‘அவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடட்டும்.’
இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி, பரிதவிக்கின்ற மக்களை மேலும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது. ஏழைகள் வேலைகளை இழந்து, பசியுடன், பல மோசடிகளுக்கு பலியாகிறார்கள்.
தெரு நாய்கள் மற்றும் வட்டமிடும் வல்லூறுகள், முதல் துப்பை தந்தன. கிராமவாசிகள் ஆற்றங்கரையை நெருங்கியபோது, துர்நாற்றம் திகிலை உறுதிப்படுத்தியது. மே 11 ஆம் தேதி அதிகாரிகள் அனைத்து உடல்களையும் சேகரித்து புதைத்து முடிக்கையில், எண்ணிக்கை 71ஐ எட்டியிருந்தது. இந்தியாவின் ஏழ்மையான, மிகவும் வளர்ச்சியடையாத மாநிலங்களான உ.பி மற்றும் பீகார் எல்லையில் உள்ள சௌசா என்னும் கிராமத்தில், கங்கை நதியின் ஒரு வளைவில் மட்டுமே கிடைத்த உடல்கள் எண்ணிக்கை இது!
அதே வாரத்தில், குறைந்தது மூன்று இடங்களில், இந்த கொடூரமான மனித லாக்ஜாம்கள் நதியின் நீரோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சோக காட்சிகள் இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. ஒன்று தற்போது இந்தியா முழுவதும் பரவிவருகின்ற துயரத்தின் அளவு; நகர ஆய்வகங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில், யாரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை, எனவே பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பதிவும் இல்லை, தேசிய எண்ணிக்கையில் அந்த இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவுமில்லை. இறப்புகள் எண்ணிக்கை என்று சொல்லப்படுகின்ற 258,000 என்பது, உண்மையான எண்ணிக்கையின் ஒரு சிறிய பகுதியேயாகும்.
கங்கையில் மிதக்கும் உடல்கள் வெளிப்படுத்தும் இரண்டாவது விஷயம் என்னவென்றால், இந்தியாவின் இரண்டாவது அலை, ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ஏழைகளின் நிலையை எவ்வாறு மேலும் மோசமாக்குகிறது என்பதுதான்.
மருந்துகள், அல்லது ஆக்ஸிஜன் அல்லது கூடுதல் கோவிட் கட்டணங்களை வசூலிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பணம் செலுத்த, மக்கள் கடன் வாங்குகிறார்கள், பிறகு இறுதி சடங்கிற்கு கையில் பணமில்லாமல் தவிக்கிறார்கள் என்று உள்ளூர் பத்திரிகையாளர் உத்பால் பதக் கூறுகிறார். சமீப வாரங்களில், ஒரு தகன செலவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக, சௌசாவில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். வறுமைக்கும், நதியில் போடப்பட்ட உடல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிகாரிகள் மறுத்த போதிலும், தற்போது சௌசா கிராமத்தின் இறுதிச் சடங்குகளுக்கு இலவச விறகு வழங்கத் தொடங்கியுள்ளது, உண்மை நிலையை உணர்த்துகிறது. பீகாரும் ஆம்புலன்ஸிற்கான அதிகபட்ச வாடகையை இப்போது நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கோவிட் -19 முதல் அலை பரவிய பிறகு, ஏழை மக்கள் எதிர்கொண்ட இழப்பை மதிப்பீடு செய்ய, ஏராளமான அறிக்கைகள் முயன்றன. Pew என்கிற ஆராய்ச்சி நிறுவனம், 2020 ஜனவரியில், ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் இந்தியர்கள் சதவீதம் வெறும் 4.3 என மதிப்பிட்டுள்ளது; தற்போது ஒரு வருடம் கழித்து, இது 9.7 சதவீதமாக அதாவது 134 மில்லியன் மக்களாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நாடு தழுவிய லாக் டவுனை அடுத்து, சுமார் 230 மில்லியன் இந்தியர்கள் தேசிய குறைந்தபட்ச ஊதியத்துடன் இணைக்கப்பட்ட வறுமை எல்லைக்குக் கீழே சரிந்துள்ளதாக,பெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் விரிவான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. முழு அடைப்பு காலத்தில், 90 சதவீத ஏழைகள் குறைந்த அளவு உணவே உட்கொண்டதாக அதன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆறு மாதங்களுக்குப் பிறகும், அவர்களின் உணவுகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த ஓராண்டு காலத்தில், உறுதி செய்யப்பட்ட ஊதிய பணியில் உள்ள 10 சதவீத அதிர்ஷ்டசாலிகள் உட்பட, அனைத்து இந்திய தொழிலாளர்களின் வருவாயானது, மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
கடந்தாண்டு அறிவித்த முழு அடைப்பு ஏற்படுத்திய வலியின் அதிர்ச்சி காரணமாக, இந்த அலையின் போது முழு அடைப்பு தொடர்பான முடிவுகளை அந்தந்த மாநிலங்களின் பொறுப்பிற்கே, ஒன்றிய அரசு விட்டுவிட்டது. பொருளாதாரம் ஒரு முழுமையான அசைவற்ற நிலைக்கு வரவில்லை என்றாலும், இந்த தொற்றின் வீரியமானது, அதே வீரியத்தோடு ஏராளமான குடும்பங்களை பாதித்துள்ளது.
பல குடும்பங்களுக்கு, வருமானம் ஈட்டியவரின் இழப்பு, பேரிடியாக அமைந்துள்ளது. 1.2 மில்லியன் மக்கள் பணியாற்றும் இந்திய ரயில்வே, கோவிட், தனது 1,952 ஊழியர்களைக் கொன்றதாகக் கூறுகிறது. ஏப்ரல் மாதத்தில் உத்தரபிரதேசம அரசு, 1.2 மில்லியன் அரசு ஊழியர்களை உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கும் வாக்குச் சீட்டுகளை எண்ணுவதற்கும் பணி அமர்த்தியது. நோய் பரவலை தீவிரமாக்கிய இந்தப் பணி காரணமாக, 800 பள்ளி ஆசிரியர்கள் உட்பட 2000 ஊழியர்கள் பலியாகி உள்ளனர். இந்த இறப்புகள் ஒவ்வொன்றும், அவர்களின் குடும்பத்தினர் பல வாரங்களுக்கு எதிர்கொண்ட துயரத்தின் ஆழத்தையும், செலவுகளின் அளவையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன; அதுமட்டுமின்றி, இறந்த ஒவ்வொரு நபருக்கும், இன்னும் 20 பேர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருக்கும் வாய்ப்பும் உள்ளது.
சாதாரணமான ஒரு ஆண்டில் 20 குடும்பங்களுக்கு ஒன்று, மருத்துவ செலவினங்களால் வறுமையில் தள்ளப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்கள் அசாதாரணமானவை. பல மில்லியன் இந்திய குடும்பங்கள், தங்கத்தை விற்கவோ, உடைமைகளை அடகு வைக்கவோ அல்லது அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன; இவை அனைத்தும், பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் தேவையற்ற சிகிச்சைகளுக்கு பணம் செலுத்துவதற்காகவோ அல்லது அரசு மருத்துவமனைகளில் இல்லாத அடிப்படை பொருட்களான ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் ஊசிகள் வாங்குவதற்காகவோ மட்டுமே!
மருத்துவமனையில் அனுமதிக்க லஞ்சம் கோரும் மருத்துவ ஊழியர்கள், போலி மருந்துகள் விற்கும் சப்ளையர்கள், இன்னும் பல மாநிலங்களில் தீயணைப்பு கருவிகளை சாயம் பூசி, ஆக்ஸிஜன் சிலிண்டர்களாக விற்ற ஏமாற்றுக்காரர்கள் என மக்கள் விழுந்த பலவிதமான பொறிகள், முடிவற்றதாக உள்ளன.
முக்கியமாக, எங்கிருக்கிறதென்று தேடும் நிலையில் உள்ள ஒரு அரசாங்கம்! கடந்த வாரம் கோவிட் சிகிச்சைக்கு மூலிகை வைத்தியத்தை ஊக்குவித்து பேசிய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கோவிட் தொடர்பான மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு “கோகோ 70 சதவீதத்திற்கு மேல்” உள்ள dark chocolateஐ இந்தியர்கள் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆடம்பரமான சாக்லேட்டை எடுத்துக்கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், 86 சதவீத இந்திய குடும்பங்கள், அடிப்படை தேவையான சீரான உணவைக்கூட வாங்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டும் சமீபத்திய உலக வங்கி அறிக்கையை, முதலில் அவர் படிக்க வேண்டும்.
தமிழில் கிருத்திகா பிரபா, சேலம்
நன்றி: The Economist இணையதளம்
https://www.economist.com/asia/2021/05/15/indias-covid-19-crisis-is-devastating-its-most-desperate-people