சுகாதார பட்ஜெட்டின் மீதான நயவஞ்சக மோசடிகள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் | தமிழில்: ச.வீரமணிஉலக அளவில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவில் பொது சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையிலிருந்தது வெளிச்சத்திற்கு வந்தபின்னர், இதிலிருந்து சில படிப்பினைகளை அரசாங்கம் கற்றிருக்கக்கூடும் என்றுதான் ஒருவர் நினைத்திருப்பார். இந்தியாவின் பொது சுகாதார செலவினம் என்பது உலகில் மிகமிகக் குறைவான ஒன்றாகும். இது 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் அளவிற்கே இருந்தது. 1991இல் நவீன தாராளமயக் கொள்கைகள் பின்பற்றத் தொடங்கியபின்னர், மோடி அரசாங்கம் பொது சுகாதாரத்துறையை தனியாருக்குத் தாரை வார்த்திடும் வேலையை மிகவும் பெரிய அளவில் உந்தித் தள்ளியது. கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்திடும் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை அதீத கட்டணங்களை வசூலிக்கின்றன. கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதன் அடிப்படையிலேயே இவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் அரசாங்கத்தின் பொது சுகாதார நிறுவனங்களும் பெயரளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அரசாங்கம் போதிய நிதி ஒதுக்குவதில்லை, ஊழியர்கள், மருத்துவர்கள் பணியிடங்களை முழுமையான அளவில் நிரப்புவதில்லை, மொத்தத்தில் மிகவும் தரமற்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இங்கே சிகிச்சைக்கு வருவோர் மொத்த செலவினத்தில் 62 சதவீதம் அளவிற்கு சொந்தமாக செலவினைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீதான பெரும் சுமையாகும்.

நாட்டின் பொது சுகாதார அமைப்புமுறை இவ்வாறு சீர்கேடு அடைந்துள்ள நிலையில்தான் நாடு முன்னெப்போதும் இல்லாத கோவிட்-19 சவாலை எதிர்கொண்டது. இதனால் இதுவரையிலும் இந்தியா, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மரணம் உற்றோர் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், அரசு மருத்துவமனைகள் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளால் நிரம்பி வழிந்த சமயத்தில், அரசாங்கம் சுகாதார ஊழியர்களுக்கு சுய பாதுகாப்பு சாதனங்கள் (PPE equipments) போதுமான அளவிற்கு வழங்கப்படவில்லை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, கண்காணித்திடும் நடவடிக்கைகளை வலுவாக மேற்கொள்ளத் தவறிவிட்டது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இதுதான் நிலையாகும்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக வீழ்ச்சிய்டைந்துள்ள அதே சமயத்தில், ஐரோப்பாவில் இப்போது ஏற்பட்டுள்ளதுபோன்று இரண்டாவது அலை வீசக்கூடும் என்கிற ஐயுறவுகள் ஏற்பட்டிருக்கின்றன.நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறை இவ்வாறு மிக மோசமாக இருப்பதைச் சரி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது, கொரோனா வைரஸ் தொற்றை வலுவாகக் கட்டுப்படுத்திவிட்டதாக, சுய தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது., பொது சுகாதார அமைப்புமுறையைப் புறக்கணித்திருப்பதை அங்கீகரிக்க மறுத்திருப்பதும், அதனைச் சரி செய்யக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க மறுத்திருப்பதும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்திருக்கும் மத்திய பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவென்றால், இவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதே சமயத்தில், சுகாதாரத்திற்கும் மக்களின் நலத் திட்டங்களுக்கும் 13.7 சதவீதம் ஒதுக்கியிருப்பதாக வஞ்சமான முறையில் அறிவித்திருப்பதாகும். மக்களை ஏமாற்றும் வஞ்சகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

பட்ஜெட்டுடன் இணைத்து அளிக்கப்பட்டிருக்கிற விவரங்களை ஆராயுங்கால் இவர்களின் கூற்று, வெற்றுக்கூற்று என்பதை நன்கு காண முடியும். 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் சுகாதாரத்திற்கு 69,234 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீடு என்பது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மத்திய ‘ஆயுஷ்’ மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறை ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். இந்தத் துறைகளின் கீழ் திருத்திய மதிப்பீடுகளின்படி 2020-21ஆம் ஆண்டுக்கான உண்மையான செலவினம் 85,250 கோடி ரூபாய்களாகும். ஆனால் 2020-21க்கான நடப்பு பட்ஜெட் மதிப்பீட்டின்படி இந்தத் துறைகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 76,902 கோடி ரூபாய்களாகும். இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால், சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகை என்பது சென்ற ஆண்டு செலவு செய்ததைவிட இந்த ஆண்டு 11 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதேயாகும்.

“சுகாதாரம் மற்றும் மக்கள் நலன்” (“Health and well being”) ஆகியவற்றுக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 2,23,846 கோடி ரூபாய்கள் என்கிற மொத்த இலக்கத்தை நுணுகி ஆராயுங்கால், அரசாங்கம் எவ்வளவு சாதுரியமாக இதனைக் கையாண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ‘ஆயுஷ்’ மற்றும் சுகாதார ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளுக்கு அப்பால், குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதேபோன்றே தண்ணீர் மற்றும் துப்புரவுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாயும், ஊட்டச் சத்துக்கு 2,700 கோடி ரூபாயும் நிதிக் கமிஷன் மான்யத்தொகையாகும். (இது சென்ற ஆண்டைவிட 30 சதவீதம் குறைவாகும்.)

மேலும், நிதிக் கமிஷன் சுகாதாரத்திற்கு 13,192 கோடி ரூபாயும், தடுப்பூசிகளுக்காக ஒரே சமயத்தில் செலவு செய்வதற்கான ஒதுக்கீடாக (one time allocation) 35 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தத் தொகை, நாட்டிலுள்ள 70 கோடி மக்களுக்கான தடுப்பூசிகளுக்கான கட்டணத்தொகையாகும். இதைக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து, பாதுகாத்து வைத்தல் மற்றும் இதர செலவினங்கள் இத்துடன் சேர்க்கப்படவில்லை. இவற்றை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் கட்டணங்களையும் சேர்த்தோமானால், அநேகமாக இதன் மூலம் 40 கோடி மக்களுக்கே இதனை எடுத்துச் செல்ல முடியும். இதற்கான செலவினங்களை மாநில அரசுகளுடன் எங்ஙனம் பகிர்ந்துகொள்ளலாம் என்பது தொடர்பாக அரசாங்கம் எதுவும் கூறாமல் கமுக்கமாக இருக்கிறது. எவ்விதத்தில் பார்த்தாலும், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசாங்கம் நாட்டிலுள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகளை அளித்திடத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது.பட்ஜெட்டில் சுகாதாரத் துறையில் மற்றுமொரு புதிய அம்சம், மத்திய அரசாங்கத்தின் சார்பில் புதியதாக ஒரு திட்டம் ‘ஆத்ம நிர்பார் ஸ்வஸ்த்ய பாரத் யோஜனா’ (‘சுய சார்பு சுகாதார இந்தியா திட்டம்’) (‘Atma Nirbhar Swasthya Bharat Yojana’) என்னும் பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருப்பதாகும். இதற்கு 64,180 கோடி ரூபாய்கள் செலவாகும் என்றும், இந்தத்தொகை அடுத்த ஆறு ஆண்டு காலத்திற்கானது என்றும் மற்றும் தேசிய சுகாதார மிஷன் துறைக்குமானது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம், ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புமுறைகளை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. மேலும் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கூடங்கள் மற்றும் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. எனினும், இந்தத் திட்டத்திற்கென்று பட்ஜெட்டில் எங்கேயும் எவ்விதமான ஒதுக்கீடும் இல்லை. இவ்வாறு இது வெறும் வெற்று அறிவிப்பு மட்டுமேயாகும். குறைந்தபட்சம் இந்த ஆண்டிலாவது இது அமல்படுத்தப்படுவதற்கு எவ்வித வழிவகைகளையும் மேற்கொண்டிடவில்லை.

பொது சுகாதாரம் குறித்து அரசின் முரட்டுத்தனமான அணுகுமுறையை இவ்வாறு பரிசீலிக்கும்போது, அரசாங்கமானது அனைத்து நோய்களுக்கும் பரிகாரம் தனியார் மயமே என்று ஆழமான முறையில் நம்பிக்கொண்டிருப்பது நன்கு தெரிகிறது. இந்தக் கண்ணோட்டம் ஒட்டுமொத்த பட்ஜெட்டிலும் வியாபித்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களையும், நிதி நிறுவனங்களையும் மிகப் பெரிய அளவில் தனியாரிடம் தாரைவார்த்திட முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான பொது செலவினத்தை 1 சதவீதத்திலிருந்து 2.5-3 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கத்தின் சுகாதார பட்ஜெட் ஒதுக்கீடுகள் இதற்கு முற்றிலும் நேரெதிரான நிலையில், படுபிற்போக்குத்தனமான முறையில் அமைந்திருக்கின்றன.

மத்திய அரசாங்கத்தின் இத்தகைய நயவஞ்சக நடவடிக்கைகள், பொது சுகாதாரத்தை ஒரு மக்களின் பிரச்சனையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அனைத்து ஜனநாயக அரசியல் சக்திகளும் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சிநிரலில், பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறது.

(பிப்ரவரி 3, 2021)

(தமிழில்: ச.வீரமணி)