2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இ.ஐ.ஏ) வரைவறிக்கை வெளியிடப்பட வேண்டிய மொழி குறித்து சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கு, தன்னுடைய செயல்பாட்டில் மத்திய அரசு பயன்படுத்தி வருகின்ற அலுவல் மொழிகள் மீது தேவையான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இ.ஐ.ஏ வரைவறிக்கையை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடுவதை, பொது ஆலோசனை செயல்முறைகளில் பங்கேற்பதில் இருந்து ஹிந்தி அல்லது ஆங்கிலம் பேசாத ஏராளமான இந்தியர்களை அத்தகைய கொள்கை விலக்கி வைத்திருக்கிறது என்ற அடிப்படையில், எதிர்த்த குடிமக்களால் இந்த விவாதத்திற்கான தூண்டுதல் உருவாகியுள்ளது.
அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் அந்த வரைவறிக்கையை வெளியிடுமாறு இரண்டு உயர் நீதிமன்றங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. சட்டத்தின்படி, எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் அந்த வரைவறிக்கையை வெளியிடத் தேவையில்லை என்று வாதிட்டது.
மொழிபெயர்ப்புகளின் போது சொற்கள் மழுங்கடிக்கப்பட்டு, அவை பெரும்பாலும் பொருளை இழந்து விடுவதன் விளைவாக சட்டரீதியாக தெளிவற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது என்ற கருத்து, அறிவிப்பை 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதை எதிர்ப்பதற்காக மத்திய அரசு முன்வைத்த மற்ற காரணங்களுக்குள் ஒன்றாக இருந்தது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் செய்யப்படுகின்ற மத்திய அரசின் அனைத்து சட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புகளை அங்கீகரிப்பதற்கான சட்ட நடைமுறையை, 1973ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்புகள் (மத்திய சட்டங்கள்) சட்டம் என்றழைக்கப்படுகின்ற மத்திய அரசு சட்டம் உருவாக்கித் தருகின்றது. அவ்வாறான சட்டம் இருக்கின்ற நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசு இவ்வாறு வாதிடுவது ஏற்கத்தக்கதாக இல்லை. மத்திய சட்டங்களின் கீழ் உருவாக்கப்படுகின்ற விதிகள் மற்றும் ஒப்படைக்கப்பட்ட சட்டங்களுக்கும் பொருந்துவதாக அந்தச் சட்டம் இருக்கிறது. சட்ட அமைச்சகத்தின் சட்டத்துறை தன்னுடைய இணையதளத்தின் மூலம் மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது.
மொழிபெயர்ப்புகளின் துல்லியம் குறித்திருக்கின்ற சந்தேகத்துடன், பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்காகப் பயன்படுத்துகின்ற மொழிகள் தொடர்பான மத்திய அரசின் கொள்கையும் கேள்விக்குரியதாக இருக்கிறது. சட்டங்களை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் குறிப்பிடுகிறது. விளைவாக, ஆங்கிலம், ஹிந்தி அல்லாத மொழி பேசுகின்ற குடிமக்கள், தங்களுடைய மொழி அடையாளத்தைக் கொண்டு மட்டுமே சட்டத்தை உருவாக்கும் பணியில் இருந்து மத்திய அரசால் விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
மொழி அரசியல்
சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய அரசியல் அடையாளத்தின் முக்கிய அடையாளமாக மொழி இருந்து வருகின்றது. இருந்தபோதிலும், இப்போதைய பிரச்சனை போதிய அரசியல் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி 56 நாள்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்குப் பிறகு, 1952ஆம் ஆண்டு பொட்டி ஸ்ரீராமுலு மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களால், 1956ஆம் ஆண்டில் மொழியின் அடிப்படையில் இந்திய மாநிலங்களைச் மறுசீரமைப்பது நடந்தது. அப்போதிருந்தே இந்திய அரசியலை வடிவமைப்பதில் மொழியானது முக்கிய பங்கை வகித்து வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிவசேனா போன்ற பல பிராந்திய அரசியல் கட்சிகளின் எழுச்சி மற்றும் வெற்றி இவ்வாறு மொழியின் அடிப்படையிலான பெருமையுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. சில சமயங்களில் மொழிப் பேரினவாதம், பிற மொழிச் சிறுபான்மையினருக்கு எதிராக கொதிப்படையக்கூடும். ஆக மொழி என்பது இந்திய அரசியல் அடையாளத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அடையாளமாக இருக்கிறது.
இந்திய அரசியலில் மொழிக்கான முக்கியத்துவம் இருந்த போதிலும், மொழியைச் சார்ந்து தங்களுடைய அரசியலை நடத்தி வருகின்ற முக்கிய அரசியல் கட்சிகள், மத்திய அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும்போது பயன்படுத்தப்படும் வகையில், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளும் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பாராளுமன்றத்தையோ அல்லது மத்திய அரசாங்கத்தையோ சமாதானப்படுத்துவதில் மிகுந்த பலவீனத்துடனும், போதாமையுடனுமே இருக்கின்றன.
அனைத்து மொழிகளையும் உள்ளடக்குகின்ற மொழிக் கொள்கையானது, குறைந்தபட்சம் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அமலாக்குதலுக்கான செயல்முறைகளுடன் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். அனைத்து நாடாளுமன்ற விவாதங்கள், அதனுடன் தொடர்புடைய பதிவுகள், பாராளுமன்றக் குழுக்களின் அறிக்கைகள், இந்திய அரசிதழின் முழுமையான பதிவுகள், மத்திய அரசின் அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒப்படைக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து 22 மொழிகளிலும் வெளியிடுவது கட்டாயம் என்பதாக அந்த மொழிக் கொள்கை இருக்க வேண்டும். அதே போன்று நாடு முழுவதும் உள்ள குடிமக்களுடன் புழங்கி வருகின்ற பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற மத்திய அரசு அலுவலகங்கள், குடிமக்களுக்கு தாங்கள் விரும்புகின்ற மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை வழங்கிட வேண்டும். இதுவரையிலும், ஆதார் டிஜிட்டல் அடையாள திட்டத்தை இயக்கி வருகின்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மட்டுமே, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர பிற மொழிகளிலும் குடிமக்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையில் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய மொழிக் கொள்கையைக் கொண்டதாக இருக்கிறது.
மொழிபெயர்ப்பு – சட்டப்பூர்வ உரிமையாக
சட்டங்களைப் பொறுத்தவரை, உள்ளூர் மொழியில் தங்களுக்குக் கிடைக்காத சட்டங்களுக்கு குடிமக்கள் கட்டுப்பட வேண்டியதில்லை என்று மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற பல வழக்குகளில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருப்பது நியாயமானதே. வெளியிடப்படாத மற்றும் விளம்பரப்படுத்தப்படாத சட்டங்களுக்கு குடிமக்கள் கட்டுப்படத் தேவையில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் (ஹார்லா எதிர் ராஜஸ்தான் மாநிலம், 1951) கடந்த காலத்தில் தீர்ப்பளித்துள்ளது. வழங்கப்பட்ட தீர்ப்பின் பகுதியில் ‘சட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அதை அறிவிக்க வேண்டும் அல்லது வெளியிட வேண்டும் என்ற இயற்கைநீதி அனைவருக்குமான தேவையாகும். அந்தச் சட்டம் என்னவென்று எல்லா மக்களுக்கும் அறிந்து கொள்ளும்படி, அடையாளம் காணக்கூடிய வகையில் தகவல்கள் பரப்பப்பட வேண்டும்; அல்லது, குறைந்தபட்சம், உரிய மற்றும் நியாயமான விடாமுயற்சிகளால் அத்தகைய அறிவை குடிமக்களால் பெற முடியும் என்ற வகையில், சிறப்பு விதிகள், ஒழுங்குமுறைகள், அல்லது வழக்கமான நடைமுறைகள் இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அனைத்து இந்தியர்களுக்கும் புரியும் மொழிகளில் தனது சட்டங்கள் கிடைப்பதற்கான வழிகளை பாராளுமன்றம் செய்யாவிட்டால், மத்திய அரசின் சட்டங்களுக்கு இந்தியர்கள் கட்டுப்படத் தேவையில்லை என்று வாதிடுவதற்கு, இவ்வாறான பகுத்தறிவை விரிவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை அதிகம் இருக்கப் போவதில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில்
மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் பொது பதிவுகள், எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் முயற்சிகள் தேவைப்படுகின்ற காரியமாக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்று, பல மொழி அதிகார வரம்புகளைக் கொண்ட இடங்களில், உறுப்பு நாடுகளின் 24 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கிடைக்கின்றன. தன்னுடைய உறுப்பு நாடுகளின் மொழிப் பன்முகத்தன்மையை மதிப்பதற்கான கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டினர் அனைவரும், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் 24 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொள்வதற்கும், அந்த நிறுவனங்கள் அதே மொழியில் திரும்பப் பதிலளிக்க வேண்டும் என்றும் அந்தக் கொள்கை குறிப்பிடுகிறது.
அதுபோன்றதொரு கொள்கை இந்திய அரசிடம் இல்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றது. இன்னும் அத்தகைய கொள்கையை முன்வைப்பதற்கு ஒன்றும் தாமதமாகி விடவில்லை என்றாலும், 1965ஆம் ஆண்டில் அலுவலக மொழிச் சட்டம் திருத்தப்பட்ட வேளையில், மத்திய அரசின் ஒரே அலுவல் மொழியாக ஹிந்தியை மாற்ற முயற்சிகள் நடந்த போது, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போன்ற அரசியல் கட்சிகள் அப்போது செய்ததைப் போல, இப்போதும் தேசிய அளவிலான பிரச்சனையாக மாற்றப்படாவிட்டால், அது நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.