*டி.யு.சி.எஸ். பால் பவுடர்.. 1962!* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

TUCS Milk Powder .. 1962! (*டி.யு.சி.எஸ் பால் பவுடர் 1962* சிறுகதை) Short Story By Dr. Balasubramanian K. Story About Ration Shop Accountant“உரிமை இழந்தோம்..
உயிரை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா..”
பணி ஓய்வு பெற்று, இளைப்பாறும் என் மனம்… எனக்கு பிடித்த இந்த பாடலை  வானொலியில் கேட்டபோது.. என் நினைவலைகளை.. 1960களின் ஆரம்ப நாட்களுக்கு அழைத்து சென்றது…..
மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த கபாலி ஆகிய நான்.. க்ருஷ்ணாயில் வண்டி இழுத்து,  எனை படிக்க வைத்த தந்தையையும், மந்தார இலை தைத்து விற்று, என்னையும் என் ஒரே தங்கையையும் காப்பாற்றிய தாயையும், நினைவு கூர்ந்த வண்ணம், சேப்பாக்கம் டி. யு. சி. எஸ். ரேஷன் கடையை திறந்து அமர்ந்தேன்.
நான் தான் அந்த கிளையின்  அக்கௌன்டன்ட், எனக்கு கீழே, ஒரு உதவி அக்கௌன்டன்ட், ஒரு சேல்ஸ்மென், 2 சோக்ரா (எடுபிடிகள் )., பணி செய்தனர்..
பண பரிவர்த்தனை, சரக்கு இருப்பு, கணக்கு வழக்கு  ஆகிய அனைத்துக்கும் நானே பொறுப்பு!., லஞ்சமில்லா, ஆங்கிலேயன் காலத்தில்…இந்த வேலை கிடைக்க  நான் பட்ட பாடு, கொஞ்சம் நஞ்சம் அல்ல.
அது பஞ்சம் தலை விரித்து ஆடிய, கொடூரமான காலகட்டம்.. அரிசி கிடைப்பது குதிரைகொம்பு, கோதுமைக்கு, அமெரிக்க  கப்பலுக்காக காத்திருந்த கஷ்டகாலம்.. காப்பிக்கொட்டை, சீனி இவை கள்ள மார்க்கெட்டில், தங்கம்போல் விற்கப்பட்ட காலம்… கைக்குழந்தைகள்,  உயிர் காக்கும் பால்பவுடரை , ஐரோப்பிய நாடுகளிடம் பிச்சையாய்ப் பெற்ற காலம்.. போதாத குறைக்கு “இந்தோ சீன”யுத்தம் மேகங்கள் சூழ்ந்து, இந்தியா நிலைகுலைந்து நின்ற காலகட்டம் அது.
டி. யு. சி எஸ்.. பொது விநியோக, நியாய விலை கடை ஒன்றுதான், மக்களின் பசிப்பிணி போக்கிய அட்சய பாத்திரம்.. அரிசி, பால் பவுடர், காப்பிக்கொட்டை, சீனிச்சக்கரை, முதல் சின்ன வட்டவடிவ பிரிட்டானியா பிஸ்கட் வரை, சாதாரணன் முதல் சாமான்யன் வரை.. அனைவர்க்கும் நியாயமாய் வழங்கிய, கற்பக விருட்சம் இந்த கடை.
காலை ஏழு மணிக்கு நான் கடை திறக்கும் முன்னரே, திருவிழா கூட்டம் போல் மக்கள் அலை மோதுவர்.. பால் பவுடர், காப்பிக்கொட்டை, வெள்ளை சர்க்கரை (அஸ்கா), சன்ன அரிசி… இவை, விநியோகிக்கும் நாளன்று, அந்த ஏரியாவே அல்லோல கொல்லோலப்படும்.., காவல்துறை அழைக்கப்பட்டு, சீன சுவர்போல் நீளும் ஆண், பெண் தனிதனி வரிசைகள் ஒழுங்குபடுத்தப்படும்.
என் அக்கௌன்டன்ட் பணியை,  நான் மிகவும் நேசித்தேன்..! என்னதான் நேர்மையை கடைபிடித்தாலும், ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும், நான் ஆளாவும் போது விரக்தியே மிஞ்சும்.. போதாத குறைக்கு, மேலதிகாரிகளின், திடீர் சோதனை கெடுபிடி தொல்லைகள் வேறு உயிரை வாங்கும்.!.
ஆனால், எல்லாவற்றையும் நீந்தி கடக்க பழகிக்கொண்டு, அடுத்த நொடியே அதனை உதறித்தள்ளி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ எனும் வள்ளலார் வாக்குப்படி, மீண்டும் உழைப்பேன்.
ஒருநாள், பால்பவுடர் வழங்கும், நன்னாளாக அமைய, “இன்று சாமர்த்தியமாய் இந்நாளை கடந்திட வேண்டுமே ” என்று இறைவனை வேண்டியபடி கடை திறந்தேன்.. ஏகப்பட்ட தாய்மார்கள் கூட்டம், குழந்தைகளை, தோளிலும், இடுப்பிலும் சுமந்தபடி, திருவிழா போல் நிரம்பி வழிந்தது.. நானும் என் சக ஊழியர்களும் பொறுமையாய்,  திறமையாய் நிலைமையை கையாண்டோம்..,
கடை மூடும் நேரமான மாலை ஏழுமணி வாக்கில், கண்ணகிபோல் விரிந்த கூந்தலும், நல்ல தங்காள்போல், இடுப்பில் ஒரு நோஞ்சான் குழந்தையுடனும் வந்த, ஒரு ஏழைத்தாய்
“ஐயா, நான் வாங்கிக்கினு போன பால்பவுடரை கல்லு தடுக்கி விழுந்து, சாக்கடையில் முச்சூடும் கொட்டிட்சி… ஐயா! எம்மூணு கொழந்தைகளும் நேத்துல இருந்து  பால் இல்லாம பட்னி கிடக்குதுங்க ஐயா!, இந்த குழந்த மூஞ்ச கொஞ்சம் பாருங்க ஐயா!, அது செத்துடும் பொல இருக்குதுங்க ஐயா!, என் தாலிய வேண்ணா எட்த்துக்கங்க ஐயா!, பால் பவுடர் மட்டும் இல்லேன்னு சொல்லாம குடுங்க ஐயா! உங்க புள்ள குட்டிங்களுக்கு எல்லா புண்ணியமா போகும், ஐயா!”
என்று என் காலில் விழுந்து கதற, மெல்ல கூட்டம் கலைய தொடங்கியது..
அக்காலத்தில், எத்தனை பணம் கொடுத்தாலும் பால் பவுடர் கிடைப்பது, மிகவும் கடினம். அவளுக்காக  நான் பரிதாபப்பட்டு பால் பவுடர் கொடுத்தால், ஸ்டாக் உதைக்கும், திடீர் திடீர்னு வரும் கண்காணிப்பாளரிடம் மாட்டினால், வேலை இழப்பது நிச்சயம்..
என்ன செய்வது என நான் கையை பிசைய, என் மொத்த குழுவும் “வேணா சார், குடுக்காதிங்க சார்!நம்ப வேலை போய்டும் சார், நாங்க இதுக்கு ஒதுக்கவே  மாட்டோம் சார்”என என் சக ஊழியர்கள், எதிர்ப்பு குரல் கொடுக்க, அந்த தாயின் கண்ணீர் வடியும் முகம் என்னை புரட்டி போட்டது..
இறுதியில், என் வேலையே  போனாலும் பரவாயில்ல, இந்த குழந்தையை காப்பாற்றியே  தீர வேண்டும்,  என இரக்கம் மேலிட முடிவு செய்து, சேல்ஸ்மேனிடம், அவளுக்கு இலவசமாய்..  பால்பவுடர் கொடுக்க கேட்டுக்கொண்டேன்.. அவர் “முடியாது சார்” என்று மறுக்க, நானே சென்று, அவளுக்கு வழங்கினேன்.. அந்தத் தாய், ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்திய அந்த ஒரு வாழ்த்து… கோடி பெறும்.!!
ஒரு வழியாய் பால்பவுடர்,  அளவை “டெபிசிட்” (குறைவு), காட்டி கணக்கை முடிக்க எத்தனித்தபோது,.. கிருஷ்ணய்யர் தலைமையிலான, பறக்கும் படை வந்தே விட்டது… கிருஷ்ணய்யர் மிகவும் கண்டிப்பானவர், நாணயமானவர், நேர்மைக்குப் பேர் போனவர், அவர் வந்தால் சிம்ம சொப்பனம் தான்.. !
என் கதை முடியும் நேரம் நெருங்கி விட்டது என உணர்ந்த நான்.. என் அழுகையை அடக்கிக்கொண்டு, மெல்ல அனைத்து ஸ்டாக் ரெஜிஸ்டர்களையும் அவரிடம் ஒப்படைத்தேன்.. அவர் அதிகம் பேசமாட்டார்.. அன்று ஏனோ, என்னை ஒருமாதிரியாக உற்று பார்த்தார்…
முதல் ஐட்டமாக பால் பவுடர் நிலுவையை சோதனை செய்தார்.. எங்கள் இதய துடிப்பு நின்று விடும் போல் இருந்தது, என் ஏழை குடும்பம் என் கண்முன்னே பரிதாபமாய் வந்து நின்றது…!! அவரோ, “உம், கரெக்டா இருக்கு, அடுத்து காப்பி கொட்டையை எடை போடுங்கள்” என்று கூறி நகர்ந்து விட, அனைவர்க்கும் வியப்பு… சிறிது நேரத்தில், “வெரி  குட் , எல்லாம் சரியாய் இருக்கு, இங்க ஒரு கையெழுத்து போடு” என்று, தன் பணியை முடித்து கொண்டு கிளம்பினார்..
பின் குறிப்பு: கிருஷ்ணய்யர், வரும் வழியில், பால்பவுடர்,  காவாயில் கொட்டி  வீணானதை பார்த்து, ஒரு பெரியவரிடம் விசாரிக்க, அவர் நடந்த அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க, அந்த கல்லுக்குகுள்ளும்  ஒரு ஈரம் பரவி.. கருணை காட்டும் உத்தரவுடன், முடிந்தது அவர் மன போராட்டம்…
 **************

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.