அ.சீனிவாசன் எழுதிய பன்னிரெண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள்

***********************************************

1. நான் மகான் அல்ல

***********************************************

நான்
மகான் அல்ல.
ஆடு மேய்க்கும்
சிறுவர்களுக்கெல்லாம்
பள்ளிச்சீருடை
பொருத்திப் பார்ப்பவன்—

பொருத்தி மட்டும் பார்க்கும்
கையாலாகாத
என் மனதை
எந்த கில்லட்டினில்
பொருத்துவேன்?

***********************************************
2. தீக்குச்சிகள்

***********************************************

சிறைத்தண்டனை
போதாதென்று
எரித்தும் விடுகிறார்கள்.

பாவம்—
என்ன குற்றம்
செய்தன
தீக்குச்சிகள்?

***********************************************

3. கிராமச் சாலை

***********************************************

கிராமச் சாலை
ஆத்தோரம்
சாலை வந்தது—
அப்புறம்
ஆற்றைக் காணோம்.
ஏரியோரம்
சாலை வந்தது—
அப்புறம்
ஏரியைக் காணோம்.
காட்டோரம்
சாலை வந்தது—
அப்புறம்
காட்டைக் காணோம்.
வயலோரம்
சாலை வந்தது—
அப்புறம்
வயலையே காணோம்.
அந்தச் சாலை வழியாகத்தான்
பக்கத்து ஊர்
தொழிற்சாலைக்கு
வேலைக்கு
பஸ்ஸில்
ஊரே போகிறது

***********************************************

4. குழந்தையாக மாறுதல்

***********************************************

ஒரு ரப்பர் வைத்த
பென்சில்,
ஒரு பிங்க் கலர்
சாக்பீஸ்,
பெரிய சைஸ்
எலந்தவடை—
கிடைத்தது போல
அவ்வளவு
புளகாங்கிதம்.
இப்போதாவது நம்பு—
உன் அரவணைப்பில்
நான்
குழந்தையாகவே
மாறிவிடுகிறேன்.

***********************************************
5. பணக் குழப்பம்

***********************************************

பணக் குழப்பம்
பத்து ரூபாய் போடுவதா
இருபது ரூபாய் போடுவதா
என்ற குழப்பத்தில்—
இரு பத்து ரூபாய்
நோட்டுகளோடு
ATM கார்டும்
நழுவி
உண்டியலில்
விழுந்தது!

***********************************************

6. திரு(ந்தா) கிளிகள்!!

***********************************************

உழவுக் கிளிகள்
தொழிலாளிக் கிளிகள்
படிக்கும் கிளிகள்
படிக்காத கிளிகள்
வேலைக் கிளிகள்
வேலை வேண்டிய கிளிகள்
மணம் காக்கும் கிளிகள்
மணம் நோக்கும் கிளிகள்
காத்திருக்கும் கிளிகள்—
வெவ்வேறு.
காத்திருக்கும் நிலம்—
வெவ்வேறு.
வெடிப்பதென்னவோ
ஒரே
இலவம்!!

***********************************************

7

***********************************************

தூக்கத்தைக்கூட
யாராவது அபகரித்துக் கொள்ளலாம்.
ஆனால் உன் கனவுகளை
யாராலும்
பிடுங்க முடியாது.

***********************************************
8

***********************************************

பெண்பிள்ளைகள் இல்லாத
வீட்டுச் செடியில்
பூக்கள்
வாடியபடியே மலர்கின்றன.

***********************************************

9

***********************************************

தரமே நிரந்தரம்
மலர்களைப் பறிப்பதைப் போலவே
காதலைச் சொல்வதும் —
பலாத்காரம்,
சுயநலம் கூட.
மங்கையின் நேசச் சுவாசத்தில்
மலர் தானாக உதிர்வதைப் போல
ஒத்திசைவுடன் தாமாக வெளிப்படுவதே
தரமான காதல்.
காதல் இருந்தால்
சொல்லாதீர்கள்.
சொல்லாமலே
மறுபுறமும் பூக்கலாம்.

***********************************************

10

***********************************************

அவள் கைமலர்
என்னைவிட அதிகம் பதட்டமாய்.
இருக்கும் வரை இருக்கலாம் —
இருக்கும் கணங்களே போதும் என
மெதுவாய்ச் சமாதானம் சொல்லி
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது.
தூக்கிப் போடுவதாயினும்
அருகிலேயே போடு
என்ற வேண்டுதலோடு.

***********************************************

11

***********************************************

காணாமற் போகத் தயாராகி விட்டேன்.
ஆனால்
போகும் முன்
“வருகிறேன்”
என்று உன்னிடம் சொல்லாமல்
போக முடியவில்லை.

***********************************************

12

***********************************************

மாடித் தண்ணீர்த் தொட்டி
நிரம்பி வழிந்து
சுற்றுச்சுவர் தாண்டி
தன் வேருக்கு
பொழிகிற நீருக்கு
எந்தக் கடனும் வைக்காது,
அன்றைக்கே அன்று
முதற்பூக்களை
சுவர் தாண்டி
காம்பவுண்ட் டெலிவரி செய்து
நேர்செய்து விடுகிறது
பக்கத்து வீட்டு
மகிழம்பூச்செடி.
பக்கத்து வீட்டுக்காரர் மட்டும்
நமக்கு இன்னும்
இரண்டு புன்முறுவல்
ஒரு குறுஞ்சிரிப்பு
பாக்கி.

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 அ.சீனிவாசன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *