ட்ரம்ப் 2.0
– சித்தார்த்தன் சுந்தரம்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20 ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் தடாலடியாக பல நிர்வாக ஆணைகளைப் பிறப்பித்து உலக நாட்டுத் தலைவர்களையெல்லாம் அவரவர்களின் இருக்கை முனைக்கேக் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார். ஆணைகளைப் பிறப்பித்ததோடு அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றவும் ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக, அந்நிய நாட்டுப் பொருள்களுக்கு அதிக வரி, சட்டவிரோதமாக `கழுதைப் பாதை’யில் நுழைந்தவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தல் போன்றவை ஆகும்.
மெக்சிகோ, கனடா நாட்டுப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அறிவித்தவர் அவர்கள் எதிர்வினை ஆற்றியவுடன் சற்றே நிறுத்தி வைத்திருக்கிறார் ஆனால், சீனா பொருள்கள் மீது கூடுதலான வரியை அறிவித்திருப்பதால் இப்போது சீனப் பொருள்களுக்கான வரி சராசரியாக 30 சதவீதம் எனகிற அளவைத் தொட்டிருக்கிறது. இதன் விளைவு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிப்பதோடு அதை மூலப் பொருளாகக் கொண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் நுகர்வோர் அதற்குச் செலவிடும் தொகை அதிகரிப்பதோடு தயாரிக்கும் நிறுவனங்களின் லாபமும் குறையும்.
இந்த நிலையில், சீனாவும் அதனுடைய நிலக்கரி, திரவ இயற்கை வாயு ஆகியவற்றிற்கான வரியை அதிகரிப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களையும் பாதிக்கும். அதோடு அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்குத் தேவைப்படும் சில முக்கியமான கனிமப் பொருள்களின் வரியையும் சீனா அதிகரித்திருக்கிறது.
இந்த வரி விதிப்பினால் அமெரிக்காவில் பொருள்களின் விலை அதிகரிக்குமே எனக் கேட்கப்பட்ட போது அதற்கு ட்ரம்ப், `இதனால் உற்பத்தித் துறையில் அதிக வேலைகள் உருவாக்கப்படுவதோடு சம்பளமும் அதிகரிக்கும் என கூறியிருக்கிறார். பிற நாடுகளிலிருந்து தன் நாட்டுக்குச் சாதகமாக என்னெவெல்லாம் வேண்டுமோ அதைப் பெறுவதற்காக – சிறந்த எல்லைப் பாதுகாப்பு, நாடு ஆக்ரமிப்பு, டிக்டாக் சேவையை வாங்குவதற்கான தொழிலதிபரைக் கண்டறிதல் – இந்த விஷயங்களையெல்லாம் கையிலெடுக்க ஆரம்பித்திருக்கிறாரா என எண்ணத் தோன்றுவதாக சர்வதேச நாணய நிதியத்தைச் (IMF) சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பொருளாதாரக் கோட்பாட்டின்படி, வரி விதிப்பு என்பது ஒரு நாட்டின் கரன்சியை வலுவானதாக ஆக்கும். இவர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகரித்த வரியைப் போல மெக்சிக்கோ, கனடா போன்ற நாட்டுப் பொருள்களுக்குமான வரியை அதிகரித்தால் டாலர் மேலும் வலுப்பெறக் கூடும்.
இந்த வரி அதிகரிப்பு பாதிப்பினால் உலகளவில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் விநியோகச் சங்கிலி, நாடுகளுக்கு இடையேயான தொழில் ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலும் இவை தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
டாலருக்கு மாற்றாக அது போல வலுவாக ஒரு பொது கரன்சியை உருவாக்க BRICS அமைப்பைச் சேர்ந்த நாடுகள் சில மாதங்களாகவே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முன்னெடுப்புக்கும் ட்ரம்ப் எதிர்வினையாற்றி இருக்கிறார். அப்படி இந்த அமைப்பு தங்களுக்கென ஒரு பொது கரன்சியை அறிமுகப்படுத்தினால் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் அதற்கான கடும் எதிர்வினையைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
இது போதாதென்று உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை இனி கொடுக்காது என்றும், காலநிலை குறித்த பாரீஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாகவும், மூன்றாம் பாலினத்துக்கு கொடுத்து வந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவதாகவும், ஜோ பைடன் காலத்தில் அமலுக்குக் கொண்டுவந்த பல அறிவிப்புகளையும் திட்டங்களையும் ரத்து செய்வதாகவும், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படாது என்றும் பல அதிரடி அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். இது போதாதென்று ஓரிரு நாட்களுக்கு முன்பு காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டுமென்றும் அமெரிக்கா அதை ஆக்கிரமித்து `சொர்க்கபூமி’யாக ஆக்கப் போகிறது எனவும் அறிவித்திருக்கிறார். இதற்கு எதிராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அமைப்புகள் குரல் எழுப்பியிருக்கின்றன.
அவருடைய இந்த அதிரடி முடிவுகளுக்கெல்லாம் அவர் கூறும் காரணம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவதற்கான (Make America Great Again – MAGA) முன்னெடுப்பு என்கிறார். எலான் மஸ்கின் தலைமையில் (இவர் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடும் போது அவருடைய கட்சிக்குத் தேர்தல் நிதியாக 277 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்!) அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency – DOGE) என்கிற புதிய அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரை அந்தப் பொறுப்புக்கு நியமித்த பிறகு அவர் நடந்து கொள்ளும் விதத்தையும், எடுக்கப்படும் நடவடிக்கைகளையெல்லாம் பார்த்தால் ஒட்டுமொத்த நிர்வாகமே அவர் கையில் இருக்கிறதோ எனத் தோன்றுவதாக பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் விமர்சித்து வருகிறார்கள்.
உலக வங்கியானது காலநிலை சம்பந்தமான செயல்பாடுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளித்து வருவதையும் சீனாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதையும் ட்ரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை. கடந்த முறை அவர் ஜனாதிபதியாக இருந்த போது சர்வதேச நாணய நிதியத்துடன் நல்ல சுமூகமான உறவைக் கொண்டிருந்தார். இப்போதும் அது தொடருமா எனத் தெரியவில்லை.
இவருடைய இந்த அதிரடியான, ஆர்ப்பாட்டமான நடத்தை பொருளாதாரத்தின் எந்த சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கிறது எனக் கேட்டால் `அமெரிக்கா முதல் என்பது மட்டுமல்லாமல் இரண்டாவது, மூன்றாவது…. என அனைத்தும்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்கு முன்பிருந்த ஜனாதிபதிகள் அமெரிக்காவை முன்னிறுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தில் தீவிரமான பங்கைச் செலுத்தி உலகாளவிய அளவில் நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமென்பதற்காக தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தினர்.
ஆனால் ட்ரம்பின் தற்போதைய அணுகுமுறையானது அமெரிக்காவின் செழிப்பும், பாதுகாப்பும் உலகளாவிய நல்வாழ்வைப் பொறுத்தே இருக்கிறது என்பதை அங்கீகரிக்கத் தவறிவிட்டது என்பதோடு 1930களில் பார்த்த `அதிகாரம் படைத்தவர்கள் எப்போதும் சரி’ என்கிற மனோபாவத்தைக் கொண்டிருப்பதும் கவலையளிப்பதாக இருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராக பணியாற்றிய மெளரிஸ் ஆப்ஸ்ட்ஃபெல்ட் (Maurice Obstfeld) பத்திரிகையொன்றில் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்!!
கட்டுரையாளர் :
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.