ஓர்ரின் ப்ரோவெர் அவனுடைய மைத்துனனைக் கொன்றுவிட்டு நீதியிடம் இருந்து தப்பியோடும் ஒரு குற்றவாளி. வழக்கின் தீர்ப்பு வரவிருந்த நேரத்தில் மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து தப்பிவிட்டான். இரவு நேரத்தில் சிறை அலுவலரைக் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சாவிகளைத் திருடி எடுத்து, வெளிப்புறக் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான். சிறை அலுவலர் நிராயுதபாணியாக இருந்ததால் மீட்டெடுத்த விடுதலையைக் காப்பாற்றிக்கொள்ள ப்ரோவெருக்கு ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை. ஊரின் எல்லையைக் கடந்ததும் அவன் செய்த ஒரே தவறு காட்டுக்குள் நுழைந்ததுதான். இது பல ஆண்டுகளுக்கு முன்னால்  நடந்தது, அப்போது அந்தப் பகுதி இப்போதைவிட பயங்கரமான வனாந்திரமாக இருந்தது.

அடர்ந்த அந்த இரவில் நிலவோ நட்சத்திரங்களோ ஒளி வீசவில்லை. ப்ரோவெர் அந்தப் பகுதியில் வசிப்பவனில்லை, நிலத்தின் அமைப்பு பற்றி அவனுக்குத் தெரியாது என்பதால் வழிதொலைந்து போனது இயல்புதானே. ஊரைவிட்டு வெளியே போகிறோமா அல்லது திரும்பவும் ஊருக்குள்ளேயே போகிறோமா என்று தெரியவில்லை — இப்போது ஒர்ரின் ப்ரொவெருக்கு இதைத் தெரிந்துகொள்வது அவசியமாக இருந்தது. எப்படியாக இருந்தாலும் குடிமக்களின் படை வேட்டை நாய்களோடு அவனைத் துரத்திப் பிடிக்க வரும், தப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது தெரியும். பிடிபட்டுவிடத் தானே உதவிசெய்தது போல ஆகிவிடக்கூடாது என்று நினைத்தான். ஒரேயோரு மணி நேரமாக இருந்தாலும் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஆசைப்பட்டான். 

திடீரென காட்டுக்குள் இருந்து ஒரு பழைய சாலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவன் எதிரே இருட்டில் ஒரு ஆணின் உருவம் நிற்பது மங்கலாகத் தெரிந்தது. சத்தமே இல்லாமல் பின்வாங்க நேரம் கடந்துவிட்டது. திரும்பவும் காட்டுக்குள் நுழைய முதல் அடியை எடுத்துவைத்தால் தன்னைத் ‘துப்பாக்கிக் குண்டு துளைத்துவிடும்’ என்ற உணர்வு ஏற்பட்டதாகப் பின்னர் சொன்னான். இருவரும் அசையாமல் மரம்போல நின்றார்கள். தன் இதயம் துடிக்கும் ஓசை கேட்டு மூச்சடைத்தது போலத் திணறினான் ப்ரோவெர்; அந்த இன்னொருவன்–அவனுடைய உணர்ச்சிகள் குறித்து எதுவும் தெரியவில்லை.ஒரு நொடிக்குப் பிறகு — ஆனால் அதற்குள் ஒரு மணி நேரம் ஆனதுபோல இருந்தது — மேகத்துக்குப் பின்னால் இருந்து வெளியே நீந்தி வந்தது நிலவு. வேட்டையாடப்பட்ட மனிதன் அவன் முன் தெரிந்த நீதியின் திருவுருவம் அவனை நோக்கிக் கையை உயர்த்தி அவனுக்குப் பின்னேயும் அதைத் தாண்டியும் சுட்டுவதைப் பார்த்தான். அவன் புரிந்துகொண்டான். சிறைப்பிடித்தவனுக்கு முதுகைக் காண்பித்து பணிவோடு அவன் காட்டிய திசையில் நடக்க ஆரம்பித்தான். எந்தப் பக்கமும் திரும்பாமல் மூச்சுக்கூட விடாமல் நடந்தான். எப்போது குண்டு துளைக்குமோ என்ற பயத்தோடு நடந்ததால் தலையும் முதுகும் வலிக்க ஆரம்பித்தது.

இதுவரை தூக்கில் போடப்பட்ட குற்றவாளிகளிலேயே தைரியசாலி ப்ரோவர்தான். அவன் இருந்த மோசமான ஆபத்தான சூழ்நிலையில் நிறுத்தி நிதானமாக மைத்துனனைக் கொன்ற விதத்திலேயே அது தெரிந்தது. அதை இங்கே மீண்டும் விலாவாரியாகச் சொல்லத் தேவையில்லை. வழக்கு நடந்தபோது அது தெரியவந்தது. அந்த விவரங்களை அமைதியாக அவன் எதிர்கொண்ட விதம் தான் தூக்கிற்குப் போவதில் இருந்து அவனைக் காப்பாற்றியது. ஆனால் என்ன செய்வது? தைரியமான ஒரு மனிதனைத் தோற்கடிக்கும் நிலை வந்தால் அவன் பணிந்துபோகிறானே. 

காட்டின் வழியே சென்ற அந்தப் பழைய சாலையில் சிறைச்சாலையை நோக்கி நடந்தார்கள் இருவரும். ஒரே ஒரு முறைதான் ப்ரோவெர் தலையைத் திருப்ப முனைந்தான், ஒரு முறை மட்டும். அவன் அடர்ந்த நிழலிலும் அந்த இன்னொருவன் நிலா வெளிச்சத்திலும் இருப்போம் என்பது உறுதியாகத் தெரிந்தபோது. அவனைச் சிறைப்பிடித்தவன் பர்ட்டன் டஃப், அந்தச் சிறை அலுவலர். வெளிறிய முகத்துடன் இருந்தான். நெற்றியில் இரும்புக் கம்பியால் அடிபட்ட வடு கன்றிப் போய் இருந்தது. ஓர்ரின் ப்ரோவெருக்கு அதற்கு மேல் எதையும் தெரிந்துகொள்ள ஆர்வமில்லை. ஒருவழியாக ஊரைச் சென்றடைந்தார்கள். பளீரென்று விளக்குகள் எரிந்தன. ஆனால் ஊரே வெறிச்சோடிப்போய் இருந்தது. பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தார்கள், அவர்களும் தெருக்களில் இல்லை, வீட்டுக்குள் அடைந்திருந்தனர். குற்றவாளி நேரே சிறைச்சாலையை நோக்கிச் செலுத்தப்பட்டான். நேரே அதன் முக்கிய வாயிலுக்கு நடந்துபோய், கனத்த இரும்புக் கதவின் கைப்பிடி மேல் கையை வைத்து, யாரும் கட்டளை இடாமலே அதைத் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே அவன் முன்னால் ஆயுதமேந்திய அரை டஜன் ஆட்கள் நிற்பதைப் பார்த்தான். பிறகு மெல்லத் திரும்பினான். அவனைத் தொடர்ந்து யாரும் உள்ளே வரவில்லை. 

அந்த நீண்ட தாழ்வாரத்தில் ஒரு மேசையின் மீது பர்ட்டன் டஃபின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருந்தது.  Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *