றும் ஆணாதிக்கப் பாத்திரத்தின் கூட்டு, அதிகாரத்திலிருக்கும் வலுவான  மனிதனுக்கு தற்காலத்தில் தன் விருப்பத்தைத் திணிக்க நெறிசார்ந்த அதிகாரத்தை வழங்குகிறது.  பாசிசம் மக்களிடையே ஒரு அதிகார வர்க்கப் படிநிலையையோ அல்லது சமயகுரு தன்மையையோ நிறுவுவதற்கு புராண கடந்த காலத்தை பயன்படுத்துகிறது.  புராண கடந்த காலத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தகுதி குறித்த ஒரு போலியான உணர்வின் அடிப்படையில் மக்களிடையே பிரிவுகளை உருவாக்க முயல்கிறது.  உதாரணமாக, குற்றவாளிகளுக்கு மேல்  சட்டத்தைக் கடைப்பிடிக்கும் தகுதிமிக்க மக்கள், சோம்பேறிகளுக்கு பதிலாக கடுமையாக உழைக்கும் மக்கள், தூய்மையற்றவர்களுக்குப் பதிலாக இனத்தூய்மை மிக்க மக்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குப் பதில் இயல்பான பாலியல் சேர்க்கையாளர்கள் போன்றவை.  இந்த அளவுகோல்களின்படி தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்கள் இந்த தேசத்தின் உண்மையான மக்களாகக் கருதப்படுகிறார்கள்.  தகுதியற்றவர்களாக அடையாளம் காணப்படும் மக்கள் தகுதியுடையோருக்கு ஆபத்தாகக் கருதப்படுகிறார்கள்.  இவ்வாறாக “நாம்” என்பவர்களுக்கும் “அவர்கள்” என்பவர்களுக்கும் இடையில் இந்த வடிவத்தில் ஒரு பிரிவினை உருவாக்கப்படுகிறது.  இவ்வாறு தகுதியானவர், தகுதியற்றவர் என்று அழைக்கப்படும் போலியான பிரிவினையானது பிரச்சாரம், அறிவுலக எதிர்ப்பு ஆகியவை மூலம் பரப்பப்பட்டு சதிக் கோட்பாடுகளை வளர்ப்பதற்கான வளமான தளம் உருவாகிறது.  “பாசிசப் பிரச்சாரத்தின் மைல்கல் என்பது அது பொய்களை உருவாக்குகிறது என்பது மட்டுமல்ல, அவற்றை உண்மையாக்க முயலும் கொள்கைகளின் சேவையில் அது பொய்களை உருவாக்குகிறது” என்று அமெரிக்க-ஜெர்மானிய தத்துவவியலாளர் ஹன்னா அரென்ட் எழுதுகிறார்.  நாம் இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை இந்த ஆய்வின் அடிப்படையில் பார்ப்போமானால்,  புராணக் கடந்த காலத்தில் பாசிசத்தின் பிரதிபலிப்பை நாம் காண முடியும்.

வரலாற்றாளர் ருத் பென் – கியாட்டின்படி, ஒரு சர்வாதிகாரியால் தலைமை தாங்கப்படும் ஒரு கட்சி அரசு நம் நாட்டில் இந்தக் கணத்தில் இல்லாமலிருக்கலாம், ஆனால் ஆளும் அரசியல் கட்சியிலும் அதன் தலைமையிலும் பாசிசத்தின் தரநிலை அம்சங்கள் முழுமையாக இருக்கின்றன.  அவர்கள் இந்துத்துவா தேசியவாதம், இந்துக் கலாச்சாரம், இந்துயிசத்தின் அடிப்படையில் நாட்டை மாற்றியமைக்க விரும்புகிறார்கள்.  இந்த மூல நிகழ்ச்சிநிரலை அமல்படுத்த, அவர்கள் தொடர்ந்து சமூகத்தின் ஒவ்வொரு படியிலும் “நமக்கும்”, “அவர்களுக்கும்” இடையில் தீயை மூட்டுகிறார்கள்.  அரசுக்கு எதிரான எந்த அறிக்கையையும் தேச விரோதச் செயலாக அடையாளப்படுத்துவது இப்போது தினசரி வாடிக்கையாகி விட்டது.  சிலசமயம் அரசோ அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்களோ எதிர்க்கட்சியினரை எதிரி நாட்டின் ஏஜென்டுகளாகவும் அடையாளம் காண்கிறார்கள்.  இவையெல்லாம் புராண கடந்தகாலத்தின் “தகுதியானவர்”, “தகுதியற்றவர்” என்று அடையாளம் காணும் பாசிச மனப்பான்மையின் பிரதிபலிப்புக்கள்.

தத்துவவியலாளர் ஹன்னா அரென்ட் பாசிசப் பிரச்சாரத்தின் ஒரு பொதுவான அம்சம் பொய்மை என்று எழுதினார்.  கடந்த பத்தாண்டுகளில், இந்திய அரசியலில் வலதுசாரிகளின் பொய்ப் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு, பொய்யான வாக்குறுதிகள் பெருமளவில் அதிகரித்திருப்பதைக் காண முடியும்.  2014 பொதுத் தேர்தலுக்கு முன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற பொய்ச் செய்தியில் தொடங்கி, 2020 இல் இந்தியாவின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்பது வரை நாம் பொய்ச்செய்திகளுக்குப் பழகி விட்டோம்.  தடங்கலில்லாத பாஜகவின் அல்லது சங் குடும்ப ஐ.டி.செல்லின் பொய்ப் பிரச்சாரம் இப்போது ஆய்வுக்கான பொருளாகி விட்டது.  வேறு வார்த்தைகளில், ஆட்சியாளரின் பிரச்சார உத்தியானது நமது நாட்டில் பாசிசத்தின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டு அமலாக்கப்படுகிறது.

Jason Stanley (@jasonintrator) | Twitter

பேரா.ஜேசன் ஸ்டான்லியின் “பாசிசம் எவ்வாறு செயல்படுகிறது” என்ற புத்தகத்தில், பாசிச இயக்கங்கள் குறிப்பிட்ட கூட்டு அடையாளங்களை (இந்திய சமூகத்தில் இந்தி, இந்து, இந்துயிசம் ) வலியுறுத்துவதன் மூலம் சமூக டார்வீனிய நெறிமுறையை வளர்த்தெடுக்கிறது என்று எழுதுகிறார்.  இந்த நெறிமுறை, சுதந்திரச் சந்தை முறையில் அதிகாரம், பணம் ஆதாரங்களைப் பெற மக்கள் ஒருவரோடொருவர் மோத வேண்டும் என்று கூறுகிறது.  இந்த நிகழ்முறையில், பாசிசம் தொழிற்சங்க இயக்கங்களையும், சங்கங்களையும் உடைத்து வர்க்கப் பிரிவினை அல்லது மோதல் என்ற கோட்பாட்டைப் பலவீனப்படுத்த முயல்கிறது.  பாசிசம் சுரண்டப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் எந்த ஒருமைப்பாட்டுக்கான அறைகூவலையும்,  சமூகத்தின் உருவான அனைத்து அசமத்துவங்களையும் ஒழிப்பதற்கான அறைகூவலையும் நசுக்க முயல்கிறது.  கடுமையான பொருளாதார மந்தநிலையின் காலத்தில், பாசிசம் தொழிற்சங்கங்கள் மீது கடுமையான தாக்குதலை மிகவும் திறனுடன் தொடுக்க முயல்கிறது. 

உலகளாவிய கொரோனா நோய்த்தொற்றை சாதகமாக எடுத்துக் கொண்டு, உத்தர பிரதேசம், குஜராத், கர்னாடகா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேச மாநிலங்களில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை நாம் பார்த்தோம்.  ஹரியானாவின் குர்கானிலும், மானெசரிலும் புதிய தொழிற்சங்கங்கள் உருவாகாமலும், இருக்கும் தொழிற்சங்கங்களை நசுக்கவும் ஆன தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் இருதரப்புத் தாக்குதலை இந்திய மக்கள் கண்டனர்.  2014இல் ஆட்சிக்கு வந்தபின் தற்போதைய தேஜகூ அரசு விரிவான திருத்தங்கள் மூலம் நாட்டில் தற்போது இருக்கும் தொழில் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய முடிவு செய்தது.  அரசு நாற்பத்து நான்கு மத்திய தொழில் சட்டங்களை தற்காலத் தொழிலதிபர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நான்கு தொழிலாளர் சட்டங்களாகச் சுருக்கத் திட்டமிட்டுள்ளது. (கடந்த வாரம் இது நிறைவேற்றப்பட்டு விட்டது).  இந்த நடைமுறை ஏற்கனவே தொடங்கி விட்டது.  ஒழுங்கு விதிகள் ஏற்கனவே தொழிற்சங்கங்களின் உரிமைகளைப் பெருமளவு குறைத்து, உரிமையாளரின் அதிகாரத்தை அதிகரித்துள்ளது.

இவ்வாறு பாசிசக் கோட்பாட்டின் புராண கடந்த காலம், நவீன வரலாறு ஆகியவற்றின் அடிப்படை அம்சங்கள் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களிடம் முழுமையாக உள்ளது.  ஆனால் அது ஆட்சியின் ஜனநாயக முறையின் முகமூடியின் பின்னால் மறைந்துள்ளது.  இன்றைய இந்தியாவில் பெனிட்டோ முசோலினி அல்லது ஹிட்லர் பயன்படுத்திய பாசிச முறைகளுக்கு நேரடியான ஒற்றுமை எதுவும் இல்லை. 

modi fascism copy - आह्वानआह्वान

நமது நாட்டில் தேர்தல்கள், நீதித்துறை, பத்திரிகைத்துறை ஆகியவை இன்னும் பிழைத்திருக்கின்றன, எதிர்க்கட்சிகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை.  எனினும், ஆட்சியாளரின் விருப்பத்தை நிறைவேற்ற அனைத்தும் இருக்கிறது.  இந்த நிலை ஜனநாயகம் என்ற போர்வையில் உருவாக்கப்பட்டுள்ளது, இட்லரின் வன்முறைச் செயல்களை அப்படியே செய்வதன் மூலம் அல்ல.  எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசின் உளவுப் பிரிவு அல்லது ஊழல் எதிர்ப்பு அமைப்புக்களின் மூலம் அல்லது அதிகாரத்தை குறைந்த அளவு பகிர்ந்து கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.  ஆட்சியாளரின் கண்ணில் காணாத ஒரு நூல் பத்திரிகைத்துறையில் பெரும்பான்மையைக் கட்டுப்படுத்துகிறது.   அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையில் ரகசியமான கூட்டு என்ற குற்றச்சாட்டு அடிக்கடி இப்போது சமூக வாழ்வில் கேட்கிறது.  கலாச்சாரமானது புராண கடந்தகால பாணியில் பல்வேறு விளக்கங்களுடன் அழகுபடுத்தப்படுகிறது.  இவ்வாறாக,  பாசிசத்தை மறைமுகமாக அமல்படுத்துவதைப் புரிந்து கொள்ள உற்றுக் கவனித்தலும், ஆய்வும் தேவைப்படுகிறது.  மிகவும் தாமதமாவதற்கு முன்பு நாம் இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் !.

தமிழில்: கி.ரா.சு.

நன்றி: கவுண்டர் கரண்ட்ஸ், 11/08/2020

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *