தோழர் டி.எல் என்ற மானுடன்

மீனாட்சி சுந்தரம் என்ற நான் தோழர் டி. லட்சுமணன் என்ற பாட்டாளிவரக்க போராளியின் சக தோழன் ஆவேன். அவர் 1937ல் பிறந்தார்,நான் 1936ல் பிறந்தேன்  கம்யூனிச பண்பாட்டுப்படி எல்லோரும் தலைவர் தொண்டர். மூத்தவர், இளையவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவரை ஒருவர்  பெயரின் முதல் இரண்டெழுத்துக்களோடு அல்லது அன்பாக அழைக்கும் சுருக்குப் பெயரோடு தோழர் என்பதை இனைத்தே அழைப்போம் அந்த வகையில் காம்ரேடு டி.எல் என்றே அழைக்கப்பட்டார். ஆரோக்கியமாக இருந்த அவரது மரணம் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல அவரது பழகும் தன்மையால் விரிந்துகிடக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சி செய்தியாகும்.

கொரானா தொத்து பரவுவதற்கு முன்னால் அவரை நான் கட்சி அலுவலகத்திலே சந்தித்து பொழுது இரண்டு கிழங்கள் என்ன பேச வேண்டுமோ அதையே பேசினோம் பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் போகவேண்டும் அதுவரை ஏதாவது பயனுள்ளதைச் செய்யவேண்டும் என்று அவர் கூறி விடை பெற்றார். அவர் சொன்னதைச் சாதித்துவிட்டார்.

“ புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகொள் தக்கது உடைத்து.” என்ற குறளுக்கு இலக்கணமாகிவிட்டார்

நானும், டி எள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட குழுவிலிருந்து மாநில செயற்குழுவரை சக தோழனாய் பயணித்தோம். 1970களில் சென்னை- செங்கல்பட்டு மாவட்டங்களை இனைத்து ஒரே மாவட்டுக்குழுவாகச்   செயல்பட்டது அப் பொழுது இருவரும் மாவட்ட குழு உறுப்பினர்களாக இருந்தோம் நான் மாவட்ட செயற்குழு உறுப்பினரானாலும் அடிப்படையில் மாவட்ட குழு உறுப்பினருள் ஒருவனே. நான் கட்சிக்கு வந்த வழிவேறு, அவர் கட்சிக்கு வந்த வழிவேறு,  அவர் கால்நடை ஆய்வாளராக அரசுப் பணியிலிருந்தார், சங்க நிர்வாகிகளில் ஒருவராகத் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். சிறந்த கிளர்ச்சி பேச்சாளர் அரசுப் பணியிலிருக்கும் பொழுதே மாவட்டுக்குழு உறுப்பினராவது மிகுந்த துணிச்சல் வேண்டும். அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபட்டால் பணிநீக்கம் உத்தரவாதம். அதிலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்றால் சிறைவாசம் அல்லது என்கவுண்டர் நிச்சயம்

அவர்  அரசுப் பணியிலிருக்கும் பொழுதே மாவட்டுக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். சட்ட நிபுணர்களும் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த அதிகாரிகளுக்குப் பொறுத்த வேண்டிய விதியை நான் கெசட்டட் அரசுப் பணிக்கு பொருத்துவது அநீதியாகும் அரசியல் நிர்ணய சட்டப்படி அவர்கள் சங்கம் வைக்கவும் அரசியலில் ஈடுபடவும் உரிமை  உண்டு என்பதாகும்  எனவே அவர் அரசுப்பணியில் தொடர்ந்து இருந்து கொண்டே செயல்படலாம், அரசுப் பணி நீக்கம் செய்தால் நீதி மன்றம் செல்லலாம் என்று முடிவு செய்து மாவட்டுக்குழுவில் பணியாற்றினார் கால் நடை ஆய்வாளர் என்ற முறையிலும், ஆய்வாளர் அமைப்பின்  நிர்வாகி என்ற வகையிலும் இவருக்கிருந்த தொடர்பால் விவசாயச்சங்கம் கட்டுவதற்கு இவரது சங்க உறுப்பினர்கள்  கிடைத்தனர் இவரது மேடைப் பேச்சு பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு உறுதியைத் தந்தது  அரசிற்கு இவரது செயல் தெரிந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கியது.

சங்க நிர்வாகி என்பது மட்டுமல்ல பணிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் முழுச்சம்பளமும் கொடுக்க வேண்டும். எனவே அவரா ராஜினாமா செய்து போகட்டும் என்று அரசு கண்டு கொள்ளவில்லை,  எமெர்ஜென்சி காலத்தில் கூட இவரைப் பணி நீக்கம் செய்ய வில்லை அந்த காலத்திலும் சங்க இயக்கத்தை உயிர்ப்புடன் வைக்க நூதன போராட்ட வடிவங்களை உருவாக்கிட முக்கிய பங்களித்தார்.

அதன் பிறகு அரசு பதவியை ராஜினாமா செய்து 1980களில்  செங்கை மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டார், தோழர் டி எல் என்ன ஊருக்குப் போனாலும் அவரை அறிந்தவர்கள் இரண்டு பேராவது இருப்பார்கள் ரயில் நிலையங்களிலே இறங்கும் போதே இவரது நண்பர்கள் இவரைப் பார்க்கவருவார்கள் கால் நடை ஆய்வாளர்கள் மட்டுமல்ல அவர்களது நண்பர்களும் வருவார்கள் ஒரு மானுடன் இன் சொல்லால் ஏராளமான இதயங்களை வெல்ல முடியும் என்பதற்கு அவர் இலக்கணமாக இருந்தார் .

நான் பரமேஷ்வரன் டி.எல் மூவரும்  மாநிலக்குழு கூட்டம் முடிந்தபின் திரைத்துறைக்குப் போவது வழக்கம் டி. எல் தான் பொறுப்பேற்று நிறைவேற்றுவார்.

காம்ரேடு டி. எல் எழுத்தாளருமாவார், எதையும்  லேசாகச் சொல்வதிலும், எழுதுவதிலும் வல்லவர், எனக்கு முன்னால் அவர்தான் மார்க்சிஸ்ட் தத்துவ இதழின் ஆசிரியராக இருந்தார்

குறையில்லாத மானுடன் கிடையாது அது டி. எல்.லுக்கும் பொருந்தும் எதாவது  ஒன்றைக் கூறலாம் என்று நினைத்து நினைத்துப் பார்க்கிறேன் ஒன்று கூட என் நினைவில் இல்லை அவரது பழகும் குணம் தமாஷாகக் கூறும் முறை என்பது மட்டுமே மனதில் ஓடுகிறது. எண்ணற்ற பாட்டாளி வர்க்க போராளி போல் வாழ்ந்த வாழ்க்கை என்பதே தெரிகிறது  புதிய மானுடத்தின் கூறுகளை உருவாக்கப் பங்களித்த வாழ்க்கை என்ற நிறைவே மனதில் ஓடுகிறது.

வைரமுத்துவின் கவிதை வரிகளே நினைவிற்கு வருகிறது.

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதென்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திடக் கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !  

 

 

One thought on “அஞ்சலி: தோழர் டி.எல் என்ற மானுடன் – வே. மீனாட்சி சுந்தரம்”
  1. அருமையான அஞ்சலி உரை தோழர்

    தலை வணங்குகிறோம் உங்கள்

    சேவைக்கு.

    தொடர்க , உங்களது ஊக்கம் .

    இளைய தோழர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *