மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பெண்  – ஆங்கிலத்தில்: ஜமைக்கா கின்கேய்ட் (தமிழில்: கார்குழலி) 

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பெண்  – ஆங்கிலத்தில்: ஜமைக்கா கின்கேய்ட் (தமிழில்: கார்குழலி) வெள்ளைத் துணிகளை திங்களன்று துவைத்துக் கல்லின்மீது குவியலாக வை; வண்ணத் துணிகளை செவ்வாயன்று துவைத்துக் கொடியில் காயப்போடு; உச்சி வெயிலில் வெறும் தலையோடு நடக்காதே; மஞ்சள் பூசணி வறுவலை நன்றாகக் கொதிக்கும் இனிப்பு எண்ணெய்யில் சமை; உன்னுடைய சின்னத் துணிகளை கழற்றியவுடன் ஊற வை; உனக்கென நல்ல மேலாடையொன்றை தைப்பதற்குப் பருத்தித் துணியை வாங்கும்போது அதில் கஞ்சி போடாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள், இல்லாவிட்டால் ஒரு முறை துவைத்ததும் துவண்டு போய்விடும்; உப்புநீர் மீனைச் சமைப்பதற்கு முதல் நாள் இரவே ஊறவைத்துவிடு; ஞாயிறு பள்ளிக்கூடத்தில் நீ பென்னா இசை பாடுவது உண்மையா?; உணவுண்ணும் போது அடுத்தவருக்கு அருவருப்பூட்டும் முறையில் சாப்பிடாதே; ஞாயிற்றுக் கிழமைகளில் சீமாட்டியைப்போல நடக்கப் பழகிக்கொள், முழுவதும் ஒழுக்கம் கெட்டவளாக மாறுவதற்கு நீ எடுக்கும் முயற்சியைக் கைவிடு;

ஞாயிறு பள்ளிக்கூடத்தில் பென்னா இசையைப் பாடாதே; கப்பல்மேடை எலியைப்போல இருக்கும் பையன்களிடம் பேசாதே, வழிகூடச் சொல்லாதே; தெருவில் பழங்களைச் சாப்பிடாதே – ஈக்கள் உன்னை மொய்க்கும்; ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் நான் பென்னாவைப் பாடுவதில்லை, ஞாயிறு பள்ளிக்கூடத்தில் சுத்தமாகப் பாடுவதில்லை; இப்படித்தான் பொத்தான் தைக்க வேண்டும்; நீ இப்போது தைத்த பொத்தானை நுழைக்கும் துளையை இப்படித்தான் தைக்க வேண்டும்; ஆடையின் கீழ்முனை பிரிந்து வருவதைப் பார்த்தால் இப்படித்தான் மடித்துத் தைக்க வேண்டும், ஒழுக்கம் கெட்டவளாக நீ மாறுவதற்கு எடுக்கும் முயற்சியைத் தடுக்கும் வகையில்; உன் தந்தையின் காக்கிச் சட்டையின் சுருக்கம் மறைய இப்படித்தான் இஸ்திரி போடவேண்டும்; உன் தந்தையின் காக்கிக் கால்சட்டையின் சுருக்கம் மறைய இப்படித்தான் இஸ்திரி போடவேண்டும்; வெண்டைக்காய்ச் செடியை இப்படித்தான் வளர்க்கவேண்டும் – வீட்டை விட்டுத் தள்ளி, ஏனெனில் வெண்டைக்காய்ச் செடியில் செவ்வெறும்பு குடியிருக்கும்; டஷீன் கிழங்கை வளர்க்கும்போது நிறைய தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லாவிட்டால் சாப்பிடும்போது தொண்டையில் நமைச்சல் எடுக்கும்; மூலையில் இப்படித்தான் கூட்டவேண்டும்; வீடு முழுவதையும் இப்படித்தான் கூட்டவேண்டும்; முற்றத்தை இப்படித்தான் கூட்டவேண்டும்;உனக்கு அதிகம் பிடிக்காத நபரிடம் இப்படித்தான் சிரிக்கவேண்டும்; உனக்கு அறவே பிடிக்காத நபரிடம் இப்படித்தான் சிரிக்கவேண்டும்; உனக்கு முற்றிலும் பிடித்த நபரிடம் இப்படித்தான் சிரிக்கவேண்டும்; தேநீர் நேரத்தின்போது மேசையை இப்படித்தான் தயார் செய்யவேண்டும்; இரவு உணவின்போது மேசையை இப்படித்தான் தயார் செய்யவேண்டும்; முக்கியமான விருந்தினர் வரும்போது மேசையை இப்படித்தான் தயார் செய்யவேண்டும்; மதிய உணவுக்காக மேசையை இப்படித்தான் தயார் செய்யவேண்டும்; உனக்கு அதிகம் பழக்கமில்லாத ஆண்கள் இருக்கும்போது இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், அப்படிச் செய்தால் ஒழுக்கம் கெட்டவளாக மாறிவிடாதே என்று உனக்கு நான் செய்திருக்கும் எச்சரிக்கையை அவர்கள் உடனடியாக உணரமாட்டார்கள்; தினமும் கழுவிக்கொள், உன்னுடைய எச்சிலைத் தொட்டாவது; கோலிக்குண்டு விளையாடத் தரையில் முட்டியை மடித்து உட்காராதே – நீ ஆண்பிள்ளையல்ல, தெரிந்துகொள்; அடுத்தவர்களின் பூக்களைப் பறிக்காதே – ஏதாவது தொற்றிக்கொள்ளும்; கருங்குருவிங்களின்மீது கல்லெறியாதே, அது கருங்குருவியாக இல்லாமல் இருக்கக்கூடும்; ரொட்டி புட்டிங்கை இப்படித்தான் செய்யவேண்டும்;

டௌகோனா புட்டிங்கை இப்படித்தான் செய்யவேண்டும்; மிளகாய் போட்ட காய்க் குழம்பை இப்படித்தான் செய்யவேண்டும்; சளிக்கு மருந்து இப்படித்தான் செய்யவேண்டும்; குழந்தை உருவாவதற்கு முன்னரே அதைத் தூக்கி வீச உதவும் நல்ல மருந்தை இப்படித்தான் செய்யவேண்டும்; இப்படித்தான் மீன் பிடிக்கவேண்டும்; உனக்குப் பிடிக்காத மீனை, உனக்கு ஏதும் கெடுதல் நடக்காமல் இருக்க, இப்படித்தான் திரும்பவும் வீசிவிட வேண்டும்; ஓர் ஆணிடம் இப்படித்தான் அடாவடி செய்ய வேண்டும்; ஓர் ஆண் இப்படித்தான் உன்னிடம் அடாவடி செய்வான்; ஓர் ஆணை இப்படித்தான் காதலிக்கவேண்டும், அது பலனளிக்கவில்லை என்றால் வேறு வழிகள் இருக்கின்றன, அவையும் பலனளிக்கவில்லை என்றால் அதைக் கைவிடுவது பற்றி வருத்தம் கொள்ளாதே; உனக்குத் தோன்றியது என்றால் இப்படித்தான் காற்றில் எச்சில் உமிழவேண்டும், அது உன்மேல் விழுந்துவிடாமல் இருக்க இப்படித்தான் சட்டென நகர்ந்துகொள்ள வேண்டும்; இப்படித்தான் கையிருப்பை வைத்துச் சமாளிக்கவேண்டும்; ரொட்டி புதியதாக இருக்கிறதா என்பதை எப்போதும் அழுத்திப் பார்த்துத் தெரிந்துகொள்; ரொட்டி செய்பவர் தொட்டுப் பார்க்க விடவில்லை என்றால் என்ன செய்வது?; அப்படி என்றால் ரொட்டி செய்பவர் தொட்டுப் பார்க்கவிடாத ஒரு பெண்ணாக இருக்கப் போகிறேன் என்று சொல்கிறாயா?Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *