நூல் அறிமுகம் : டுட்டுடூ – எஸ். ஹரிணி

நூல் அறிமுகம் : டுட்டுடூ – எஸ். ஹரிணி

 

 

 

நூலின் பெயர் : டுட்டுடூ
ஆசிரியர் : வே.சங்கர்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 64

“டுட்டுடூ”, நூலின் தலைப்பைக் கேட்கும் பொழுதே வித்தியாசமாக இருக்கிறது. தலைப்பிற்கு ஏற்றபடி கதையும் வித்தியாசமாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் வரும் முக்கியக் கதாப்பாத்திரமான ‘ஆழ்வி’ என்ற பெயர் புதுமை. கூடவே பயணிக்கும் மற்ற கதாப்பாத்திரங்களான ”தூதுவை”, “குறளினி” போன்ற பெயர்களும் வியப்பில் ஆழ்த்துபவையாகவே இருக்கின்றன.

இக்கதை சுட்டிக்காட்டும் எல்லா நிகழ்வுகளும் வாசிப்பவர்களுக்கு நிகழ்ந்த ஒன்றைப் போலவே இருக்கிறது. குழந்தைப் பருவத்தில், தமிழின் சிறப்பு ‘ழ’கரம் பலருக்கும் உச்சரிப்பதில் சற்று சிரமம் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்நூலினைக் கடைசி வரை வாசித்து முடிக்கும்போது அதைச் சிரமம் இல்லாமல் குழந்தைகள் உச்சரிப்பார்கள் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும்.

இந்நூலை வாசிக்கும்போது, என் சிறுவயதில் நடந்த சில நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. பெரும்பாலும் பள்ளிவயதுச் சிறுமிகளுக்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அந்தப் பிராணிகள் செய்யும் சிறு சிறு செய்கைகளைக்கூட தன் உடன் பயிலும் மற்றவர்களிடம் சொல்லிச் சிரித்துக்கொள்வார்கள்.

ஆறாம் வகுப்பும் படித்த பொழுது, நானும் எனது தோழியும் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு நாய்க்குட்டி ஒன்று தனியாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். இக்கதையில் வரும் ஆழ்வியைப் போன்றே எனக்கும் என் தோழி வித்யாவிற்கும் ஒரே சந்தோஷம். இருவரும் அந்த நாய்க்குட்டியைத்
தூக்கிக் கொஞ்சினோம்.

அதனோடு விளையாடினோம். நீண்ட நேரமாகிவிட்டது. எனக்கோ அந்தக் குட்டி நாயைப் பிரிய மனசே இல்லை. இருவரும் சேர்ந்து கையிலிருந்த காசுக்கு ஒரு ரொட்டி வாங்கிக் கொடுத்தோம். அதுவும் மகிழ்ச்சியில் எங்கள் பின்னால் வால் ஆட்டிக்கொண்டே வந்தது. அந்தக் குட்டி நாய்க்கு என்ன பெயர் வைத்தோம் என்று நினைவில் இல்லை. ஆனால், அடையாளத்திற்கு என் நெற்றிப் பொட்டை அதற்கு வைத்துவிட்டு, பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுவிட்டு வீடுபோய்ச் சேர்ந்தோம். இரவெல்லாம் அந்த நாய்க்குட்டியுடன் விளையாடுவதைப் போலவே கனவு வந்தது.

மறுநாள் அந்த குட்டி நாயை விட்ட இடத்திற்குப் போய் பார்த்தோம். அந்த நாய்க்குட்டியைக் காணவில்லை. ரொம்ப கவலையாகிவிட்டது. நீண்டநாட்கள் அதன் நினைவாகவே இருந்தேன். எப்படியாவது ஒரு நாய்க்குட்டியை வளர்க்கவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது அதற்குப் பிறகுதான்.

இரண்டாம் வகுப்பு படித்த போது தெருநாயைக் காசு கொடுத்து வாங்கினேன். இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. ஐந்து குட்டி நாய்களை பத்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதை எப்படி வீட்டுக்குக் கொண்டு செல்வது என்று தெரியவில்லை.

எல்லாக் குட்டி நாய்களையும் என் பாவாடையில் அள்ளிக்கொண்டு
வீடு வந்து சேர்ந்தேன். என் பாட்டி என்னை வீட்டுக்குள்ளேயே
விடவில்லை. எனக்கு சரியான அடி கிடைத்தது. நீண்ட நேரம் அந்த குட்டி
நாய்களை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு வெளியிலேயே
நின்றுகொண்டு இருந்தேன். வேலை முடிந்து வந்த என் அப்பாதான் என்னை சமாதானப்படுத்தி குட்டி நாய்களை வேறொரு இடத்தில் விட்டுவிட்டு வந்தார். அதன்
பிறகுதான் நான் வீட்டிற்குள்ளேயே செல்ல முடிந்தது.

இக்கதையில் வருவதைப் போல குழந்தைகள் சிறுவயதில் பெரும்பாலும் விளையாடும் விளையாட்டு ‘டீச்சர்’ விளையாட்டுத்தான். நான் நிறைய முறை விளையாடியிருக்கிறேன். என் அம்மாவின் துப்பட்டாவை புடவையாகவும், அவரது செருப்பை என் சிறிய கால்களிலும் அணிந்துகொண்டு விளையாடியிருக்கிறேன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நான் டீச்சர் என்றால் எனது மாணவ மாணவிகள்
மொத்தமும் ‘ஈக்கள்” தான்.

அதுமட்டுமல்ல, சிறுவயதில் ‘8’ என்ற எண்ணை எழுத ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஒன்றாம் வகுப்பு அனிதா மிஸ் தான் பொறுமையாக எட்டு எப்படி போடுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார். என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது.

இப்புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. நிகழ்வுகளுக்கு ஏற்ப அத்தனை அழகாக வரையப்பட்டிருக்கின்றன.

வகுப்பறைக் குழந்தைகள் சொல்லும் ‘பப்பாளி ஃப்ரூட்”, “தவக்களை” போன்ற வார்த்தைகள் நிஜத்தில் நடந்தது போலவே இருந்தது. நாய்க்குட்டிக்கு எழுதிய பாடல் “எங்கள் வீட்டு நாய்க்குட்டி” மிகவும் அருமையாக இருந்தது.

இக்கதையின் மூலம் என் பழைய நினைவுகளை நிழலாடச் செய்தது என்று சொன்னால் அது மிகையல்ல. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்கத்தகுந்த நூல் வே.சங்கர் அவர்களின் “டுட்டுடூ”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *