“உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை ஒப்புக் கொள்கிறீர்களா?”

“முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்”

“நான் தங்களை குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். தங்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக வருந்துகிறேன். தங்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்.”

1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி, காலை பத்தரை மணிக்கு, சங்கரநயினார் கோயிலில் உள்ள கோமதி அம்மன் சன்னிதானத்தின் முன்பு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில், பின்வரும் முழக்கத்தை சத்தமாகச் சொன்னார் எஸ்.எஸ்.கரையாளர்.

“பிரிட்டிஷாரின் இந்த முயற்சிக்கு பணத்தாலும் ஆள் பலத்தாலும் உதவிகள் செய்வது தவறு. அகிம்சை முறையிலேயே எல்லா யுத்தங்களையும் எதிர்ப்பதே சரியான வழியாகும்” .

1941, திருச்சி சிறை - எஸ். எஸ் கரையாளர் ...முன்னேற்பாடுகளுடன் அந்த இடத்தில் காத்துக்கிடந்த காவலர்கள், கரையாளரைக் கைது செய்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் வெள்ளையர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் தேசிய காங்கிரஸின், செயல் திட்டங்களில் இது ஒரு பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக எஸ்.எஸ்.கரையாளர் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் முன்பு இரவு 8 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார். சரியாக ஒரு வாரம் கழித்து டிசம்பர் 13ஆம் தேதி தான், அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.

கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில், ஆறுமாதம் கடுங்காவல் தண்டனைக்காக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் எஸ்.எஸ்.கரையாளர்.

“ஜெயிலின் பிரதான வாயில் திறந்தது. நான் உள்ளே நுழைந்தேன். என் பின்னால் கதவு சாத்தப்பட்டது. ஜெயில் காற்று என் மீது வீசியது. அப்போது, ஜெயில் மணி சரியாக ஐந்து அடித்தது.”
– இப்படித்தான் துவங்குகிறது எஸ்.எஸ்.கரையாளர் எழுதிய சிறைக் குறிப்புகளின் முதல் இரு அத்தியாயங்கள்.

தியாகச் செம்மல் செங்கோட்டை எல் ...

தியாகச் செம்மல் செங்கோட்டை எஸ்.எஸ்.கரையாளர்

1940 டிசம்பர் 14ஆம் தேதி வேலூர் சிறையில் தொடங்கி, 1941 மே 23ஆம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆகும் நாள் வரை, தான் பெற்ற அனுபவத்தை, விடுதலைப் போராட்ட வீரர்களின் சுவையான ஒரு பக்கத்தை, அவர்களின் இயல்பான முகத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எஸ்.எஸ் கரையாளர். தனது ஆறு மாத கால கடுங்காவல் தண்டனையை, கசப்பின் துளி – கொஞ்சம் கூட பட்டு விடாமல், தனது அனுபவங்களை கற்கண்டு போல மாற்றி, விறுவிறுப்பான நடையில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் எஸ்.எஸ்.கரையாளர். அந்தப் புத்தகத்தின் பெயர் தான், ’1941 திருச்சி சிறை’.

ஆறு மாதகால சிறை அனுபவத்தில் தான் கண்ட காட்சிகள், தன்னோடு பழகிய ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்திய சிறைச்சாலையின் நடைமுறை விதிகள் என எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்து, அழகான மொழி நடையில் அங்கதச்சுவை சற்றும் குறையாமல் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் கரையாளர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டநாதக் கரையாளர், 1909 ஆம் ஆண்டு தென்காசியில் பிறந்தவர். பி.ஏ, பி.எல். பட்டம் பெற்றிருந்த கரையாளர், திருநெல்வேலி மாவட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றிருந்தார். 1967 ஆம் ஆண்டு, அவர் மரணமடைந்த பிறகு, அவர் பெயரில், தென்காசியில் கலைக்கல்லூரி ஒன்று உருவாக்கப்பட்டது.

சிறைச்சாலைகளில் மூன்று வகை உண்டு. சென்ட்ரல் ஜெயில், டிஸ்கிரீட் ஜெயில், ஸ்பெஷல் ஜெயில். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்கக்கூடிய இடம்தான் சென்ட்ரல் ஜெயில். அப்போது சென்னை மாகாணத்தில், வேலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் தான், கைதிகள் நிரம்பி வழிந்தார்கள்.

கோனார்மகன்: ஆயர் குல பேரறிஞர் எல் ...

மனைவியுடன் எஸ்.எஸ்.கரையாளர்

சிறைக்குச் செல்லும்போது, அங்கே ஒவ்வொரு கைதிக்கும் ஒரு எண்ணும், அவர்களுக்கு உரிய முறையான அறையும் ஒதுக்கப்படும். அதற்கு முன்னால், 14 நாட்கள் ‘கோரங்கியில்’ தங்க வேண்டும். கோரங்கி என்றால் என்ன தெரியுமா? சிறைச்சாலைகளில் முதன்மைப் பகுதிக்கு வெளியே, ’வெளிக்கோரங்கி’ என்று ஒரு கட்டடம் இருக்கும். வெளியில் இருந்து வரும் கைதிகள், எந்த ஒரு தொற்றுநோயையும் உள்ளே கொண்டு செல்லாமல் இருக்க, இந்த கோரங்கிக்குள் 14 நாள்கள் தங்க வேண்டும் என்பது சிறை விதியாகும். இதற்கு Out- Quarantine என்று பெயர். ஆனால் விடுதலைப் போராட்ட சத்தியாக்கிரகிகள், கோரங்கியில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்குரிய சிறைச்சாலை இடம் உடனடியாக ஒதுக்கப்பட்டது.

வேலூர் சிறைக்குள் கரையாளர் உள்ளே நுழையும்போது, மாலை உணவு நேரம். அலுமினியத் தட்டில் சாதமும் மற்றொரு தட்டில் குழம்பும் கறியுமாக கைதிகள் மரங்களின் அடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர் உள்ளே நுழைந்ததும், ’சிறைக்கு வெளியே நாடு எப்படி இருக்கிறது’ என்ற கேள்வியை சிறைவாசிகள் மாறி மாறிக் கேட்கிறார்கள். ’முதலில் இரவு உணவைச் சாப்பிடுங்கள், தீர்ந்து விடப் போகிறது’ என்று சொல்லி இவரை சாப்பிடச் சொல்கிறார் மஞ்சுநாதா ராவ் என்ற கைதி. ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மலபாரில் சொந்தமாக தபால் துறையை நடத்தியவர் தான் மஞ்சுநாத ராவ். அதற்காக தற்காப்பு விதிகளின்படி சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஒரே இந்தியர் மஞ்சுநாதா ராவ் அவர்கள் தான்.

வேலூர் சிறையில் இவருக்கு ஒதுக்கப்பட்ட அறை, 12 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது. அதன் மூலையில் கட்டில் வடிவ திண்ணை ஒன்று இருக்கும். மாலை ஐந்தரை மணிக்கு அடைக்கப்படும் கதவு மீண்டும் அதிகாலை ஐந்தரை மணிக்குத் தான் திறக்கப்படும். இடையில் இரவு 9 மணி வரை, அறைக்குள் அரிக்கேன் விளக்கு வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. சிறை அனுபவத்திலேயே, இரவில் இருட்டு அறைக்குள் அடைபட்டுக் கிடப்பது தான் மிகவும் கடுமையான தண்டனை என்கிறார் கரையாளர்.

தொடர் உணவுத்தவிர்ப்பில் தமிழ் ...

டிசம்பர் 23-ஆம் தேதி விடுதலைப் போராட்ட கைதிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப் படுகிறார்கள். மற்ற கைதிகளுடன் இணைந்து இவரால் திருச்சிக்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் காய்ச்சல் காரணமாக வேலூர் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் இன்னும் சில காலம் இவர் தங்க நேரிடுகிறது. அங்குதான் தீரர் சத்தியமூர்த்தி அவர்களை இவர் சந்திக்கிறார். தனது மனைவி மற்றும் ஒரே மகளின் மீது அதீத பாசம் கொண்டிருந்த சத்தியமூர்த்தி அவர்கள், கடிதங்களுக்காகக் காத்துக் கிடப்பார். ஜெயில் ஆஸ்பத்திரியில் இருக்கும் நாட்களில் கொண்டுவரப்படும் உணவில் பூசணிக்காய் மட்டுமே இருக்கும். “கத்தரிக்காய்,வாழைக்காய்,முருங்கைக்காய் என்ற பெயருள்ள காய்கள் எல்லாம் இந்த உலகத்தில் உண்டு என்பதை போய்ச் சொல்”, என உணவு கொண்டு வருபவரிடம் தீரர் சத்தியமூர்த்தி சொல்லி அனுப்புகிறார்.

ஜெயில் ஆஸ்பத்திரியில் இரண்டு மருத்துவர்களும் ஒரு உதவியாளரும் மட்டுமே உண்டு. இரவில் நோயாளிகளுக்கு உதவுவதற்காக சிறையில் இருந்த கைதிகளையே நியமித்து இருப்பார்கள். அவர்களிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. வேலூரில் தண்ணீர் கேட்டுக் கிடைக்காமல், மறுநாள் காலை இறந்து போன ஒரு கைதியை நினைவு கூர்கிறார் கரையாளர். சிறைச்சாலைகளில் ஆண் செவிலியர்கள் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஜெயில் மருத்துவமனைகளில் இப்போதாவது, ஆண் செவிலியர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. “பூலோக நரகம் என்பது இந்த ஜெயில் ஆஸ்பத்திரி தான்” என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னதை, மறக்காமல் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கரையாளர்.

தீரர் சத்தியமூர்த்தி நினைவு ...

தீரர் சத்தியமூர்த்தி

உடல் நலம் நன்றாகத் தேறிய உடன், ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கரையாளர் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இவ்வாறு ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு – கைதியை மாற்றுவதற்கு ‘கமான்’ என்று பெயர். திருச்சி மத்திய சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் காஃபி குடிப்பதற்கான உரிமையை , எஸ் எஸ் கரையாளர் போராடிப் பெற்ற விவரணை மிகவும் சுவாரசியமானது.

கைதிகளுக்கு எப்போதும் பெயர்கள் கிடையாது. அங்கே அவர்களுக்குத் தரப்பட்ட எண்கள் தான் மிகவும் முக்கியமானது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் இவருக்கு வழங்கப்பட்ட எண் 154 ஆகும். 500 அடி பக்க அளவுள்ள சதுர வடிவ முகாம், சுதந்திரப் போராட்ட சத்தியாக்கிரகிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு ’கேம்ப் ஜெயில்’ என்று பெயர். இதனைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கும்; மதில்கள் கிடையாது. ஆதலால் கேம்ப் ஜெயிலில் இருந்த படியே, வெளியே மாடு மேய்க்கும் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் நடந்து செல்பவர்களைப் பார்க்க முடியும். இது சிறைச்சாலையில் கிடைத்த மிகப்பெரிய ஆறுதல் என்று எழுதுகிறார் எஸ் எஸ் கரையாளர்.

சிறைச்சாலையில் ஏ, பி மற்றும் சி வகுப்பு கைதிகளுக்கு உரிய சலுகைகள் என்னென்ன என்பதைப் பற்றியும், சிறையில் வழங்கப்படும் குறிச்சொற்களைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார். ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு 18 அவுன்ஸ் அரிசி, 5 அவுன்ஸ் பருப்பு, ஒரு அவுன்ஸ் புளி, ஒரு அவுன்ஸ் எண்ணெய், 8 அவுன்ஸ் காய்கறிகள், ஒரு அவுன்ஸ் வெங்காயம், கால் அவுன்ஸ் கடுகு, கால் அவுன்ஸ் கொத்தமல்லி என்ற அளவில் உணவுக்காக பொருள்கள் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை சமைத்துத் தருவதற்கு 2 பவுண்டு பிறகு அனுமதிக்கப்படுகிறது. சிறை வளாகத்துக்கு உள்ளேயே விளையும் பூசணியும் முள்ளங்கியும் மட்டும் தான் தினமும் மாறி மாறி பயன்படுத்தப்படும் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்.

620jail1 | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India ...

சிறைச்சாலை

ஜெயில் வார்டுகளுக்கு அனுசரணையாக நடந்து, குட்டி வார்டராகச் செயல்படும் கைதிகள் ’காணிக் வார்டர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். மேலும், சிறை கண்காணிப்பாளருக்கு உதவியாகவும், தொந்தரவு செய்யாமலும் இருக்கும் கைதிகளுக்கு ’வஜா’ வழங்கப்படும். ’வஜா’ என்பது கைதிகளின் நன்னடத்தை குறித்து வழங்கப்படும் தண்டனை குறைப்பு நாள்களாகும். இந்த நாள்களை அனுமதிக்க, சிறைக் கண்காணிப்பாளருக்கு அதிகாரம் உண்டு.

ஒருமுறை, திருச்சி மத்திய சிறையின் சமையல் கூடத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. அந்த கட்டு விரியன் பாம்பை, அடித்துக் கொன்றதற்காக அரியலூர் வெங்கடாசலம் பிள்ளைக்கு பத்து நாள்கள் வஜா வழங்கப்பட்டது. அதன்பிறகு, நக்கல் பேச்சு ஒன்று சிறை முழுக்க உலவியதாம். 4 அணா பணம் கொடுத்து செத்த பாம்பை விலைக்கு வாங்கி, அதனை சிறை கண்காணிப்பாளரிடம் காட்டி, பலர் ’வஜா’ பெற முயன்றதாக வதந்தி ஒன்று பத்திரிகைகளிலும் வெளிவந்ததாம். உண்மையின் மீது அவதூறு செய்யும் நிகழ்வுகள் எல்லா காலத்திலும் இருக்கும் இல்லையா?

சிறையில் இருக்கும் கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதற்கென மனு செய்ய வேண்டும். இதற்கு ’மனுப் பேசுதல்’ என்று பெயர். ஏ வகுப்புக் கைதிகள் ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்து பேசலாம். ஆனால், ஜெயில் வார்டர் அப்போதும் உடன் இருப்பார். பி மற்றும் சி வகுப்புக் கைதிகளுக்கு இந்தச் சலுகை கிடையாது. கம்பி வலை தடுப்புக்குள் இருந்து தான் அவர்கள் பேச முடியும்.

சிறையில் தான் சந்தித்த ஒவ்வொரு சத்தியாகிரகியைப் பற்றியும் நுட்பமான, அதிமுக்கியமான விவரணைகளை எஸ்.எஸ்.கரையாளர் எழுதி இருக்கிறார். துரைசாமி நாடார் வாங்கித்தந்த ஜெயில் ரேடியோவில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் நேரடி வர்ணனை கேட்கும் ஸ்ரீ என்.எஸ். வரதாச்சாரி, கண்ணாடித் துண்டுகளை தின்று காட்டக்கூடிய ஸ்ரீ காந்திராஜ் கிருஷ்ணமூர்த்தி, நாணயம், பொறுப்பு, கண்ணியம் இவற்றுக்கு உரித்தான பூசப்பாடி ஸ்ரீ ராஜா குமாரசாமி ராஜா, எட்டுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை, சிறைச்சாலையில் வழங்கப்படும் ரொட்டியை நாய் கூட சாப்பிடாது என்பதை நிரூபித்துக் காட்டிய ஸ்ரீ விஸ்வநாதன், தினமும் ஆங்கில வகுப்பெடுக்கும் ஸ்ரீ அண்ணாமலை , கிடைக்கும் கல்லில் அழகான சிலைகள் வடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பொண்ணுக் குட்டி என்ற ஸ்ரீ பொன்னுச்சாமி என தான் சந்தித்த மனிதர்களின் இயல்பான பண்புகளை இந்த நூலில் அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு, மிகவும் சுவையான உணவினை போட்டி போட்டு சமைத்துத் தந்த ஆற்காடு ஸ்ரீ சீனிவாச ராவ் மற்றும் மேலூர் கருங்காலப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கட்ராம ஐயர் இருவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

1929ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த ’சர்’ பட்டத்தை மறுத்து, தொடர்ந்து விடுதலைப் போராட்ட வேள்வியில் கலந்து கொண்ட டாக்டர் சுப்பராயன் பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. முதல் உலகப்போரின் போது ராணுவ அமைச்சருக்கு காரியதரிசியாக பணியாற்றிய இவர், ராதாபாய் அம்மையார் என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். வஜாவின் படி, மே 4ஆம் தேதி திருச்சி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சேலம் டாக்டர் சுப்பராயன். ஆனால், தனக்குக் கிடைத்த சலுகை நாள்களை வேண்டாம் என்று மறுத்து, மே மாதம் 21 ஆம் தேதி விடுதலையாகிறார் ராதாபாய் அம்மையார். இவர்களைப்பற்றி நூலில் வரும் குறிப்புகள் அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் ஆகும்.

R. Mohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம் on ...

டாக்டர் சுப்பராயன்

சிறையில் வழங்கப்படும் ரொட்டி ’விதேசி’ பொருள் என்பதால் அதனை வாங்க மறுத்து உண்ணாவிரதம் இருந்த மனிதர் தான் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார். விவசாயிகளின் மேல் அளவற்ற அன்பும், விவசாயத்தைப் பற்றிய மேலதிக அறிவும் இவரிடம் இருந்ததைப் பற்றி சிறப்பாக விவரிக்கிறார்.

ஜோசியம் பார்த்து, இந்தியா விரைவில் விடுதலை பெறும் என நாள் குறிக்கும் பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். மதுரையை விட்டு வெளியேறக் கூடாது என்பதை மீறியதற்காக ஒன்றரை வருடம் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. தீவிர தெய்வ பக்தி உடைய தேவர் அவர்கள், மாமிசம் சாப்பிடமாட்டார்; சோப்பும் பயன்படுத்த மாட்டார்; ஆனால் பல் துலக்குவதற்கு ’டூத் பேஸ்டை’ விரும்பி பயன்படுத்துகிறார் என்பன போன்ற சுவாரசியமான குறிப்புகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

சுதந்திர இந்தியாவினுடைய ...

இராஜாஜி

சிறையில் இருந்த மற்றொரு பிரபலம் இராஜாஜி அவர்கள். இவரைச் சக்கரவர்த்தி என்றே அனைவரும் அழைக்கிறார்கள். இவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது, ஜெர்மனி ரேடியோ, “Raja of Gopalapuram என்பவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டார்” என்றே செய்தி சொல்லியது. காலை ஐந்தரை மணிக்கு எழுந்து நடை பயிற்சி முடித்தவுடன் வால்மீகி இராமாயணம் வகுப்பு எடுக்க தொடங்குவார் இராஜாஜி. காலை 10 மணி வரை இந்த வகுப்பு நீளும். காலை உணவுக்குப் பிறகு மதியம் ஒரு மணி வரை ஷேக்ஸ்பியர், மில்டன் உள்ளிட்டவர்களின் கவிதை நாடக வகுப்புகள் நடத்துவார். பிறகு மூன்று மணிக்கு Glossary வகுப்புகள் தொடங்கும். அப்போது, திருச்சி சிறையில் மரங்கள் இல்லாததால், அந்தப் பகுதி மிகுந்த வெப்பத்துடன் காணப்படும்.

அதனால் நனைக்கப்பட்ட சிறிய துண்டினை தலையில் கட்டிக் கொண்டுதான், இராஜாஜி வகுப்புகள் எடுப்பார். இரவு உணவிற்குப் பிறகு, (இரவு உணவு நேரம் மாலை ஐந்தரை மணி) பாரதியார் கவிதைகள், திருக்குறள், காளிதாசனின் சாகுந்தலம், பெரிய புராணம், ராமாயணம் என இரவு படுக்கச் செல்லும் வரை வகுப்புகள் தொடர்ந்து நடத்துவார். தான் செய்ய வேண்டிய எந்த வேலையையும் பிறர் செய்ய அனுமதிக்க மாட்டார். சிறையில் இராஜாஜி பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவம் சொல்கிறார். சிறையில் ஒவ்வொரு கைதிக்கும் Register board ஒன்று இருக்கும். அதில் கைதிகளை பற்றிய விபரக் குறிப்பு எழுதப்பட்டிருக்கும். அதில், எழுதப்படிக்க தெரியாத கைதிகளை C என்று குறிப்பார்கள். ராஜாஜிக்கு register board ல் C என்றே குறிக்கப் பட்டிருந்தது.

இப்படி, இந்த நூல் முழுக்க சத்தியாகிரகத் தியாகிகளின் சிறை வாழ்வு நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவுகளையும் பிறந்த மண்ணையும் பிரிந்து தேசத்தின் விடுதலைக்காக அடைக்கப்பட்ட சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு, அவர்கள் செலவு செய்த நாள்கள் நிச்சயம் வலி மிகுந்தவை தான். ஆனால் அதை அவர்கள் எதிர்கொண்ட விதம் அலாதியானது. ஆச்சரியம் தரக் கூடியது.

அதேபோல, தண்டனைக் காலம் முடிந்து, விடுதலை கிடைக்கும் நாளில் ஒவ்வொரு கைதியும் தன் சக தோழர்களிடம் விடைபெற்றுச் செல்லும் கணம் – சுகமானது; அதே நேரத்தில் நெகிழ்வானது. விடுதலைப் போருக்காகக் களமாடி – சிறைச்சாலையில் இருப்பது என்பது, தங்கக் கம்பிகளால் செய்த கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் கிளிக்கு ஒப்பாகும் எனச் சொல்கிறார். சிறையில் அனுபவிக்கும் தனிமை, சலிப்பூட்டும் உணவு, மூட்டைப் பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் இடையில் வாழ்வு, நரகம் போல் இருக்கும் ஜெயில் ஆஸ்பத்திரி இவைகளுக்கு மத்தியில் தான் தண்டனைக் காலம் என்றாலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒருபோதும் மனம் சலிக்கவில்லை; தன்னம்பிக்கையை இழக்க வில்லை. ஏனெனில் ஒவ்வொரு சத்தியாக்கிரகியின் முன்னும், விடுதலை வேள்வியில் தன்னையே ஆகுதியாக்கிக் கொண்ட தியாக வீரர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் சுதந்திர நெருப்பு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது.

“இந்த ஆறு மாதகாலத்தில் நன்றாகப் படித்து அறிவை வளப்படுத்த வேண்டும் சிந்திக்கும் சக்தியை வளர்க்க வேண்டும் அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களை தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என நான் போட்டிருந்த திட்டங்கள் ஒன்றுகூட நிறைவேறாமல் போய்விட்டது”
– இதனை, புத்தகத்தின் இறுதி அத்தியாயம் 18ல், சிறையிலிருந்து விடுதலையான நாளில் – தன் மனதில் தோன்றியதாக எஸ்.எஸ்.கரையாளர் மெலிதான வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் அவர் வாழ்க்கையை எதிர்கொண்ட விதமும், மனிதர்களை அவதானித்த முறையும் எல்லோருக்குமே ஒரு பாடம் என்பதில் சந்தேகமே இல்லை. தான் நேரில் கண்ட காட்சிகளையும், பழகிய மனிதர்களின் சித்திரங்களையும் மிக நேர்மையாகவும், நேர்மறைச் சிந்தனையோடும் எழுதியிருக்கிறார். அதனால், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, அதே உற்சாகமும், உள்ளெழுச்சியும் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

உரத்த சிந்தனை Archives - Page 9 of 92 - தமிழ் ...

எஸ்.எஸ்.கரையாளர்

இந்நூல், தனிப்பட்ட ஒரு மனிதனுடைய, சுய சரிதம் மட்டும் அல்ல. மாறாக, 1940களில் கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை உணர்வை விவரிக்கும் நூல். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட சத்தியாகிரகிகளின் தன்னம்பிக்கையைச் சொல்லும் நூல். சிறைப்பறவைகள் தனக்கான உலகை எப்படி உருவாக்கிக் கொண்டன என்பதைத் தெளிவுபடுத்தும் நூல். துன்பம் நேர்கையிலும், யாழ் கொண்டு இன்பம் காண்பது எப்படி என்பதை சுவைபடச் சொல்லும் நூல். 144 பக்கங்கள் கொண்ட இந்த நூலை, ’தமிழினி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வாசிப்பை வேகப்படுத்தும் கரையாளரின் இயல்பான மொழிநடை , இந்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.

ஜவகர்லால் நேரு எழுதிய My Autography, நெல்சன் மண்டேலா எழுதிய Conversation with myself, முதல் உலகப்போர் முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட ஹிட்லர், சிறை வாசத்தின் போது எழுதியMein Kamph, அமெரிக்காவின் கறுப்பின விடுதலைக்குப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் எழுதிய Letters from brimmingham city jail என உலகம் முழுவதும் சிறைச்சாலையில் இருந்து எழுதப்பட்ட இலக்கியங்கள் புகழ்பெற்றவை. அதே நேரத்தில் சிறைச்சாலையைப் பற்றியும், அங்கு தான் சந்தித்த நபர்களைப் பற்றியுமான சித்திரங்கள் அடங்கிய இந்த நூல், இந்த வகைமையில் (Prison Literature), தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூலாகிறது.

”சிறையென்றால் –
பறவையானாலும், மிருகமானாலும்,
மனிதன் ஆனாலும்
ஒரு தேசமே ஆனாலும்
ஒன்றுதான்”.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *