துயிலுக்கு ஒரு பாட்டு
ஓ துயிலே !!!!
பிரேதம் போல் கிடக்கும்
அசைவற்ற நள்ளிரவை
நறுமணம் பூசி பாதுகாப்பவனே
மறதியில் புதையுண்ட
எங்கள் இதயங்களை மீட்க
வெளிச்சத்தில் மாசுபட்ட
எங்கள் விழிகளை காக்க
உன் மென்மையான விரல்களால்
எங்களின் இமைக்கதவுகளை
நீ நேர்த்தியாய் தாளிடுவதை
நான் ரசிக்கிறேன்
மென் துயிலே !
உன்னை நோக்கித்தானே
எங்கள் விழிகள் பிரார்த்திக்கொண்டிருக்கின்றன
ஆதியந்தமாய் உன்னோடு இணையத்தானே
இங்கே மௌனத்தில் இறைஞ்சிக்கொண்டிருக்கின்றன
அதற்குள் என்ன அவசரம் சொல் ?
உன் பிரார்த்தனையின் கதவுகளை
நீயே தாளிட்டுவிடுவாயோ ?
சரி அதுவேதான் உன் ஆனந்தமென்றால்
அப்படியே ஆகட்டும்
அல்லது
பிரார்த்தனை முடியட்டுமா ?
மயக்கத்தில் குழறும் விழிகளை
ஆமென்னாவது சொல்ல விடுவாயா?
அடடா கண நேரம்
அதற்குள் என் படுக்கையைச்சுற்றி
ஏன் இத்தனை கஞ்சா இலைகளைத் தூவி
அதை சுற்றி போதை தரும் பெரும் தலாட்டுக்களை
ஏன் ஒலிக்கவிடுகிறாய் ?
ஓ ஒப்பற்ற தோழா !
உடனே என்னைக் காத்து விடு
இந்த இரவு மட்டும் விடிந்து விட்டால்
விடியல் என் தலையணையைச் சுற்றி
எண்ணற்ற துயரங்களைத் தூவியிருக்கும்
இந்த நள்ளிரவிற்குள் ஒரு கருப்பு மச்சம் போல்
ஒளிந்திருக்கும் சுயநினைவு
சுயநினைவிலிருந்து பேருறு எடுக்கும் மனசாட்சி
அப்பப்பா தாங்காத சுமைகள் அறிவாயோ நீ?
சாவியை தாழ்ப்பாளில் இட்டு
சப்தம் வராமல் திருகவும்
பிறகு என் ஆன்மாவை
அந்த அலங்காரப் பெட்டிக்குள் வைத்து
அரக்கு முத்திரையிட்டுப் பூட்டவும்
கவிதை: ஜான் கீட்ஸ்
மொழியாக்கம் – தங்கேஸ்
ஆங்கிலக்
கவிகளுக்கு
எடுப்பாக
மொழியாக்கம் தரும்
திருவாளர்
‘தங்கேஸு’க் கு
தமிழாக்கம்
தரப்போவது
யாரோ?
சிறப்பான கவிதை மொழிபெயர்ப்பு …