ஜீவ கரிகாலன் எழுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீட்ட ட்ரங்கு பெட்டிக் கதைகள் (Trunck Petti Kathaikal) - நூல் அறிமுகம் (Book Review)

ஜீவ கரிகாலனின் “ட்ரங்கு பெட்டிக் கதைகள்” – நூல் அறிமுகம்

ஜீவ கரிகாலன் எழுதிய ட்ரங்கு பெட்டிக் கதைகள் (Trunck Petti Kathaikal) என்ற நூலை கடந்த 2013ம் ஆண்டு மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அப்போது இந்த புத்தகத்தில் பழைய கதைகள் தொகுக்கப்பட்டிருக்கும் என்ற நினைவில் தான் வாங்கினேன். இது குழந்தைகளுக்கு கதை சொல்ல பயன்படும் என்று எண்ணினேன்.

அப்போது இந்த புத்தகத்தை திறந்து பார்த்தேன் அதில் பனிரெண்டு கதைகள் இருந்தன. கதைகளை வாசிப்பதற்கு முன்பு பொதுவாக நான் முன்னுரை, அணிந்துரைகளை வாசிக்கும் வழக்கம் கொண்டவன் நான். அப்படி ஜீவ கரிகாலனின் முன்னுரையை வாசிக்கும் போது என்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது நான் வாங்கியது பழைய கதைகளின் தொகுப்பல்ல என்று. உடனே வாசிப்பதை நிறுத்திவிட்டு அடுத்த புத்தகத்திற்கு சென்று விட்டேன்.

2024ம் ஆண்டு மதுரைப் புத்தகத்திருவிழாவில் அதே புத்தகத்தை பார்த்தேன். ஆனால் வேறு அட்டை போடப்பட்டிருந்தது. ஜீவ கரிகாலனின் அறிமுகமும் கிடைத்தது. சகோதரி அகிலா அவருடைய மற்றொரு புத்தகத்தை பரிசளித்தார். அப்போது எனக்கு அவருடைய புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று என்று தோன்றியது. புத்தகத்திருவிழாவின் இறுதி நாளில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன். அவரை நேரில் சந்தித்து எப்பூடி என்று ஒரு கை குலுக்கிவிட்டு என் அன்பை தெரிவித்தேன்.

இந்த புத்தகம் குறித்து உண்மையிலேயே என் பார்வையை எழுத வேண்டம் என்று தோன்றியது. அதனாலேயே சில காலம் எடுத்துக் கொண்டு எழுதுகிறேன். நிச்சயமாக உங்களை இந்த புத்தகத்தை வாங்கி படிக்க தூண்டும் என்று நம்புகிறேன். வாய்ப்பு இருப்பின் புத்தகத்தை வாங்கிப் படித்து உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள்.

இந்த புத்தகத்தில் ஒரு புதுவகையான எழுத்துநடையை நான் பார்க்க முடிந்தது. இதுவரை வாசித்திராத நடை அது. அவர் ஆரம்பதில் தன்னுடைய முன்னுரையில் சொல்லியது போல பல நாட்கள் அவர் அசைப்போட்டு மூலையிலேயே கிடந்த கதையாக சொல்லுகிறார். ஆனால் எனக்கு அது கதை போல தோன்றவில்லை. ஆனாலும் அது கதை தான். அந்த பனிரெண்டு கதைகளும் அற்புதமான வெவ்வேறு நடைகளில் பயணிக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். எப்படி இப்படி ஒருவர் பல வகையான எழுத்துக்களை உள்வாங்கி எழுது முடியும் என்று தெரியவில்லை.

இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது இவர் ஒரு பெரிய ஓவியராக இருக்க வேண்டும் என்றுதான். அத்தனை தேர்வான ஓவியங்கள் குறித்த நுணுக்கங்களை வைத்து கதைகளை படைத்துள்ளார். ஆனால் அவர் உண்மையில் ஓவியர் இல்லை என்பதை பின்னர் அறிந்து ஆச்சரியபட்டேன். ஒரு விஷயம் உறுதிபடுத்தப்பட்டது. ஓவியர்களின் ஊடே பல ஆண்டுகள் அவர் பயணப்பட்டிருக்கிறார்.

இதிலிருக்கும் பனிரெண்டுகதைகளையும் பேசலாம் என்றாலும் என்னை கவர்ந்த விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

12சி பஸ்ரூட்டில் அவர் காட்டிருக்கும் முனீஸ்வரன் கோயில். ஒவ்வொரு பகுதியிலும் மலையேறும் இடத்தில் இது போன்ற கோவில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். பெயர்கள் வேண்டுமென்றால் வேறு வேறாக இருக்கலாம். மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் உசிலம்பட்டியை அடுத்து அந்த கனவாயில் இப்படி ஒரு கோவில் இருக்கிறது. அப்போது அனாதையாக இருந்த கோவில் இன்றைக்கு கெடாவெட்டி பொங்கல் வைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதைத்தான் அவர் கரூர் பகுதியில் உள்ள மலைபகுதியை குறிப்பிடுகிறார். அதில் முக்கியமான விஷயம் நவீன மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது பேய் பிசாசுகள் காணாமல் போய்விடுகின்றன என்பதையும் அவை நளிவடையும்போது மீண்டும் தலை தூக்குன்றன என்பதையும் ஆசிரியர் பதிவு செய்கிறார். அற்புதமான நடையில் இந்த கதை செல்கிறது.

இந்த புத்தகத்தை படிப்பதற்கு சற்று தேர்ந்த வாசிப்பாளராக இருக்க வேண்டும். அப்போதுதான் நடையை புரிந்து கொள்ள முடியும் என்று என்னுகிறேன். சில கதைகள் சினிமா போன்று இரண்டு இடங்களில் நடக்கும் சம்பங்களை இணைக்கின்றன. நீண்ட வாக்கியங்களை கொண்டதாக உள்ளது. ஒரு வாக்கியம் என்பது 28 வார்த்தைகளை கொண்டாகவும் அமைந்திருப்பதை தொடக்க நிலை வாசிப்பாளர்களை சோர்வடையச் செய்யும்.

அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என்று ஒரு பாடல் நாங்கள் அறிவொளி காலங்களில் பாடுவது ஒன்று. அந்த பாடலில் அந்த குழந்தைபடும் அனைத்து பாடுகளையும் சொல்லிவிட்டு இறுதியில் இப்படிக்கு உங்கள் மகள் கோடீஸ்வரி என்று முடியும். அப்படியான ஒரு வரியை மகாராணி யை அறிமுகப்படுத்தும் போது பார்க்க முடிகிறது.

தூத்துக்குடி கேசரியின் கதையில் கிண்டல்கள் நிறைந்ததாக இருப்பதை பார்க்க முடிந்தது. இவை புதுமைப்பித்தனின் கதைகளில் அப்படியான கிண்டல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஜீவ கரிகாலன் முன்னுரையில் சொல்லுவது போல பெரிய வாசிப்பு பின்புலமில்லாவரால் இது எப்படி சாத்தியமானது என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளத்தில் வேறு வேறு விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது உணர முடிகிறது.

மஞ்சள் பூ எப்படியான ஒரு கதையா. அற்புதம் மிக அற்புதம். எப்படி என்றே தெரியவில்லை. ஒரு பனிபிரதேசத்தில் உள்ள நுணுக்கங்களை உள்ளடக்கிய அந்த கதை அவ்வளவு நேரத்தியாக அந்த பகுதியை, அந்த வீட்டை நம்முடைய கண்முன் விரியச் செய்கிற நடை. அந்த ஜென்சியின் மரணம் கற்பனை என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே போல கடைசி கதையில் விபத்தில் மரணிக்கும் காதலியையும் சோகத்தை வரவழைக்கிறது.

கதைகளில் வரும் சொற்கள் எவ்வாறு தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக இன்றைய நடைமுறையில் உள்ள எழுத்துக்களை எழுதி கொண்டு வரும் போது வரலாற்றில் நடக்கும் கதையையும் இங்கே எழுதியுள்ளார். அவருடை முன்னுரையில் அதை பதிவு செய்துள்ளார். வரலாற்று கால சொற்களையும் பதிவு செய்துள்ளார்.

உண்மையில் இது ஒரு ட்ரங்கு பெட்டிக் கதைகள் (Trunck Petti Kathaikal) தான். இந்த கதைகள் அனைத்தும் பல ஆண்டுகள் அசை போட்டு அசை போட்டு எழுதப்பட்ட கதைகளாக இருக்கின்றன என்பதை மட்டும் உணர முடிகிறது.

கதைகளில் வரும் வருணனை சில உங்களுடன் பகிர்ந்து கொள் ஆசைப்படுகிறேன். காட்சி என்ற கதையில்” பக்கவாட்டுக் குளத்தில் 90 சதவீத நீரை உறிஞ்சிக் குடித்துவிட்ட சூரியன், மிஞ்சியிருக்கும் தண்ணீரில் நாளையும் 0.66 சதவீதத்தை காலி செய்யும் எக்காளப் புன்னகையோடு தன் பிம்பத்தை அந்த சேற்றுத் தண்ணீரில் மூழ்கியத்து விளையாடிக் கொண்டிருந்தது.”

ஒரு அறிவியல் செய்தியை எவ்வளவு எளிதாக விளக்கபட்டிருக்கிறது இந்த ஒரு வரியில். இந்த கதையில் இப்படியான செய்திகளுக்கு பஞ்சமில்லை. வாசிக்கும் போது உணரமுடியும் தொடுதல் கதையில் பஸ் பயணம் பெண் சீட்டில் ஒரு ஆணுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விரிவாக போகிறது. பஸ் பயணத்தில் எந்த ஆணையும் சந்தேகப்படும் பெண்கள் தான் அதிகம். மகளை காக்க பாடாய் படும் அம்மா.

”அச்சிறுமி என் தோளில் சாய்ந்தபடி தூங்கிகொண்டிருந்தாள். அவள் தாயும் நன்றாக தூங்கிகொண்டிருந்தாள். என் டீஷர்டில் அவளது எச்சில் இடது தோளை நனைத்திருந்தது. சட்டென எனது தோளைக் கொண்டே அவளை நகர்த்திவிட்டு நான் என் இருக்கையில் சாய்துவிட… அப்பா என்று சினுங்கிகொண்டே மீண்டும் என் தோளில் சாய்நதாள். இடது கரத்தையும் கொண்டு என்னைப் பற்றிக்கொண்டாள்.”

இதை வாசித்து முடிக்கும் போது அத்துணை துயரங்களையும் எளிமையாக கடக்கி உணர்வு உங்களுக்குள் ஏற்படுவதை பார்க்கலாம். இப்படியான பலதும் இந்த 12 கதைகளுக்குள் கிடக்கிறது.

இதை புத்தகம் என்று சொல்லுவதா நூல் என்று சொல்லுவதா? எதுவாயினும் இந்த ட்ரங்கு பெட்டியில் உங்களுக்கான கதைகளும் அனுபங்களும் கிடக்கிறது. எடுத்து பார்த்து அனுபவிங்கள்.

ஜீவ கரிகாலனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். இப்படியான எழுத்துகளை வாசிக்க கொடுத்தமைக்கும், பல்வேறு ஓவிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியமைக்கும் எனது நன்றி. கதைவழி ஓவியம், ஓவியம் வழி கதை இரண்டையும் படைத்துள்ள உங்களது புதுமையான வழி பாராட்டதக்கது. வாழ்த்துகள்.

நூலின் விவரங்கள்: 

நூல்: ட்ரங்கு பெட்டிக் கதைகள் (Trunck Petti Kathaikal)
ஆசிரியர்: ஜீவ கரிகாலன்
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 176
விலை: ரூ. 150
தொடர்புக்கு: 9042461472

நூல் அறிமுகம் எழுதியவர்:

மொ. பாண்டியராஜன்
மதுரை.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *