மொழிபெயர்ப்பு கவிதைகள்: வால்ட் விட்மன் | தமிழில் தங்கேஸ்அமெரிக்கக் கவிஞர்  வால்ட் விட்மென் (31-05-1819 to 26-03-1892) . புதுக்கவிதைகளின் பிதா மகன்
அவரின் புல்லின் இதழ்கள் என்ற கவிதை தொகுப்பிலிருந்து
கவிதை 1
GOOD – BYE MY FANCY!

விடைபெறுகிறேன் பிரிய சகியே !
பிரிவின் விடைகொடு
இறுதி விடை கொடு என் உயிரே !

நான் போகிறேன் போய்க்கொண்டிருக்கிறேன்
எங்கே போகிறேன் என்று தெரியாமலே
எதை அடையப்போகிறேன் என்று தெரியாமலே
என் விதி என்னவென்றும் தெரியமாலே

இன்னும் ஒரு முறை உன்னை சந்திப்பேனா என்றும் தெரியாமலே
விடைபெறுகிறேன் என் பிரிய சகியே !

ஒரு ஒரே முறை இறுதியாக  திரும்பிப் பார்க்க அனுமதி கொடுப்பாயா

துடிப்பதே கேட்காமல் துடிப்பை நிறுத்துவதற்காகவே
அத்தனை பலவீனமாய் துடித்துக்கொண்டடிருக்கிறது
எனக்குள் ஒரு கடிகாரம்

இன்றிரவோ அல்லது அதற்கும் முன்போ பின்போ
வெகுசீக்கிரமே அந்த டிக் சப்தத்தை
நீ கேட்கப்போவதில்லையென்றே தோன்றுகிறது

நீளமான மிக நீளமான ஒரு வாழ்க்கையில்
நாம் இணைந்திருந்திருக்கிறோம்
ஒன்றாக சுவாசித்து உண்டு உயிர்த்து
ஒருவரின் நீட்சி ஒருவராகியிருக்கிறோம்
அல்லது ஒருவராகவே  மாறியிருக்கிறோம்

ஆனால் இதோ அதற்குள் பிரியும் தருணம் வாய்த்து விட்டது
ஆனாலும் அத்தனை அவசரமாக பிரிவதற்கு மனம்
பதறுகிறது

அப்படி ஒரு வாழ்க்கை வாய்த்தது நமக்கு
இரண்டு சுவாசங்களை ஒன்றாக்கிய ஒரு வாழ்க்கை

இறந்தாலும் ஒன்றாகவே இறக்கவேண்டிய அளவு
அல்லது விதியின் கடைசி எல்லைக்குச் சென்றாலும்
கரம் பிணைத்தே செல்லும் அளவு
இரண்டு ஆன்மாக்கள் ஒரு ஆன்மாவாக ஆகும் அளவு
அப்படி ஒரு வாழ்க்கை வாய்த்தது
நமக்கு

ஆ ஆனாலும்
நீதான் இந்த இறுதிப்பாடலை என்னை கேட்கச்சொல்லி
வழியனுப்ப வந்திருக்கிறாய்

நீ தான் நீதான் இந்த உயிர் பந்தத்தின் இறுதி முடிச்சை
அவிழ்த்து இரண்டாக்கியிருக்கிறாய்
ஆனாலும் நீ என் பிரிய சகி
நீ மட்டுமே எனக்கு இறுதி விடை தரமுடியும் அன்பே!கவிதை 2
ONE*S SELF  I SING (ஒருவனையே நான் பாடுவேன்)

ஒரு தனிமனிதனையே நான் பாடுகிறேன்
சாதாரண எளிய தனிமனிதன் ஒருவனை
அவனைப்பாடுவதால்   ஜனநாயகத்தையே நான் பாடுகிறேன்

ஆம்  அந்த தனி ஒருவனே
மனிதகுலமாகவும் இருக்கிறான்
கால்விரல்களிலிருந்து தலை வரை நீக்கமற பாடுகிறேன்
உடற்கூறு மட்டுமல்ல அறிவு மட்டுமல்ல
பாகங்கள் மட்டுமல்ல
முழுமையே என் பாடுபொருளாக இருக்கிறது
ஆண்களைப்போலவே பெண்களையும்
அவ்வளவு சரிசமமாகப்  பாடுகிறது என் கவிதை

அதீத உணர்வுகள்  துடிப்புகள் ஆற்றல்கள்
ஆன்ம சுதந்திரத்தில் விளையும்
கட்டற்ற செயல்கள்
யாவற்றையும் நான் பாடுகிறேன்
நான் பாடும் அந்த நவீன மனிதன் வேறுயாருமல்ல
நம் கண்முன்னால் நடமாடும் ஒரு சாதாரண மனிதனே** BECAUSE GRASS GROWS  IN AND AROUND  THE GRAVES, THERE IS LIFE  AFTER DEATH**
** உள்ளும் புறமும்  புற்கள்  வளருவதால் மரணத்திற்குப்பின்பும்   வாழ்க்கை இருக்கிறது கல்லறையில்**
                 வால்ட் விட்மென்
மானுடத்தை நேசித்த மாபெரும் கவிஞன் வால்ட் விட்மென்
உடலையும் ஆன்மாவையும் ஒரு சேரப்பாடிய கவிஞன்
ஆண் பெண் பேதமின்றிப்பாடிய கவிஞன்
இயற்கையில் ஆன்மாவை கண்டெடுத்த கலைஞன்
அமெரிக்கா முழுமைக்கும் ஜனநாயகத்தின் மேன்மையை உன்னதத்தை உரைத்த கலைஞன்
ஒரு தனி மனிதன் என்பது தனி மனிதனல்ல
வால்ட் விட்மென் மொழியில் சொல்வதென்றால் தனி மனிதன் ஒட்டுமொத்த மனித குலம்
அவரின் புல்லின் இதழ்கள் என்ற கவிதை தொகுப்பிலிருந்து
தமிழில் – தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்