சமகாலத்தின் மோசமான உலகளாவிய தொற்றுநோயாக கோவிட்-19 கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், உலகெங்கிலும் மிக வேகமாகப் பரவிவருவதுதான் இந்த அச்சத்துக்குக் காரணம். அதனால்தான் உலக சுகாதார அமைப்பு, கரோனாவை உலகளாவிய தொற்றுநோய் (pandemic) என அறிவித்துள்ளது.

உலகில் இதுவரை பத்து நோய்கள் உலகளாவிய தொற்றுநோய்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

1. எச்.ஐ.வி./எய்ட்ஸ் (பொ.ஆ. 2005-2012 உச்ச காலம்)

2. ஃபுளு பான்டெமிக் (பொ.ஆ. 1968)

3. ஆசிய ஃபுளு (பொ.ஆ. 1957)

4. ஃபுளு உலகளாவிய தொற்றுநோய்

(ஸ்பானிய ஃபுளு) (பொ.ஆ. 1918)

5. ஆறாவது காலரா உலகளாவிய

தொற்றுநோய் (பொ.ஆ.1910–1923)

6. ஃபுளு உலகளாவிய தொற்றுநோய் (பொ.ஆ. 1889-1890)

7. மூன்றாவது காலரா உலகளாவிய

தொற்றுநோய் (பொ.ஆ.1852-1860)

8. பூபானிக் பிளேக் (பொ.ஆ.1346-353)

9. ஜஸ்டினியன் பிளேக் (பொ.ஆ. 541-542)

10. அன்டோனைன் பிளேக் (பொ.ஆ. 165)

இந்த உலகளாவிய தொற்றுநோய்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். ஆனால், இவற்றைக் காட்டிலும் சுமார் நான்கு நூற்றாண்டு களாக உலக மக்களைப் பாதித்தக் கொடிய கொள்ளைநோய் (epidemic) பெரியம்மை ஆகும் (smallpox). ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவாகப் பரவி, சில நூற்றாண்டுகளில் உலகின் கோடிக்கணக்கானவர்களின் மரணத்துக் கும் பார்வை பறிபோனதற்கும் பெரியம்மை எனும் கொடிய நோய் காரணமாக இருந்தது. பெரியம்மையின் தோற்றமும், பின்னர் அது அறிவியல்பூர்வமாக ஒழிக்கப்பட்ட விதமும், இன்றைய சூழலில் அவசியம் அறிய வேண்டிய வரலாறு!

பெரியம்மையின் தோற்றம்

History of Smallpox | Smallpox | CDC

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, பெரியம்மை நோய் எகிப்தில் தோன்றியதாகக் கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள லிதுவேனியாவில் 2016-ல் கிடைத்த ஒரு குழந்தையின் பதப்படுத்தப்பட்ட சடலம் (மம்மி) இந்தக் கருத்தைப் புரட்டிப்போட்டது. பெரியம்மை நோய்க்குக் காரணமான வரியோலா (variola) எனும் வைரஸ், அந்தக் குழந்தையின் சடலத்தில் இருந்தது. அந்த வைரஸ் மாதிரிகள் கனடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அவை பெரியம்மை வைரஸ் என்று தெரியவந்தது. அந்த வைரஸின் டி.என்.ஏ. மூலத்தை ஆராய்ந்ததில், அதன் மூதாதை பொ.ஆ. 1530 – 1654 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பொதுக் காலத்தில் (common era) தோன்றியுள்ளதாகத் தெரிகிறது; எனவே, பெரியம்மையின் தொடக்கம் சில நூற்றாண்டுகளுக்குமுன் நிகழ்ந்ததுதான்.

ஐரோப்பாவில் முதலில் பரவிய பெரியம்மை, பின்னர் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கம் காரணமாக பல நாடுகளுக்கும் பரவியது. வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டும் பொ.ஆ. 16,17-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 90 சதவீத செவ்விந்தியர்கள் பெரியம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களுக்குப் பலியாகினர். இதை ஜாரெட் டயமண்ட் தனது ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ நூலில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.

பெரியம்மையின் பாதிப்புகள்

File:Contagious and infectious disease- measures for their ...

உலகில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பெரியம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக எட்டு லட்சம் பேர்வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில், சுமார் முப்பது முதல் ஐம்பது கோடி பேர் மாண்டனர். 1950-களின் தொடக்கத்தில் ஐந்து கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் 1868 தொடங்கி 1907 வரை சுமார் 47 லட்சம் பேர் பெரியம்மைக்குப் பலியானார்கள். 1926 முதல் 1930 வரை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பதிவுசெய்யப்பட்ட 9,79,738 பேரில் 42.3 சதவீதத்தினர் மரணத்தைத் தழுவினார்கள்.

பொதுவாக, பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் முப்பது சதவீதத்தினர் பலியாகினர். மற்றொரு முப்பது சதவீதத்தினருக்குப் பார்வை பறிபோயிற்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முகத்தில் ஆழமான அம்மை வடுக்கள் உருவாகின. இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு முதலில் உள்வாயிலும் தொண்டைக்குள்ளும் கொப்புளங்கள் தோன்றும்; பிறகு பதினைந்து நாட்களில் உடலெங்கும் பரவும். நோயாளிக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படும். கொப்புளங்கள் உடைந்து அதிலிருந்து சீழ் வடியும். நோயாளியின் அருகில் செல்பவர்கள், இதனால் பாதிக்கப்படுவார்கள். இதன் கிருமிகள் காற்றிலும் பரவும்.

பெரியம்மைக்குக் காரணம் அறியாத மக்கள், இந்த நோயிலிருந்து தங்களைக் காப்பாற்ற கடவுளை வேண்டினார்கள். அம்மை நோயிலிருந்து, சீதள்மாதா என்ற கடவுள் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கை வடஇந்தியாவில் நிலவுகிறது; தமிழ்நாட்டில் மாரியம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

ஜென்னரின் வருகை

இங்கிலாந்தின் பெர்க்லி நகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர், எட்வர்ட் ஜென்னர். ஒருமுறை சாரா நெம்ஸ் என்ற பால்காரப் பெண்ணின் கையில் அம்மைக் கொப்பளங்கள் இருப்பதை ஜென்னர் பார்த்தார். ஆனால், அப்பெண்ணின் உடலில் வேறெங்கும் கொப்பளங்கள் இல்லை; அவருடைய கையில் இருந்ததைப் போன்ற கொப்பளங்கள் பால் சுரக்கும் மாட்டின் மடியிலும் இருப்பதை ஜென்னர் கவனித்தார். மாடுகளுக்கு ஏற்படும் இந்த அம்மை (Cow Pox), சாராவின் கைகளுக்குப் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்.

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் ...

பசு அம்மையால் மனிதர்களுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை என்றால், இரண்டுக்கும் நிச்சயமாக ஏதோ தொடர்பு இருக்கும் என்று அவர் கணித்தார். சாராவின் கொப்பளங்களின் சீழ், பிறருடைய உடலில் செலுத்தப்பட்டால் பெரியம்மை நோய்க்கான எதிர்ப்பாற்றலை அது உருவாக்குமா என்று பரிசோதிக்க முடிவுசெய்தார். அதற்காக சாராவின் கையில் உள்ள கொப்பளத்தின் சீழில் இருந்து ஒரு சிறு துளியை ஜேம்ஸ் பிப்ஸ் எனும் ஒன்பது வயதுச் சிறுவனின் கையில் செலுத்தினார்.

சில நாட்கள் கழிந்தபின் முன்னைவிடச் சற்று அதிகமான அளவில் மறுபடியும் அந்தச் சிறுவன் கையில் சீழைச் செலுத்தினார். ஆனால் இந்த முறை செலுத்தப்பட்டது பெரியம்மை நோய்க் கொப்பளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது நிச்சயம் ஒரு நெறியற்ற பரிசோதனைதான். ஆனால், ஜென்னரே ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்தச் சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை; தன் மகன் மீதும் இதே பரிசோதனையைத் ஜென்னர் செய்து பார்த்தார், அவனையும் அம்மை தாக்கவில்லை!

ஜென்னரின் கண்டுபிடிப்பு மனிதகுலம் ஒரு பெரும் நோயிலிருந்து விடுபடுவதற்கான விடியலைத் தொடங்கிவைத்தது. ஜென்னர் தனது கண்டுபிடிப்பிற்கு ‘வாக்சின்’ (Vaccine) எனப் பெயரிட்டார். ‘வாக்சா’ என்றால் லத்தீன் மொழியில் பசு என்று பொருள். தனது பரிசோதனையின் ஆய்வறிக்கையை லண்டன் ராயல் சொசைட்டியில் 1797-ல் ஜென்னர் சமர்ப்பித்தார். ஆனால், போதுமான சான்றுகள் இல்லை என்று அவருடைய ஆய்வறிக்கை நிராகரிக்கப்பட்டது

ஒரு நோயுற்ற விலங்கிலிருந்து மனித உடலுக்குள் அதன் சீழைச் செலுத்துவது கேலிக்குரியதாகவும் மதகுருமார்களால் கடவுளுக்கு எதிரான செயலாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், ஜென்னரின் தடுப்பூசிக்கு வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மக்களிடம் பயமும் தயக்கமும் நிலவியது.

தடுப்புமருந்து பயம்

19-ம் நூற்றாண்டில் ‘சென்னை இலௌகிக சங்கம்’ (Madras Secular Society) எனும் அமைப்பு செயல்பட்டது. நாத்திக, பகுத்தறிவுக் கருத்துக்களை அந்த அமைப்பு பரப்பிவந்தது. ஆனால், பெரியம்மைத் தடுப்பூசிக்கு எதிரான கருத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்:

“பலாத்காரமாய் வைத்தியம் செய்தல், அவ்வளவு சரியில்லை என்பதை இப்பகுதி மூலம் அறியலாம் . . . பசு முதலிய சில மிருகாதிகளுக்கும் வியாதியுண்டு. இதையுந்துணிதல் அசாத்தியம். இத்தகைய கெட்ட ரத்தமுள்ள தேகிகளிடமிருந்தெடுக்கும் பாலைப் பரிசுத்த குழந்தைகளிடம் புகட்டினால், இந்தக் கெட்ட ரத்தம், ஒர் துளி மோரானது பானை நிறைந்த பாலையெல்லாம் எப்படித் தன்மயமாக்கிவிடுகிறதோ, அப்படிக் குழந்தைகளுடைய பரிசுத்தமாகிய ரத்தத்தைப் பாழாக்கி யவைகளை வியாதிக்குள்ளாக்குமென்பதிற் சந்தேகமுண்டோ? ஆதலால் அரசாங்கத்தார் இதைப் பற்றி யாதொரு கிருஷையும் எடுத்துக்கொள்ளாமல் அவ்வவர் மனம் போல விட்டுவிடுவதே நலமென்று தோன்றுகிறது” (சென்னை இலௌகிக சங்கம், தொகுப்பு: வீ.அரசு, பக்.446-447, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).

Atheists of Madras - Frontline

அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய கருத்தையும் அச்சத்தையும் இலௌகிக சங்கம் பிரதிபலித்துள்ளது. 20-ம் நூற்றாண்டிலும் மக்கள் தடுப்பூசிக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள். தடுப்பூசிக்கு எதிரான இத்தகைய மனநிலை இந்தியாவில் நோயெதிர்ப்பு ஆற்றலின்றி ஏராளமான மக்கள் பலியானதற்கு ஒரு காரணம் என்பதும் உண்மை.

முதன்முதலாக பவேரியாதான் (முன்பு தனி நாடாக இருந்த இந்தப் பகுதி, தற்போது ஜெர்மனியின் ஒரு மாநிலம்) தடுப்பூசியைக் கட்டாயமாக்கியது; தொடர்ந்து 1810-ல் டென்மார்க் கட்டாயமாக்கியது. ஐரோப்பாவில் ஜென்னரின் தடுப்புமருந்து பிரபலமடைந்தது. அமெரிக்க அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன், ஜென்னரின் கண்டுபிடிப்பை மனித குலத்துக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவை என்று புகழ்ந்து பேசினார்.

பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்புமருந்து மேம்படுத்தப்பட்டு, அம்மை முற்றும் ஒழிக்கப்பட்டது என உலக சுகாதார அமைப்பு 1980-ல் அறிவித்தது. 1980-க்குப் பிறகு, பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் பெரியம்மைக்கான தடுப்பூசி போடப்படுவதில்லை. திரையரங்குகளில் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரையிலும் பெரியம்மை நோயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசின் விளம்பர அறிவிப்பு ஒளிபரப்பப்படும்; யாரும் அந்தப் பரிசைப் பெற முடியவில்லை என்பதே உண்மை!

தவறான நம்பிக்கைகள்

தடுப்புமருந்து மூலம் பெரியம்மை உலகிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டது நிதர்சனம்; சொட்டு மருந்து மூலம், இந்தியா உட்பட உலகின் பெரும் பகுதிகளில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு வகையான வைரஸ் வகைகளின் மூலம் உருவாகும் நோய்களுக்கு எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் வகைகளின் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள விரைவில் தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயன்றுவருகிறார்கள். இவ்வளவு அறிவியல் நிரூபணங்கள் இருந்தும் தடுப்புமருந்துகளுக்கு எதிரான பல தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்ள ஒரு பரவலான அறிவியல் பிரச்சாரம் தேவை.

எதிர்காலச் சிக்கல்கள்

அப்படியென்றால் பெரியம்மை அபாயம் உண்மையிலேயே நீங்கிவிட்டதா? இப்போதைய பதில், ஆம் என்பதுதான். ஆனால் எதிர்காலத்தில் அது மீண்டும் தோன்றுமா என்பதற்கான பதிலை காலம்தான் தீர்மானிக்க முடியும். இதில் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பது உண்மை. அது என்ன?

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பெரியம்மைத் தொற்றால் இறந்தவர்கள் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். 1890-ம் ஆண்டில் இந்த வைரஸ் சைபீரியப் பகுதி மக்களை மிகப்பெரிய அளவில் தாக்கியது. இதில் ஒரு நகரத்தில் மட்டும் நாற்பது சதவீத மக்கள் மாண்டுபோனார்கள். அவர்களுடைய சடலங்கள் நிலத்தடி உறைபனிப் பகுதியின் மேல்புறத்தில் உள்ள கல்லறைகளில் புதைக்கப்பட்டன. இந்தப் பகுதி கொல்யாமா எனும் இடத்தின் நதிக்கரையில் அமைந்துள்ளது.

In the 1700s Smallpox Scars Were Actually Sometimes Desirable …

நூற்றி இருபது ஆண்டுகளுக்குப் பின் கொல்யாமாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதன் நதிக்கரைகள் உடைந்தன. 1990ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் பெரியம்மை நோய்த் தாக்குதலால் ஏற்பட்ட அம்மை வடுக்கள் காணப்பட்டன. ஆனால் அந்தச் சடலங்களில் பெரியம்மைக்குக் காரணமான வைரஸ் வகைகள் கிடைக்கவில்லை என்றபோதிலும், அவற்றில் அந்த வைரஸ் வகைகளின் டி.என்.ஏ. மூலக்கூறின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.

இதேபோல் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் பனிப்பகுதிக் கலைமான் ஒன்று இறந்துபோனது. பின்னர் உறைந்துபோன அதன் உடல் கிடைத்தது. அது இறந்ததற்கு ஆந்த்ராக்ஸ் வைரஸ் காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்மூலம் அந்தப் பகுதி நீரிலும் நிலத்திலும் வைரஸ் பரவியது. பிறகு அங்கே வளர்ந்துள்ள புற்களிலும் வைரஸ் பரவியது. இந்தப் புற்களை மேய்ந்த சுமார் 2,000 கலைமான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. ஒரு சில மனிதர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.

இதுபோல் ஏராளமான வைரஸ் வகைகள் நிலத்தடி உறைபனியில் உறைந்து கிடக்க வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும் ஆர்க்டிக் பகுதியில் அந்த பெர்மாஃப்ராஸ்ட் எனும் நிலப்பகுதியின் பனி, இப்போது பூமியின் வெப்பநிலை உயர்ந்து வரும் காரணத்தால் உருகிக்கொண்டிருக்கிறது. இது மேலும் உருகும்போது வெளிவரும் மீத்தேன் வாயுவும், இறந்துபோன உயிரினங்களின் புதைபடிவங்களிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவும் பூமியை மேலும் சூடாக்கும். ஒருபுறம் பெரியம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லிக் கிருமிகள், மற்றொருபுறம் உயர்ந்துவரும் பூமியின் வெப்பநிலை.

உண்மையில் இவை அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் பயங்கரமான அம்சங்கள்தான். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. உறைபனியில் உறைந்து கிடப்பதைப் போன்று கிடக்கும் நம் உலக சமூகம் என்றைக்கு விழித்துக்கொள்ளும்?

கட்டுரையாளர் தொடர்புக்கு: [email protected]

நன்றி: தமிழ் இந்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *