உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷன், நீதிமன்றத்தை அவமதித்ததாக, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வாயம், தண்டனை அளித்திருப்பது, உச்சநீதிமன்றத்தின் சித்திரத்தையே தரம் தாழ்த்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பானது, நாட்டில் உச்ச அளவில் இயங்கிடும் நீதிமன்றம், தன்னை விமர்சிப்பவர்களிடம் சகிப்பின்மையுடன் இருப்பதையும், தங்களுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டப்பிரிவைப் பயன்படுத்திடக்கூடிய விதத்திலும் மோசமான முறையில் மாறியிருப்பதைக் காட்டுகிறது.
உச்சநீதிமன்றத்தால் அவதூறாகக் கருதப்பட்ட பிரசாந்த் பூஷனின் இரு ட்விட்டர் பதிவுகளையும் பார்ப்போர் எவரும் அத்தகைய முடிவுக்கு வர மாட்டார்கள். சமீப காலங்களில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் மற்றும் அம்சங்கள் குறித்தும் முன்னாள் நீதிபதிகள் பலர் எண்ணற்ற விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் செய்திருக்கிறார்கள். இவ்வாறு கூறியதன் மூலம் நீதிமன்றத்திற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டதாக இவர்களில் எவர்மீதும் வழக்கு தொடுக்கப்பட்டதா? இவர்களுக்கு எதிராக எவ்விதமான வழக்கும் தொடுக்கப்படவில்லை என்றால், இப்போது பிரசாந்த் பூஷனுக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வாறு இரண்டக நிலை?
உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளின் அமர்வாயம் பூஷனுக்கு எதிராக தண்டனை விவரங்களை இன்னமும் பகரவில்லை. பிரசாந்த் பூஷன் மீதான தண்டனைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, உச்சநீதிமன்றம் பூஷனை மன்னிப்பு கோரவும் அதன்மூலம் விஷயத்தை முடித்துக்கொள்ளவும் கேட்டுக்கொண்டது. பிரசாந்த் பூஷன், தன்னுடைய பதிவு நேர்மையான விமர்சனம் என்று தான் நம்புவதால் அவ்வாறு மன்னிப்பு கோர முடியாது என்று கூறி மறுத்திருப்பதால், உச்சநீதிமன்றம் எப்படித் தீர்ப்பு அளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் தண்டனை, தனித்துப் பார்க்கப்படக் கூடாது. சமீப ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் அது நீதி வழங்கிவரும் முறை ஆகியவற்றால் எழுந்துள்ள எண்ணற்ற சங்கடத்திற்குரிய போக்குகளில் இது ஒரு பகுதியாகும். சமீபகாலங்களில் நாளுக்கு நாள், உச்சநீதிமன்றம், அரசமைப்புச்சட்டம் குடிமக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளை உயர்த்திப்பிடித்திடுவதற்குக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, ஆட்சியாளர்களின் நீதிமன்றமாக மாறியிருப்பதாகவே தோன்றுகிறது.
நீதிமன்றத்தின் செயல்பாட்டை நுணுகி ஆராயும்போது அது, ஆட்சியாளர்களின் நலன்களுக்கு ஒத்துப்போவதையும், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் வரும் பிரச்சனைகள் மீதும், ஆட்சியாளர்களின் மிகை நடவடிக்கைகள் மீதும் தீர்ப்பு எதுவும் கூறாமல் தவிர்ப்பதையும், நீதிமன்றத் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்வதில் நீதித்துறையின் நெறிமுறைகளையே மீறுவதையும் மற்றும் தன்னுடைய நடவடிக்கைகள் எதற்கும் பொறுப்பேற்க மறுப்பதையும் (lack of accountability) பார்க்க முடிகிறது.
கடந்த ஓராண்டில் இந்தப் போக்குகள் மிகவும் பட்டவர்த்தனமாகவே மாறியிருக்கின்றன. இதற்கு மிகவும் சரியான எடுத்துக்காட்டு, ஜம்மு-காஷ்மீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அவை அரசமைப்புச்சட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி மற்றும் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் எப்படி நீதிமன்றத்தால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே உச்ச நீதிமன்றத்தின் போக்கைத் தெரிந்துகொள்ள முடியும். உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும், மேற்படி மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது குறித்த மனுக்கள் மீதும் இதுவரை விசாரணையை மேற்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றம், கடந்த ஓராண்டு காலமாக ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு 4ஜி நெட்வொர்க் அலைவரிசை அளிக்கப்படாமல் பறிக்கப்பட்டிருக்கும் விவகாரத்திலும் அம்மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடுவதில் தவறியிருக்கிறது. நீதிமன்றம், அரசாங்கத்திடம் விதிக்கப்பட்டுள்ள தடையை மறு ஆய்வு செய்திடுமாறு கேட்டுக்கொண்டிருப்பதுடன் தன் பொறுப்பை முடித்துக் கொண்டுவிட்டது.
மக்களைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதன் மீது ஆட்கொணர் மனுக்கள் (habeas corpus petitions) தாக்கல் செய்யப்படுகையில், உச்சநீதிமன்றம் குடிமக்களின் சுதந்திரமாக செயல்படும் உரிமை பறிக்கப்பட்டிருப்பதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று கோரும் பொறுப்பையே தட்டிக்கழித்துவிட்டது.
சமீபத்தில் ஒரு வினோதமான நிகழ்வு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் வீட்டிற்கு வெளியே செல்வதற்கு சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அரசுத்தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு அரசுத்தரப்பில் கூறப்பட்ட அன்றைய தினமே, மாலையில் ஊடகங்களில் அவர் வெளிவரமுடியாமல் வீட்டிலேயே அடைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. எனினும், இவ்வாறு தவறான தகவலை நீதிமன்றத்திற்கு அளித்ததற்காக அரசாங்கத்தின்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொண்டுவர வேண்டும் என்பதுபோன்ற நடவடிக்கை எதையும் நீதிமன்றம் எடுத்திடவில்லை.
கொரானா வைரஸ் தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை சம்பந்தமான வழக்குகளை, உச்சநீதிமன்றம் முதலில் தலையிடவே மறுத்துவிட்டது. மாறாக நீதிமன்றத்திற்கும் மனித உரிமைகளுக்கும் இடையேயான தூரத்தைக் காட்டும் விதத்தில் விமர்சனங்கள் வேறு. உண்மையில் இதுபோன்ற பிரச்சனைகள்மீது உச்சநீதிமன்றத்தைவிட பல உயர்நீதிமன்றங்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து இரக்கத்துடன் நடந்துகொண்டிருக்கின்றன.
நாட்டில் ஜனநாயகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய தேர்தல் நிதி பத்திரங்களுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. எனினும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இன்றைய ஆட்சியாளர்களுக்கு உதவுவதற்காக, நீதித்துறை எவ்வாறெல்லாம் ஏய்த்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டாகும்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், நீதிமன்றம் “முன்னுரிமை” வழக்குகளை (“prioritise” cases) மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தது. ஆயினும் நீதிமன்றம், அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதையோ, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதையோ, தேர்தல் நிதி பத்திரங்கள் பிரச்சனையையோ “முன்னுரிமைகளாக”க் கருதிட முன்வரவில்லை.
முன்னதாக, ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக இருந்த சமயத்தில் அவர் தலைமையிலான அமர்வாயம், அயோத்தி தாவாவில் தீர்ப்பு வழங்குவதற்காக தொடர்ந்து நாற்பது நாட்கள் நாள்தோறும் விசாரணையை மேற்கொண்டது. பின்னர் அது பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆளும் கட்சியால் அளிக்கப்பட்ட உறுதிமொழியுடன் ஒத்துப்போகக்கூடிய விதத்தில் தீர்ப்பினை அளித்தது. எனினும், இதற்கு முற்றிலும் முரணான விதத்தில், சபரிமலைக் கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதித்த ஐந்து நீதிபதிகள் அமர்வாயத்தின் தீர்ப்பு, தன்முன் மறுவிசாரணைக்கு வந்தபோது, அமர்வாயம் விசித்திரமான முறையில் நிலை எடுத்தது. மறுஆய்வு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் அதிக அளவிலான நீதிபதிகள் கொண்ட அமர்வாயத்திற்கு அனுப்பி இருக்கிறது. அது, அமர்வாயத்தின் அதிகாரவரம்புக்குள் வராத சட்டப்பிரச்சனைகள் சிலவற்றையும் ஆய்வு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பின்னர், தலைமை நீதிபதி, இப்பிரச்சனைகள் மீது விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்காக ஒன்பது பேர் கொண்ட அமர்வாயத்தை அமைத்தார். இவ்வாறாக உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டிலுள்ள சட்டங்கள் மற்றும் அரசமைப்புச்சட்டம் என்ன சொல்கின்றன என்பதைவிட, ஆட்சியாளர்களின் “மத நம்பிக்கை” (“Faith”) என்ன சொல்கிறது என்பதற்கு முன்னுரிமை கொடுத்தே இருந்து வந்திருக்கின்றன.
மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள்தான் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளில் இத்தகைய ஆரோக்கியமற்ற போக்குகள் அதிகரித்திருப்பதற்குப் பிரதான காரணங்களாகும். உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமனம் செய்வதில் அது அப்பட்டமாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இது, உச்சநீதிமன்றத்தில் கொலிஜியத்தால், கோபால் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டதை நிறுத்தியதிலிருந்தே தொடங்கிவிட்டது. பின்னர் அரசாங்கம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் மாற்றல்களிலும் செல்வாக்கை செலுத்திக்கொண்டிருக்கிறது.
நீதிபதி சதாசிவம், கேரள ஆளுநராக நியமனம் மற்றும் நீதிபதி கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் போன்று தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்ட ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளுக்கு சலுகைகள் அளித்துக்கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்களின் தேவைகளுக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லக்கூடிய விதத்தில் அச்சுறுத்தி அடக்கிவைக்கப்பட்டுள்ள நீதித்துறை ஓர் ஆபத்தான நிகழ்ச்சிப்போக்காகும். நீதித்துறையின் பங்கு, நாட்டின் சட்டங்களையும், அரசமைப்புச்சட்டத்தின் நெறிமுறைகளையும் அரசாங்கம் மீறுகின்றபோதும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட அது தவறும்போதும் அதனைப் பொறுப்பாக்க வேண்டும். நீதித்துறையின் ஒருமைப்பாடும் சுதந்திரமும் அரிக்கப்பட்டிருப்பதென்பது, மோடியின் எதேச்சாதிகார ஆட்சியின் நேரடி வெளிப்பாடாகும்.
இப்போது, ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்குரைஞர் சங்கங்களைச் சேர்ந்த சட்டரீதியாக செயல்படுவோர், உச்சநீதிமன்றத்தின் இத்தகைய போக்குகள் குறித்து கேள்விகேட்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
பிரசாந்த் பூஷனின் மீதான தண்டனைக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிகளும் அதற்கு விரிவான அளவில் கிடைத்துவரும் ஆதரவும், உச்சநீதிமன்றத்தை மீண்டும் சரியான திசைவழியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்பதையே காட்டுகின்றன.
(ஆகஸ்ட் 26, 2020)
(தமிழில்: ச.வீரமணி)