தங்கேஸ் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

******************************************************************************************

1. வெண்ணிறப் புரவி

முன்னொரு காலத்தில்
எங்களுக்கென்று
ஒரு வெண்ணிறப் புரவி
சொந்தமாக இருந்தது

வயலில் நாள் முழுவதும்
உழைத்து விட்டு வரும் குடும்பத்தினர் அனைவரும்
அதன் மீது அமர்ந்து
ஒரு சுற்று சவாரி போய் வருவோம்
உழைத்த களைப்பு தீர

அப்போது
ஒவ்வொரு வீட்டிலும்
இது போன்றதொரு
புரவி இருக்கும்
வெண்ணிறமோ
கருப்போ
சிறுவர்களுக்கு பொழுது போக்கே
அது தான்

இரவு உணவிற்கு முன்போ
அல்லது பிறகோ
நாங்கள் அமர்ந்ததும் சண்டித்தனம்
செய்யாமல்
நகர்ந்து விடும் குதிரை

தாத்தாவிடம் கேட்டால்
அது சாமிக்குதிரை என்றார்
கூடமுடைய அய்யனார்
எல்லைக் காவல்
சேத்தூர் முத்தையாவுக்கு கொடுத்தது
அது எங்கள் பாட்டன் கருப்பணன்
கைக்கு வந்து சேர்ந்தது
பிறகு எங்கள் தாத்தாவிற்குக் கிடைத்தது.

அதை அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராய்
வளர்த்து வந்தார்
பாட்டி அதற்கு சக்கரம் என்று பெயர் வைத்திருந்தாள்

மின்னல் வெட்டும் நேரத்திற்குள்
காளையார் குறிச்சி கோவிலுக்குப் போய்
திரும்பி விடும்

சிறு தூரல் பெருமழையாய்
மாறுவதற்குள்
சதுரகிரி மலை முழுவதும்
சுற்றி வந்து விடும்

சித்தர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்
கருப்பசாமியுடன் கிளித்தட்டு ஆடும்
ரெட்டியை கெடுத்த வெள்ளி
உச்சி வானத்திற்கு வருவதற்கு முன்
வீட்டுக்கு வந்து விடும்
எங்களை தவிர
யார் கண்ணுக்கும் தெரியாது

அலுப்பு தட்டினால்
தாத்தா உடனே அதை அழைத்து வந்து விடுவார்

அப்போது தொலை பேசி இல்லை
தொலைக்காட்சி இல்லை
கை பேசி இல்லை
ஆனால் அழைத்தவுடன் அருகில் வரும்
குதிரை இருந்தது.

இப்போது
எல்லாமும் இருக்கிறது
ஆனால் தாத்தாவும் இல்லை
குல சாமி கொடுத்த
எங்கள் குடும்பப் புரவியும் இல்லை

நாம் எப்போது மனதார அழைத்தாலும்
நம் வெண்ணிறப் புரவி
அருகில் வரும் என்கிறேன்

ஆனால் உன் கற்பனை குதிரை
ஒரு சுத்த அபத்தம் என்று சொல்லும்
குழந்தைகளோடு
எப்போது அதை மனதார அழைப்பது ?

******************************************************************************************

2. அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்

ஓநாய்களை ஒளித்துவைத்திருக்கும் புன்னகைகளை
அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட
முடிவதில்லை இப்பொழுதெல்லாம்

அடிக்கடி இமைகள் இறங்கி கபட நாடகத்தை காட்டிக்கொடுக்கும் வரை
எலுமிச்சை பழம் போல அத்தனை பரிசுத்தமானது என்று தான்
நம்பிக்கொண்டிருந்தோம்
பச்சைப்பொய்களாய் உருண்டு கொண்டிருக்கும்
இரு விழிகளையும்

ஒலி பெருக்கியின் முன்னால் இரு கைகளையும்
அகல விரித்தபடி
நிற்கும் போது ஒரு ஏசுவோ ஒரு புத்தரோ
தோழர் மார்க்ஸோ மாவோவோ
அவதாரமெடுத்துப்போய்விடுகிறார்கள்
தலைக்குப்பின்னால் பளிச்சிடும் ஒளிவட்டத்தோடு

என் பெருமதிப்பிற்குரிய வெள்ளாடுகளே !
(எனக்கு அப்படித்தான் கேட்கிறது )
ஹ்ஹ்ம் ஹ்ஹ்ம் குரலில் ஒரு சின்ன கரகரப்பு
தொண்டையை சரிசெய்தாயிற்று

நீங்கள் ஆட்டுக்குட்டிகளை கண்டிருக்கிறீர்களா ?
அவைகளை பசுவின் புனித இடத்திற்கு
இனிமேல் உயர்த்திவிடுவோம்

அடுத்த முறையும் நாங்கள் ஆட்சியமைத்தால்
உங்கள் வங்கிக்கணக்குகளில் குறைந்தது
பதினைந்து ஆட்டுக்குட்டிகள் வரவு வைக்கப்படும்
அவை பல்கிப்பெருகும் போது
ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் தனியாகவே
ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்படும்
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
பழகுவதற்கு

******************************************************************************************

📚 எழுதியவர்:
தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *