உத்தரபிரதேசத்தில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக யோகி ஆதியாநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு எடுத்த சிறப்பு முன்னெடுப்புகள் தோராயமாக 85,000 மக்களை காப்பாற்றியதாக அவ்வரசுக்கு ஜூன் 26-ஆம் தேதி பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் உத்தரபிரதேசத்தின் மக்கள்தொகையினை ஒப்பிடுவதன் அடிப்படையில் மோடி தனது வாதத்தினை முன்வைத்தார். இந்த ஐரோப்பிய தேசங்களின் மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 24 கோடி. இதுவே உத்தரபிரதேச மாநிலத்தின் மக்கள்தொகையுமாகும். ஐரோப்பிய தேசங்களில் கோவிட்-19 தொடர்பான மரணங்கள் ஏறக்குறைய 1.30 லட்சமாக இருக்கையில் அத்தகைய மரணங்கள் இந்திய மாநிலத்தில் வெறும் 600 தான் என இந்த எண்களை மேற்கோள் காட்டி மோடி வாதிட்டார். இத்தகைய நிலைமையினை அரசாங்கம் ஏற்கனவே எதிர்பார்த்து அதனடிப்படையில் தனிமைபடுத்துதல் மற்றும் தனித்திருத்தல் வசதிகளை உருவாக்கியது, அதனால்தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக அவர் கூறினார். இந்த வாதத்தின் அடிப்படையில் நேரடியான அரசியல் லாபத்தினை உருவாக்கிக்கொண்டு, முந்தைய அரசாங்கத்தின் கீழ் இந்த நிலைமையானது வேறு மாதிரியாக இருந்திருக்கும், ஏனென்றால் அவர்கள் எதாவது சாக்குப்போக்கு சொல்லியிருப்பார்கள் எனவும் மோடி கூறினார். உள்ளூர் தொழில்முனைவோரை உயர்த்துவதற்கான ஒரு முன்னெடுப்பாக மாநில அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட “ஆத்ம நிர்பார் உத்தர்பிரதேஷ் ரோஜ்கர் யோஜனா” என்ற திட்டத்தினை அவர் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கையில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமின்றி, புள்ளி விவரம் அடிப்படையிலான பிரதமரின் இந்த ஒப்பீடு மற்றும் அதனடிப்படையிலான உறுதிப்பாடு என்பது ஈர்க்கக்கூடிய வகையிலான அறிமுகத்தினை கூடுதலாக சேர்க்கின்றது. இது உத்தரபிரதேச அரசாங்கத்தின் விளம்பர கட்டமைப்புகள் மற்றும் பி.ஜே.பி.யின் பிரச்சார பிரிவு மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் வழிநடத்தப்படும் இதர சங் பரிவார் அமைப்புகளால் பரவலாக பரப்பப்பட்டன. இந்த பிரச்சாரம் பெற்ற வீச்சானது, சங் பரிவாரத்தின் சில பகுதியினரின் மதிப்பீட்டில் கூட, வரம்பிற்குட்பட்டதாக இருந்தது. ”ஒப்பீட்டு விவரங்களின் அடிப்படையில் வலுவானதாக இருந்தாலும், இதன் அடிப்படையிலான பிரச்சாரத்தினை வெற்றிகரமான ஒன்றாக வரையறுக்க முடியாது” என லக்னோவைச் சேர்ந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளர் குறிப்பிட்டார்.
இந்த பெருந்தொற்று உருவாக்கிய பிரச்சனைகள் அநியாயமானதாக இருந்ததோடு மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசாங்கத்திடமிருந்து ஆக்கப்பூர்வமான தலையீடு எதனையும் காணவில்லை. பிரதமரால் தூக்கிப்பிடிக்கப்பட்ட இந்த ஒப்பீட்டு அனுகூலமானது ஏன் மக்களுக்கு எவ்வித ஆறுதலையும் கொண்டுவரவில்லை என்பதற்கு இதுதான் காரணம் என உத்தரபிரதேசத்தின் பெருநகரமான கான்பூரைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளாரான மஹேந்திரசிங் பிரண்ட்லைனிடம் தெரிவித்தார். ”மாறாக, யோகி ஆதித்யநாத் அரசாங்கமானது கோவிட்-19 மீட்பு நடவடிக்கைகளில் அதன் தவறுகள் மற்றும் போதாமைகளை மறைத்திடவே தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறது” எனவும் மஹேந்திரசிங் கூறினார்.
இந்த பின்னணியில் கான்பூரில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறார் இல்லத்தில் 57 பெண் குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய குறிப்பான மேற்கோளை மகேந்திரசிங் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வு ஜூன் 3-ஆவது வாரத்தில் ஒரு நான்கு நாட்களில் நிகழ்ந்தது. அதில் ஐந்து பெண் குழந்தைகள் கருத்தரித்திருந்தார்கள் என்கிற கண்டுபிடிப்பானது அதிலுள்ள மருத்துவ அபாயத்தினை மேலுல் சிக்கலாக்கியது. பாலியல் ரீதியில் சுரண்டப்பட்ட பெண்குழந்தைகளில் ஒருவர் HIV –யால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இன்னொருவருக்கு மஞ்சள்காமாலை இருந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. அந்த இல்லத்தின் பெண் ஊழியர் ஒருவரும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள 114 பெண் குழந்தைகள், மற்றும் 37 ஊழியர்கள் தனி கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். 10 வயதிலிருந்து 18 வயது வரையிலான அந்த இல்லத்தில் வசிப்பவர்கள் ஆக்ரா, எடா, கன்னூஜ், பைரோஜாபாத் மற்றும் கான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவர். பாலியல் மற்றும் கருத்தரிப்பு என்ற கோணத்தில் வெளிப்பட்ட இந்த நேர்வுகள், அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இதனை பெரிய அளவில் கொண்டு சென்றதையடுத்து மாநிலம் முழுவது உணர்வுகளைக் கிளப்பக்கூடியதாக மாறின. ஊடகச்செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில தலைமைச் செயலர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அது விரிவான அறிக்கையினை கோரிய வேளையில், அனைத்து குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தல் உள்ளிட்ட சுகாதார அம்சத்தினை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திட அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. ஒரு சுயேச்சையான அமைப்பின் மூலம் இந்த விஷயம் குறித்தான விசாரணைக்கு ஆணையிட எதிர்பார்ப்பதாக மனித உரிமை ஆணையம் கூறியது. இந்த விஷயத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் விசாரணையின் நிலை குறித்தான அறிக்கையினையும் ஆணையம் கோரியுள்ளது.

இந்த தலையீடுகளுக்குப் பிறகு என்ன நேர்ந்தது என்பதுதான் திடுக்குறச்செய்வதாக இருக்கிறது. கோவிட்-19 ஆபத்தான வகையில் பல்கிப்பெருகுவது மற்றும் சிறார் இல்லத்தில் நடந்த கொதித்தெழச்செய்கிற பாலியல் சுரண்டலில் தன்னை ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக்கொள்வதற்கு பதிலாக அரசங்கமானது இந்த சம்பவங்களை வெளியிட்டதற்காக ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களின் ஒரு பகுதியினருக்கு எதிராக பழிவாங்க திரும்பியது. பாதுகாப்பு இல்லம் பற்றிய தவறாக செய்தி பரப்பியதாக அடையாளம் தெரியாத ஒருவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அந்த இல்லம் பற்றி பொய்யான தகவல்கள் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற தளங்களில் பரப்பப்பட்டதாக அந்த முதல் தகவல் அறிக்கை வாதிட்டது. கருத்தரித்துள்ள பெண்களில் ஒருவர் HIV, இன்னொருவர் மஞ்சள்காமாலையால் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறியிருப்பதுதான் முதல் தகவல் அறிக்கையின் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பகுதியாக இருந்தது. சில ஊடக மற்றும் சமூக ஊடகங்களின் தலையீடானது அந்த இல்லத்தில் வசிப்பவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாகவும் அது கூறியது.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை யார் வெளிப்படுத்தினார்களோ அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய வேளையில், இந்த வெளிப்பாடு பற்றி தைரியமாக பேச வந்த எவரொருவரையும் தண்டிப்பதுதான் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையாக இருந்தது என இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி மகேந்திரசிங் கூறினார். ”அவசர அவசரமாக முதல் தகவல் அறிக்கை பதிந்தது, அதனையடுத்து ஊடக அமைப்புகள் மற்றும் நபர்களை குறிவைத்தது யாவும், இவை அனைத்தையும் மறைப்பதற்கான சூழச்சியாகும். சோதனை செய்தல் மற்றும் கோவிட்-19 தொற்று நபர்களை கண்டறிந்து வெளிப்படுத்தல் போன்றவற்றில் இதே போன்ற குழப்பமான எடுத்துக்காட்டுகள் மாநிலம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. இதே போன்று பெருமளவிலான உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக போதாமைகள் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல், சாதிய ரீதியிலான பாகுபாடு போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் யாவும் மறைக்கப்படவே கோரப்படுகின்றன. நான்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் உத்தரபிரதேசம் பற்றிய பிரதமரின் ஒப்பீடு மீதான மந்தமான எதிர்வினையாற்றலுக்கு இந்த சூழலும் பங்காற்றியிருக்கின்றன” என அவர் கூறினார். கோவிட்-19 பாதிப்பிற்குள்ளானவர்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை குறைத்து காட்டுவது மற்றும் அவற்றை விவாதிப்பதிலிருந்து மக்கள் மற்றும் ஊடகங்களை தந்திரமாக திசைதிருப்புவது போன்ற முயற்சிகள் இருப்பினும், ஜூன் 2020-ஆனது அதிகளவிலான நோய்த்தொற்றுகளை பதிவு செய்திருக்கிறது எனவும் அவர் கூறினார். இந்த தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து ஜூன் மாதம்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாதமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளை, பல வாரங்களாக கோவிட்-19 தொற்று அடிப்படையில் மாநிலங்களில் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உத்தரபிரதேசம் இருந்து வந்திருக்கிறது. நாட்டில் அதிக இறப்பு விகிதம் உள்ள 15 மாவட்டங்களில் நான்கு இங்கு உள்ளது : ஜான்சி, மீரட், எடா மற்றும் ஆக்ரா.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளதைப் போல இந்த மாவட்டங்களுக்கான புள்ளிவிவரங்கள் உவப்பற்றதாக இருக்கின்றன. ஜான்சி மாவட்டத்தில் ஒவ்வொரு 10 நோயாளிக்கும் ஒரு நோயாளி இறக்கின்றார். இது மீரட் மாவட்டத்தில் 11 நபருக்கு ஒருவர் என இருக்கின்றது. எடாவில் ஒவ்வொரு 14 நபருக்கும் ஒருவர் இறந்திருக்கிறார். லக்னோவைப் பொருத்தவரை நிலைமை மோசம் என்பதிலிருந்து படுமோசம் என்ற நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.
தொடர்ந்து தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதானது, 100 பகுதிகள் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளாக (Containment Zone) அறியப்பட்டிருப்பதில் கொண்டுவந்து விட்டிருக்கிறது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களாக இருப்பதாக சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தின் தொடக்கத்தில் லக்னோவில் மட்டும், காவல்துறை மற்றும் இதர பாதுகாப்பு ஊழியர்கள் மத்தியில் பாதிப்பிற்குள்ளான நபரகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆகும். இந்த தொற்று ஆரம்பித்ததிலிருந்து குறைந்தபட்சம் 4 காவலர்கள் இறந்துள்ளனர்.
பிரதமர் போன்ற தலைவர்கள் உத்தரபிரதேசத்தின் “வெற்றிக் கதை” பற்றி சொல்லிக்கொண்டிருக்க-சாதாரண மக்களைப் பற்றி சொல்ல வேண்டாம்-பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூட களத்தில் நிலைமை பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பது தெளிவு.
தமிழில் சுனந்தா சுரேஷ்
நன்றி: ஃப்ரண்ட்லைன்