மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்கள் காலமானார். தஞ்சைக்கு அருகில் உள்ள நாஞ்சிக் கோட்டை எனும் ஊரில் பிறந்து வளர்ந்தார். அப்பா ரயில்வே துறையில் Sorter ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார். அம்மா ஆரம்ப பள்ளி ஆசிரியை. அறுபதுகளில் முதன்முதலில் மின்சாரம் எட்டிப் பார்த்த வீடாக அவருடையது இருந்தது. தன்னுடைய மூத்த மகனை எப்படியாவது மருத்துவராக ஆக்க வேண்டும் என்கிற கனவு பொய்த்து போன நிலையில், சந்திரமோகனை பார்த்து ‘நீ டாக்டர் ஆகிடணும் தம்பி’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இவருக்கோ ஆட்சிப்பணி, வான்வெளிப் பொறியியல் என்று கனவுகள் இருந்தன. அவை ஒரு நாளில் திசைமாற்றப் பட்டிருந்தன. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சேர்ந்த பின்பு கூட ஓராண்டு காலம், பிடித்த பாடத்தை படிக்க அப்பா அனுமதிப்பாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்தார். அந்த ஓட்டத்தில், எளிய மனிதர்களின் ஒரே நம்பிக்கையாக அரசு மருத்துவமனை திகழ்வதை கண்டுகொண்டார். மருத்துவ நூல்களின் விலை நெஞ்சடைக்க வைக்கும் சூழல். தன்னுடைய எம்.பி.பி.எஸ் படிப்புக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவ நூலை மட்டும் 13 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்தார். மற்ற நேரமெல்லாம் நூலகத்தில் தவங்கிடந்தார்.

மருத்துவக் கல்வி பயின்ற காலத்தில் அறுவை சிகிச்சை உடனடி தீர்வுகளை தருவது அவரை ஈர்த்தது. சாப்பிட விரும்பினாலும், புற்றுநோயால் எதையும் உண்ண முடியாமல் எளிய மனிதர்கள் படும் துயரங்கள் அவர் மனதை தைத்தன. இரையகக்குடலியல் துறையில் சேர்ந்து படித்தார். மாநில அளவில் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பின்பு, 47 கடலோர கிராமங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றினார்.

இரையகக் குடலியல் அறுவை சிகிச்சை துறையில் மேற்படிப்பினை பேராசிரியர் ரங்கபாஷ்யம் வழிகாட்டுதலில் படித்து தேறினார். அதன்பின்னர் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று நீண்ட பயணம் சென்னை மருத்துவ கல்லூரியின் துறைத் தலைவர் ஆகிற அளவுக்கு சென்றது.

இடையில், 1995-ல் ஹாங்காங்கிற்கு மூன்று மாதகால பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். இவரின் தேர்ந்த செயல்திறனை, அறுவை சிகிச்சையின் லாகவத்தை கண்ட மருத்துவத் துறை தலைவர் ஹாங்காங்கில் இந்திய மதிப்பில் மூன்று லட்சம் மாத சம்பளம் தரும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ‘இங்கே கற்றுக்கொண்டு என்னுடைய நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் பணியாற்றவே விருப்பம்’ என்று சந்திரமோகன் அவர்கள் மென்மையாக மறுத்தார். அப்போது இங்கே அவர் பெற்றுக்கொண்டிருந்த சம்பளம் 20,000 ரூபாய் !

ஒரு பைசா பெறாத காரணங்கள், கண நேர கோபங்கள், மன வருத்தங்களால் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்று இரைப்பை, உணவுக்குழாய் எரிந்து வருகிற பலபேரை போராடிக் காக்கிற பெரும்பணிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டார். மேலும், அமில வீச்சு, தற்கொலை முயற்சியில் இருந்து மீட்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, கல்வி என்றும் அவரின் பணிகள் நீண்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரை மீட்டெடுப்பதில் அவரின் பங்களிப்பு மகத்தானது.அமிலம் இன்ன பிற அரிக்கும் தன்மையுள்ள பொருட்களால் குரல் வளை-உணவுக்குழாய், இரைப்பை ஆகியவை சுருங்கிப் போவதை சீர்செய்ய அவர் கண்டறிந்த முறை உலகளவில் இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது. மேலும்,பிற உள் உறுப்புகளை கொண்டு சிதிலமடைந்த பகுதிகளை மீட்கும் முறையின் மூலம் பலரின் வாழ்க்கையில் வெளிச்ச வெள்ளம் பாய்ச்சினார். இரைப்பை, உணவுக்குழாய் சுருங்கிப் போகாமல் தடுக்கும் வண்ணம் நோயாளிகளே தங்களுக்கு சிகிச்சையளித்துக் கொள்ளும் ‘self -dilatation’ முறையை அறிமுகப்படுத்தினார்.

வெற்றிகரமாக மீண்டவர்களினை ஒருங்கிணைத்து ‘ஆதரவு குழுக்களை’ உருவாக்கினார். ஒரு மருத்துவர் ஒரு மணி நேரம் நோயாளியிடம் புற்றுநோய் குறித்து பேசுவதை விட, குணமான நபர் ஒரு நிமிடம் பேசினாலே அவர்கள் நம்பிக்கையோடு நோயை எதிர்கொள்வார்கள் என்கிற அவரின் அணுகுமுறைக்கு பெரும் வெற்றி கிட்டியது. ‘மீண்டும் வாழ்கிறோம், மீண்டு வாழ உதவுவோம்’ என்கிற முழக்கத்தோடு மனிதநேயம் மிக்க இந்த முன்னெடுப்புகளை இறுதி மூச்சு வரை மேற்கொண்டார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மேல் இரைப்பை,குடலியல் மையம் தனித்துறையாக இவரின் பெருமுயற்சியால் வளர்ந்து பீடுநடை போடுகிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இரையக குடலியல் அறுவை சிகிச்சைக்கான மேற்படிப்பு இடங்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் தான் இருக்கின்றன என்பதற்கான ஆணிவேர் அவரே ஆவார்.

அவர் துறையில் பல்வேறு புற்றுநோயாளிகளை காப்பாற்றும் பணிகளை தொடர்ந்து செய்து வந்தாலும் மக்களிடையே புற்றுநோய் குறித்து அச்சம் நிலவுவதை கண்டார். அதனைப் போக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மேலும், தன்னுடைய பணிக்காலத்திற்கு பின்பு ESOINDIA என்கிற அமைப்பினை நிறுவினார். இதில் பல நூறு நோயாளிகளுக்கு வழிகாட்டுதல் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அடுத்தடுத்த தலைமுறையை சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு உலகின் ஆகச்சிறந்த மருத்துவ நிபுணர்களிடம் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு நில்லாமல், அவர்களின் ஆய்வுலகினில் இயங்க ஊக்கப்படுத்தி சர்வதேச அளவில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க வைத்தார். ‘ஒரு முறை நாம் துவக்கி வைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அந்த மாணவர்கள் அயராமல் ஆய்வுப்பணிகளில் தங்களை தோய்த்துக் கொள்வார்கள்’ என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

‘கேன்சர் என்று தெரிந்து விட்ட நாளே சாவுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது’ என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. உணவுக்குழாய் சார்ந்த பிரச்சனைகள், இரைப்பை சிக்கல்களுக்கு உடனடியாக மருத்துவரிடம் வந்து பரிசோதித்து கொண்டால் நாட்பட்ட நிலையில் புற்றுநோயை வெல்ல முடியாமல் போவது குறையும் என்பது அவரின் தொலைநோக்காக இருந்தது. ‘ஜப்பான் நாட்டில் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60% மக்கள் ஐந்தாண்டுகளை கடந்து வாழ்கிறார்கள். அப்படி நம் மக்களும் மகிழ்வோடு பல காலம் வாழ வேண்டும்.’ என்கிற கனவு அவருக்கு இருந்தது. மக்களுக்கான மருத்துவராக தன் வாழ்நாளை கழித்த சந்திரமோகன் ஐயா காலங்களை கடந்து நினைவுகூரப்படுவார். அவரின் ஆழமான அழுத்த முத்திரை அவர் கட்டியெழுப்பிய அமைப்புகள், தட்டிக் கொடுத்த மருத்துவர்கள், அரவணைத்துக் கொண்ட நோய் பீடித்த மனிதர்கள் என்று நீக்கமற நிறைந்திருக்கிறது.

(புகைப்பட நன்றி: Deccan Chronicle)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *