வாழும் கற்கள்
– ஏற்காடு இளங்கோ
ருமேனியா நாட்டில் கோஸ்டெஸ்டி என்ற கிராமத்தில் உலகின் அரிய வகை கற்கள் உள்ளன. இவை டிரோவாண்ட்ஸ் கற்கள் (Trovants stones) என அழைக்கப்படுகின்றன. இந்தக் கற்கள் வளரும் மற்றும் நகரும் திறனுக்காக மிகவும் பிரபலமானவை. இது ஒரு கண்கவர் மற்றும் அசாதாரண புவியியல் அற்புதமாகும்.
டிரோவாண்ட்ஸ் என்ற பெயர் ரோமானிய வார்த்தையான டிரோவாண்ட் (Trovant) என்பதிலிருந்து வந்தது. இதற்கு வளரும் கல் என்று பொருள். இந்த டிரோவாண்டஸ் எனப்படும் கற்கள் வளர்கின்றன. மேலும் புதிய கற்களைப் பெற்றெடுக்கின்றன. இவை மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயம் இவை உயிருடன் இருப்பது போல் தோன்றுகின்றன. ஆகவே இவற்றை வாழும் கற்கள் (Living Stones) என்கின்றனர்.
டிரோவாண்ட்ஸ் என்பது மணற்கல், சுண்ணாம்பு மற்றும் பிற கனிமங்களைக் கொண்ட ஒரு வகை கலவையாகும். மழைக்குப் பிறகு மழைநீரில் இருந்து தாதுக்களை உறிஞ்சுவதை உள்ளடக்கிய ஒரு செயல்முறை நடைபெறுகிறது. கால்சியம் கார்பனேட் மற்றும் பிற தாதுக்கள் கொண்ட நீர் கல்லுடன் தொடர்பு கொள்ளும்போது அது மேற்பரப்பில் படிகிறது. இது காலப்போக்கில் குவிந்து அடுக்குகளை உருவாக்குகிறது.
சுமார் 1000 ஆண்டுகளில் 4 முதல் 10 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த செயல்முறை பாறைகள் வளர்வது போல் தோன்றும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து, பாறைகளில் பல சிறிய கற்கள் உருவாகின்றன. இது சிமெண்டைச் சுரக்கும் ஒரு வகை மணற்கல் கான்க்ரீஷன் (Sandstone concretion) எனப்படுகிறது.
இந்தக் கற்களின் உள்ளே எந்த தனித்த கருவும் இல்லை. இவற்றின் சிமெண்ட் பெரும்பாலும் கார்பனேட் வகையாகும். மண்ணின் வெப்பம் மற்றும் அதிக குளிர்ச்சியின் காரணமாக இந்தக் கற்கள் நகர்கிறது. ஆனால் இவை உயிரற்றவை. இவை கோலங்கள், நீள்வட்டங்கள் மற்றும் காளான்கள் உள்பட பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணப்படுகின்றன. இவை 60 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. இப்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் ஒரு சுற்றுலா மையமாக விளங்குகிறது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.