தங்கேஸ் கவிதைகள்
**********************************************
1. நகரத்தில்
இதயங்கள்
அத்துவானக் காடாகி விட்ட
நகரத்தில்
வனாந்திரம் என்பது
மொட்டை மாடி தான்
மெய் சிலிர்க்க ஒரு தீண்டல்
உடைந்து கசிய ஒரு வார்த்தை
கிடைக்காத தெருக்கள்
கல் குழிகளை வயிறாக
ஏந்தித் திரியும் சீவன்களை
எப்படி திருப்தி படுத்த ?
காய சண்டிகைகள் நிறைந்த ஊர்
இது
பிளாஸ்டிக் மொக்கு புன்னகைகளையும்
ரப்பர் வார்த்தைகளையும் வாயில் அதக்கி
ஊரெல்லாம் சுற்றி விட்டு
இரவில் வீடு வந்து
சுத்தமாக குளித்து விட்டு
கண்ணாடி முன் நின்றால்
வேறு ஆள்
என் பெயர் என்னவென்று
குழந்தைகளைத்தான் கேக்க வேண்டும்
**********************************************
2. நாள்
ஒரு வெள்ளி உதிர்கிறது
வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன்
முட்டுச் சந்தில் ஒருத்தி
நிழலைப் போல சார்ந்து நிற்கிறாள்
தெருநாய்கள் தங்கள் பாத்யதையை
உறுதிப் படுத்த உறுமுகின்றன
வாசல் வரை கேட்கும்
தொலை காட்சித் தொடர் சத்தங்கள்
குழந்தைகள் அநேகமாக கைபேசிக்குள்
சிசுவாகி பிறவிப்பயனை எய்தியிருப்பார்கள்
அணைந்து அணைந்து எரியும்
தெருவிளக்குகளின் வழியே நடக்கின்றன
கடைசிப் பேருந்திலிருந்து இறங்கிய
சில மனித உருவங்கள்
கரையும் மர நிழலைப் போலவே
இரவுக்குள் மறைந்து கொண்டிருக்கிறது
வழக்கம் போல உபயோகமற்றுப் போன
இந்த ஒரு நாளும்
**********************************************
📚 எழுதியவர் :
✍🏻 தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

