அமெரிக்க பொது சுகாதார நிறுவனத்தை ஓரங்கட்டிய ட்ரம்ப்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முந்தைய சுகாதார அவசரநிலை செயல்பாடுகளில் முக்கிய மையமாகச் செயல்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அதன் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை, வெள்ளை மாளிகைக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை என்பதே உண்மை.

ஆலிவர் மில்மேன்

2020 மே 14

உலகின் முதன்மையான பொது சுகாதார நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) இயக்குநரான ராபர்ட் ரெட்ஃபீல்ட், வெள்ளை மாளிகையின் விரிவுரை மேடை மீது குனிந்து,  கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்காவை ’மூழ்கடித்தது’, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வைரஸின் ’கடினமான’ இரண்டாவது அலை இருக்கும் என்று சொன்னார். இருந்தாலும், அவரது பாஸ் வேறுவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபரும், தி அப்ரெண்டிஸ் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளருமான டொனால்ட் டிரம்பிற்கு தொழில்ரீதியிலான வைராலஜிஸ்டான ரெட்ஃபீல்ட் வழியேற்படுத்திக் கொடுத்தார். கோவிட்-19 இன் மோசமான மீள் எழுச்சி பற்றிய எச்சரிக்கை குறித்து ரெட்ஃபீல்ட் முற்றிலும் தவறாக, வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று ட்ரம்ப் கூறினார். இதுகுறித்து தெளிவுபடுத்துமாறு கேட்கப்பட்ட போது, தான் சரியாக மேற்கோள் காட்டப்பட்டதை ரெட்ஃபீல்ட் உறுதிப்படுத்தினார். இப்போது வேறு கதை சொல்ல டிரம்ப்  மீண்டும் விரிவுரை மேடைக்கு வந்தார். ரெட்ஃபீல்டிடம் மீண்டும் முரண்பட்ட அமெரிக்க அதிபர், ’கொரோனா உங்களிடம் திரும்பி வராது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

Replace Trump And Bolster The CDC, A Leading Medical Journal Urges …

பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்த  சி.டி.சி இயக்குனர், மீண்டும் ஒருமுறை வெள்ளை மாளிகையில் நடைபெறும் கொரோனா வைரஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் தோன்ற மாட்டார் என்பது நிச்சயம். இதுவரை 80,000க்கும் அதிகமானோர் இறந்து போயிருக்கும் நிலையில், தொடர்ந்து கோவிட் -19 அமெரிக்காவைத் தாக்கிக் கொண்டிருப்பதால், ஏப்ரல் 22 அன்று சில சி.டி.சி ஊழியர்களால் தரப்பட்ட செய்திகள் அந்த நிறுவனத்தின் மதிப்பிற்குரிய நிபுணத்துவம் குறித்து கேள்விகள் எழுந்திருப்பதன்  ஆதாரமாகவே காணப்பட்டன.

முதன்முறையாக, 1946இல் நெருக்கடியான அட்லாண்டா அலுவலகத்தில் சி.டி.சி தனது உயிரைக் கொடுத்து மலேரியாவை எதிர்த்துப் போராடியதற்குப் பிறகு, பொது சுகாதாரத்திற்கான அவசர நிலையை அந்த நிறுவனம் இந்த அளவிற்கு சந்தித்ததே இல்லை.

பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோரின் கீழ் சி.டி.சி.யின் இயக்குனராக இருந்த ஜெஃப்ரி கோப்லான், அதிக கவனம் செலுத்தப்படாததால் சி.டி.சியிடம் ’விரக்தியும் சில சங்கடங்களும்’ ஏற்பட்டுள்ளன என்று கூறுகிறார். ’இசை வாசிக்கின்ற நால்வரில் ஒரு திறமையான வயலின் கலைஞராக இருக்கும் உங்களிடம் வலது கையைப் பயன்படுத்தக் கூடாது’ என்று கூறப்படுவதைப் போன்றே இது தெரிகிறது.  அதுதான்  இப்போது அங்கே இருக்கின்ற உணர்வு’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

எச்1என்1 காய்ச்சல் தொற்று முதல், சால்மோனெல்லா நோய் பரவல், கடுமையான சுவாச நோய்க்குறி (சார்ஸ்) தோன்றுவது வரையிலும், பொது சுகாதாரத்திற்கு விடப்பட்ட முந்தைய  அச்சுறுத்தல்களை எடுத்துக் கொண்டால்,  அப்போது பொதுவெளியில் சி.டி.சி மிகவும் சுறுசுறுப்பாகவே இயங்கி வந்தது. அன்றாடம் செய்தி விளக்க கூட்டங்களை நடத்துவது, தடுப்பூசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வடிவமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன.

ஆனால் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சுகாதார நெருக்கடி காலமான  இந்த கோவிட் -19இன் போது, டிரம்ப் நிர்வாகத்தால், சி.டி.சிதான் தொற்றுநோய்களுக்கான செய்தி தொடர்பாளர் என்ற நிலை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து வருகின்ற பழிவாங்குதல் குறித்த பயம், ஒத்துழைப்பு மற்றும் திறந்த உரையாடலுடனான அணுகுமுறையை மாற்றியமைத்துள்ளது என்று சில சிடிசி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சி.டி.சி முக்கியமற்றுப் போயிருப்பதை அதன் முன்னாள் தலைவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். பாரக்  ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் சி.டி.சி இயக்குனராக இருந்த டாம் ஃப்ரீடென் கூறுகையில், ’சி.டி.சி ஓரங்கட்டப்பட்டு இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சி.டி.சி யின் நிபுணத்துவத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் விளைவாக இருந்திருக்க வேண்டிய எதிர்வினை சரியானதாக இருக்கவில்லை. எங்கள் வாழ்நாளில் ஏற்பட்டிருக்கின்ற இந்த மிகப்பெரிய பொது சுகாதார நெருக்கடிக்கு நாங்கள் பங்களிப்பு செய்யாதது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது’ என்று அவர் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Where is the CDC? How Trump sidelined the public health agency in …

சி.டி.சி பொதுமேடையில் இல்லாததால் அமெரிக்க மக்களிடையே புரியாத குழப்பம் நிலவுவதாக ஃப்ரீடென் கூறுகிறார். அதன் விளைவாக, தொற்றுநோயின் எதிர்காலம் மற்றும் அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த குழப்பத்திற்கே வழிவகுக்கப்படுகிறது.

பொதுமக்கள் பார்வையில் இருந்து, வைரஸ் பரவிய ஆரம்ப நாட்களில் சி.டி.சி அதிகாரிகள் பலரும் வெளியிட்ட கடுமையான எச்சரிக்கைகள் இப்போது மறைந்து கொண்டிருக்கின்றன. சி.டி.சியின் நோய்த்தடுப்பு மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குனரான நான்சி மெஸ்ஸோனியர் பிப்ரவரி 25 அன்றே, வைரஸ் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அது உலகளாவிய தொற்றுநோயாக அதிகரிக்கும் என்றும் மிகத் துல்லியமாகக் கணித்திருந்தார்.

நிர்வாகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் அளித்து வந்த நம்பிக்கை மிகுந்த உத்தரவாதங்களிலிருந்து மாறுபட்டதாக இருந்த அந்தக் கருத்து, பங்குச் சந்தை வீழ்ச்சியை ஏற்படுத்தியது. கோபமடைந்த ட்ரம்ப் வேலையிலிருந்து விலக்கி விடுவேன் என்று அவரை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வைரஸ் அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம் என்று எச்சரித்த நாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய வைரஸ் நிபுணர்களில் ஒருவரான மெசொன்னியர், அதற்குப் பிறகு நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், சி.டி.சி நடத்திய செய்தி வெளியிடுகின்ற நிகழ்ச்சிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

’தகவல்களை நான்சியிடமிருந்து தவறாமல் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்த தொற்றுநோய் குறித்து என்ன நடக்கிறது என்ற உண்மையான உணர்வு எங்களிடையே இருந்தது. ஆனால் அது நிர்வாகத்திற்குப் பிடிக்கவில்லை’ என்று ஃப்ரீடென் கூறுகிறார்.

சி.டி.சியின் வேலையை, வெள்ளை மாளிகையில் இருக்கும் கொரோனா வைரஸ் பணிக்குழு தன்வசம் எடுத்துக் கொண்டது. நிர்வாகத்தின் ஆலோசகராக, அந்த பணிக்குழுவில் உறுப்பினராக  உள்ளவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த ரெட்ஃபீல்ட் தற்போது தன்னை சுய-தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் நீண்டகால இயக்குநரான அந்தோனி ஃபௌசி பெரும்பாலும் ரெட்ஃபீல்டின் வேலைகளைச் செய்து வருகிறார். ஆனால் அவரும் இப்போது அதே காரணத்திற்காக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

Trump's top health officials seen but not heard as coronavirus ...
Trump’s top health officials seen but not heard as coronavirus focus shifts

வைரஸின் தாக்கம் ஏப்ரல் மாதத்திற்குள் குறைந்து விடும், தடுப்பூசி விரைவிலேயே கிடைத்து விடும், வைரஸ் சிகிச்சைக்காக கிருமிநாசினியை மக்கள் ஊசி மூலம் போட விரும்பலாம் என்பது போன்ற தவறான, ஆபத்தான அறிக்கைகளை டிரம்ப் வெளியிடுவதை, இந்த நிபுணர்களின் இருப்பாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

’இந்த வித்தியாசமான சிகிச்சைகள் மற்றும் கருத்துக்கள் மக்களிடம் இருந்த நம்பிக்கையைச் சீரழித்துள்ளன. உல்களாவிய தொற்றுநோயின் போது, இதுபோன்ற வித்தியாசமான கருத்துக்களை எவரொருவரும் எதிர்பார்க்க மாட்டார், அதிலும் குறிப்பாக  உச்சஅதிகாரத்தில் இருக்கின்ற ஒருவரிடமிருந்து’ என்று கோப்லான் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்தால் அல்லது அதிபரின் சொந்த அறிவிப்புகளால், மிகவும் ஆபத்தான முறையில் சி.டி.சி ஆலோசனைகள் மதிப்பிழப்பிற்குள்ளாகின அல்லது முற்றிலும் மறைக்கப்பட்டன. பொதுவெளியில் முகக்கவசம் அணியுமாறு சி.டி.சி பரிந்துரைத்த பின்னர், அதே அறிவிப்பைப் பயன்படுத்தி,  தான் முகமூடி அணியப் போவதில்லை என்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

’ஓவல் வடிவ அலுவலகத்தில், அதிபரின் அந்த அழகிய, பிரமாண்டமான மேசைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு, அதிபர்கள், முழு அதிகாரம் பெற்றவர்கள், மன்னர்கள், அரசிகளை வாழ்த்தும்போது முகமூடி அணிந்து கொண்டிருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்…எனக்குத் தெரியாது. அதை என்னால் செய்ய முடியாது’ என்று ட்ரம்ப் கூறினார்.  அவர் பொதுமக்களுக்கு வழங்கிய இந்தச் செய்தி மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று ஃப்ரீடென் கூறினார்.

நோய்வாய்ப்பட்ட, வயதான அமெரிக்கர்கள் கோவிட்-19 காரணமாக மார்ச் மாதத்தில் வணிக விமானங்களில் பறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது போன்ற சி.டி.சி.யின் அட்லாண்டா தளத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட  ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் வரை கப்பல்கள் கரைகளிலே நிறுத்தப்பட வேண்டும் என்ற சி.டி.சியின் நிபந்தனை திருத்தப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்னரே கப்பல்களைப்  பயணிக்க வெள்ளை மாளிகை அனுமதித்தது.

Coronavirus: Pence defends Trump Jr claim Democrats want ‘millions …

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான முயற்சிகளிலிருந்து திரும்பி, மீண்டும் அமெரிக்க வணிக நிறுவனங்களைத் திறக்க வேண்டும் என்பது நோக்கி டிரம்ப் நகர்ந்த போது, உணவகங்கள், பார்கள் மற்றும் பிற பொது இடங்களில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்து, படிப்படியாக அதை எவ்வாறு செய்ய வேண்டுமென்ற வழிகாட்டியை ரெட்ஃபீல்ட் ஒப்புதலுடன் சி.டி.சி உருவாக்கியது.

அந்த வழிகாட்டுதல் எந்த வகையிலும் பயன் தராது என்று அறிவியலாளர்களிடம் வெள்ளை மாளிகை கூறியதாக அசோசியேட்டட் பிரஸில் செய்தி வெளியாகி இருந்தது. அதிபர் அலுவலகத் தலைவரான மார்க் மெடோஸ் உள்ளிட்ட ட்ரம்ப்பின் ஆலோசகர்கள், அந்த ஆவணம் பரிந்துரைக்கப்படத்தக்கது என்று உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்தியாவசியமற்ற பயணங்கள் மீண்டும் தொடங்குவதைப் பரிந்துரைப்பதற்கு முன்னர் மிக நீண்ட காலக்கெடு தரப்பட வேண்டும் என்பது போன்ற, வணிக நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகளை வெள்ளை மாளிகையை விட மிகவும் கடுமையாக சி.டி.சி முன்வைத்தது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி கூறுகிறது.

இந்த தொற்றுநோய் ஊரடங்கிலிருந்து அமெரிக்காவை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்த விரிவான கூட்டாட்சி திட்டம் எதுவுமில்லாமல், வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளான விரிவான பரிசோதனைகள் மற்றும் தொடர்புத் தடங்களை அறிகின்ற திட்டம் குறித்து நிர்வாகத்திடம் இருக்கின்ற போதாமையை எதிரொலிப்பதாகவே இந்த முடிவு இருக்கின்றது. ஒருகட்டத்தில், இத்தகைய விஷயங்களில் இறுதி அதிகாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய ட்ரம்ப், பிறகு அதை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து முடிவெடுப்பதை தனிப்பட்ட மாகாணங்களின் பொறுப்பில் விட்டுவிட்டார்.

’அனைவருக்கும் கிடைப்பதாக, அனைவரும் பின்பற்றக்கூடிய ஒருங்கிணைந்த, சிந்தனையாற்றல் மிக்க திட்டம் தொடர்ந்து இருக்கவில்லை. மாநிலங்களிடம் இந்த முடிவை விட்டுவிடுவது, தவறாக வழிநடத்துகின்ற செயலாகவே இருக்கிறது.  கூட்டாட்சிக்கான திட்டம் எதுவும் இல்லை. அதற்கான விளைவுகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று கோப்லான் கூறினார்.

இந்த தொற்றுநோயின் போது, மிக முக்கியமாக கோவிட் -19க்கான சொந்த பரிசோதனைக் கருவியை உருவாக்குகின்ற தனது ஆரம்ப முயற்சியில் சி.டி.சியும் தவறு செய்திருக்கிறது. பரிசோதனைக் கருவிகள் பிழையானவை என்று நிரூபிக்கப்பட்டன. குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான முயற்சிகள் மிக மந்தமாகவே இருந்தன. அதற்குப் பின்னர் பொதுமக்களிடம் போதுமான பரிசோதனைகளைச் செய்வதிலும் பெருமளவிற்குத் தடைகள் ஏற்பட்டன. சாதாரண வாழ்க்கையை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கு, தினமும் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்ற பரிசோதனைகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் இன்றைக்கும் குறைவாகவே இருக்கிறது. பொது சுகாதார வல்லுநர்கள் சி.டி.சி.யின் இத்தகைய நடவடிக்கை குறித்து கலக்கமடைந்துள்ளனர்.

Experts worry CDC is sidelined in coronavirus response | FOX 10

’சி.டி.சி-யில் மிகச் சிறந்த பொது சுகாதார அதிகாரிகள் உள்ளனர் – அவர்கள் மிகவும் அறிவாளிகளாக, மிகப்பெரிய பொதுநல ஊழியர்களாக இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களைப் போன்றவர்களின் அறிவியல் தலைமையே நமக்கு இப்போது தேவைப்படுகிறது’ என்று சுகாதாரத்துறையின்  முன்னாள் உதவிச் செயலாளர்  ஹோவர்ட் கோ கூறுகிறார்.

கடந்த சில மாதங்களில் சி.டி.சி மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளது என்று கோப்லான் கூறுகிறார். ஆனால் இந்த நிறுவனம் பற்றி இன்னும் நேர்மறையான உணர்வையே அமெரிக்கர்கள் கொண்டுள்ளனர் என்பதையே வாக்கெடுப்பு காட்டுகிறது. ’சி.டி.சி தள்ளாட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இந்த அனுபவம் நாம் மீண்டும் அதனுடைய பங்கை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது’ என்று அவர் கூறினார். சி.டி.சி.யின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், நிறுவனத்தின் நிபுணர்கள் பகிரங்கமாகப் பேசுவதற்கு தடை அல்லது கட்டுப்பாடு எதுவும்  இல்லை என்று தெரிவித்தார்.

மேலும்’சி.டி.சி.யின் முக்கிய ஆதாரமையங்களாக இருக்கின்ற, தொற்றுநோயியல், ஆய்வக அறிவியல் மற்றும் கண்காணிப்பு போன்றவை நாட்டின் எதிர்வினையை வடிவமைப்பதற்கு உதவுகின்றன. அதே போன்று இந்த யுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்ற முன்வரிசையில் நமது அரசு மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளின் எதிர்வினைகளும் தொடர்ந்து இருந்து உதவுகின்றன’ என்று தெரிவித்த அவர், இந்த நாடு முழுவதும் தொற்றுநோய்க்கான எதிர்வினையைச் செயல்படுத்துவதில் சிடிசி 100 சதவிகிதம் ஈடுபட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

https://www.theguardian.com/world/2020/may/14/where-is-the-cdc-trump-covid-19-pandemic

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

One thought on “அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகள் வெள்ளை மாளிகைக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை – ஆலிவர் மில்மேன் (தமிழில் தா.சந்திரகுரு)”
  1. ஐசிஎம்ஆர் & இந்திய பிரதமர் – சிடிசி & அமெரிக்க ஜனாதிபதி; அப்படியே நம்ம ஊர் கதை போல இருக்குது. கூட்டாட்ச்சித் தத்துவமும் அறிஞர்களின் ஆலோசனைகள் செயல்வடிவம் பெருவதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *