இதுவரை எந்த நாளும் இதுபோல அழகாக இருந்ததேயில்லை என்று மயோப்புக்குத் தோன்றியது. கோழிக் கூட்டிலிருந்து பன்றிப் பட்டிக்கும் பிறகு புகைபோடும் அறைக்கும் மெல்லக் குதிபோட்டபடி இருந்தாள். காற்றில் இருந்த ஒருவித தீவிரத்தன்மை அவள் மூக்கைச் சுளிக்கச் செய்தது. சோளமும் பஞ்சும் நிலக்கடலையும் மஞ்சள் பூசணியும் என்று செய்யப்பட்ட அறுவடை ஒவ்வொரு நாளையும் பொன்னிற அதிசயமாக்கியது. அதை நினைக்கையில் அவளுடைய கீழ்த் தாடையில் கிளர்ச்சியூட்டும் துடிப்பொன்று தோன்றியது. 

சிறிய முடிச்சுகள் கொண்ட தடியொன்றைக் கையில் வைத்திருந்தாள் மயோப். அவளுக்குப் பிடித்தமான கோழிகளை விருப்பம்போல அதனால் தட்டினாள்; பன்றிப் பட்டியின் வேலியில் பாடலொன்றின் தாளத்தைப் போட்டாள். வெயிலின் கதகதப்பு இதமாக இருந்தது, இலேசாக உணர வைத்தது. அவளுக்குப் பத்து வயது. தன்னுடைய பாட்டு, அடர் பிரவுன் வண்ணக் கையில் பிடித்திருந்த தடி, டட்-டீ-டா-டா-டா-டா என்று போட்ட தாளம், இவற்றைத் தவிர உலகில் வேறு எதைப் பற்றியும் அவளுக்குப் பொருட்டில்லை அப்போது. 

Alice Walker – Wikipedia

குடியானவர்களாக இருந்த அவளுடைய குடும்பத்தின் துருப்பிடித்த தகரக் கூடாரத்தைவிட்டு நகர்ந்தாள் மயோப். நீரூற்று வரையிலும் நீண்டிருந்த வேலியின் ஓரமாக நடந்து சென்றாள். அந்த நீரூற்றில் இருந்துதான் அவளின் குடும்பத்துக்கான குடிநீர் கிடைத்தது. அதைச் சுற்றிலும் வெள்ளிநிற பெர்ன்களும் காட்டுப் பூக்களும் பூத்திருந்தன. ஆழம் அதிகமில்லாத அதன் கரைகளில் பன்றிகள் படுத்திருந்தன. மெல்லிய கருப்புநிறத் திட்டுக்களைக் கொண்ட மண்ணின்மீது வெள்ளைநிற நீர்க்குமிழிகள் எழுவதையும் உள்ளேயிருந்து ஓசையின்றி வெளியேறும் நீர் ஓடையில் கலப்பதையும் வேடிக்கை பார்த்தாள் மயோப்.

வீட்டுக்குப் பின்னால் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் பலமுறை திரிந்திருக்கிறாள். இலையுதிர் காலத்தின் பிற்பகுதியில் உதிர்ந்த இலைகளுக்கு நடுவே இருக்கும் கொட்டைகளைப் பொறுக்குவதற்காக அம்மாவுடன் அடிக்கடி போவது வழக்கம். இன்றைக்கு அப்படியும் இப்படியும் குதித்தபடி, பாம்புகள் இருக்கின்றதா என்றுமட்டும் அவ்வப்போது கவனமாகப் பார்த்தபடி, மனம்போன பாதையில் போனாள். வழக்கமான பெர்ன் செடிகள் அழகான இலைகள் இவற்றோடு கூடவே இரண்டு கையும் நிறையுமளவுக்கு வளைந்த வெல்வெட்டுக் கரைகளையுடைய வினோதமான நீலநிற மலர்கள் பூத்திருந்த செடியையும் நறுமணம் வீசும் பிரவுன் நிற மொட்டுக்களைக் கொண்ட புதரையும் கண்டுபிடித்தாள். பன்னிரண்டு மணியாகும்போது கைமுழுவதும் அவள் கண்டெடுத்த கொத்துகள் நிறைந்திருந்தன. வீட்டில் இருந்து ஒரு மைல் தொலைவுக்கு வந்துவிட்டிருந்தாள். இதற்கு முன்னால் இத்தனை தொலைவு வந்திருக்கிறாள் என்றாலும் இந்த இடம் விநோதமானதாக இருந்தது. அவள் வழக்கமாகப் போகும் இடங்களைப்போல இதமூட்டுவதாக இல்லை. அவள் இருந்த சிறிய வளைவான ஒதுக்கிடம் சோகத்துடன் கூடியதாக இருந்தது. காற்று ஈரப்பதத்துடன் இருந்தது. அங்கு நிலவிய அமைதி ஆழமாகவும் அவளுக்கு மிக அருகிலேயே இருப்பது போலவும் தோன்றியது. 

மீண்டும் வீட்டுக்கும் அந்தக் காலை நேரத்தின் இதமான சூழலுக்கும் திரும்பிச் செல்ல ஆரம்பித்தாள் மயோப். அப்போதுதான் அவனுடைய கண்களுக்கு நட்ட நடுவே காலை வைத்தாள். நெற்றிமேட்டுக்கும் மூக்குக்கும் நடுவே உடைந்து குழிவாக இருந்த பகுதியில் அவளுடைய குதிகால் சிக்கிக்கொண்டது. பயந்துவிடாமல் கீழே குனிந்து காலை விடுவித்தாள். அவனுடைய வெறுமையான இளிப்பைக் கவனித்தபோதுதான் திடுக்கிட்டுக் குரல் எழுப்பினாள்.

அவன் உயரமானவனாக இருந்திருக்கிறான். கால் முதல் கழுத்துவரை அதிக நீளமான இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. அவனுடைய தலை அவனுக்குப் பக்கவாட்டில் இருந்தது. இலைகளையும் மண் குவியலையும் குப்பையையும் தள்ளிவிட்ட பிறகு அவன் பெரிய வெண்ணிறப் பற்களும், எல்லாம் உடைந்தோ நொறுங்கியோ போயிருந்தன, நீளமான விரல்களும் மிகப் பெரிய எலும்புகளும் கொண்டவனாக இருந்திருக்கிறான் என்பதைக் கவனித்தாள் மயோப். அவனுடைய டெனிம் மேலங்கியின் ஒருசில நூலைத்தவிர ஆடை முழுவதும் மட்கிப் போயிருந்தது. மேலங்கியின் வார்ப்பூட்டு பச்சை நிறமாக மாறியிருந்தது.ஆர்வத்துடன் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள் மயோப். தலைக்குள் அவள் கால் சிக்கிய இடத்தில் இளஞ்சிவப்பு காட்டு ரோஜாச் செடியொன்று இருந்தது. அவளிடமிருந்த கொத்துக்குள் சேர்ப்பதற்காக அதை எடுக்கையில் அந்த மேட்டைக் கவனித்தாள். அந்த ரோஜாச் செடியின் வேரைச் சுற்றியும் ஒரு வளையம் இருந்ததையும் பார்த்தாள். முடிச்சுப் போடப்பட்ட மட்கிய கயிற்றின் எஞ்சிய பகுதி, துண்டு துண்டாகச் சிதைந்த நீளமான பகுதியினால் ஏற்பட்ட தடம், இவை எல்லாம் மண்ணோடு மண்ணாக நன்றாகக் கலந்துவிட்டிருந்தன. மேலே நீண்டிருந்த அகன்ற பெரிய ஓக் மரத்தின் கிளையில் இருந்து இன்னொரு துண்டு தொங்கிக் கொண்டிருந்தது. நைந்து, மட்கி, வெளுத்து, நூல்பிரிந்து — ஏதோ ஒன்று இருந்தது — வீசிய காற்றில் இடைவிடாமல் சுழன்றது. கையில் இருந்த மலர்களைக் கீழே வைத்தாள் மயோப்.

அந்த கோடைக்காலம் முடிவுக்கு வந்திருந்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *