Subscribe

Thamizhbooks ad

‘டிரெய்ன் டு பாகிஸ்தான்’, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் கால கொடூரத்தைச் சித்தரிக்கும் நாவல் – பெ.விஜயகுமார்

 

இரு நூறாண்டு கால அடிமைத் தளையை நீக்கிட நூறாண்டு காலம் போராடி, எண்ணற்ற தியாகங்கள் செய்து விடுதலை பெற்றது இந்தியா.  இந்துக்களும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களும், கிறித்தவர்களும்,   என இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் விடுதலைக்கான வேள்வியில் ஒன்றிணைந்து நின்றோம். ஆனால் விடுதலைக்குப்பின் நடந்த மதவெறியாட்டத்தில் ஓடிய இரத்த வெள்ளத்தில் அனைத்துப் பெருமைகளும் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தந்த துயர் சொல்லித் தீராதது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் எதிரும் புதிருமாக பனிரெண்டு மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்தனர்.

ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். எண்ணற்ற பெண்களும், குழந்தைகளும் கடத்தப்பட்டனர்; காணாமல் போயினர். இந்தியப் பிரிவினை இவ்வளவு கொடூரங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதை அன்றைய தலைவர்கள் அவதானிக்கத் தவறியது ஏன்? பிரிட்டிஷ் அரசு இந்தியாவை இரு நூறாண்டுகள் சுரண்டிக் கொழுத்தது போதாமல் இறுதியில் விட்டுச்செல்லும் போது இத்தகு இரத்த ஆறு ஓடும் என்பதை அறியத் தவறியது ஏன்? வரலாற்றில் இத்தகு கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைப்பதில்லை.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் கால கொடூர நிகழ்வுகள் வரலாற்றுச் சுவடுகளில் மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணற்ற கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. திரைப்படங்களாகவும், ஆவணப்படங்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஊர்வசி புட்டாலியா ‘தி அதர் சைடு ஆஃப்   சைலன்ஸ்’ என்ற நூலில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பலரின் துயரங்களை நேரில் கண்டு பதிவு செய்துள்ளார். யாஸ்மின் கான் எழுதியுள்ள ‘தி கிரேட் பார்ட்டிசன்: தி மேகிங் ஆஃப் இந்தியா அன் பாகிஸ்தான்’ நூல், பிரிவினையின் முழுப் பரிமாணங்களையும் காட்டுவதுடன் பிரிவினை நடந்து எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் இரு நாடுகளும் பகைமை பாராட்டுவதையும் சுட்டிக்காட்டுகிறது. சல்மான் ருஷ்டியின் ‘மிட் நைட்ஸ் சில்ரன்’ மாயா யதார்த்தவாத  வடிவத்தில் எழுதப்பட்ட நாவல். புக்கர் பரிசு பெற்றது. சமன் நஹல் எழுதிய ’ஆசாதி’ பிரிவினை குறித்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகப் போற்றப்படுகிறது.

சதத் ஹாசன் மண்டோவின் ’டோபா டேக் சிங்’ சிறுகதை நக்கலான நகைச்சுவையுடன் (black humour)  எழுதப்பட்டது. மனோகர் மல்கோன்கரின் ’எ பெண்ட் இன் தி கங்கா’ நாவல் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எவ்வாறு பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதையும், ஒற்றுமையுடன் இருந்த இந்து, இஸ்லாமிய சமூகங்கள் வன்மத்துடன் சண்டையிட்டுக் கொண்டதையும் விளக்குகிறது. பாகிஸ்தானிய எழுத்தாளர் மன்ஜித் சச்தேவா எழுதிய ‘லாஸ்ட் ஜெனரேசன்’ நாவல் ராவல்பிண்டி நகரை சுற்றியிருக்கும் கிராமங்களில் நடந்த வன்முறைகளைச் சித்தரிக்கிறது.

Criticism of Indian Society in Khushwant Singh’s novel, “Train to Pakistan”

பிரிவினைக் காலத் துயரங்கள் பல திரைப்படங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பீஷ்ம சஹானியின் ’தமஸ்’ மற்றும் ’கரம் ஹவா’ திரைப்படங்கள் வரலாற்றுப் பிழையின்றியும், உணர்ச்சிப் பூர்வமாகவும் எடுக்கப்பட்ட படங்களாகும். இந்தி, வங்காளம் என்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் பிரிவினைக் காலத்துக் கொடுமைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளன. காந்தி, ஜின்னா, படேல் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களிலும் பிரிவினை நிகழ்த்திய சோகங்கள் பதிவாகியுள்ளன.

குஷ்வந்த் சிங் இந்தியாவின் அரசியல், இலக்கியம் மற்றும் கலாச்சார வானில் நட்சத்திரமாக மின்னியவர். பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர், அரசு அதிகாரி. என்று பன்முகத் திறமைகளுடன் 99 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்தவர். ’தி இல்லஸ்டிரேட்டட் வீக்ளி ஆஃப் இந்தியா’ பத்திரிக்கையிலும், ’நேஷனல் ஹெரால்டு’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஆகிய நாளிதழ்களிலும் ஆசிரியராக இருந்தவர். கடவுள் மறுப்பாளரான குஷ்வந்த் சிங், நிறுவனமயப்பட்ட மதங்களால் மனிதர்களுக்கிடையில் மனமாச்சரியங்களையே உருவாக்க முடிகிறது;

அன்பை விதைக்க முடிவதில்லை என்பதை தெளிவுபடுத்தினார். தன்னுடைய பல புத்தகங்களிலும் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளார். இரு பாகங்களாக எழுதப்பட்ட ’சீக்கியர்களின் வரலாறு’ குஷ்வந்த் சிங்கின் காத்திரமான படைப்புகளில் ஒன்றாகும். பகடியும், நகைச்சுவையும் நிரம்பிய எழுத்துக்களால் உலகளாவிய வாசகர் பரப்பைக் கொண்டிருந்தார்.  இந்தியப் பிரிவினையை மையமாக வைத்து எழுதப்பட்ட ’ட்ரெய்ன் டு பாகிஸ்தான்’ நெஞ்சை நெகிழவைக்கும் உணர்ச்சிப் பூர்வமான நாவலாகும்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் நதிக்கரையில் இருக்கும் அமைதி ததும்பும் கிராமம் மனோ மஜ்ரா. பஞ்சாப் நிலப்பரப்பை வளப்படுத்தி வளைந்தோடும் சட்லெஜ் நதியின்  தீவுகளாக அமைந்திருக்கும் பல கிராமங்களில் ஒன்று. குஷ்வந்த் சிங்கின் கற்பனையில் உருவாகிய மனோ மஜ்ரா கிராமம் எல்லையில் இருந்த மற்ற கிராமங்களிலிருந்து கொஞ்சமும் மாறுபட்டதில்லை. இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் சரி சமமான எண்ணிக்கையில் இருந்தனர். மக்கள் படிப்பறிவின்றி விவசாயத்தையும் கால்நடைகளையும் மட்டுமே நம்பி வாழ்ந்தனர். கிராமத்தில் இருந்த ஒரே இந்துக் குடும்பம் வட்டித் தொழில் செய்துவந்த ராம் லால் குடும்பம். ஊரின் நடுவில் மாடிவீடு கட்டியிருந்த ஒரே பணக்காரக் குடும்பம். ஊரிலிருந்த விளை நிலங்கள் சீக்கியர்களிடமிருந்தன. இஸ்லாமியர்கள் நிலங்களில் குத்தகை விவசாயிகளாக உழைத்தனர்.

Eminent author Khushwant Singh passes away at 99

இருவருக்கும் இடையில் எந்தவொரு பிரச்சனையுமின்றி அன்பும், பாசமும் மேலிட ஒற்றுமையாக வாழ்ந்தனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தின் முல்லா ஒரு ஏழை நெசவாளி. மனைவியை இழந்து தன்னுடைய ஒரே மகளான நூரியுடன் வாழ்கிறார். சீக்கியர்களின் கோயில் பூசாரி மீட் சிங்கும் இவரைப் போலவே எளிமையானவர். இருவரும் சகோதரர்களாகப் பழகுகின்றனர். சீக்கியர்களின் கோயில் சற்றுப் பெரியது. கிராமத்திற்கு வரும் பயணிகளும், விருந்தினர்களும் இங்குதான் தங்கவைக்கப்படுவர்.  லம்பரடார் என்றழைக்கப்பட்ட ஊர் தலைவர் இவர்களிலும் எளியவர். வரிகளை வசூலித்து கணக்கைப் பராமரிப்பது தவிர வேறொன்றும் அறியாத அப்பாவி. ஜுகா சிங் ஊரின் முரடன். காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் போக்கிரி. அவனுக்கும் முல்லாவின் மகள் நூரிக்கும் காதல் நிலவுகிறது. இருவரும் இரவில் ஊரடங்கியதும் வயல் வெளியில் சந்தித்து காதல் விளையாட்டு விளையாடுகின்றனர்.

மனோ மஜ்ரா கிராமத்தின் ஊர்க்கோடியில் ரெயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. சரக்கு ரயில்களும், ஒரே ஒரு பாஸன்ஜர் ரெயில் மட்டுமே நின்று செல்லும். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ரெயில்வே ஸ்டேஷன் என்பதால் நிறைய விரைவு வண்டிகள் கடந்து செல்லும். ஆனால் அவைகள் நிற்பதில்லை. ஊருக்கு வெளியே அரசு விருந்தினர் மாளிகை இருக்கிறது. அப்பகுதி மாஜிஸ்டிரேட் ஹுக்கும் சந்த் வேலைநிமித்தம் மாளிகையில் தங்கிச் செல்வார். அவருக்கான மது, மாது உட்பட அனைத்து வசதிகளையும் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செய்து கொடுப்பார். ஒரு நள்ளிரவில் கொள்ளையர்கள் ராம் லால் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்றுவிட்டு வீட்டைக் கொள்ளை அடித்துச் செல்கின்றனர். மாஜிஸ்டிரேட் விசாரணையைத் தொடங்கச் சொல்கிறார்.

சந்தேகத்தின் பேரில் ஜுகாவைக் கைது செய்கிறார்கள். ஊருக்கு இக்பால் சிங் எனும் இளைஞன் வருகிறான். தன்னை ஒரு சமூக சேவகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். மீட் சிங்கின் பராமரிப்பில் சீக்கிய கோயிலில் தங்குகிறான். டில்லியைச் சேர்ந்த அந்த இளைஞன் இங்கிலாந்தில் கல்விகற்றவன். பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற ஓர் இடதுசாரி கட்சியின் ஏற்பாட்டில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட கிராமத்துக்கு வருகிறான். ’இக்பால்’ என்ற அவனுடைய பெயர் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவனைக் கைது செய்து, நிர்வாணப்படுத்தி சோதனை செய்கின்றனர். சுன்னத் செய்திருப்பதைப் பார்த்து இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். பிரிவினைக் காலத்தில் சுன்னத் செய்து கொண்டவர்கள் அனைவரையும் முஸ்லீம்களாகவே அடையாளப்படுத்தினர். காவல் நிலையத்தில் ஜுகாவும், இக்பால் சிங்கும் ஒன்றாக அடைக்கப்படுகிறார்கள்.

ஓர் நள்ளிரவில் மனோ மஜ்ரா ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டிரெய்ன் நிறுத்தப்படுகிறது. காலையில் நிறைய ராணுவ அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் வந்து குவிகின்றனர். ஸ்டேஷனுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஸ்டேஷனைச் சுற்றி காவல் போடப்பட்டு கிராமத்தினர் யாரையும் நெருங்கவிடவில்லை. கிராமத்தினர் ஒன்றுமறியாது திகைக்கின்றனர். ராணுவ உயர்அதிகாரி ஒருவர் கிராமத் தலைவரிடம் நீண்ட நேரம் பேசிச் செல்கிறார். ஊர் மக்கள் கூட்டம் சீக்கிய கோயிலில் நடக்கிறது, ஊர் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருக்கும் விறகுகளையும், மண்ணெண்ணையையும் கொண்டு வரவேண்டும் என்று கட்டளை இடப்படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பொருளுக்கேற்ற அளவு பணம் கொடுக்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்படுகிறது. நாள் முழுவதும் இரண்டு டிரக்குகள் நிறைய விறகுகளும், பெரிய டிரம்களில் மண்ணெண்ணையும் சேகரிக்கப்படுகிறது. இரவில் ஊரடங்கியதும் ஸ்டேசனுக்கு வெளியே தீ கொழுந்துவிட்டு எரிவதை ஊர் மக்கள் பார்க்கிறார்கள்.

Train to Pakistan

சிறிது நேரத்தில் பிணங்கள் எரியும் நெடியையும் உணர்கிறார்கள். இரவு முழுவதும் பிணங்களை எரிக்கின்ற வேலையை கண்காணித்த களைப்பில் மாஜிஸ்டிரேட் விருந்தினர் மாளிகைக்கு  ஓய்வெடுக்க வருகிறார். ராணுவ அதிகாரியிடம் பிணங்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்று கேட்கிறார். குறைந்தது ஆயிரத்து ஐநூறாக இருக்கும் என்கிறார் ராணுவ அதிகாரி. மாஜிஸ்டிரேட்டின் குலை நடுங்குகிறது. பல ரவுண்டுகள் விஸ்கி குடித்தும் கொடூரத்தை அவரால் மறக்க முடியவில்லை. உண்ணவும், உறங்கவும் முடியாமல் தவிக்கிறார். இந்தியா-பாகிஸ்தான் இடையே புலம்பெயர்ந்து வரும் இரு தரப்பு மக்களும் ரெயிலில் கொல்லப்பட்டு பிணங்களாக அனுப்பப்படுகின்றனர். வன்முறை இருதரப்பிலும் நடப்பதறிந்து நெஞ்சம் பதறுகிறது. நேற்று வரை ஒற்றுமையாக இருந்தவர்கள் இன்று ஒருவரை ஒருவர் கொல்வதேன்? பெண்களை பாலியல் வன்முறை செய்வதேன்? பிணங்கள் எரிக்கப்பட்ட மறுநாள் பெரும் மழை பெய்கிறது. தீ அணைந்து எரிக்கப்பட்ட பிணங்கள் சாம்பலாகின்றன.

தொடர்ந்து மூன்று நாட்கள் இரவும் பகலும் மழை பெய்கிறது. சட்லெஜ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊர்த் தலைவர் வாலிபர்கள் சிலரை அழைத்துக்கொண்டு இரவு முழுவதும் ஆற்றுக் கரையைக் காவல் காக்கிறார். காலடியில் ஏதோ தட்டுப்பட டார்ச் லைட் அடித்துப் பார்க்கிறார்கள். பிணங்கள்! ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு ஆற்று வெள்ளத்தில் தூக்கி  எறியப்பட்டுள்ளனர். பக்கத்து கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளின் சாட்சியங்களாக ஆற்றில் பிணங்கள் மிதக்கின்றன. கொடூரத்தைப் பார்க்க மனமின்றி கிராமத்துக்குத் திரும்புகின்றனர். ஊர் மக்களிடம் சொல்லி அவர்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்காமல் மௌனம் காக்கின்றனர். மறுநாள் இரவும் மழை கொட்டுகிறது. அன்றிரவும் ஸ்டேஷனில் ரெயில்பெட்டிகள் நிற்பதுகண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

வழக்கம்போல் ராணுவ அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் திரண்டு வருகின்றனர். ஊர் மக்கள் ஸ்டேஷன் பக்கம் வராமல் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஊர் மக்களிடம் கொடுப்பதற்கு விறகோ, மண்ணெண்ணையோ கிடையாது. கொட்டும் மழையில் பிணங்களை எரிப்பதற்கான சாத்தியமும் கிடையாது. புல்டோசர் கொண்டுவரப்படுகிறது இரவோடு இரவாகப் பெருங்குழி வெட்டி, பிணங்களை உள்ளே கொட்டி மூடிவிடுகின்றனர். எல்லைப்புற கிராமங்கள் முழுவதும் ரெயில்களில் வரும் பிணங்கள் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. நிலைமை மோசமடைகிறது. மாஜிஸ்டிரேட் ஹுக்கும் சந்த் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதை உணர்கிறார். அவர்கள் எந்நேரமும் தாக்கப்படலாம். பாகிஸ்தான் ராணுவ அதிகாரியைத் தொடர்பு கொள்கிறார். அப்பகுதி கிராமங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு முகாமில் சேர்க்கப்படுகின்றனர்.

Train to Pakistan

பாகிஸ்தானிலிருந்து  டிரெய்னைக் கொணர்ந்து இஸ்லாமியர்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார்கள். இச்செய்தி மனோ மஜ்ரா கிராமத்தை வந்தடைகிறது. கிராமத்து இஸ்லாமியர்கள் முல்லா தலைமையில் கூடுகிறார்கள். ஊர்த் தலைவர் நிலைமையை விளக்குகிறார். இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ”நாங்கள் ஏன் பாகிஸ்தான் போக வேண்டும்? பல தலைமுறைகளாக நாங்கள் இந்த மண்ணில் தானே வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கும் மனோ மஜ்ரா கிராமத்தில் இருக்கும் சீக்கியர்களுக்கும் பகைமை ஏதும் கிடையாதே. சகோதரர்களாகவே பழகுகிறோம், நாங்கள் ஏன் அவர்களைப் பிரிய வேண்டும்?”, என்கிறார்கள். ஊரின் சீக்கியர்களும் தங்களுடன் இணைந்து வாழ்ந்த இஸ்லாமியர்களைப் பிரிய மனமின்றி கலங்குகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து அதிகாரி வருகிறார். இருபத்து நான்கு மணி நேரத்தில் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.  கொண்டுவரப்படும் டிரக்கில் தங்களின் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏற வேண்டும் என்று எச்சரித்துச் செல்கிறார்.

அதேபோல் அடுத்த நாள் டிரக் வருகிறது. ஊரின் இஸ்லாமியர்கள் அனைவரும் புறப்படுகிறார்கள். ஜுகாவின் காதலி நூரி காதலனைப் பிரிந்து செல்ல மனமின்றி அழுகிறாள். ஜுகாவின் வீட்டிற்குச் சென்று ஜுகாவின் அம்மா கால்களில் விழுந்து அழுகிறாள். ”என்னை ஆசிர்வதித்து; உங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்”, என்று கெஞ்சுகிறாள். ”போலீஸ் காவலில் இருக்கும் என் மகனால் உன்னை எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும்? அவன் விடுதலை பெற்று வரும்வரை நீ இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று சொல்லி அவளை அனுப்பி வைக்கிறாள். கண்ணீர் மல்க நூரி தன் தந்தையுடன் டிரக்கில் ஏறுகிறாள். மறுநாள் சீக்கிய இளைஞர்கள் சிலர் கனரகத் துப்பாக்கிகளுடன் கிராமத்திற்கு வருகின்றனர்.

சீக்கியர்கள் அனைவரையும் கோயிலுக்கு அழைத்து  கூட்டம் போடுகின்றனர். ”இரவில் மனோ மஜ்ரா வழியாகச் செல்லும் ரெயிலைத் தாக்கி இஸ்லாமியர்கள் அனைவரையும் கொன்று பழி தீர்க்க வேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை. உங்களில் எத்தனை பேர் தயார்?” என்று கேட்கின்றனர். ”எங்களுடன் இதுநாள் வரை ஒன்றாக வாழ்ந்த இஸ்லாமியர்களை எங்களால் கொல்ல முடியாது; நாங்கள் வரமாட்டோம்”. என்று பலரும் சொல்கின்றனர். இளைஞர்கள் மறுபடியும் மதவெறியூட்டும் உரையாற்றுகிறார்கள்.

இந்த வெறி ஊட்டலுக்கு சில இளைஞர்கள் பலியாகி இணங்குகிறார்கள்.  மதவெறிக்கு ஆளானவர்கள் மட்டும் கத்தி, ஈட்டி, அரிவாளுடன்  புறப்படுகிறார்கள். சட்லெஜ் நதிப் பாலத்தை டிரெய்ன் கடக்கும்போது தாக்குதலை நடத்துவது என்று திட்டமிடுகிறார்கள். பாலத்தின் உச்சியில் ஒரு கனமான கயிற்றைக் கட்டுகிறார்கள். டிரெய்ன் பெட்டிகளின்மேல் உட்கார்ந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் கயிறு தட்டி கீழே விழுந்து இறப்பார்கள். இதனால் டிரெய்ன் நிறுத்தப்படும். உடனே டிரெய்னுக்குள் இருக்கும் பயணிகளை துப்பாக்கியால் சுட்டும், அரிவாள், ஈட்டி கொண்டு தாக்கியும் கொன்று பிணத்தை பாகிஸ்தானுக்கு பரிசாக அனுப்பிவிடுவது எனத் திட்டமிடுகிறார்கள்.

இதற்கிடையில் மாஜிஸ்டிரேட்டின் தலையீட்டின் பேரில் ஜுகாவும், இக்பாலும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கும், ராம் லால் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவருகிறது. இருவரும் மனோ மஜ்ரா கிராமத்திற்கு வந்தடைவதற்குள் ஜுகாவின் காதலி நூரி உட்பட இஸ்லாமியர்கள் அனைவரும் காலிசெய்து போய்விடுகிறார்கள். ஊரே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. சீக்கியர் கோயில் பூசாரி மீத் சிங்கும், ஊர்த் தலைவரும் நிலைமைகளை விளக்குகிறார்கள். அன்றிரவு மனோ மஜ்ரா ஊர் வழியாகச் இஸ்லாமியர்களை ஏற்றிச் செல்லும் டிரெய்ன் டு பாகிஸ்தான் தாக்கப்பட உள்ளதை விளக்குகிறார்கள்.

Train to Pakistan (Audio Download): Amazon.in: Khushwant Singh ...

இக்பால் சிங் தனியொருவனாக நான் இதனை எப்படித் தடுக்க முடியும் என்று ஒதுங்கிக் கொள்கிறான். ஆனால் ஜுகா இத்தாக்குதலை முறியடித்து அப்பாவி மக்களைக் காப்பாற்றிட தீர்க்கமான முடிவெடுக்கிறான். கொட்டும் மழையில் சட்லெஜ் நதிப் பாலத்தில் ஏறுகிறான். பாலத்தின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கயிற்றை கத்தியால் அறுக்கிறான். ஜுகாவின் முயற்சியைத் தடுக்க அவனைத் துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

அதற்குள் கயிற்றை அறுத்துவிட்டு கீழே செத்து விழுகிறான். டிரெய்ன்  தடையின்றி எல்லையைக் கடந்து பாகிஸ்தான் செல்கிறது, வாழ் நாள் முழுவதும் போக்கிரி என்றழைக்கப்பட்டு காவல் நிலையத்தின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்துவந்த ஜுகா அளப்பறிய தியாகம் செய்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வீர மரணம் அடைகிறான். மரணத்தைத் தழுவிய தருணத்தில் “என்று தணியும் இந்த மதவெறி?” என்ற கேள்விதானே அவன் மனதில் உதித்திருக்கும்.

-பெ.விஜயகுமார்.    

 

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

4 COMMENTS

  1. பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தால் அழியாத துயரங்களை கொண்டது.‌ அதன் ஒரு துளியை குஷ்வந்த் சிங்கின் ரெயின் டூ பாக்கிஸ்தான் நாவல் நமக்கு தருகிறது. அதனை இன்னும் கூட உணர்வுப் பூர்வமாக தர முடியும் என்று பேராசிரியர் விஜயகுமார் தனது மதிப்புரை மூலம் உணர்த்துகிறார்.

  2. The review leaves the same question in the minds of the readers, which is relevant even today.when will this religious animosity come to an end. Fanaticism has turned human beings senseless and heartless. Prof Vijayakumar’s recap of kushwanth Singh’s novel in Tamil is on par with the original work.

    • பிரிவினைகளும், துயரமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. சக மனிதனை, மனிதநேயத்தை மறந்து ஒரு மதம் சார்ந்தவராக பார்த்தலின் விளைவே, இந்த வன்முறை நிகழ்ந்தமைக்குக் காரணம். ஜுகா போன்று தம் வாழ்நாள் முழுதும் சமூக விரோதிகளாகப் பார்க்கப்பட்டவர்கள், செயற்கரிய செய்து போற்றப்பட வேண்டியவர்களாய், நம்பிக்கையின் ஊற்றுகளாய் முடிந்திருக்கிறார்கள். மதம் சார்ந்தே மனிதனைப் பார்த்தல் என்ற விஷம் இன்றும் நம் மக்களிடையே பாய்ச்சப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்நாவலை இந்த நேரத்தில் அலசியதன் மூலம் பேராசிரியர் விஜயகுமார் அவர்கள், மனித நேயத்தின் அவசியத்தை பலமாய் முன்னிறுத்தியுள்ளார்.,

  3. பிரிவினைகளும், துயரமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. சக மனிதனை, மனிதநேயத்தை மறந்து ஒரு மதம் சார்ந்தவராக பார்த்தலின் விளைவே, இந்த வன்முறை நிகழ்ந்தமைக்குக் காரணம். ஜுகா போன்று தம் வாழ்நாள் முழுதும் சமூக விரோதிகளாகப் பார்க்கப்பட்டவர்கள், செயற்கரிய செய்து போற்றப்பட வேண்டியவர்களாய், நம்பிக்கையின் ஊற்றுகளாய் முடிந்திருக்கிறார்கள். மதம் சார்ந்தே மனிதனைப் பார்த்தல் என்ற விஷம் இன்றும் நம் மக்களிடையே பாய்ச்சப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்நாவலை இந்த நேரத்தில் அலசியதன் மூலம் பேராசிரியர் விஜயகுமார் அவர்கள், மனித நேயத்தின் அவசியத்தை பலமாய் முன்னிறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here