***********************************************
1. வலி
ஆறுதல் கூறுவதாய்
அருகே வாராதீர்கள்
நான் உடைந்துவிடுவேன்
யாரிடமாவது சொல்லியழ ஆசைதான்
அவர்களுக்கும்
வலித்து விடும் என்று அமைதியாய்
இருந்துவிடுகிறேன்.
என்னைச் சமாதானமெல்லாம்
செய்யவேண்டாம்
சின்னதாய்ப் புன்னகை
செய்யுங்கள் நான் சரியாகிவிடுவேன்.
உடைந்த என் மனதை
ஒட்டவைக்க முயலாதீர்கள்
சல்லியாய்ச் சிதறியதில் இதயத்தின் சில
சில்லுகளைக் காணவில்லை.
கைதாங்கிச் சிலரை
என் படகில் ஏற்றுகிறேன்
என்னை விட்டு விட்டுப்
படகு அவர்களோடு
செல்கின்றது.
அவர்களாய் வருகிறார்கள்
அவர்களாய்ப் போய்விடுகிறார்கள்
என் இதயவாசல்
திறந்துதான் கிடக்கிறது
யாராவது வரட்டுமென்று.
ஆறுதல் தேடும்
இடமெல்லாம்
அடித்த அடியில்
நொறுங்கியது
என் இதயம்
***********************************************
2.
பட்டாம்பூச்சிகள் பறந்து
வண்ணங்களில் மிளிர்கிறது
பூஞ்சோலை!
வெற்றுக் காகிதம்
இறைவனால் எழுதப்படும்
நாளைய பொழுது!
மலரின்மீது பனித்தூறல்
ஒற்றியெடுக்க ஓடிவந்தது
வண்ணத்துப்பூச்சி!
கல் எறிந்தவர்க்கும்
தன்அழகைக் காட்டி
ரசிக்கிறது குளம்!
வானம் எங்களின்
சொந்தம் என்கிறது
பறவைகளின் சிறகு!
ஏழைவீட்டின் பழைய கூரை
உள்ளே
எத்தனை நட்சத்திரங்கள்!
கூட்டில் உள்ள கிளி கேட்டது
உங்களுக்குப் பறக்கும்
சிறகில்லையா?
சோறு சமைக்கும்
அம்மா கொதிக்கிறாள்
அதிகாலைச் சமையல்!
தீயில் கரிந்தும்
மண்ணில் புதைந்தும்
மோட்சமடைகிறது சாதி !
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 அ.அனீஸ்பாத்திமா
உத்தமபாளையம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

