ஜும்பா லகரி அவர்கள் எழுதிய புதினம் ‘ Namesake’ லும் அதனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திலும் ரசிய எழுத்தாளர் நிகோலாய் கோகோல் அவர்கள் குறித்தும் அவரது படைப்பான ‘ overcoat’ குறித்தும் பேசப்படுகிறது. ஓவர் கோட் கதையின் சுருக்கமும் கோகோல் குறித்த விவரமும் இணையத்திலிருந்து பகிர்கிறேன்.

மேலங்கி – நிக்கொலாய் கோகோல்
அகாகே அக்காகிவிச் பாஷ்மிச்கின் ரசிய தலைநகர் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பணிபுரியும் எழுத்தர்;நகலெடுப்பவர். வறுமையில் வாடுபவர். தனது பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபடுபவர்.ஆனால் அவரது கடுமையான உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. மாறாக இள வயது ஊழியர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரை சீண்டி வேடிக்கை பார்க்கிறார்கள். குறிப்பாக அவரது நைந்து போன மேலங்கிதான் அவர்களது நையாண்டிக்கு மையப்பொருளாக இருக்கிறது. அவரும் தன்னுடைய மேலங்கியை சீர் செய்வது என்று முடிவெடுக்கிறார். தன்னுடைய தையல்காரர் பெட்ரோவிச்சிடம் சென்று அதை சரி செய்து தருமாறு கேட்கிறார். அது சீர் செய்யும் நிலையில் இல்லை;அவர் புது மேலங்கித்தான் வாங்க வேண்டும் என்கிறார் தையல்காரர்.
புதிய மேலங்கியின் விலை அகாகேயின் சொற்ப சம்பளத்தில் வாங்கக்கூடியதாக இல்லை. அவர் தன்னுடைய செலவுகளை எல்லாம் குறைத்துக் கொண்டு மேலங்கி வாங்குவதற்காக சேமிக்க தொடங்குகிறார்.கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆர்வம் அவரது பணியைவிட புதிய மேலங்கியின் பால் செல்கிறது. எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரும் தையல்காரரும் பலவித மேலங்கி குறித்துவிவாதிக்கின்றனர். எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய தொகை விடுமுறை போனஸாக கிடைக்கிறது.இப்போது அகாகே புதிய மேலங்கி வாங்குமளவிற்கு சேர்த்து விட்டார்.
அகாகேயம் தையல்காரர் பெட்ரோவிச்சும் பீட்டர்ஸ்பர்க் கடைகளுக்கு சென்று உயர்ந்த மேலங்கியை தெரிவு செய்கிறார்கள்.காலர் பகுதிக்கு மார்டென் உரோம ஆடை விலை மிக அதிகம் என்பதால் பூனை உரோமம் வைத்த மேலங்கியை தெரிவு செய்கிறார்கள். அந்த ஆடை உயர்ந்த வகை என்பது மட்டுமல்ல பார்க்கவும் மிக நேர்த்தியாக இருந்தது.அவர் அதை அணிந்து சென்ற அன்று அலுவலகத்தில் அதுவே பேச்சாக இருந்தது.அவருடைய மேலதிகாரி அதை பாராட்டும் விதமாக விருந்து ஒன்று தருகிறார்.இயல்பாகவே தனிமை விரும்பியான அகாகே அதில் ஓட்ட முடியாமல் தவிக்கிறார்.விருந்து முடிந்து வழக்கத்தைவிட தாமதமாக வீடு திரும்பும்போது இரண்டு முரடர்கள் அவரை வழிமறித்து தாக்குகிறார்கள்.மேலங்கையை பறித்துக் கொண்டு அவரை பனியில் தள்ளிவிட்டு செல்கிறார்கள்.
அகாகே பல அதிகாரிகளிடம் தன் மேலங்கியை மீட்டுத் தருமாறு கோருகிறான்.எவரும் அவனுக்கு உதவவில்லை.இறுதியாக அவனுடன் பணிபுரியும் எழுத்தர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஒரு முக்கிய ஆளுமையை சந்திக்கிறான்.அவர் அண்மையில் பதவி உயர்வு பெற்று வந்துள்ள ஒரு ராணுவ அதிகாரி. தன் கீழ் பணிபுரிபவர்களை கேவலப்படுத்தியும் கூச்சலிட்டும் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலைநாட்டுபவன். அகாகேக்கை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துவிட்டு ஒரு அற்பமான விசயத்தை ஏன் தன்னிடம் கொண்டு வந்தார் என்று கேட்கிறான். தன் செயலாளரிடம் அல்லவா அவர் சென்றிக்க வேண்டும் என்கிறான்.பொதுவெளியில் நடந்து கொள்வதில் சாமர்த்தியம் அற்ற அகாகே செயலாளர்கள் குறித்து மோசமான கருத்து தெரிவிக்கிறான்.இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி அவனைக் கடுமையாக திட்டுகிறான்.இதனால் அகாகே மயக்கமடைந்து விடுகிறான்.அவனை அங்கிருந்து தூக்கி செல்ல வேண்டியதாகிறது. இதன் பிறகு அவனுக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிடுகிறது.ஜன்னி வந்து பிதற்றும் நிலைக்கு போகிறான். அவனது இறுதி நேரம் நெருங்குகிறது முதலில் தான் ராணுவ அதிகாரி முன் உட்கார்ந்து இருப்பது போலவும் மன்னிப்பு கோருவது போலவும் பேசுகிறான்.மரணம் நெருங்கியதும் அந்த அதிகாரியை சபிக்கிறான்.
அகாகேயின் மரணத்திற்குப் பிறகு அவனது ஆவி என்று நம்பப்படுகிற பிரேதம் ஒன்று பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் உலவுகிறது.அது மனிதர்களிடமிருந்து மேலங்கிகளைப் பறிக்கிறது.காவலர்களால் அந்த பிரேதத்தைப் பிடிக்க முடிவதில்லை.ராணுவ அதிகாரியோ தான் அகாகேயை அவமானப்படுத்திவிட்டோமே என்று குற்ற உணர்விற்கு உள்ளாகிறான். இறுதியாக அகாகேயின் பிரேதம் ராணுவ அதிகாரியையும் பிடித்து அவனது மேலங்கியை பறித்துக் கொள்கிறது.இந்த சம்பவத்தில் ராணுவ அதிகாரி நடுநடுங்கிப் போகிறான்.திருப்தியடைந்த அகாகேயின் பிரேதம் அதற்குப் பிறகு மறைந்துவிடுகிறது.எங்கும் அது காணப்படுவதில்லை.இதற்குப் பிறகு இன்னொரு ஆவி தெருக்களில் உலவுகிறது.அதன் அங்க அடையாளங்கள் அகாகேயின் மேலாங்கியைப் பறித்த இரு முரடர்களில் ஒருவரை ஒத்திருக்கிறது.
நிகோலாய் கோகோல்.
உக்ரேனிய ரசிய எழுத்தாளர்.நாடகம்,புதினம், சிறுகதை என பல தரப்பட்ட படைப்புகள் எழுதியுள்ளார். திகிலூட்டக்கூடிய விநோதமான எழுத்து முறையைக் கையாண்டவர்;எதார்த்த எழுத்தின் முன்னோடி;யூதர்களுக்கு எதிரான இனவாதம் இவரது எழுத்துகளில் காணப்படுகிறது என பல விதமாக மதிப்பிடப்படுபவர். ஆனால் யூத எழுத்தாளர்கள் பலரும் இவரது நடையை பின்பற்றினார்கள். ‘ நாம் எல்லோரும் கோகோலின் மேலங்கியிலிருந்து வந்தவர்கள் ‘ என தஸ்தோவெஸ்கி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 1809இல் பிறந்த இவரை கவுரவிக்கும் விதமாக 2009 இல் சிறப்பு தபால் முத்திரை வெளியிடப்பட்டது.