மொழிபெயர்ப்பு கவிதை: புத்தகங்கள் பேசுகின்றன – சஃப்தர் ஹஷ்மி | தமிழில்: சம்புகன்புத்தகங்கள் பேசுகின்றன

கடந்து போன காலம் பற்றி

உலகத்தைப் பற்றி, மனிதர்களைப் பற்றி

இன்றைப் பற்றி, நாளை பற்றி,

ஒவ்வொரு கணத்தைப் பற்றி.

 

மகிழ்ச்சி குறித்து, துக்கம் குறித்து,

மலர்கள் குறித்து, குண்டுகள் குறித்து,

வெற்றி குறித்து, தோல்வி குறித்து,

காதல் குறித்து, காதல் தோல்வி குறித்து

 

இந்தப் புத்தகங்கள் பேசுவதை

நீ கேட்க மாட்டாயா?

புத்தகங்கள் எதோ கூற விரும்புகின்றன,

அவை உன்னிடம் இருக்க விரும்புகின்றன.

 

புத்தகங்களில் பறவைகள் சடசடத்துப் பறக்கின்றன,

புத்தகங்களில் பயிர்கள் அசைந்தாடுகின்றன

புத்தகங்களில் அருவிநீர் சலசலக்கிறது

தேவதைக் கதைகளை புத்தகங்கள் பேசுகின்றன.

 

ராக்கெட்டின் ரகசியம் புத்தகத்தில் உள்ளது

அறிவியலின் குரல் புத்தகத்தில் உள்ளது

புத்தகத்தில் எவ்வளவு பெரிய உலகம் உள்ளது

புத்தகத்தில் அறிவின் பண்டகசாலையே உள்ளது

 

நீ இந்த உலகத்துக்குள்

போக விரும்ப மாட்டாயா?

புத்தகங்கள் எதோ கூற விரும்புகின்றன,

அவை உன்னிடம் இருக்க விரும்புகின்றன.

 

சஃப்தர் ஹஷ்மி

தமிழில்: சம்புகன்