இந்த கட்டுரை தொகுப்பானது ஆய்வியல் உணர்ச்சிகளையும் கல்வியியல் முறையினையும் இனைத்துக்கொண்டு, இஸ்லாம் மதத்தில் பெண்களின் பண்டைய, இன்றைய நிலை குறித்த புதிய புரிதலை உருவாக்குகிறது.
ஷாஃபி கிட்வாய்
பெண்களைச் சமமாக நடத்துவதாகவும் அவர்களை மதிப்பதாகவும் கூறும் மதங்களின் பல நூல்களும் தற்போது பெண்ணிய உணர்வுகளுடன் நோக்கில் வாசிக்கப்படுகிறது. அனைத்து புனித நூல்களும் பெண்களின் கதை எனப் பறைசாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. வேத மொழிகள் பெண்களின் ஏற்றத்தாழ்வையினையும், முதன்மையினையும் மறுக்கவில்லை எனும் பொதுக்கருத்தைத் தீவிர பெண்ணிய சிந்தனையாளர்கள் ஒருக்காலும் ஏற்பதில்லை. இந்த நிலைப்பாடானது பாலின சமத்துவத்திற்குத் தடங்கலாக உள்ளது எனவும் இவர்கள் கருதுகின்றனர். புகழப்படும் ஒரு சில வரிகளாவன , ‘அச்சமூட்டும் வரிகளே’ என்பது இவர்களின் கருத்து. உணர்ச்சிகளில் எழுச்சியும் பண்பாட்டு சிதறலும் அடைந்த உலகமானது அமைப்பாக்கப்பட்ட மதங்களில் நிம்மதியைத் தேடுகிறது. அதனால், முதன் நிலைக்கு வந்துள்ள இவை ஆய்வுக்குள்ளாகி உள்ளது.
எவ்வித தடையும் இன்றி பெண்களைத் தாக்குகின்ற, சாதி படி நிலையினையும் ஆணாதிக்கத்தையும் வலுப்படுத்துகின்ற இந்த புனித நூல்களை தற்போது கேள்விக்குள்ளாக்குகிறது இந்த நான்காம் அலையாக வந்துள்ள, கணினியினால் உந்தப்பட்ட பெண்ணியம், இதன்படி, உலகின் முக்கிய மதங்கள் எல்லாம் பெண்களுக்கு எதிரான பேதைமையினை புனிதப்படுத்துகிறது; இவற்றின் பண்பாட்டு வழக்கங்களும் சமூக நம்பிக்கைகளும் இந்த ஒடுக்குதலை மேலும் முடுக்குகிறது.
ஆண், பெண் இருபாலரையும் கடவுளின் உருவத்தைப் போன்று உருவாக்கப்பட்டனர் என்பதையும் ஆணின் முதன்மைக்குப் புனித நூல்களின் ஏற்பு இல்லை என்பதையும் இந்த புதுப் பெண்ணிய வாசிப்புகள் சிறிதும் ஏற்பதில்லை. பைபிளின் ஒப்புதல்களை இவர்கள் சற்றும் சட்டை செய்வதில்லை. “யூதர்களும் இல்லை; கிரேக்கர்களும் இல்லை; அடிமையும் இல்லை, விடுதலை அடைந்தவரும் இல்லை; ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை; நீங்களும் அனைவரும் யேசு கிறித்துவின் முன்னால் சமமே” (கலன்தியன் 3:2)”
ஆண்களுக்கு இணையாகப் பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டு, கல்வி, ஆன்மீக தூய்மையினை மறுப்பதையும், பாலின அடிப்படையில் முக மூடுவதைக் கட்டாயப்படுத்துவதையும் செய்கிற இஸ்லாம் மதமும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஆண்களுடன் இணையாகப் பெண்களுக்கு மசூதிகளில் தொழுகை செய்ய முழு உரிமை அளிக்காத செயலானது தீயில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. அனைத்து வகையான ஒடுக்குதலினாலும் பாதிக்கப்பட்டோராக முஸ்லீம் பெண்களைப் பார்க்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு இரண்டாம் நிலையே உள்ளது என மக்கள் நம்புகிறார்கள்.
சமநிலை என்பதே நேசிக்கப்படுகிற நிலைப்பாடாக்க உள்ளது, இதில் ஐயமே இல்லை. இதற்கு உடலியலான, பண்பாட்டு, சமூக, அரசியல் பன்மையில் ஒருமை, ஒரே மாதிரி என்பது அல்ல. பாலின் அடிப்படையில் ஆண், பெண் எனப் பிரிக்காமல், வாழ்வின் பல்வேறு நிலைகளில் உள்ள பன்மைகளை எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதைப் புனித நூல்களுக்கான உரைகள் விவாதிக்கின்றது. இது போல், குர் ஆனில் உள்ள சமத்துவமான இஸ்லாம் விதிகள் குறித்தும் விளக்க முயற்சிகள் நடந்துள்ளன. இதுவே பாலின சமத்துவத்தில் மிகப்பெரும் உணர்வுள்ள புனித நூல் என்கிறார், தாரீஃப் கலீதி. (இவர் சர் தாமஸ் ஆடம்ஸின் அராபிக் பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 1996 முதல் 2002 வரை).
இஸ்லாம் மதம் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கிறதா, என்ற கேள்வியை விவாதிக்கும்போது, குர்-ஆனின் விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும் கடவுளின் தூதர் முகம்மது நபியின் வசனங்களுக்கும் இட்டு செல்வதாகச் சொல்கிறது, தற்கால ஆய்வுமுறை கடவுளியல்.
இஸ்லாம் மதத்தில் பெண் உரிமை
இஸ்லாம் மதத்தின் அடிப்படை போதனைகளில் ஆண்-பெண் பேதமை இல்லை எனும் புரிதல் வளர்ந்து வருகிறது. ஆனாலும், முஸ்லீம்களின் பண்பாட்டு, சமூக நம்பிக்கைகளாவன வெளிப்படையான, உள்ளார்ந்த பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. பெண்கள் நிலை குறித்து, இஸ்லாம் மதத்தில் ஆழ ஊன்றிய ஒருதலைபட்சமல்லாத திறந்த விவாதங்களும் நுணுக்கமான வாசிப்புகளும் இன்னும் வரவேண்டி உள்ளன.
நீண்ட காலமாகவே இல்லாத ஒன்றை இணைப்பதற்கான முயற்சியில் உள்ளனர் எட்டு பெண்கள் உட்பட இருபது அறிஞர்கள். இவர்கள், அலிகட் முஸ்லீம் பல்கலைக்கழகம், மவுலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்- ஹைதராபாத், இஸ்லாமிய அறிவியல் தொழிற்நுட்ப பல்கலைக்கழகம்= அவந்திபொரா (காஷ்மீர்), டெல்லி பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம், குட்காவ் ஆகியவற்றைச் சார்ந்த ஆங்கிலம், இஸ்லாம் ஆய்வுகள், அராபிக், வன விலங்கியல், பெண் ஆய்வுகள், மருத்துவ உளவியல் துறைகளைச் சார்ந்தவர்கள். இவர்களின் கல்வியியல் முறையுடன் இணைந்த ஆய்வு திறன்கள் ஒரு கட்டுரை தொகுப்பை உருவாக்கியுள்ளது, அதன் தலைப்பு, ‘முஸ்லீம் பெண்கள்: (ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை’. புது டில்லி விவா புக்ஸ் நிறுவனத்திற்காக இதை முனைவர்கள் ஏ.ஆர். கிட்வாய், ஜுஹி குப்தா ஆகியோர் திறம்படத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
இந்த புத்தகம் ஆறு பிரிவுகளாக 233 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த ஆறு பிரிவுகள் இவையே. தொடக்க நிலை ஆதாரங்களில் முஸ்லீம் பெண்கள், முஸ்லீம் பெண்களின் உரிமைகளும் சட்டங்களும், முஸ்லீம் பெண்களும் கல்வியும், முஸ்லீம் பெண்களின் சமூக பொருளாதார நிலை, முஸ்லீம் பெண்களும் பெண்ணியமும், தற்கால பெண் ஆய்வியல் அறிஞர்களுடனும் புத்தாக்க எழுத்தாளர்களுடனுமான நேர் காணல்கள்.
மூன்று முறை தலாக் சொல்வது குறித்தும், விவாக ரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டிய பணம் குறித்தும் அண்மையில் நடந்த கூச்சலும் குழப்பமும் நிறைந்த விவாதங்ளாவன இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் குறித்த விளக்கங்களும் உரைகளும் முரண்பட்டனவாகவும் உப்பு சப்பில்லாதவையாகவும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டனவாகவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதவையாகவும் உள்ளன என அம்பலமாகியுள்ளது. இந்த தலைப்பில் கிடைக்கப்பெறும் பெருமளவு வெளியீடுகளும் புத்தகங்களும் மிக மோசமான அற்பத்தனங்களும் கீழ்த்தரமான வாய்ச்சவாடல்களும் நிறைந்தவை. ஆகவே, முதன்முதலாக உருவான இஸ்லாமிய நாட்டில் இந்த சட்டங்களும் உரிமைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன எனத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் நிலையில் தொடக்க ஆதாரங்களாக உரையாடல்களையும் அங்குத் தேசிய அளவில் அமலாக்க நடந்த சமரசங்களையும் நாடுகின்றனர். தொடக்கம் முதற்கொண்டே பேதமை இல்லாத, நேர்மையான கொள்கைகளைப் பார்க்க முடிகிறதா? அடிப்படை நூல்கள் நேர்மையானவைகளா, சமத்துவமானவையா? இந்த கேள்விகளை முழுமையாக முதல் பகுதி ஆராய்கிறது. அடிப்படை நூல்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரைகள் தெளிவாகவும் முன்மொழிவனமாகவும் உள்ளன. அவை விரிவான ஆதரவான பெண்களுக்கான இடத்தை கட்டாயமாக அளிக்கிறது.
இந்த நூலுக்கான முன்னுரையில், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் பேராசிரியர் அக்தருள் வாசி என்பார் சரியாக இப்படிக் குறித்துள்ளார். “ பெண்கள் அவர்களுக்கான இடத்தை முஸ்லீம் சமுதாயத்தில் பெறுவதில்லை. இவர்களுக்கு அல்லாஹூவும் அவரது தூதுவரும் அளித்து இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தூதுவர் முஹம்மது வாழ்ந்த, கலீபாக்கள் சரியாக வழி காட்டிய அந்த பொற்காலத்தில் (அமைதி உண்டாவதாக) , சமுதாயத்தில் சம உரிமை முஸ்லீம் பெண்கள் அனுபவித்தனர். அவர்களுக்கு அரசு பொறுப்புகளும் வழங்கப்பட்டன. கொள்கை வகுத்தல், சந்தை போக்குகள், படைக்களத்திற்கான பொருட்களை அளித்தல் காயமடைந்த ராணுவ வீரர்களைக் கவனித்தல் போன்றவை சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டன. வாசி சொல்வதில் அர்த்தமுண்டு. ஆனாலும், பூசாரிகளும் மதத்தை மையப்படுத்திய சமூகமும் தெய்வீக விதிகளைக் கடுமையாக்கின, கொடுமையாக்கின. இது பொதுவாகப் பேசப்படும் கருத்தாகும்.
விவாதப்பொருளை மறைக்காமல், பல குர்-ஆன் வரிகளை வரிக்கு வரியாக, சுட்டிக்காட்டுகிறார், உரை ஆய்வியல் அறிஞரும் பேராசிரியருமான ஏ.ஆர். கிட்வாய். குர் ஆன் என்பது ஆணாதிக்க வேதமா? இஸ்லாம் மதத்தில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து இருக்க வேண்டியவர்கள், உற்ற இணையர்கள். இருப்பினும், பாலின சமத்துவம் என்பது இஸ்லாமியச் சமுதாயத்தில் வலுவாக வேரூன்றவில்லை. பாலின சமத்துவம் என்பதை இஸ்லாம் மதமானது பொதுவாகச் சொல்கிறது என்கிறார், கிட்வாய் அவர்கள்; குர் ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி. “ன்ன்மை யார் செய்தாலும், ஆணோ பெண்ணோ, அல்லாஹு அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையினை அளிப்பார். அவர் கட்டாயமாக நல்ல செயல்களுக்குச் சன்மானம் அளிப்பார்”. (அன் னஹில், 16”97). இப்படி வெளிப்படையாகவே, குர் ஆன் வசனங்கள் இருந்துகூட, இவற்றால் இஸ்லாம் மதத்தில் பெண்ணுக்குக் கீழ் நிலைத் தான் எனும் தவறான எண்ணத்தை முறியடிக்க இயலவில்லை என வருத்தப்படுகிறார், இந்த தொகுப்பாசிரியர். இதற்குக் காரணம், சமூக பொருளாதார காரணங்களும் சிறந்த கருத்துகளை அழிக்கும் தேக்கமடைந்த மன நிலையும்.
குர்ஆனில் பெண்கள்
யூத தேச மதங்கள் (யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம்) எதுவுமே இறை தூதுவராக ஒரு பெண் வரமுடியும் என்பதை வெளிப்படையாகக் கூறுவதில்லை. ஆனாலும், பெண் கடவுள் எனும் கருத்து இந்து மதத்தில் உள்ளது. அல்லாஹுவுக்கு நெருக்கமானவர்களாக குர் ஆன் பல பெண்களைச் சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக, குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்கிறார், தொகுப்பாசிரியர். இறை தூதுவரான யேசுவின் அம்மா மரியத்திற்கு (மேரி) கடவுளின் பாராட்டு கிடைக்கிறது. குர் ஆனில் உள்ள இவரைப் பற்றிய வருணனையானது இறை தூதுவரது போல் உள்ளது. பேரா. கிட்வாய் கூறுகிறார். “அவருக்கு (மரியம்) பல மிகச்சிறந்த பண்புகள் இருந்தன: அவரது புனிதம், கற்பு, அல்லாஹு மீதான அழுத்தமான பக்தி.
தேவ கன்னியர் பல நேரங்களில் , இறை தூதுவர்களைப் போல் இவரை நேரடியாக அழைத்துப் பேசுவது என்பது ஒரு சிறப்பு அந்த சிறப்பு இவருக்கு கிடைத்ததில் எந்த வியப்பும் இல்லை. மேலும் இறை தூதுவர்களுக்கு மட்டும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ‘தேர்வானவர்’ (அஸதஃபா) எனும் குர் ஆன் சொல்லை, இவருக்கும் (மரியம்) பயன்படுத்தப்படுகிறது. தூதுவர் முஹம்மதின் சிறப்புப் பெயரான அல் முஸ்தஃபா என்பது இந்த அஸ்தஃபா எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு அல்லாஹுவினால் இறை தூதுவராகத் தேர்வானவர் என்று பொருள்”.
மரியத்தை தவிர, குர் ஆனில் பெயர் இடம் பெறும் பிற பெண்கள் குறித்து பெரிதாக எதுவும் தெரியவில்லை. இறை தூதுவரான சுலைமான் (சாலமன்) காலத்தில் எமன் நாட்டு அரசியாக இருந்த ஷீபா, இறை தூதுவரான மோசஸ் அவர்களின் காலத்தில் ஃபாரோ மன்னனின் இறை நம்பிக்கையுடைய மனைவி, தூதுவர் மோசஸ் அவர்களின் அம்மா, இறை தூதுவர் ஷுஹைப் அவர்களின் மகள்கள், எகிப்தியரான அஸீஸின் மனைவி குறித்துத் தெளிவான, ஆதாரப்பூர்வமான விளக்கம் இந்த கட்டுரையில் காண முடிகிறது. இக்கட்டுரையில், பாலின சமத்துவத்தைக் கட்டாயமாக மீட்கும் குர் ஆன் கட்டளைகளும் இறை தூதுவர் முஹம்மதின் வசனங்களும் ஒருங்கிணைத்துக் கொண்டுவரப்படுகிறது.
வெளிப்படையாக ஆணாதிக்கத்தின் பதிவுகள் ஏதும் வேதத்தில் இல்லை. இதற்குத் தக்க ஆதாரம் என்பது குர் ஆனில் வரும் ஆதாம், ஏவாள் குறித்த விளக்கமாகும். பேரா. கிட்வாய் ஒரு பொருத்தமான கருத்தை முன் வைக்கி’றார். “பைபிள் போல் அல்லாமல், தடை செய்யப்பட்ட மரத்தின் அருகில் செல்லக்கூடாது எனும் இறைவனின் கட்டளையினை மீறியதற்காக ஆதாமும் ஏவாளும் ஒரு சேர குற்றவாளிகள் என்கிறது குர் ஆன். தூண்டுதல்களின், தீமைகளின் ஒரே ஊற்றல்ல, குர் ஆனில் வரும் ஏவாள்.”
நவீனக் கால, பின் நவீனக் கால உலகை வடிவமைத்த மிகவும் மதிக்கப்படும் வேதங்களின் ஆய்வுக்கான கருத்தியல் கட்டமைப்பும் அதன் விளக்கமும் உருவாக்கியதில் பெரும் பங்காற்றியவர்களே பெண் அறிஞர்கள் தான். ஆனாலும் ஒரு முஸ்லீம் பெண் அறிஞரின் பெயரும் ஒருபோதும் வெளிவருவதில்லை. மொஹம்மது யூனுஸ் குமார் எனும் இளம் ஆய்வாளர் மூன்று முக்கிய முஸ்லீம் பெண் கல்வியாளர்களைக் கண்டறிந்தார். பெண்களின் ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் காது கொடுக்காது அல்ல இந்த இஸ்லாமியச் சிந்தனை என்பதை அவர்களின் கருத்து செறிவான வாசிப்பு வெளிக்கொணர்ந்தது. ஆணாதிக்கத்தின் குரலாக இருந்த ஆட்சியாளர்களுடன் சேர்ந்த கொண்ட மௌலவி எனும் நேர்மை தவறாதவர்களாகக் கூறப்படும் மதத்தலைவர்கள இந்த முஸ்லீம் பெண்களைத் தனிமைப்படுத்தி இருட்டடிப்பு செய்தமைக்கு ஒரு மதச்சாயம் பூசினர். அஸ்மா பர்லாஸ், அமீனா வதூத், அஸ்மா அஃப்சருத்தீன் ஆகிய அவர்களின் எழுத்துக்களை யூனுஸ் கவனித்தார். பாலின சமத்துவத்தின் பின்புலத்தில் இஸ்லாமியப் போதனைகளின் குறிப்பான, குறிவைத்த தாக்கத்தை மிகத்திறமையாக ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தனர்.
இஸ்லாம் மதத்தின் அரசியல் சிந்தனைகள் தொடர்பான கருத்து கோர்வையான விவாதம் மேற்கொண்டதற்காகக் கல்வியாளர்கள் அஸ்மா அஃப்சருத்தீனின், ‘இஸ்லாம்: அரசும் அரசியல் அதிகாரமும்: மத்தியகால பிரச்சனைகளும் நவீனக் கால பரிதவிப்புகளும்” எனும் புத்தகத்திற்கு கல்வியாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இஸ்லாம் மத வரலாற்றில் மத்திய காலத்திலும் நவீனக் காலத்திலும் பின்பற்றப்பட்ட பல்வேறு வகையான ஆட்சி முறைகளையும் அரசியல் கொள்கைகளையும் குறித்த ஆதாரப்பூர்வமான ஆய்வுடன், மிக விரிவான உரையாடலை இவர் உருவாக்கி உள்ளார். அரசியல் ஒரு நெருக்கடிக் காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மாறாத விதிகளாகக் கொள்ளும் முஸ்லீம் கருத்தாளர்களைக் கருத்துடன் இவர் ஒத்துப்போகவில்லை.
தற்கால முஸ்லீம் பெண்கள் அறிஞர்கள் குறித்துச் சொல்லப்பட்டவை பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியை அளிக்கிறது, பேரா.சுமி ரஃபிக்கின், ‘பண்டைய காலத்தில் முஸ்லீம் பெண் அறிஞர்கள் இருந்தார்களா?’ எனும் கட்டுரை. கவனமாகத் திரட்டப்பட்ட வரலாற்றுத் தரவுகளை முன் வைத்து, முஸ்லீம் பெண்களின் அறிவுத்திறன், வர்த்தக திறமை, அறிவியலையும் அரசியலையும் பற்றிய போதுமான புரிதல் போன்றவற்றை மிகத் திறமையாக வெளிப்படுத்துகிறார்.
இஸ்லாம் மதத்தில் பெண்கள் சமுதாய ரீதியாக ஒடுக்கப்படுகிறார்களா?, எனும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி தொடர்பாக ஒரு விவாதத்தை னட்த்துகிறார், இந்த புத்தகத்தின் இணை தொகுப்பாளர், முனைவர்- ஜூஹி குப்தா. முஸ்லீம் பெண்களுக்கு எவ்வித மத ரீதியான பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை என்கிற, அவர்களது மதமானது ஆணாதிக்க நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது என்கிற பொய்மைகளை மிகத்திறமையாக அவர் உடைத்தெறிகிறார்.
இந்த புத்தகத்தின் குறிப்பிடும்படியான தன்மை என்பதே இதில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது என்பது தான். இதற்கான ஆணித்தரமான, இயல்பான விடைகளை அளித்துள்ளனர் இவர்கள்,- முனைவர் ஃபைஸி அப்பாஸி, முனைவர் சஜிதுள் இஸ்லாம், சதாஃப் ஹுசைன், ஹூமா யாகூப், ஹாரீஸ் பின் மன்சூர், ஜாவேத் அஹமத் ஃபட், இர்ஃபான் ஜலீல், வஹீத் கான், கவுஹார் காதிர் வானி, சைத் அலி ஹர் கமூன்புரி, முஸ்தஃபா னதீம் கீர்மானி, கிஷ்வார் சஃபீர், ஷெரீன் ஷ்ர்வானி.
இந்த புத்தகத்தின் நான்காம் பகுதியில் அன்றாடம் வாழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கம் செலுத்துகிற அனைத்து பிரச்சனைகள் குறித்து சில்வியா வாதுக், மிரியம் கூக், ஃப்ளேவியா ஆக்ன்ஸ், கைஸ்ரா ஷாரஸ் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
உலகம் முழுதும் முஸ்லீம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும், (அது எப்போதும் சரியான காரணத்தினால் அல்ல) இந்த சூழலில், பெண்கள் நிலை குறித்த புரிதலை அளிக்கின்றன இந்த தெளிவான, இலக்குள்ள, கவனிக்கதக்க கட்டுரைகளின் தொகுப்பு.
ஷாஃபி கிட்வாய், பேராசிரியர் மற்றும் தலைவர், மக்கள் செய்தித்தொடர்பியல் துறை, அலிகட் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகட்.
தமிழில்: பேரா. பி.ஆர். ரமணி
நன்றி: ஃப்ரண்ட்லைன்
https://frontline.thehindu.com/books/dialogic-study-of-muslim-women/article32711621.ece
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை முஸ்லிம் பெண்கள்
(Muslim Women What Everyone Needs to Know)
திருத்தியவர்:ஏ.ஆர்.கிட்வாய் மற்றும் ஜூஹி குப்தா
வெளியீடு: விவா புக்ஸ்,புதுதில்லி. பக்கங்கள்:233 விலை:ரூ.895