கு.மணி கவிதைகள்
**************************************************
1. யாருக்கும் வெட்கமில்லை
இந்தியாவில்
இப்படியும் ஒரு நிகழ்வா?
இன்பச் சுற்றுலா –அல்ல
இழவுச் சுற்றுலா
இனிது நடந்தேறியது
குளிரூட்டப்பட்ட அறையில்
குடும்பத்துடன்
ஈமச்சடங்கு
ஒவ்வொரு அறையாகச் சென்று
சாத்தான் வேதம் ஓதியது
காலில் விழுந்து
மன்னிப்பும் கோரியது
பலியானோருக்கு
பிண்டம் படைக்கவில்லை
பறி கொடுத்தோருக்கு
பலியாயின
ஆடுகளும் கோழிகளும்
பணத்திற்காக
பிணம் எரித்த
பிதாமகன்கள்
பி(ப)ணம் தின்ற கழுகுகளாய்
காவு கொண்டவன்
கடவுளின் அவதாரமாய்
கரன்சிக்காக
கண்களில் தெரிகிறான்
கனவு நிறைவேறியது
கனவு நாயகனை
கண்ணெதிரே கண்டு விட்டோம்
கைகுலுக்கி மகிழ்ந்து விட்டோம்
பிள்ளைகளின் ஆன்மா
சாந்தி அடைந்து விடும்
கருவறையில் இறந்த குழந்தையும்
களிப்படைந்து விடும்….
சரித்திர நாயகர்களின்
இன்பச் சுற்றுலா –அல்ல
இழவுச் சுற்றுலா
இனிது முடிந்தது
சினிமாவில் அரசியல் கலந்தவர்
அரசியலில் சினிமாவை
கலந்துவிட்டார்….
கலந்துவிட்டார்….
இங்கே
யாருக்கும் வெட்கமில்லை….
**************************************************
2. தீபாவளி
பல கிருஷ்ணர்கள் வதம்
நரகாசூரர்களால்
பட்டாசுக் குடோன்
வெடிவிபத்தில்….
அண்ணா சாலை
வெறிச்சோடியது
ஒரு நாள் நிம்மதித் தூக்கம்
பிளாட்பார வாசிகள்….
பங்களாவில்
பட்டாசு வெடிப்பு
பதைபதைப்பில்
குடிசை வாழ் மக்கள்…
ஒரே கோழிப் பண்ணையில்
ஒய்யாரமான வாழ்வு
கேட்காமலே
உணவுப் பரிமாற்றம்
திடீரென்று ஒரு நாள்
உல்லாசப் பயணம்
வெவ்வேறு ஊர்களுக்கு…
மகிழ்ச்சியில் கோழிகள்
உல்லாசப் பயணம் அல்ல
உயிர்ப்பலி
பயணம் என அறியாமல்
கொக்கரிப்பில்
கோழிகள்….
வீட்டில்
அடுக்கி வைக்கப்பட்டன
பலவகையான
இனிப்பு வகைகள்
ஏக்கத்தில் தாத்தா
சர்க்கரை வியாதியுடன்….
பட்டாசே வெடிக்காத
பசுமை ஊராய்
பறவைகளுக்காக
நன்றி சொல்ல வந்த
பல நாட்டுப் பறவைகள்…..
கடைசி நேர
தீபாவளி விற்பனை
சாலையோர வியாபாரிகள்
கனவைக் கலைத்தது
காற்றுடன் கூடிய
அடைமழை…..
பட்டாசுக் கம்பெனியில்
வேலை முடித்து வந்த
அம்மா…
பத்து விரல்களிலும்
கம்பி மத்தாப்பு
பற்றவைக்காமலே
பற்றி எரிகிறது….
ஏழு கோடிக்கு
ஆடு விற்பனை
ஆட்டுச் சந்தையில்…
இனப்படுகொலை
நடக்கப் போவது
அறிந்து
ஆடுகளின்
அம்மா என்ற
அலறல் சத்தம்….
காஞ்சிப் பட்டாடை
கட்டி மகிழ்ந்தாள்
கன்னியொருத்தி
பல பட்டாம்பூச்சிகளின்
மரண நூலில்
நெய்யப்பட்டதெனத்
தெரிந்தே….
வெடி விபத்தில்
பாதுகாக்க
ஆங்காங்கே
தீயணைப்பு வண்டிகள்
எங்களைப் பாதுகாக்க
ஏக்கத்தில் பறவைகள்…
**************************************************
📚 எழுதியவர்:
– கு. மணி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
