மொழிபெயர்ப்பு கவிதைகள்: வால்ட் விட்மன் | தமிழில் தங்கேஸ்வால்ட் விட்மன் அறிமுகம்

வால்ட் விட்மன் (Walt Whitman, மே 31, 1819 – மார்ச் 26, 1892) ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர்.

கடந்தநிலைவாதம் (transcendentalism) மற்றும் யதார்த்தவாதம் (realism) ஆகிய இரு இலக்கிய இயக்கங்களின் கூறுகளையும் இவரது படைப்புகளில் காணலாம். விட்மன் அமெரிக்க கவிதையுலகின் பெரும் புள்ளிகளில் ஒருவர். அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நெடுந்தீவில் (long island) பிறந்த விட்மன் இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார்.

1842ல் ஃபிராங்க்ளின் எவன்ஸ் என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார். 1855ல் அவருடைய மிக முக்கிய கவிதைப் படைப்பான லீவ்ஸ் ஆஃப் கிராஸ் (புல் இலைகள், Leaves of Graves) வெளியானது. சொந்த செலவில் முதலில் இதனை பதிப்பித்த விட்மன் 1892ல் இறக்கும் வரை இதனை திருத்தி எழுதி வேறு பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே லீவ்ஸ் ஆஃப் கிராஸ் உருவாகக் காரணமாயிற்று. பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதால் இந்நூல் வெளியான காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார். அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

விட்மனின் கவிதைகளைப் போலவே அவரது பால் தன்மையும் இன்று வரை விரிவாக அலசப்பட்டு வருகின்றன. அவர் தன்பால் புணர்ச்சியாளராகவோ அல்லது இருபால்சேர்க்கையாளராகவோ இருக்கலாம் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்ந்தவர்கள் கருதுகின்றனர்.

புரட்சி கரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடி யவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson].1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை. 1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப் படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமை களையும் கண்டு மனவேதனை அடைந்தார்.

ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டிய தாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது.

அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று.

அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. தலைநகர் வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது. சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறை யாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது.

போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது.

19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது.
அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது.

வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].

1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

1910ம் ஆண்டில் அமெரிக்காவில் பழைய ஆங்கில யாப்புக் கட்டுகோப்புகளை எதிர்த்து வால்ட் விட்மன் எதிர்ப்பு குரல் கொடுத்தார்.

யாப்பு பழமையின் சின்னம் ! நிலபிரவுத்துவத்தின் எச்சம் ! புதிய இலக்கியத்தின்
உரைநடைக்கும் செய்யுளுக்கும் இடையே எவ்வித வேற்றுமையும் இருத்தல் ஆகாது, விஞ்ஞானம், சமுதாயம் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனில் கவிதை, உரைநடையிடையே வேறுபாடு இருத்தல் கூடாது, பழைய ஆங்கில யாப்புகள் அடிமைதளைகள் என்றூ கூறுகிறார் வால்ட் விட்மன்.

இதனால் புதுக்கவிதை (New Poetry) என்றும், ப்ரெஞ்சு இலக்கியத்தை பின்பற்றி கட்டற்ற கவிதை ( Verse libre) என்றும் புதிய கவிதை முயற்சி தோன்றலாயிற்று,
இது இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் 1910க்கு பிறகு ஏற்ப்பட்டது,

ஏறத்தாழ இதே ஆண்டில்தான் பாரதி வால்ட் விட்மன் என்ற தலைப்பில் வசன கவிதை எழுதினார், வால்ட் விட்மனை, நகரம் என்ற தம் கட்டுரையில் மகான் என்று குறிப்பிடுவதால் வால்ட் விட்மனின் தாக்கத்தால் எழுத தொடங்கினார் எனலாம்.

இவருக்கு பின் புதுகவிதையில் நாட்டமிக ந.பிச்சமூர்த்தியும் வால்ட் விட்மன் கவிதைகள் தன்னை பெரிதும் பாதித்தது என்கிறார். விட்மனின் புல்லின் இதழ்கள் என்ற யாப்பு மரபையே கண்டிராத கவிதை தொகுப்பு (வசனகவிதை)
யிலிருந்து சில பகுதிகளை மொழி பெயர்த்து தனை பாடுவேன் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

நன்றி விக்கிபீடியா சி, ஜெயபாரதன், கனடா

அவரின் “புல்லின் இலைகள் என்ற கவிதை தொகுப்பிலிருந்துமொழி பெயர்ப்பு கவிதை 1 : என்னையே பாடுகிறேன் 

நான் எனக்கே விழா காண்கிறேன்
என்னையே பாடி களிக்கிறேன்
நான் என்னை எவ்விதம் கொண்டாடுகிறேனோ
உன்னையும் அவ்விதமே
என்னுடைய ஒவ்வொரு அணுவும் எனக்கு எவ்வளவு முக்கியேமா
உனக்கும் அவ்விதமே

நான் ஊரெல்லாம் சுற்றி வருவேன் இலக்கின்றி
அவ்வப்போது ஆன்மாவிற்கும் அழைப்பு விடுவேன்
சோம்பி சாய்ந்திருக்கும் போது
கோடை புற்களின் ஈட்டி முனைகளில்
மனதை சேர்ப்பேன்

என் குருதியில் நடனமிடும் ஒவ்வொரு அணுவும்
இந்த மண்ணில் இந்த காற்றில் பிறந்ததே
என் பெற்றோர்களுக்கும் அவ்விதமே அது வாய்த்தது
பெற்றோர்களின் பெற்றோர்களுக்கும்
தலை முறை தலைமுறைகளுக்கும் அதே அவ்விதமே

எனக்கு தற்போது முப்பத்தி ஏழு வயது
முழு ஆரோக்கியம் இறக்கும் வரைக்கும் மாறாது
என்பேன்

என் நம்பிக்கைகளும் நம்பிக்கை வளர்த்த மதக்கூடங்களும்
நான் மறக்கவில்லை
அப்படியே போதுமான அளவு மாறாமலிருக்கின்றன
ஆனால் நான் மாறியிருக்கிறேன்

நான் நல்லது கெட்டது இரண்டிற்குமிடையில் முகாமிட்டு திரும்புகிறேன்
ஒவ்வொரு தடையும் என்னிடமும் உரையாடிப்போகின்றன
ஆனால்
இயற்கையின் கரங்களில் மட்டும்
என்னை அப்படியே ஒப்படைத்து விடுகிறேன்என்னையே பாடுகிறேன் 2

இந்த வீடுகள் அறைகள் எங்கெங்கும்
வாசனைத்திரவியங்கள் நிரம்பி வழிகின்றன

சுவாசிக்கிறேன் நானும் அதை நேசிக்கிறேன் தான்
ஆனால் காற்றில் பொங்கிவரும் அதன் உற்பத்தி வாசனை
என்னை மயக்கமுறச் செய்திட நான் ஒரு போதும் அனுமதியேன்

அது வாசனை தரும் தான்
ஆனால் அந்த செயற்கை என்னை
மதியிழக்க செய்ய முடியாது

நான் உடனடியாக செய்ய வேண்டியது
ஆற்றங்கரைக்கு ஓடிச் சென்று வேஷம் கலைத்து
என்னை நிர்வாணமாக்க வேண்டியது தான்

நான் என்னை தொடர்புறவே பைத்தியமாயிருக்கிறேன்
மற்றவர்களையல்ல
என் மூச்சுக்காற்றின் புகை ஓவியமாய் படிய
சிற்றோடையின் எதிரொலி சல சலப்பு பிரியம்
பட்டு நூல் தெறிப்புகள்

எந்தன் சுவாசம் எந்தன் உச்சம்
இதயத்துடிப்பு இரத்தம் பாய்ச்சும் அதிர்வு
நுரையீரலில் காற்று புகும் சத்தம்
யாவும் வேண்டும் எனக்கு

பச்சை இலைகளின் இரகசிய மூச்சு
சருகுகளின் பெருமூச்சு
பாறைகளில் அலைகளின் உரசல்
கட்டற்று பீறிடும் என் குரல்
காற்றின் ஓய்வற்ற தழுவல்கள்
யாவும் வேண்டும் எனக்கு

மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும்
ஒளி நடத்தும் நாடகம்
தனிமையின் எல்லையற்ற இருத்தலின் இன்பம்
எல்லையற்ற இருத்தலின் பொங்கும் என் பாடல்கள்
சூரியனை நிரப்ப
யாவும் வேண்டும் எனக்கு

நீங்கள் ஆயிரம் ஏக்கர் வைத்திருக்கிறீர்களா
அளவற்ற நிலத்திற்கு சொந்தக்காரரா?
மாபெரும் படிப்பாளியா

அல்லது கவிதையின் அர்த்தத்தை
தேடி கண்டு பிடித்து களிப்புறுபவாரா
அப்படியானால் இன்று ஒரு பகல் இரவு என்னுடன் அமருங்கள்

கவிதைகளுக்கெல்லாம் சாரம் தரும்
மகா கவிதை ஊற்று இங்கே தான் பிரவகித்துக்கொண்டிருக்கிறது

இந்த பூமியின் இரகசிய பகுதியும் சூரியனின் அதி ரகசிய பகுதியும்
இங்கே தான் திறந்து கொள்ள போகின்றன

இங்கு நிகழும் பிரபஞ்ச இரகசியத்தை
இரண்டாவது மூன்றாவது நபர்களின் வழி அல்ல
குவிக்கப்பட்ட புத்தகங்களின் வழி அல்ல
நீங்களே நீங்கள் மட்டுமே நேரடியாக அனுபவிக்கும் காலம்
மிக அருகில்

என்னுடைய கண்களின் வழி அல்ல நிச்சயமாய் என்னுடைய பார்வையாய் அல்ல
நீங்களே வெளியெங்கும் ஓசை கேட்டு
உங்களுக்குள் நிறைக்கப்போகிறீர்கள்
எல்லையற்ற பிரபஞ்சத்தை
கவிதை 2

ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே நம் தமிழ்கவிஞன் கணியன் பூங்குன்றனைப்போல சிந்தித்த கவிஞன் புதுக்கவிதைகளின் பிதாமகன் வால்ட் விட்மன்
அவரின் புல்லின் இதழ்கள் கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது

மொழி பெயர்ப்பு கவிதை 2: என்னையே பாடுவேன் (18 வது பாடல் )
WALT WHITMAN ‘S EAVES OF GRASS
BOOK III SONG OF MYSELF (18)

அதிரும் இசையோடு வருவேன் நான்
முரசுகள் முழங்க ! பறைகள் அதிர !
அதிரும் இசையோடு வருவேன் நான்
வாகை சூடியவர்களின் வெற்றி
ஊர்வலத்தில் வாசிப்பதற்கல்ல
வீழ்தப்பட்Lடவர்களின் நினைவேந்தலில்
வாசிப்பதற்கே இங்கே நான் வந்தது ….

ஓ வீரர்களே !
இந்த நாளை நீங்கள் வென்றெடுத்தது
மகத்தானதென்றால்
இந்த நாளை அவர்கள் இழந்ததும்
மகத்தானதன்றோ ?
இந்தப் போரில் வெற்றி கொண்ட
உங்களின் துடிப்பு
தோல்வி கண்ட அவர்களின்
துடிப்பை விட
சற்றும் உயர்ந்ததா ?

நான் உங்களுக்காக அல்ல
இறந்து போனவர்களுக்காகவே இங்கே இசைக்கவந்தவன்
என் உயிரையெல்லாம் மூச்சாக திரட்டி
திரட்டிய மூச்சை ஊதுகுழலில் பாய்ச்சி
உக்கிரத்தோடு ஊதுகிறேன்

இசை பிறக்கிறது
இழந்தவர்களுக்காகவே இசைக்கின்றவன் நான்
எவர் எவரின் கப்பல் மூழ்கிப்போய்விட்டதோ
அவரவர்களுக்காக !
எவரெவர் கடலில் மூழ்கிப்போய் விட்டார்களோ
அவரவர்களுக்காக !

வெற்றியை இழந்த அத்தனை தளபதிகளுக்கும் !
தோல்வியில் மாய்ந்த அத்தனை வீரர்களுக்கும் !
இசைக்க வந்தவன் நான் ….
வெற்றி பெற்ற
முகம் தெரிந்த அத்தனை வீரர்களைப் போலவே
தோல்வியுற்ற முகம் தெரியாக
அத்தனை வீரர்களுக்கும்
எண்ணித்தொலையாத அத்தனை வீரர்களுக்கும்

அதாவது அந்த முகம்தெரியாத
அத்தனை வீரர்களுக்கும் …..

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்