ராஜலிங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் சீனியர் மேனேஜர். மிகவும் நல்ல குணம் கொண்ட, பரோபகாரி. பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாளர். குழந்தை குட்டி ஏதும் இல்லை. உலகமே தன் சுற்றம் என நேசிக்கும் அன்புள்ளம் கொண்டவர். வேலையில் சுறுசுறுப்பு, சக ஊழியர்களுடன் நேசபாவம், கடைநிலை சிப்பந்திகளுக்கு உதவும் மனப்பான்மை ஆகிய நற்குணங்களால், அவரை எல்லோரும் “நைனா” (அவர் ஒரு நாயுடுகாரு) என்றே பாசத்துடன் அழைப்பர்!
சீனியர் அதிகாரி என்பதால் பெரிய குவார்ட்டர்ஸ் கிடைத்தது. அவர் மனைவி ஈஸ்வரி, மிகவும் சாது, எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். குழந்தை இல்லாத குறையால் மிகவும் வருந்தி நிற்பவர்! இருவருக்கும் அந்த வீடு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அவர் மனைவியிடம் பலமுறை தத்தெடுப்பது பற்றி பேசியிருக்கிறார்.. ஆனால் இன்றுவரை சுமூக தீர்வு ஏற்படாததால், அத்திட்டம் நிறைவேற்ற படவில்லை. ஆனாலும் இருவரும் மனமொத்த தம்பதியினராய் இன்றளவும், சந்தோசமாகவே வாழ்ந்து வந்தனர். அக்கம்பக்கம் இருப்பவர்களின், குழந்தைகள், அந்த வீட்டில் குழுமி விளையாடி , பிளே ஸ்கூல் போல் அந்த வீடு எப்போதும் கலகலப்பாய் காட்சி அளிக்கும். சாக்லேட், பிஸ்கட், கேக், இனிப்புகள் என்று குழந்தைகளுக்கு தாராளமாய் கிடைப்பதால், அவர்களும் காலை முதலே, நைனாவின் வீட்டுக்கு படையெடுக்க தொடங்கி விடுவர். அந்தம்மாவுக்கும் குழந்தைகள் என்றால் உயிர்.
அங்கு, பாம்பு தொல்லை மழைக்காலங்களில் அதிகம் வருவதால், நிலக்கரி நிறுவனத்தினர்.. இருளர் இன ஆண் பெண்களை, அழைத்து பாம்புகளை பிடிக்க செய்வது அடிக்கடி நடைபெறும் வழக்கம். “பாம்புக்கடிக்கு”அவ்வப்போது அவர்கள் சிகிச்சை அளித்தும் வந்தனர்.
சில பல வருடங்களுக்கு முன், ஒரு முறை ஈஸ்வரியை பாம்பு, பின்னிரவில் கடித்துவிட, நாகு எனப்படும் “நாகராணி” என்ற இருளர் இனத்து இளம்பெண் கூட்டிவரப்பட்டாள். பாம்புகடியை ஆராய்ந்து கருநாகம் போல் தோன்றியதால், அனைவரும் பயந்தனர். நாயுடு மிகவும் ஆடிப்போய் விட்டார், அவர் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்த வண்ணம் இருந்தது.
ஆனால் அந்த அழகிய இளவயசு பருவ பெண்ணோ, தைரியமாக செயல்பட்டு, ஈஸ்வரியின் கால் கெண்டை சதையை ஆழமாக கீரி, வாயில ஓரு வினோதமான பச்சிலையை அடக்கிய வண்ணம், விஷத்தை, லாவகமாக உறிஞ்சி எடுத்து, வெளியேற்றினாள். பின்பு சுண்ணாம்புடன் கலந்த ‘மலைஉப்பை’ கடிவாயில் அழுத்தி பன்டாஜ் போல் கட்டினாள். ஏதோ சில நாட்டு மருந்துகள் கொண்டு ஒரு “கஷாயம்” தயாரித்து, மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தம்மா வாயில் புகட்டினாள். அன்று இரவு முழுதும், ஈஸ்வரி அம்மாள் தூங்கி விடாதபடி, அவளை உசுப்பி உசுப்பி, “அம்மா அம்மா” என்று கூப்பிட்டு, குரல் கொடுத்து கொண்டே இருந்தாள்.
இருளர் கூட்ட பெரியவரும், அந்த பெண்ணின் தகப்பனுமான “கோடன்” என்பவர், நாயிடுவிடம் “ஐயா, எங்க கூட்டத்திலேயே இவ தாங்க எப்பேர்ப்பட்ட ராஜநாக விஷத்தையும் முறித்து உயிரை காக்கும், வித்தை தெரிந்த, கைராசிக்காரி! நிச்சயம் எங்க நாகலிங்க சாமி சத்தியமா அந்த அம்மாவை காப்பாத்திடுவா!. தைரியமா இருங்க சாமி”. என்று ஆறுதல் கூறி, அவரை கட்டாயப்படுத்தி காப்பி குடிக்க வைத்தார்.
அன்று இரவு முழுக்க, அந்த இருளர் கூட்டமும், தொழிற்சங்க காம்ரேடுகளும், அவர் வீட்டை சுற்றி அமர்ந்து அவருக்கு தைரியம் கொடுத்து துணை நின்றனர். அந்த 9 அடி நீள, கருநாகத்தையும் சற்று நேரத்தில் பிடித்து விட்டனர். அதை கண்ட அந்த கூட்டமே, பயத்தில் நடுநடுங்கி, விக்கித்து போய் நின்றது !..
பொழுது புலர்ந்ததும், மெல்ல மெல்ல கண்விழித்தாள் ஈஸ்வரி. நாகுவை எல்லோரும் பாராட்டி வணங்க, நாயுடு, அவள் கரம் பிடித்து கண்ணீர் உகுத்து நன்றி கூறினார். பத்தாயிரம் ரூபாய் கட்டு ஒன்றை அவளுக்கு கொடுக்க, அவளோ “நாங்கள் பாம்பு கடிக்கு வைத்தியம் செய்யும் போது, பணம் வாங்குவதை தெய்வ குத்தமாக நினைக்கிறோம். அது எங்கள் குல வழக்கம்! உயிருக்கு எந்த பணமும் ஈடாகாது. வேண்டாம் ஐயா!”என்று கூறி மறுக்க, “நீ மகராசியா! தீர்க்காயுசா வாழனும்மா” என வாழ்த்தி வணங்கி வழி அனுப்பினார்.
அன்று முதல்… நாகுவை தன் சொந்த மகளாக பாவித்து, தங்களுக்கு உதவி செய்ய அவளை நியமித்து கொண்டார். நாகு அறிவும் அழகும் நிறைந்த யுவதி! அந்த கூட்டத்திலேயே எஸ் எஸ் எல் சி. வரை படித்த ஒரே ஆள் அவள்தான். தினம் தினம், மாலை வேளைகளில், வந்து அவர்களுக்கு வேலைகள் செய்வாள்.
பக்கத்து வீட்டு என்ஜினீயர் மகன் “ரவி” அவள் பேரழகில் மயங்கி, காதல் கொள்ள, அவர்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது. ஒருநாள் இருவரும் ஓடிப்போய் பதிவு திருமணம் செய்துகொள்ள ஊரே, அல்லோல கொல்லோல பட்டது. நாயுடுவோ மிகவும் சந்தோஷப்பட்டார். நாகு இவருக்கு போன் செய்து, “அப்பா எங்களை நீங்கதான் எப்பிடியாவது காப்பாத்தணும்! எங்களை கைவிட்றாதீங்க அப்பா” என் அழுது புலம்பினாள்..
நாயுடு, தன் நண்பரான பக்கத்து வீட்டுகாரரை அழைத்து பேச… ரவியின் அம்மாவோ “போயும்போயும் அந்த இருளர் குலத்து பெண்ணை, எப்படி நாங்கள் ஏற்பது.. அதுவுமில்லாம, அவங்க குடும்பமே அடுத்த வேளை சோத்துக்கே லாட்டரி அடிக்கும் பரம ஏழைகள்” என கோபாவேசத்துடன் மறுக்க… நாயுடு பொறுமையாக “அம்மா! நாகு! எச்சில் உதட்டால் என் மனைவியின் விஷ ரத்தத்தை, உயிரை பணயம் வைத்து உறிஞ்சி எடுத்து காப்பாற்றினாளோ! அன்றே அவள் எனக்கு மகளாகிவிட்டாள்! இல்லை இல்லை தயாகிவிட்டாள்! குழந்தை இல்லாத நாங்கள் அவளை “சுவீகார புத்ரியாக” தத்தெடுத்து, சட்டப்படி வாரிசாக ஏற்று கொள்கிறோம்.. நாங்கள் மேல்ஜாதி நாயுடு வகுப்பு, நீங்களும் நாயுடு வகுப்பை சேர்ந்தவர் என கேள்வி பட்டிருக்கிறேன். இப்போதே எங்கள் லட்சக்கணக்கான சொத்து முழுதும் அவளுக்கு உயில் எழுதி கொடுத்து விடுகிறேன்.!. தயவு செய்து, அந்த இளசுகளை பிரிக்காதீர்கள்! “என கெஞ்சி, அந்த தம்பதியர் கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டனர்.
பக்கத்து வீட்டு நாயுடம்மா, இவர்களுக்கு இருக்கும் ஏராளமான சொத்துபத்துக்கள் பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்ததால், “சரி சரி நீங்க மணவாடு என்பதாலும், இவ்வளவு கெஞ்சி கேட்பதாலும். நாங்க சம்மதிக்கிறோம். சீக்கிரம் சட்டபூர்வமாக அவளை சுவீகாரம் எடுத்து கொள்ளுங்கள்!! அதன் பிறகு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோ” என்று, மனதின் குதூகலத்தை மறைத்தபடி, வேண்டா வெறுப்பாக கூறுவது போல் நடித்தாள்.
அடுத்த வாரம் நெய்வேலியே. அதிரும் படி, இருளர் கூட்டமும், நெய்வேலி தொழிலாளர் கூட்டமும் இணைந்து, திருமணம் ஜோராக, நெய்வேலி கம்யூனிட்டி ஹாலில், ஜாம் ஜாம் என்று நடந்தேரியது. நாயுடுவுக்கு மகள் கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லாததால், திக்கு முக்காடி போனார்.
(முற்றும்)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறிய சிறுகதை… நகைச்சுவை கலந்து சமூகத்திற்குத் தேவையான செய்தியையும் உள்ளடக்கியது…. சிறப்பான சிறுகதை… எழுத்தாளர் மரு. உடலியங்கியல் பாலா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்…..