த.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய “விண்மீன்கள்: வகை வடிவம் வரலாறு” புத்தகம் | TV Venkateswaran"s Vinmeengal Vagai Vadivam Varalaru Tamil Book Review | www.bookday.in

த.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய “விண்மீன்கள்: வகை வடிவம் வரலாறு” – நூல் முன்னுரை

“விண்மீன்கள்: வகை வடிவம் வரலாறு” – நூல் முன்னுரை

தாய்தான் தனது முதல் அறிவியல் ஆசிரியர் என்றார் ஒரு கவிஞர். தாய்தான் நமக்கு வானவியல் பாடம் கற்றுத்தந்த ஆசான்.

‘அதோ பார் நிலா மாமா…’ ‘எவ்வளவு அழகான விண்மீன்கள்’ என்று கூறிக்கொண்டே நமக்குச் சோறு ஊட்டுவாள். இரவு வானின் அழகை ரசிக்க, தாயின் மடியில் உட்கார்ந்திருக்கும் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கிறாள். அடம்பிடிக்காது குழந்தையாக உணவு உட்கொள்ளும். உணவோடு உணவாக இயற்கையையும் ரசிக்கும்.

‘மின்னும் மின்னும் விண்மீனே!
நீ ஒளி தருவது எதனாலே?
பூமிக்கு வெகுதூரத்தில்
வைரம் போலவே வானத்தில்
மின்னும் மின்னும் விண்மீனே!
நீ ஒளி தருவது எதனாலே…’

எனச் சிறு பிள்ளையாக வியந்து மழலையர் பள்ளியில் பயிலும் போது பாடியிருப்போம்.

இரவு வானில் காட்சிப்படும் விண்மீன்கள் எல்லாம் சூரியனைப் போன்றவை. தொலைவில் உள்ளதால் ஒளிப்புள்ளியாகத் தென்படுகின்றன. நமது சூரியன் உட்பட இரவு வானில் காட்சிப்படும் விண்மீன்கள் எல்லாம் பால்வழி மண்டலம் எனும் அண்ட மண்டலத்தின் (Galaxy) அங்கம். நமது பால்வழி அண்ட மண்டலத்தில் மட்டுமே சுமார் இருநூறு பில்லியன் விண்மீன்கள் உள்ளன. புலப்படும் பிரபஞ்சத்தில் மட்டுமே நமது பால்வழி மண்டலம் தவிர சுமார் பத்தாயிரம் கோடி அண்ட மண்டலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு அண்ட மண்டலத்திலும் சராசரியாகப் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன.

நமது அண்ட மண்டலத்தில் (Galaxy) உள்ள மொத்த விண்மீன்களின் தொகை மட்டுமல்ல, அவற்றின் வகைகளும் பிரமிப்பைத் தருபவைதான். கருந்துளை, நியூட்ரான் விண்மீன், சிவப்பு ராட்சசன், வெள்ளைக் குள்ளன், பழுப்புக் குள்ள விண்மீன், பல்சார், செஃபீடு வகை விண்மீன்கள் என விண்மீன் வகைகள் மலைப்பைத் தரக்கூடியவை.

வளர்ந்த போது, மாற்றம்தான் இயற்கையின் பொதுவிதி என்பது புரிந்தது. பார்வைக்கு என்றும் நிலைத்திருப்பது போன்று இரவு வான் வெளி தோன்றினாலும், உள்ளபடியே அமளி துமளியான தீவிர மாற்றங்கள் பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நேற்று இருந்த நாம் இன்றில்லை. நேற்று நம் உடம்பின் பாகமாக இருந்த பல லட்சம் அணுக்கள் இன்று நம் உடலில் இல்லை; அதற்குப் பதில் வேறு அணுக்கள் நம்முள் புகுந்துவிடும்.

நாம் நமது உடலில் உள்ள அணுக்கள் அல்ல. கருவுற்ற காலத்திலிருந்து அணுக்கள் எடுக்கும் வடிவம்தான் நாம். அணுக்கள் மாறலாம்; நமது வடிவம் பரிணமிக்கிறது. உணவு உண்ணும்போதும் மூச்சுக்காற்றை விடும்போதும் நாம் நமது சுற்றுப்புறத்தினூடே உறவாடிக்கொண்டிருக்கிறோம். சற்றேறக்குறைய இந்த அணுக்கள் எல்லாம் விண்மீனில் தோன்றியவை. எனவே வேறு வார்த்தையில் கூறப்போனால் நாம் எல்லோரும் விண்மீனின் தூசிதான் என நான் படித்தபோது வியந்து போனேன்.

வானவெளியின் பரந்த அளவைப் புரிந்துகொள்ள ஓர் ஒப்பீடு பார்ப்போம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையை மேசைப் பந்து அளவு எனக் கொண்டால், நமக்கு நெருக்கமாக உள்ள ஆல்பா சென்டாரி சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். இதே ஒப்பீட்டில் சூரியனது விட்டம் வெறும் ஒரு மில்லிமீட்டர்தான் இருக்கும். விரிந்த பெரிய வானவெளியில் பரந்து கிடக்கும் கடலில் மிதக்கும் தூசி அளவுதான் பூமி முதலிய கோள்களும் விண்மீன்களும்.

வியப்பும் மலைப்பும் திகைப்பும் உள்ளதுதான் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தில் நம் கண்களுக்குப் புலப்படுகின்ற பொருள்தான் விண்மீன். அந்த விண்மீன்கள் யாவை? அவற்றின் தோற்றம், வளர்ச்சி, இறுதியில் மரணம் குறித்தும், விண்மீன்களின் வகைகள் குறித்தும் இந்த நூல் விவரிக்கிறது.

இயற்கையைக் குறித்துப் புரிந்துகொள்ள நம்முள் இருக்கும் இயல்பான குறுகுறுப்பும் தேடலும் ஆர்வமும் நாள்பட நாள்பட மங்கி வருகின்றன. இயந்திரகதியான வாழ்க்கையில் இந்த ஆச்சரியமும் குறுகுறுப்பும் இருந்த இடம் தெரியாமல் போனாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் நீறுபூத்த நெருப்பாக ஜொலிக்கும் என்பதை அறிவியல் இயக்கப் பணியின் ஊடே நாங்கள் இனம் கண்டோம்.

கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை விவசாயிகள், நகர்ப்புறத்தில் இருக்கும் குடிசைப் பகுதி மக்கள் என அனைத்துத் தரப்பினரும் அறிவதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதை எங்கள் அறிவியல் இயக்க அனுபவத்தில் அறிந்தோம்.

அறிவியல் இயக்கத்தின் தொடக்க ஆண்டுகளில் ‘பிரபஞ்சம்’ பற்றிய ஸ்லைடு காட்சிகளைத் தயாரித்து மக்களிடையே விளக்கிப் பேசினோம். பள்ளிகளில் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் மட்டுமல்ல, சென்னை நகரில் பல குடிசைப் பகுதிகளில்கூட இத்தகைய ஸ்லைடு காட்சிகளை நடத்தி இருக்கிறோம்.

தமிழகத்தின் பல குக்கிராமங்களிலும் இத்தகைய காட்சிகள் அறிவியல் இயக்கத்தால் நடத்தப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தைப் பற்றி, விண்மீன்களைப் பற்றி அறிய ஆர்வத்துடன் அனைவரும் திரண்டனர். மக்களின் அறிவுத் தாகம் அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த எங்களுக்கு உற்சாகம் அளித்தது.

இத்தகைய ஸ்லைடு படக் காட்சிகளை நடத்தும்போது பலர் எங்களிடம் வந்து ‘விண்மீன்கள்’ குறித்த நூல் இருக்கிறதா என்று கேட்டதுண்டு. எளிமையான தமிழில் நவீன அறிவியல் சிந்தனைகள் வெளிவரவில்லை என்ற ஏக்கம் எங்களிடம் இருந்தது. இதன் வெளிப்பாடுதான் இந்த நூல்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிரபஞ்சம் ஓர் அறிமுகம்’ மற்றும் ‘மின்னும் மின்னும் விண்மீனே’ என்ற நூல்களை எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் அப்புத்தகத்தை விரும்பிப் படித்ததாக எழுதினர். மேலும் விரிவான புத்தகங்கள் தேவை என்றும் கூறினர். இந்தப் பின்னணியில் விண்மீன்களின் உலகைப் பற்றி ஓர் அறிமுகமாக எழுதப்பட்டதே இந்நூல்.

இந்நூலின் பிரதியைச் சரிபார்த்துத் தந்த சேலம் கி. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி. மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஊக்கம் ஒரு முக்கிய அடிப்படை. இந்நூலினை வெளியிடும் பாரதி புத்தகாலயத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் நன்றி.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:விண்மீன்கள்: வகை வடிவம் வரலாறு
நூல் ஆசிரியர்:
வெளியீடு:
விலை: (10% discount price was:
எழுதியவர்:  

✍🏻 த.வி. வெங்கடேஸ்வரன்

புத்தகம் வாங்க: www.thamizhbooks.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *