1. அசை
கலவிப் பரிட்சையில்
முட்டை வாங்கி
பாஸ் செய்தது
கோழி!!
2. இப்பவும்
கார்மேகக் கூந்தல் கண்ணீர்ப்பூக்கள் சிந்தியதில்
சற்றே வெளுத்துப்போய்!
தாவணியை விட்டுவிட்டு
வயது மட்டும் இரட்டிப்பாய்!
மெட்டிவிரல் மற்ற விரல்களின்
பரிகாசத்தில் கெட்டிப் போய்!
யார் போட்ட (வர) தட்சணைக் கோடு?
வெளியிருந்தும் யாரும் உள்ளே வருவதில்லை!
இராவணனையும் வரவேற்கத் தயாராய்
முதிர்ந்தாலும் இன்னும் உதிராத
கன்னிப் பூக்களாய்
சனக தேசத்துச் சீதைகள்!!
3. சிலந்தி
வலை பின்னும் வரை சோம்பேறியாய் இருந்தவனா சிலந்தியிடம்
விடாமுயற்சி கற்கப் போகிறான்!!!
4. அய்ஸ்வர்யா அபார்ட்மெண்ட்ஸ்
அண்ணா நகர்
“மண்ணின் மணம்
வெண்ணிலா flavouraஆ மம்மி?”
அய்ந்தாங்கிளாஸுக்கு
தமிழ் பாடத்தில் சந்தேகம்
பதினைந்தாம் மாடி வீட்டில்.
5.
செடியிலிருந்து
பூவைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆனால் செடியிலிருக்கும் பூவிலிருந்து
கண்ணைப் பிரிப்பதை
விட எளிது தான்.
6. சிறுக(வி)தை
கண்டான்
கண்டாள்
கண்டார்கள்
காணாமல் போனார்கள்
அது மட்டும் இருந்தது!!!!!
7.சந்தர்ப்பவாதி!!
பிரிவு சோகத்தை
கவிதைக்கு கருவாய்
மாற்றி!
கவிதைக்காவது
‘உயிர்’ உயிராய்
இருக்கட்டும்!!!!
8. அமைதிச் சின்னம்
பார்க்கப்படுகிறோமா என பார்த்துக்கொண்டே
பாராதது போல் செய்த பாவனைகள்!
கேட்கப்படுகிறோமா என கணித்துக்கொண்டே
ரகசியமாய் எழுப்பிய சப்த விமர்சனங்கள்!
எதையோ யாருக்கோ யோசிப்பதாய் காட்ட
அந்த யாரையே யோசித்த கணங்கள்!
வீழாதது போல் காட்டிக் கொண்டே வீழ்ந்த வலை!
தோற்கப்படாதது போல் காட்டிக் கொண்டே அடைந்த தோல்வி!
ஆரவாரமின்றி ஒரு
கருவறை கல்லறையானது
அமைதிச் சின்னமாய்!!!
9. அப்பா
உழுது விளைத்து வேலியிட்டு நீருற்றி களை பறித்து செடி முதிரச்செய்து
அன்பூதியத்தை எதிர்பார்த்து
பெரும்பாலும் பென்சன்
மட்டுமே பெறும்
தோட்டக்காரர்!!!
10. சமாதானம்
நீ கோபமுறச் செய்தாலும் வருத்தமில்லை ,
உன் சமாதானம் எனக்குப் பிடிக்கும்!
நீ கோபமுற்றாலும் வருத்தமில்லை,
உன்னை சமாதானம் செய்வதும் எனக்குப் பிடிக்கும்!!!
11. காற்றாடி
உன் பிடியில் வானில் காற்றாடி
அதன் அசைவில் சந்தோச அலை
நீ ஊக்கி தான் ஆனாலும்
முழுபலன் உனக்கே
நூல் உன் கையில்
இருக்கும் வரை, அல்லது
அறுபடாத வரை!!
12. ♥96♥
திருவிழாக் கூட்டத்தில் சாமி தெரியாத போதும்
எட்டாவது வரை பஸ்ஸில் அரை டிக்கெட் வாங்கியதும்
தம்பியின் வகுப்புத்தோழன் ‘டே தம்பி’ என அழைத்தபோதும்
வகுப்பில் கடைசி வரை கடைசி வரிசையில் அமரமுடியாத போதும் இருந்த வருத்தம்
உன்னைக் கண்டதும்
கவர்ந்ததும் நீங்கியது
நீயும் 5அடி தான்!!!
13.
ஈருடல் ஓருயிராய்
இருக்க
வாழ்த்தப் பட்டார்கள்,
அவள் மட்டும்
எப்போதும்
ஓருடல் ஈருயிராய்!!
14.
உன் முகத்து
சந்தோச ரேகை
எனக்கான
இன்றைய ராசிபலன்
சொன்னது!!
16. ♥96♥
அந்த கார்கூந்தல் விரிப்பு
முத்துப்பல் சிரிப்பு
கோவைப்பழ அதரம்
செங்கனிக் கன்னம்
இவற்றிடம் உவமைகளும் தோற்கும்
என
உனை வியந்து
பார்த்துக் கொண்டிருக்கும்போது
மாராப்பை நீ
சரி செய்தது வலித்தது!
உவமைகளின்
பகுத்தறிவின்மை ஜெயித்தது!!!
17.
நான் பொய் சொல்வதாய் வருத்தப்பட்டாய்,
உண்மையை
உணர்த்திய சந்தோசம் எனக்கு!!
18. அசை
இருவர் நினைவுகளை
ஒருவராய் மறப்பது எங்ஙனம்!
19.
நீ யாரையோ பார்த்து சிரித்தாலும்
என்னைப் பார்த்துச் சிரிப்பதாய் உணர்கிறேன்,
நீ என்னையே முறைத்தாலும்
யாரையோ முறைப்பதாய் என்னையே சமாளிக்கிறேன்!
20.
உன்னை விட நம் நினைவுகளே பெரிதாகப் படுகின்றன,
நீ இல்லாத போதும் என்னிடம் இருப்பதால் அல்ல, என்னிடம் மட்டும் இருப்பதால்!!!
21. சந்திப்பு
நீ பார்க்கவில்லை என நான் பாராதிருந்தேன்,
நான் பார்க்கவில்லை என நீ பாராதிருந்தாய்,
நம் எண்ணங்கள் தவறாமல்
பார்த்துக்
கொண்டன!!
அணு – பலம்
மையக்கருவில்
சந்தோச புரோட்டான்கள்.
சுற்றி வட்டங்களில்
கவலை எலெக்ட்ரான்கள்.
ஒன்றையொன்று சமன்செய்து நிலைப்படுத்துகின்றன.
கருவில் சந்தோச புரோட்டான்களுக்கு சமமாய் உடனிருந்து நிறைவாய் நிறை சேர்க்கும் அறிவு நியூட்ரான்கள்
வெளிப்புற தூண்டல் இல்லாதவரை சந்தோசம் கவலை இரண்டும் அறிவோடிணைந்து அமைதியாய் முழுமையாய் இயல்பாய் இருக்கின்றன.
வெளியிலிருந்து வேறொருவர் ஒரு கவலையைச் சேர்த்தோ ஒரு சந்தோசத்தைப் பறித்தோ சமநிலையைச் சிதைத்து நிலையற்ற அயனியாக்கி விடுகின்றனர்.
அயனிகள் அகதிகளாய் நிலைப்புத்தன்மை வேண்டி பிறரோடு பிணைகின்றனர்.
கவலைகளை பகிர்ந்துகொள்ளும் விதத்தால் பிறரோடான பிணைப்புகள் பலமான பிணைப்பாகவோ பலவீனமான பிணைப்பாகவோ அமைகின்றன.
பிணைப்பில் இயல்பு நிலை மேம்பட்டதாயோ இயல்பை விட குறைபாடாகவோ மாறிவிடுகிறது.
வெளிப்புறத் தூண்டல்கள் எலெக்டரான்களையோ புரோட்டான்களையோ மட்டும் பாதிக்கும் வரை அசாதாரணமான
மீள் திரும்ப இயலாத மாற்றங்கள் ஏதும் நிகழ்வதில்லை.
உட்கருவில் இருக்கும் அறிவு நியூட்ரான்கள் வெளிப்புற விசைகளால் பிளக்கப்படும் போது முழு ஆற்றலும் வெளியேறி வெறொரு அணுவாக
வெறோருவராகவே!
எலெக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் மூன்றும் சமநிலையில் இருக்கும் வரை அணுவிற்கு அணுவளவும் பாதிப்பில்லை.
கவலை சந்தோசம் அறிவு மூன்றும் சமநிலையில் இருக்கும்வரை யாருக்கும் எள்ளளவும் பாதிப்பில்லை.
சமநிலையில் இருக்கும் வரை
மீளக்கூடிய பிணைப்புகள் மட்டுமே சாத்தியம்.
சமநிலை நீங்கின் மட்டுமே மீளா பிளவுகள் சத்தியம்.
கவிதைகளின் ஆசிரியர்:
அ.சீனிவாசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.